செங்கோட்டு அந்தி

இனிய ஜெயம்

இம்முறை வகுப்பு முடிந்து திரும்புகையில் எங்களுடன் கோவை தேஜஸ் இணைந்து கொள்ள திருச்செங்கோடு அர்த்தநாரி கோயில் பார்த்து விட்டு செல்வது என்று முடிவானதுகோழி நேரடியாகவே வேக வைத்த முட்டையை ஈனும் வகையில் பொழியும் மதியம் 3 மணி வெயிலில் கோயில் இருக்கும் இடத்தை நெருங்கினோம்.

ஹையோ என்று ஒலி எழுப்பி திடுக்கிட்டார் சரவணன். கோயில் ஒரு குன்றின் மீது அமைந்திருந்தது. கோயிலை அடைய ஜஸ்ட் 1200 படிகள் மட்டுமே ஏற வேண்டும். சென்ற பயணத்தில் இதே போல மூளையை உருக்கி சொட்ட வைக்கும் வெயிலில் ரத்னகிரி எனும் ஐயர் மலையில் 1000 படிகள் ஏறி இருந்தார். பின்னர் சங்ககிரி கோட்டையை இதே போன்ற வெயிலில்  (சின்ன மலை மாதிரிதான் தெரியுது. தண்ணி பாட்டில் எல்லாம் சுமக்க வேண்டாம் என்ற என் அறிவுரையை அப்படியே அன்று சரவணன் கடைப்பிடித்திருந்தார்) ஏறி, எங்கள் நாக்கு தள்ளுவதை ஒரு குட்டி குரங்கு பரிதாபமாக பார்த்த மரத்தடி ஒன்றில் கிட்டத்தட்ட மயங்கி விழுந்து எழுந்து பாதியில் பயணத்தை முடித்து குற்றுயிராய் அடிவாரம் வந்து சேர்ந்திருந்தோம்

வீரர்கள் வாழ்வில் இதெல்லாம் ஜகஜம் என்று சொன்ன என் உத்வேக வார்த்தைகள் எதுவும் அவரை சென்று தீண்டியதாக தெரியவில்லை. அர்த்தநாரி அருள் கோயிலுக்கு அருகே வரை கார் போகும் வண்ணம் இருந்த சாலை கண்ணில் பட்டது. இரண்டு கிலோமீட்டர் மலை பாதை பயணம். விமானம் விண் எழுகையில் ஜன்னல் வழியே தெரியும் நிலம் சர சர என்று கீழே கீழே கீழே என்று நழுவி சரிவது போலவே, அடிவாரம் நழுவி கீழே சென்றது. 180 பாகையில் வெயில் பொழியும் வானக் குடை கவிய கண்ணெட்டும் கடுவெளி நெடும் தொலைவில் நிலமும் வானும் சந்திக்கும் கோடு. மிக மிக முன்னர் இந்த கோயில் வந்திருக்கிறேன். பிரம்மாண்ட புடைப்பு சிற்ப நாகம் ஒன்று மட்டும் நினைவில் எஞ்சி மற்றவை மறந்திருந்தது.

காரை பார்க்கிங்கில் போட்டு விட்டு, நாயக்கர் காலமும் கடந்த சமீப கால கோபுரம் என தோற்றம் அளிக்கும் கோபுரம் வழியே கோயில் உள்ளே நுழைந்தோம். சம்பந்தர் பாடிய கோயில் என்று கண்டிருந்தது. உள்ளே எட்டு வைக்கும் போதே பள பளா கிரானைட்ல் தான் கால் பதிக்க வேண்டி இருந்தது. பொதுவாக ஈரோடு பகுதி கோயில்கள் மீது எனக்கு மரியாதை குறைந்து கொண்டே போகிறது. கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயில் இத்தகு பளபளப்பு வேலைகளால் நான் நிற்பது கோயிலுக்குள்ளா அல்லது உயர் தர சத்யம் சினிமாஸ் டாய்லட்டிலா என்ற உளமயக்கை அளித்தது. சங்கமம் அதன் நேரெதிர். கூவத்தின் அதே அலங்கோலம். கொடுமுடி கோயிலும் அவ்வாறே. உபரியாக கோயில் முன் சுழித்து ஒடும் நதி முழுக்க பரிகாரம் செய்ய வந்த ஜந்துக்கள் பரிகார முறைப்படி குளித்து விட்டு நதிக்குள் அப்படியே கழற்றி போட்ட துணிக் குப்பைகள்துணியை வெளியே போட்டு விட்டு இந்த ஜந்துக்கள் ஆற்றோடு போகும் வண்ணம் ஏதேனும் பரிகாரம் இருந்தால் தேவலை என்று பார்த்த அக்கணம் தோன்றியது. அதே வரிசையில் இந்த கோயிலும் ஒன்று. பாம்புகளுடன் தள்ளு முள்ளு கொண்டோருக்கான, நாக தோஷ பரிகார ஸ்தலம். நாகேஸ்வர சன்னதியில் கூட்டம் அம்மியது. சுற்றி வருகையில் கண்டேன் பிரம்மாண்ட புடைப்பு சிற்ப நாகத்தை மோட்டார் உதவியுடன் பைப் வழியே தண்ணீர் பீச்சி கழுவிக்கொண்டு இருந்தார்கள். தரையெங்கும் செங்குருதி வழிந்தோடுவது போல குங்கும கரைசல். பெருமாள் சந்நிதி. வினோத விநாயகர். அநேகமாக நாரீ கணபதி. செங்கோட்டு வேலவருக்கு தனி சந்நிதி. பாகம் பிரியாள் சந்நிதி. பாகம் பெண்ணுறு கொண்ட அர்த்தநாரியை தரிசித்து விட்டு வெளியே வந்தோம். அர்த்த நாரி சந்நிதி வெளியே முக மண்டபம். நாயக்கர் கால கலைக் கூட வரிசையின் சிகரங்களில் ஒன்று. மிக மிக அழகிய ரதி மன்மதன். வீரபத்திரர் இன்னும் இன்னும் என சிற்பத் தூண் வரிசை. சிறிய சிறிய புடைப்பு சிற்பங்கள் துவங்கி குதிரை யாழி வீரன் சிலைகள் வரை தொடரும் நாயகர் கலையின் எழில் வரிசை.

