அன்புள்ள ஜெ
இஸ்லாமிய மரபு குறித்த வகுப்பு பற்றிய செய்தியை அறிந்தேன். நீங்கள் தெரிவு செய்துள்ளமையால் அந்த ஆசிரியர் தகுதி வாய்ந்தவராகவே இருப்பார் என்பதில் ஐயமில்லை. ஜூலையில் நடக்கும் அந்த நிகழ்வில் கலந்துகொள்ளலாம் என எண்ணுகிறேன். ஆனால் அதற்கு முன் ஒரு கேள்வி. இந்த பாடத்திட்டத்தில் இஸ்லாமிய- சூஃபி மரபு எங்கு வருகிறது, அதை ஏன் கற்கவேண்டும் என்று சொல்லமுடியுமா?
(நான் அதனால் கவரப்பட்டு இஸ்லாமியனாக மதம் மாறினால் அதை நீங்கள் ஆதரிப்பீர்களா?- இது என் நண்பனின் கேள்வி)
ஆர்.பாஸ்கர்
அன்புள்ள பாஸ்கர்,
இஸ்லாமிய- சூஃபி மரபு குறித்து கற்பிக்கும் நிஷா மன்ஸூர் அத்துறையில் தொடர்ச்சியாக முப்பதாண்டுகளாக ஈடுபட்டு வருபவர். இன்று அதைக் கற்பிக்கும் முதன்மைத்தகுதி கொண்டவர்.
*
நித்ய சைதன்ய யதியின் ஃபெர்ன்ஹில் குருகுலத்தில் ஒரு புகைப்படத்தை பலரும் கண்டிருக்கலாம். நித்யா தொழுகை செய்துகொண்டிருக்கும் படம் அது. நித்யா ஓச்சிறை உப்பா என அழைக்கப்பட்ட சூஃபி மெய்ஞானியுடன் தொழுகை செய்தபோது எடுத்த படம் அது.
இந்திய மெய்ஞானியரில் கபீர், குருநானக் முதல் ராமகிருஷ்ண பரமஹம்சர், நாராயணகுரு, ஷிர்டி சாய்பாபா வரை கணிசமானவர்கள் இஸ்லாமியத் தொழுகை, நோன்பு ஆகியவற்றை இயற்றியவர்கள். இஸ்லாமிய மெய்ஞானத்துடன் அணுக்கமானவர்கள். நித்யாவின் நேரடி மாணவர்களில் உஸ்தாத் ஷௌகத் சூஃபி அறிஞராகவே இன்று அறியப்படுகிறார்.
இந்திய மெய்யியல் மரபு உண்மையின் முகங்களை எங்கும் காண முயன்றது, எல்லா மெய்யியல் கூறுகளையும் இணைத்துக்கொள்ள முயன்றது. ஆகவே அதன்மேல் இஸ்லாம் ஆழ்ந்த பாதிப்பைச் செலுத்தியது. இஸ்லாமை விலக்கி பத்தாம் நூற்றாண்டுக்குப் பிந்தைய இந்து மெய்யியலை முழுமையாக அறிய முடியாது.
இஸ்லாமுக்கும் இந்து மெய்யியலுக்குமான உறவை இரண்டு வகையில் தொகுத்துச் சொல்லலாம். ஒன்று, இஸ்லாமிய ஒருமைக் கோட்பாட்டின் செல்வாக்கு. இரண்டு, இஸ்லாமிய சூஃபி மரபின் செல்வாக்கு.
இஸ்லாம் ஒருமை என்பதை முற்றுண்மையாக முன்வைப்பது. இறைவனின் ஒருமை. அவரை வழிபடுபவர்களின் ஒருமை. அச்சிந்தனை பல்வேறு வகைகளில் இந்திய மெய்யியல் மரபில் செல்வாக்கு செலுத்தியுள்ளது. அதை அறிஞர்கள் பலவாறாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த உரையாடலும் இணைவும் மாமன்னர் அக்பரின் காலகட்டத்தில் தொடங்கப்பட்டன என வரலாற்றாசிரியர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
மெய்யியல் சார்ந்த உரையாடலுக்கு இணையாகவே பண்பாட்டு உரையாடலும் நிகழ்ந்தது. குறிப்பாக இசையில். இந்தியாவின் பஜனை முறைக்கு இஸ்லாமிய (பாரசீக) சேர்ந்திசை மரபே தொடக்கப்புள்ளி.
