படுகளம் மின்னூல் வாங்க
படுகளம் வாங்க
நண்பர் ஒருவர் சொன்ன உண்மைநிகழ்வும், நான் நேரில் சந்தித்த ஒரு நண்பரின் வாழ்வும் இணைந்த ஒரு கதை இது. முற்றிலும் கற்பனை – அப்படித்தானே சொல்லவேண்டும்.
நான் முதன்முதலில் பார்த்த படுகளம் 1986 வாக்கில் விழுப்புரத்தில். துரியோதனனின் பேருருவம் மண்ணில் செய்யப்பட்டு வான்நோக்கிப் படுத்திருந்தது. வெறித்த விழிகள், திறந்த வாய். சாவுக்கான காத்திருப்பு. அச்சிலையின் தொடைக்குள் குருதிக்கலம் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது.அதை பீமன் அடித்து உடைத்தபோது என்ன ஒரு கொண்டாட்டம், எவ்வளவு வெறி. அன்று சூழநின்றவர்களின் கண்களை இன்னும் நினைவுகூர்கிறேன்.
பேருருவர்களின் வீழ்ச்சி நமக்கு ஏன் அத்தனை கிளர்ச்சியை அளிக்கிறது? காட்டில் ஓங்கி நின்றிருக்கும் மரத்தை வீழ்த்த அத்தனை மரங்களும் முயன்றபடியே இருக்கின்றன. அது இயற்கையின் நெறி. ஏனென்றால் ஓங்குதல் என்பது ஆதிக்கம்தான். ஆதிக்கங்கள் எல்லாமே பிறவற்றை உண்டு அழித்து உருவாகின்றவைதான். இப்புவியின் சுழற்சியில் எழுந்தவை வீழ்ந்தாகவேண்டும் போலும்.
கோலியாத்தை டேவிட் வீழ்த்தியகதை முதல் எத்தனை விராடர்களின் வீழ்ச்சிக்கதைகள் உலகமெங்கும் உள்ளன. வீழ்த்துபவன் சிறியவனாக தோன்றலாம், ஆனால் அவன் சிறியவன் அல்ல, அவனும் ஒரு பேருருவனே. உருவாகியெழும் ஆற்றல் அவன். பேருருவர்களின் போரை Titanomachy என கிரேக்க தொன்மமரபு சொல்கிறது. அது ஒரு பெருநிகழ்வு. இங்குள்ள இணையான ஆற்றல்கள் ஒன்றையொன்று சந்திக்கின்றன.
இந்நாவலும் அத்தகையதுதான். ஓர் ஆற்றல் ஏற்கனவே நிலைகொண்டுவிட்ட ஒன்று. ஓங்கி நின்றிருப்பது. ஆகவே அது கீழே பார்ப்பதில்லை. தன் காலடியில் புதிய காலம், புதிய விசை உருவாகி வருவதை அது அறியமுடிவதில்லை. உருவாகி வருவதன் கிளைகள் சிறிதாக இருக்கலாம், அதன் வேர்கள் பெரும்பசி கொண்டவை. பசியே ஒரு பேராற்றல். அது அனைத்தையும் உறிஞ்சிக்கொண்டு தன்னை வளர்த்துக் கொள்கிறது. வென்றெழுகிறது.
அண்மைக்காலமாக ’த்ரில்லர்’ எனப்படும் வேகப்புனைவு என்னை கவர்கிறது. நான் அவற்றினூடாக எனக்கு ஒரு சுவாரசியமான எழுத்துக் காலகட்டத்தை அளித்துக்கொள்கிறேன். அது என் வழக்கம், நான் எனக்குள் தீவிரமான புனைவுகளை வெறுமே கற்பனையாகவே நிகழ்த்தி பொழுதைப் போக்கி கடந்துசெல்வதுண்டு. எழுதுவதில்லை. இவை எழுதப்படுகின்றன என்பதே வேறுபாடு. ஆலம் நாவலுக்கு பின் அந்த மனநிலை நீடிக்க இதை எழுதினேன்.
ஆலம் வெளிவந்தபோது என் வாசகர்களிடமிருந்து குழப்பமான சில எதிர்வினைகளும் கேள்விகளும் எழுந்தன. ஆலம் ஒரு ‘பொழுதுபோக்கு’ எழுத்தா? குற்றவாளியை கண்டுபிடிக்கும் விளையாட்டா? அப்படி எடுத்துக்கொண்டவர்களுக்கு அதிலுள்ள உருக்கமான வாழ்க்கைச்சித்திரம் ஏன் என புரியவில்லை. அதை இலக்கியமென கொண்ட சிலருக்கு இலக்கியம் இப்படி வேகமாக நகருமா என்று ஐயம்.