பூர்ணாலங்காரபூஷிதையான காளி முன் நெடுநேரம் திகைத்து நின்றிருந்தேன். சந்திர சூரியர் சூடிய தழல் மகுடம் துவங்கி  (முலைக்கண்ணுக்கு கூட முத்தாரம் சூட்டி அமையும் நுட்பம் கூடிய அலங்கார முலைக்கச்சு) திருகியபடி விழுந்து கிடக்கும் அசுரனை மிதித்த பாதங்களின் பாதக் குரடு வரை ஒவ்ஒரு கணுவிலும்சாமுத்திரிகா லக்ஷன வடிவ நிலைக்குள் வைத்து, கலையால் கலைஞனால் நிரந்தரம் செய்விக்கப்பட்டு விட்ட  தெறிக்கும் பேரழகு

விதானம் எங்கும் ஆங்காங்கே கற்சங்கிலி வரிசை, கல் மலர்கள் வரிசை. அவற்றில் குனிந்து தேன் தேடும் கல் பறவைகள் வட்டம். எங்கும் எல்லாவற்றின் மீதும் நீக்கமற அடித்து இறங்கப்பட்ட இரும்பு கம்பி பட்டைகள். அவற்றில் சுற்றிய ஓயர்கள் பல்புகள். தூண்களில் கம்பி வளைத்து இறுக்கி அடிக்கப்பட்ட வலை தடுப்புகள். தூண்களின் பாதி வரை மூடி போடப்பட்ட டைல்ஸ் தரை, எங்கெங்கும் எவர்சில்வர் கம்பி போட்டு வளைத்த, சன்னதி நோக்கி செல்லும் புதிர் சுற்று பாதைகள்

சற்று நேரம் கோயிலுக்குள் உலாவிவிட்டு வெளியே வந்தோம். கோயிலுக்கு பின்னால் இன்னும் என உயரும் குன்றின் உச்சியில் மற்றொரு சிறிய கோயில். பாண்டீஸ்வர் என்ற நாட்டுப்புற தெய்வம். கோயில் போய் சேர ஒன்றரை கிலோ மீட்டர் மலையில் ஏற வேண்டும் என்று சர்பத் கடைக்காரர் சொன்னார். சரவணன் என்னை திகிலுடன் நோக்க அவர் பீதியுடன் எதிர்பார்த்த அந்த உத்தரவை மொழிந்தேன். “வாங்க ஏறிப் பாத்துடுவோம்” 

ஏற்கனவே நிலம் எங்கோ வெகு கீழே கிடக்கும் யானைகள் முற்றுப் புள்ளி என்று தெரியும் உயரத்தில் கோயில். இப்போது அதிலிருந்தும் உயரும் குன்று. படி எல்லாம் கிடையாது. நட்டு குத்தாக உயரும் மொட்டை வழுக்கு பாறை. ஒதுங்க பிடி நிழல் கிடையாது. உடன் சக மனித உயிர் என ஒன்று கிடையாது. பாறை மேல் பிடித்து ஏற அடிக்கப்பட்ட ஒரு கம்பி பிடி. ஏறுகையில் வழுக்கி  பிடி விட்டால், பாடி லேண்டில் சென்று லேண்ட் ஆக குறைந்தது அரை நிமிடமேனும் ஆகும்

நாளெல்லாம் வெந்துஅந்தி வெயில் ஏற்று சிவந்து கொதிக்கும் பாறையில், எங்கள் மூச்சு தவிர வேறு காற்றே அற்ற வெம்மை வெளியில், வெறும் கால் கொண்டு கம்பியை காவியபடி அடி மேல் அடி வைத்து ஏறினோம். உச்சியில் மூடிக் கிடந்த எவருமே அற்ற சிறிய அறை போன்ற கோயில் வாசலில் சென்று உடல் சரிந்து விழும் வண்ணம் அமர்ந்தோம்

