- மானஸாவின் காலடியிலிருந்து…
- மழைப்பாடகர்கள்
- எஞ்சும் நிலங்கள்
- தெய்வத்தளிர்
- பெண்பேராற்றல்
- முகிலில் எழுதல்!
- எண்முக அருமணி
- வில்துணை வழிகள்
- அளித்துத் தீராதவன்
வேதம் மருவிய காலகட்டம் எனப்படும் வரலாற்றுப்பகுதி இந்திய சிந்தனை வரலாற்றில் மிகமிக முக்கியமான ஒன்று. பேரறிஞர்கள் அதை விரிவாக ஆய்வுசெய்துள்ளனர், இன்றும் பெரும் விவாதங்கள் நிகழ்வது அதைப் புரிந்து வகுத்துக் கொள்வதற்காகவே. அதை புரிந்துகொள்ள ஓர் அடிப்படையான உருவகத்தை நான் சொல்வதுண்டு.
வேதங்கள் பெருங்காடு பொலிந்து உருவான விதைத்தொகுதி போன்றவை. அவை காற்றை, மண்ணை, வானை நம்பி விதைகளை அள்ளி இறைத்தன. அவற்றில் பாறைகளில் விழுந்தவை, எரியுண்டவை, உயிர்களுண்டவை பெரும்பகுதி இருக்கலாம். முளைத்தவை வயலிலும் சோலைக்காட்டிலும் விழுந்தவை. வயலில் விழுந்தவை பிராமணங்கள் ஆயின. சோலையில் விழுந்தவை ஆரண்யகங்கள் ஆயின.
பிராமணங்களீல் இருந்து வைதிக மரபு, வேள்விமரபு உருவானது. வேதங்களைப் பயிலும் அறிவுத்துறைகளான வேதாங்கங்கள் உருவாகி பின்னர் சொல்லிலக்கணம், ஒலியிலக்கணம் என தனி அறிவுத்துறைகளாக விரிந்தன. அவை பூர்வமீமாம்சம் எனப்பட்டன. ஆரண்யகங்களில் இருந்து உபநிடத மரபு உருவானது. அவை வேதாந்த மரபு அல்லது உத்தரமீமாம்சம் எனப்பட்டன.
வெண்முரசு நாவல் தொடர் வண்ணக்கடலிலேயே ஆறு தரிசனங்களில் நான்கையும், அவற்றுடன் சமணத்தின் தொடக்ககாலத்தையும், அவை பழங்குடி வாழ்வுடன் கொண்ட உறவையும் பேசிவிட்டது.பன்னிரு படைக்களத்தில் வேதங்களுக்கு இடையேயான முரண்பாடு சார்ந்த விவாதம் தொடங்கிவிட்டது. அத்துடன் அதில் வைதிக மரபுக்கு எதிரான வேதாந்தத்தின் அறைகூவல் முன்வைக்கப்பட்டுவிட்டது. சிசுபாலனை சிரமறுத்து அந்த போரின் தொடக்கத்தை யாதவன் நடத்திவைக்கிறான்.
இந்நாவல் அதன் தொடர்ச்சி. வேதங்களே ஜனபதங்களாக, சமூகங்களாக, அரசுகளாக, நெறிகளாக ஆயினர். அரசர்நிரைகளை நிலைநிறுத்தின. வேதம் அளித்த அதிகாரம் அவர்களுடையது. வைதிகர் வேதத்தின் குரல்களென நிலைகொண்டு அதை அளித்தனர். அந்த அதிகாரத்திற்கு எதிரான போர் நிகழ்ந்த களம்தான் குருக்ஷேத்திரம். அதை முன்னின்று நடத்தியவன் யாதவன்.
உபநிடதங்களில் திரண்டுவந்த வேதாந்த மெய்ஞானமே வேதங்கள் உருவாக்கிய மரபதிகாரத்தை எதிர்த்து நின்றது. அதையே கீதையில் முக்குணங்களுடன் வளர்ந்து நின்றிருக்கும் வேதங்களெனும் மரத்தை வேருடன் வெட்டுக என்று பார்த்தனுக்கு பரந்தாமன் உரைத்த வரி சுட்டுகிறது. உபநிடதங்களின் உச்சம் கீதை. உபநிடதப்பசுவின் பால். உபநிடத அணியின் ஒளிர்வைரம். அது நிகழ்ந்த களம் குருக்ஷேத்ரம் என்பது வெறும் உருவகம் அல்ல, அது ஒரு வரலாறு.
அவ்வரலாற்றுப் பின்னணியைப் புரிந்துகொள்ள உபநிடதக்களத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். உபநிடதங்கள் நிகழ்ந்த காடுகளில் ஒன்று சாந்தீபனி. அதன் தலைமையாசிரியன் இளைய யாதவன். அவனே படைக்கலாமெடுக்கா படைத்தலைவனாக குருக்ஷேத்ரப் பெரும்போரை வழிநடத்தினான்.
மகாபாரதத்தில் பாண்டவர்களின் கானேகல் ஒரு தருணமாக பயன்படுத்தப்பட்டு ஒரு பெரிய நூல்தொகை அளிக்கப்படுகிறது. பெரும்பாலும் தகவல்தொகுப்புகள், நெறிநூல்கள். அரிதாக ஓரிரு மெய்ஞான நூல்கள். யுதிஷ்டிரன் ஞானிகளைச் சந்தித்து அறவுரைபெற்றான் என்னும் கட்டமைப்பை பயன்படுத்தி நூல்கள் தொகுக்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளன. நான் அதை எனக்காகப் பயன்படுத்திக் கொண்டேன். இதில் யுதிஷ்டிரர் உபநிடதம் வளர்ந்த காடுகள் தோறும் செல்கிறார்
வேதத்தின் மையச் சொல் பிரம்மம். அது ரிக்வேதத்தின் அறுதியில் திரண்டுருவாகிறது. அச்சொல் பெருகிய காடுகளே உபநிடதம் விளைந்த இடங்கள். அச்சொல்வளர்காடுகள் வழியாகச் செல்லும் யுதிஷ்டிரர் நேதி நேதி என மறுத்து மறுத்து அறமே மெய்ஞானம் என்னும் தன் தரிசனத்தைக் கண்டடைகிறார்
குருக்ஷேத்ரத்தில் படைக்கலங்கள் ஏந்திய மெய்ஞானமென வந்து நின்றவை உபநிடதங்களே. அவை ஒளிர்ந்து கூர்கொள்ளும் காட்சியை அளிக்கும் நாவல் இது.
இந்நாவலை முதலில் வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்திற்கும் இப்போது வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் என் மனமார்ந்த நன்றி
ஜெ