வேகப்புனைவு என்பது ஓர் வடிவத்தனித்தன்மை மட்டுமே. இலக்கியம் எல்லா வடிவிலும் நிகழ முடியும். தூய வேகப்புனைவுகள் ஏராளமாகவே ஆங்கிலத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. சாகசக்கதை, போர்க்கதைகள், பேய்க்கதைகள், துப்பறியும் கதைகள் என அவை பலவகை. மேலைநாட்டு வணிக வேகப்புனைவுகள் மிகக்கச்சிதமான வடிவம் கொண்டவை. தொகுப்பாளர்களும் இணைந்து பணியாற்றி தொழிற்சாலை உற்பத்திபோல உருவாக்கப்படுபவை. அவற்றில் இலக்கியத்திற்குரிய வாழ்க்கைச்சித்தரிப்பு, மெய்யான மானுடர், மெய்யான உணர்வுநிலைகள், அகவிவரிப்பு ஆகியவை இருப்பதில்லை. நிகழ்வுகள் மட்டுமே இருக்கும். அவை சுருக்கமாக இருக்கும். வேகமாக ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குச் செல்லும்.
அத்தகைய புனைவுகளில் நம்பகத்தன்மையை உருவாக்கும் பொருட்டு விரிவான தரவுகள் அளிக்கப்பட்டிருக்கும். ஏனென்றால் அமெரிக்க வேகப்புனைவுகளின் விசித்திரமான ஒரு சிக்கல்தான் காரணம். அவை உலகளாவிய வாசகர்களுக்காக எழுதப்படுபவை. ஆகவே ஒரு குறிப்பிட்ட நிலம், மக்கள், வாழ்க்கைக் களத்தின் சித்திரத்தை அவை அளிக்கவியலாது. வாசகர்கள் அந்தக் களத்தை புரிந்துகொள்ள முடியாது. ஆகவே உலகளாவ வாசகர்களுக்காக அவர்கள் சில புனைவுக்களங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்.வன்மேற்கு (wild west) முதல் நிழல் உலகம் (Mafia) வரை, விந்தையான அறிவியல்சோதனைகள் முதல் வேற்றுக்கோள் உயிர்களின் படையெடுப்பு வரை அவர்களுக்கு பொதுவான களங்கள் பல உள்ளன. உலகப்போர் போன்று, அல்லது பனிப்போர்ச் சூழல் (cold war) போன்று உண்மையான வரலாற்றுச் சந்தர்ப்பங்களை புனைவுக்களமாக மிகையாக்கிக் கொள்வதுமுண்டு.
இவை வெறும் புனைவுக்களங்கள் என்பதனால் வாசகர்களின் மனதில் விரிவாக இவற்றை நிலைநாட்டியாகவேண்டும். மேலும் இப்புனைவுகளின் வாசகர்கள் அறிவுசார்ந்து அணுகுபவர்கள், இப்புனைவுகளின் உணர்வுநிலைகளுக்கு இடமில்லை. ஆகவே அவ்வாசகர்களை திகைக்கச்செய்யும் அளவுக்கு ஆய்வுத்தரவுகள் தேவை. படுகளம் போன்ற நாவல் யதார்த்தவாதம் சார்ந்தது. இதை தரவுகளாகப் பார்த்தால் பல்லாயிரம் நுண்தரவுகளால் இது உருவாக்கப்படுகிறது. இந்நாவலின் முதல் அத்தியாயத்தின் கடைவீதியின் சித்திரத்தை மட்டும் ஓர் ஆய்வாளர் உருவாக்கினாரென்றால் அவருக்கு பல ஆண்டு ஆய்வு தேவைப்படும். ஆனால் யதார்த்தவாதம் எழுத்தாளராலும் வாசகராலும் பொது அனுபவக்களமாக இயல்பாக உருவாகி வருகிறது.
