அழைப்பு – கடிதங்கள்

அழைப்பு (சிறுகதை)

அன்புள்ள ஆசிரியருக்கு ,

வணக்கம். அழைப்பு சிறுகதை உலுக்கி போட்டு விட்டது. மானுடம் அழிவின்மை என்பதை சந்திக்கும் கதை. ஒரு கதவை திறந்தால் அங்கு போய் விடலாம். அவ்வளவு தொலைவுதான்.அதை கடக்க படாத பாடு பட வேண்டியுள்ளது.

“நம் வாழ்க்கையிலேயே நாம் அழிவின்மையை எப்படியோ கொஞ்சம் அறிந்திருப்போம். அழிவற்றவை சில நம்முடன் உள்ளன….அறிவு உதாரணமாக. நாம் அழிவின் வழியாக அழிவின்மையை உணர்பவர்கள்”

” அழைப்பை உள்ளிருக்கும் அச்சத்தால் அல்லது ஆணவத்தால் எதிர்கொள்ளவேண்டும்”

கதவுக்கு அப்பால் அழிவின்மை அடைந்த மனிதர்களைக் காண்கின்றார்கள். அழிவின்மை அடைந்த மனிதர்கள் உதாரணமாக, உத்வேகமாக இருக்கிறார்கள். ஆனால் கதவுக்கு அப்பால் செல்வது அவ்வளவு சுலபம் இல்லை.

 

அன்புடன்

நிர்மல்

 

அன்புள்ள ஜெ

அழைப்பு ஒரு திகைக்கவைக்கும் கதை. ஒரு கவித்துவ உருவகம். கதையாக அந்த சூழல் வர்ணனை, அந்த உரையாடல் எல்லாமே ஒரு கனவை அளிக்கின்றன. தொலைவில் எங்கோ கதையின் அதே வகையானது. விசும்பு அறிவியல்கதைகளின் அடுத்தகட்டக் கதை. அறிவியல்கதையே தத்துவக்கதையாகவும் உள்ளது.

முடிவின்மை, அழிவின்மை இரண்டும் ஒன்றே. மிக மிக அருகே ஒவ்வொரு கணமும் இருந்துகொண்டே இருக்கிறது. அதை எண்ணிக்கொண்டே இருக்கிறோம். அதை அடையவே கனவு காண்கிறோம். பிள்ளைகளை வளர்த்து posterity க்கு விடுகிறோம். கதை எழுதுகிறோம். கவிதை எழுதுகிறோம். காலம் முழுக்க இருப்போம் என கற்பனைசெய்துகொள்கிறோம். அரசர்கள் கோயில் கட்டுகிறார்கள். சிலை வைக்கிறார்கள். ஆனால் அந்த முடிவின்மையின் வாசலை, அழிவின்மையின் வாசலை, ஒரே கணத்தில் நாம் திறந்துவிடும் அமுதத்தின் வாசலை நம்மால் திறக்க முடியாது. சிலரால் முடியும். அவர்கள் வேறுவகையினர். நாம் அந்த அழைப்பை நாள்தோறும் கேட்டுக்கொண்டு அதை தவிர்த்துக்கொண்டு அந்த edge லேயே முழுவாழ்க்கையும் வாழ்ந்துகொண்டிருப்போம்

ராமச்சந்திரன் கிருஷ்ணா

முந்தைய கட்டுரைகஸகிஸ்தான் பயணம்
அடுத்த கட்டுரைஆயுர்வேதத்தின் தேவை என்ன?