சூஃபி இஸ்லாம் அரேபியாவிலும், பின்னர் பாரசீகத்திலும் உருவானதாயினும் இந்திய சூஃபி மரபு இந்தியாவுக்கே உரிய தனித்தன்மை கொண்டது. அம்மரபின் தலைமகன் என அஜ்மீரில் அடங்கியுள்ள குவாஜா மொய்னுதீன் சிஷ்டி அவர்களைச் சொல்லலாம். இந்திய சூஃபி மரபு பொதுவாக சமயம் கடந்ததும், அகநிலை சார்ந்ததுமான இறையனுபவத்தை முன்வைப்பதாக இருந்தது. சூஃபி மெய்ஞானிகள் சமயம் கடந்து வழிபடவும்பட்டார்கள் – வழிபடப்படுகிறார்கள்.
இந்திய சூஃபி மரபு இந்திய இலக்கியம், இந்திய இசை ஆகிய இரண்டிலும் முதன்மை விசையாக பலநூற்றாண்டுக்காலம் செயல்பட்டுள்ளது. இந்தியாவெங்கும் இருந்த சூஃபி ஞானிகள் இயற்றிய இலக்கியங்கள் இந்திய மொழிகளின் செல்வங்கள். பெரும்பாலும் அவை இந்திய நாட்டார் மரபில் இருந்தே கவிதை வடிவங்களை எடுத்துக் கொண்டன.
இந்திய இலக்கியம் பொயு 14 ஆம் நூற்றாண்டுக்குப் பின் ஒரு தேக்கநிலையை அடைந்தது. எல்லா மொழிகளிலும் பேரிலக்கியங்கள் உருவாகிவிட்டிருந்தன. பின்னர் அவர்றை நகல்செய்யும் சிற்றிலக்கியங்களும், தழுவல்களும் உருவாயின. இலக்கியம் என்பதே புலமைப்பிரகடனமாக மாறியிருந்தது. அரசர், பிரபுக்கள் சபைகளை சார்ந்து இலக்கியம் நிகழ்ந்தது.
அந்த மையம்சார்ந்த இறுக்கத்தை விளிம்பில் இருந்து உடைத்தவை சூஃபி இலக்கியங்கள். அவை நாட்டார் பாடல் வடிவங்களை கவிதையாக உருமாற்றி அவற்றில் உயர்தத்துவங்களையும் மெய்யியலையும் பேசின. மொழிநடையும் பெரும்பாலும் நாட்டார்த்தன்மை கொண்டது. அந்த உடைவு அதன்பின் பலவகையான புதிய இலக்கியங்கள் உருவாக வழிவகுத்தது.
இந்திய இசையில் சூஃபி இசையின் பங்களிப்பு மிகமிக முதன்மையானது. இந்திய இசையின் பித்துநிலை சார்ந்த ஆலாபனை முறை, சேர்ந்திசைத்தன்மை ஆகியவை சூஃபி இசைமரபின் கொடைகள். சூஃபி மரபு அராபிய, ஆப்ரிக்க, பாரசீக இசையை இங்கே கொண்டுவந்தது. அவை இந்திய மரபின் பண்களுடன் கலந்து ஏராளமான புதிய ராகங்கள் உருவாயின. இந்துஸ்தானி இசை, கர்நாடக இசை இரண்டுமே அவ்வாறுதான் உருவாயின.
இத்துடன் இன்னொன்றைச் சொல்லவேண்டும். தமிழுக்கே உரிய இஸ்லாமிய மரபு என ஒன்று உண்டு. அதை தமிழ் இஸ்லாம் என்றே ஆய்வாளர்கள் கூறுவார்கள். அதன் தலைமகன் என இஸ்லாமிய ஞானியும் பேரறிஞருமான சதக்கத்துல்லா அப்பா அவர்களை குறிப்பிடுவதுண்டு. அதன் பெருங்கவிஞர் உமறுப்புலவர். தமிழ் விக்கியில் தமிழ் இஸ்லாமை முழுமையாக ஆவணப்படுத்தும் தொடர் முயற்சியில் இருக்கிறோம்.