அமெரிக்க வேகப்புனைவுகள் ஒருவகை சதுரங்க விளையாட்டுக்கள் அல்லது கியூப் விளையாட்டுக்கள். அவை வாசகர்ளைச் சீண்டி அவர்களின் மூளையுடன் விளையாடுகின்றன. எத்தனை கூரிய மூளையையும் திகைக்கவைத்து விரியும் அற்புதமான பல படைப்புகள் அவற்றிலுண்டு. அவற்றை நான் வாசிப்பதுண்டு, ஆனால் அத்தகைய ஒன்றை எழுத எனக்கு ஆர்வமில்லை. அதன் விளைவென ஒன்றும் எஞ்சாது- அவை வாசித்து முடித்ததுமே உதிர்ந்துவிடுபவை. பத்தாண்டுக்குமேல் எவையும் சந்தையில் இருப்பதுமில்லை.
ஆனால் நவீனத்துவம் இலக்கியத்தில் இருந்து அகன்றபின், எழுத்தாளரின் தனிவாழ்க்கையை ஒட்டியே இலக்கியத்தைப் படிக்கும் முறை இல்லாமலானபின், எல்லாவகை எழுத்திலும் இலக்கியம் நிகழமுடியும் என ஆனபின், வேகப்புனைவு என்னும் வடிவிலேயே இலக்கிய ஆக்கங்கள் உருவாயின. அத்தகைய பல நாவல்கள் எனக்கு ஊக்கத்தை அளித்தன, அவ்வகையில் எழுதவேண்டும் என்னும் தூண்டுதலை அடைந்தேன். இவை வெறும் வேகப்புனைவுகள் அல்ல, அவ்வடிவில் அமைந்த இலக்கியங்கள்.
ஒரு வேகப்புனைவில் உணர்வுநிலைகள், சிந்தனைகள் ஆகியவற்றுக்கு இடமில்லை. அதிலுள்ள கதாபாத்திரங்கள் வாழ்க்கையுடன் ஒட்டியவர்கள் அல்ல, அவர்கள் சதுரங்கக் குதிரைகள் மட்டுமே. ஆனால் வேகப்புனைவு இலக்கியத்தில் உணர்வுகள், சிந்தனைகள்,மெய்யான வாழ்க்கைச்சூழல், மெய்யான மானுடர் உண்டு. அதன் கதைநிகழ்வுகள் யதார்த்தவாதத்தின் இயல்பான நகர்வுக்குப் பதிலாக வேகப்புனைவுக்கு உரிய வகையில் ஒன்றுடனொன்று இணைக்கப்பட்டு வாசிப்புவேகம் உருவாக்கப்பட்டிருக்கும். இது மிகப்பெரிய வேறுபாடு.
இந்த வகை எழுத்தையும் ஒரு முன்னோடி முயற்சியாகவே செய்கிறேன். ஏற்கனவே அறிவியல்புனைவு, பேய்க்கதைகள், துப்பறியும் கதைகள் எனப் பல வடிவங்களை முயன்றுள்ளேன். இனி வரண்ட, மெதுவான யதார்த்தவாதமே இலக்கியம் என்னும் பிடிவாதங்கள் செல்லுபடியாகாது. அப்படிப்பட்ட பிடிவாதங்கள் கொண்டிருந்த ‘கலைப்பட இயக்கம்’ சினிமாவில் அழிந்துவிட்டது. இலக்கியத்தில் அந்த வரண்ட யதார்த்தவாதம் கொஞ்சம் நீடிக்கிறது, காரணம் இலக்கியத்துக்கு முதலீடு தேவையில்லை. யதார்த்தங்களைச் சொல்வது அரசியல் – சமூகவியல் சார்ந்து தேவையாகவும் உள்ளது. இன்றைய எழுத்து இன்றுள்ள ஊடகப்பெருக்கச் சூழலில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டாகவேண்டும். அதற்கு அது ஆர்வமூட்டும் வாசகத்தன்மை கொண்டிருக்கவேண்டும்.
வெறும் கேளிக்கைவாசிப்பான வேகப்புனைவுகளும் நிறைய வரவேண்டும் என நினைக்கிறேன். வாசிப்பை ஓர் இயக்கமாக நிலைநிறுத்த அவற்றால்தான் இயலும். கூடவே இலக்கியப்படைப்புகளிலும் இந்த வேகமான வாசிப்புத்தன்மையை எய்தவேண்டும். இலக்கியத்திற்குரிய அகப்பயணம், வாழ்க்கைவிமர்சனம் ஆகியவற்றை வேகமான கதைநகர்வுடன் இணைத்துக்கொள்ளும் ஆக்கங்கள் வரவேண்டும். இவை தொடக்கமாக அமைக
இந்நாவலை என் பிரியத்துக்குரிய நண்பர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்
ஜெ