உச்சி முனையில் ஒரு பத்து பேர் நிற்கலாம் எனும்படிக்கான தளத்தின் நான்கு மூலையிலும், மூலைக்கு ஒருவராக நண்பர்கள் மூவரும் சென்று அமர்ந்தோம். வெகு கீழே  தூசி படலம் போர்த்தி மூடிய நிலம். என்னை மைய்யம் கொண்டு சுற்றிலும் விரியும் வெளியில் வெகு தூரத்தில் கண் தொடும் எல்லையில்  மலைத் தொடர்கள் சுற்றி எழுப்பிய விளிம்பு. அதிப்ரும்மாண்ட மலர் ஒன்றின் மையத்தில் அமர்ந்திருந்தேன். அந்தி வெய்யில் ஏற்று ஒளிரும் பொன் மலர். இந்த பொன் மலரை ஏந்தி நிற்கும் பொன் கிளை எது? அந்த பொன் கிளையைக் கொண்ட பொன் மரம் எது? அந்தப் பொன் மரத்தின் வேர் பதிந்து நிற்கும் பொன் நிலம் எதுஅந்த நிலத்தின் அந்தி ஒளி எப்படி இருக்கும்? இது அந்தியா? அல்லது உதயமா? கவியும் ஒளியில் அந்தி ஒளி உதய ஒளி பேதம் உண்டா? ஒளிக்கு பேதம் இல்லை. பேதமிமையே அழகு. ஒளியே அழகு. அழகெல்லாம் ஒளியால் ஆனதே

அன்றொருநாள் தராக்கர் கோட்டை உச்சியில் அமர்ந்து அஜிதனுடன் உதய ஒளி அழகை ரசித்துக்கொண்டிருந்தேன். அஜி அழகு குறித்து சொல்லிக்கொண்டிருந்தார். அழகு முதன்மையாக நிரந்தரமின்மையில் திகழ்வது. மலரின் அழகு வாடிவிடுவதற்குள்  எனும் பூத்தல் என்பதன் நிரந்தரமின்மையில் உள்ளது. இதோ இங்கே இக்கணம் காணும் உதய ஒளி ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டிருக்கிறது. இங்கே இக்கணம் நாம் காணும் இந்த காம்பினேஷன் என்பதை இனி ஒரு போதும் நம்மால் காண முடியாது. உயிர்க்குலம் உருவாகும் முன்னர் தோன்றி உயிர் குலம் எல்லாம் முடிந்த பின்னரும் முடிவடையாத காம்பினேஷன் தொடர் இது. அழகு இந்த நிரந்தரமின்மையில் திகழ்வது

அழகு என்பது லட்சிய வடிவத்தில் எழுவது. காணும் ஒவ்வொரு வடிவமும், அதன் லட்சிய வடிவம் எனும் வரைப்படத்திற்குள், அந்த லட்சிய வடிவத்தை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் உள்ளவை என்று சொல்லலாம். அழகிய கண் என்று சொன்னால் அந்த கண் அதன் லட்சிய வடிவை எய்திய நிலையில் இருக்கிறது என்று பொருள். ஒரு சொறி நாயை அந்த நாய் கொண்டிருக்கும் லட்சிய வடிவம் நோக்கிய பயணத்தை இடை வெட்டும் சொறியை கொண்டிருக்கும் நாய் என்றே கொள்ள வேண்டும். இந்த உதய ஒளியில் அழகின்மை என்பதே கிடையாது. சொறி நாயையும் இந்த ஒளி தொட்டால் அது அழகாகவே தோற்றம் தரும். காரணம் ஒன்றுதான். சூரிய ஒளியில் நாம் காண துலக்குவது எல்லாம் காணும் வடிவத்தில் உதய ஒளிக்கு முன்னர் நம்மால் காண இயலாத அதன் லட்சிய வடிவமே. இந்த ஒளி தொட்டு துலக்க நாம் அழகு என்று கண்டு உணர்வது எல்லாமே லட்சிய வடிவத்தின் மேல் எழுந்த நிரந்தரமின்மையில் திகழும் ஒன்றே. அதுவே இயற்கை எனும் பேரழகு.

எதையும் கோட்பாடாக வகுத்து சொல்ல, அஜிதன் கொண்ட ஆசிரியர்கள் ஜெர்மன் நிலத்தை சேர்ந்தவர்கள். நீங்கள் எனக்கு உங்கள் ஆசிரியர்கள் வழியே கற்று கண்டு சொன்ன உபநிஷத் அழகை அஜிதன் மேலை மரபு வழியில் அதே இடத்துக்கு வந்து சேர்ந்து இவ்வாறே சொல்லி தந்திருக்கிறார். இரண்டும் ஒன்றே. ஒளியில் பேதம் உண்டா என்ன

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைWhy should I take any interest in religion ​?
அடுத்த கட்டுரைஜெ.பாஸ்கரன்