தமிழ் இஸ்லாம் மூன்று பிரிவாக அணுகத்தக்கது. ஒன்று ,தமிழை அறபு மொழியின் எழுத்துக்களில் எழுதும் அறபுத்தமிழ் இலக்கியங்கள். இரண்டு, இஸ்லாமியச் செவ்வியல் படைப்புகள். உமறுப்புலவரின் சீறாப்புராணம், ஃபனி அகமது மரைக்காயர் எழுதிய சின்னச்சீறா போல. மூன்று, இஸ்லாமிய நாட்டாரிலக்கியங்கள் மற்றும் அவ்வடிவில் எழுதப்பட்ட சூஃபி இலக்கியங்கள். கண்ணி எனும் வடிவை மிகப்பெரிய அளவில் நிலைநிறுத்தியதில் இஸ்லாமிய நாட்டாரிலக்கியங்களுக்கு பெரும்பங்குண்டு. (தனியாக விரிவாக முன்னர் எழுதியிருக்கிறேன்)
இன்று ஒருவர் ஏன் இஸ்லாமிய – சூஃபி மரபை கற்கவேண்டும்?
- இந்தியப் பண்பாட்டு வளர்ச்சியை, இந்திய இலக்கிய மரபை வரலாற்றுரீதியாகவும், பரிணாமரீதியாகவும் அறியும் பொருட்டு கற்கவேண்டும். இந்தியாவின் இஸ்லாம் அல்லாத இலக்கியங்களை புரிந்துகொள்ளவேகூட இஸ்லாமிய பண்பாட்டு பின்னணி அவசியமானது.
- தமிழ் இஸ்லாமை அறிவது தமிழ்ப்பண்பாட்டின் ஒரு பெரும் பகுதியை அறிவதுதான்.
- இந்திய இசையை உள்ளுணர்ந்து அறிய சூஃபி இசைமரபை அறிந்தாகவேண்டும். சூஃபி இசையை ரசிக்க அம்மரபை அறிந்திருக்கவேண்டும். சூஃபி இசையை அறிந்தவர் இசையே தியான அனுபவமாக ஆகும் நிலையை உணரமுடியும்
- இஸ்லாம் ஓர் மெய்யியல் வெளிப்பாடு. மெய்மை எங்கு எப்படி வெளிப்பட்டாலும் அதை அறிவது ஒரு ஞானத்தேடல்கொண்ட சாதகனுக்கு தேவையானதே. எந்த காரணத்தால் நம் மெய்ஞானிகளுக்கு அது தேவைப்பட்டதோ அதே காரணத்தால் மெய்ஞானத்தேடல் கொண்ட அனைவருக்கும் தேவையாகிறது
ஜெ
பிகு: ஒருவர் இஸ்லாமின் மெய்ஞானச் செய்தியை அறிந்து, அதை தன் அகம் ஏற்பதாக உணர்ந்து, அந்த மார்க்கத்தை ஏற்பது என்பது எந்நிலையிலும் வரவேற்கத்தக்கதே. எந்த மார்க்கத்தை ஒருவர் அவ்வண்ணம் ஏற்றாலும் அது உயர்வானதே. ஒருவர் தானுணர்ந்த மெய்ஞானத்தைப் பரப்புவதும் உகந்த செயலே. மதத்தை அரசியல் காரணங்களுக்காக பரப்புவதும், ஏற்பதும் ,மறுப்பதும். பூசலிடுவதும்தான் கீழ்மை என நினைக்கிறேன்
இஸ்லாமிய மெய்யியல் அறிமுகப் பயிற்சி முகாம்
ஜூலை 12 13 மற்றும் 14 (வெள்ளி மாலை முதல் ஞாயிறு மதியம் வரை)
ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்.தொடர்புக்கு [email protected]