குமரியை கண்டடைதல் – கடிதம்

குமரித்துறைவி வாங்க  

குமரித்துறைவி மின்னூல் வாங்க

அன்புள்ள ஜெ.,

எனது நீண்ட நாட்களுக்குப் பிறகான வாசிப்பு குமரித்துறைவி.. இது என்னை கரைத்தது. இந்த வாசிப்பு ஒரு ஆத்ம தியானம். எத்தனை இடங்களில் கண்ணீரை வரவழைத்தது. தொண்டை அடைத்தது. இறைவன் நம் மீது அருள்புரிந்ததன் அடையாளங்கள் இவை. எத்தனை பிரம்மபிரயத்தனங் களில் கிடைக்க வேண்டியவை இந்த அனுபவங்கள்.எளிய வாசிப்பின் மூலம் கிடைக்க செய்தீர்கள் ஜெ.என் மனமார்ந்த நன்றிகள் .இந்நூல் ஒரு ஆத்ம பரிபாலனம் .

 டெல்லி சுல்தான் கில்ஜியின் தளபதி மாலிக்கபூரின் படையெடுப்பின்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. அப்போது அங்கிருந்து மீனாட்சியையும் சுந்தரேஸ்வரையும் திருநெல்வேலி அருகே ஆரல்வாய் மொழியில் (அன்றைய வேணாடு) பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் 59 ஆண்டு காலம் மறைத்து வைத்திருந்தனர். பின்னர் மீனாட்சி மீண்டும் மதுரைக்கு எழுந்து அருள்கிறார். இந்த நிகழ்வை ஒட்டிய கதை இது.

 மதுரையை வென்ற நாயக்கமன்னர்கள் தன் தாயாரை தன் மண்ணுக்கே மீண்டெழ செய்ய உரிமை கோருகிறார்கள்.வேணாட்டு மன்னனுக்கு தன் நாட்டுக்கு தேடி வந்த தேவியை திருப்பி அனுப்பினால் அனைத்து மங்கலங்களும் சென்று விடுமே! என்றும் போராட முடியாத மிகப்பெரிய ராஜ்ஜியம் ஆயிற்றே என்றும் கவலை .சிவிந்திரம் சிரமடம் பிரம்மதத்தன் நம்பூதிரிப்பாடு அவர்களின் வார்த்தை மகாமங்கலம் .”பிறந்த இல்லம்விட்டு மகள் மங்கல்யவதியாய் புருஷனோடு ஒப்பம் கிளம்பி போறது தந்தைக்கு ஹ்ருதய மதுரமான சந்தர்ப்பம். அந்த  இல்லத்துக்கு அஷ்டலட்சுமிகளும் வந்து நிறையுற முகூர்த்தம். மகாராஜா கிட்ட சொல்லு விதிப்படி அவன் பெண்ணை பெற்ற தந்தையா மனணயிலே உக்காந்து தேவியை தன் வலத் தொடை மேலே உட்கார வைச்சு சுந்தரேசனுக்கு கைத்தலம் பற்றிக்குடுக்கட்டும் “.

உள்ளம் நிறைந்தது. கண்ணீர் பெருகியது.

 மார்த்தாண்டன் உதயம் செண்பகராமனாக அத்தனை மனப்போராட்டங்களுடன் முழு விசையுடன் நானே நின்று திருமணத்தை ஏற்பாடு செய்த திருப்தி. திருமணத்திற்கு தயாராகி வந்த மகாராஜா ஆதித்ய வர்மா வரகுண சர்வாங்க நாத பெருமாளை தொட்டுவிட வேண்டும் என்ற மார்த்தாண்டனின் அதே மனநிலை தான் எனக்கும். எப்பேர்பட்ட புண்ணிய ஆத்மா அது. உமையாளையும் ஆதிகேசவனையும் மக்களாகக் கொண்டு திருமணத்தை நடத்திய ஆகப்பெரும் தந்தை. அவருடைய மனநிலையை உணர்வுகளை சித்தரித்து இருந்த விதம் மிக அருமை. ஜெ வின் கற்பனையில் விரிந்த திருமண ஏற்பாடுகள் அப்பப்பா!மீனம்மையின் அருளின்றி இது சாத்தியமில்லை.வாசித்த ஒவ்வொருவரின் மனதிலும் இத் திருமண நிகழ்வுகள் தந்த ஆனந்தம் நேரில் பார்த்தவருக்கும் கிடைக்காது .அழியாது நினைவில் நிலைத்திருக்கும் பேரானந்தம்

என் அன்புகள் ஜெநன்றி

அன்புடன் ஜெயந்தி செந்தில்குமரன் பொள்ளாச்சி 

முந்தைய கட்டுரைமாபெரும்பயணம்
அடுத்த கட்டுரைஆகமம்