வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு
“கோடானுகோடி விண்மீன்கள்…கோடானுகோடி உயிர்கள். கோடானுகோடி வாழ்க்கைகள். இதில் பாவமென்ன புண்ணியமென்ன? கடலலைக் குமிழி நிலையற்றது. கடலே காலவெளியில் ஒரு வெறும் குமிழி…” வியாசர் உடைந்து பேசிக்கொண்டிருக்கையில் சாத்தன் புன்னைகைத்தபடி மேலுள்ள வரிகளை கூறுவார். ஆழ்ந்த அமைதி என்னுள் ஊறியது.
முதற்கனல் வாசித்தேன். எட்டு மாதங்களுக்கு முன் வெண்முரசு வாசிக்கலாம் என முடிவு செய்து வாசித்து, தோல்வியுற்று அதை அப்படியே ஒதுக்கி பின் வேறு நிறைய வாசிப்பு இடைபட்ட நாட்களில், பின் கடந்த மாதம்
எஸ். இலட்சுமணப்பெருமாள் அவர்களின் “ஆதிப்பழி” சிறுகதை வாசித்தேன். சகுனி தன் பெயரை அவையில் கூறிய கணம் கிளர்ச்சியடைந்து வெண்முரசு மீண்டும் முயற்ச்சிக்கலாம் என தோன்றியது. ஆனாலும் சிறு தயக்கம் அல்லது பயம். இந்த இரண்டு ஆண்டுகளில் என் உள்ளுணர்வை வெகுவாக நம்புகிறேன். அதனினூடாகவே அறிந்தேன் வெண்முரசு வாசிக்கும் தருணம் வந்துவிட்டதென. ஆசிரியரே வாசிப்பில் ஒரு படி முன்நகர்ந்திருக்கிறேன். லெளகீகத்திற்கு நடுவில் முதற்கனலை பதினைந்து நாட்களில் முடித்தேன் என்பது ஒருவித மாயவிசை.
வாசிப்பு அனுபவத்திற்கு வருகிறேன், ஜனமேஜயனிடம் ஆஸ்திகன் கூறுவது “இச்சை எஞ்சியிராத உலகத்தில் படைப்பு நிகழ்வதில்லை” அதுவரை ஜனமேஜயனின் பக்கம் அறம் இருப்பதாக நினைத்த என் எண்ணங்கள் உடைந்து, ஆஸ்திகனின் சொல்லுக்கு ஆம் என்றது, இச்சை இல்லாமல் படைப்பு இல்லை, ஆனாலும் அதை அப்படியே முழுமையாக உள்வாங்கி அதன்படி நடப்பதும் பிழை ஆகக்கூடும் எனும் தெளிவு என்னுள் இருந்தது. நீங்கள் கூறியதுதான் இச்சையை மட்டுமே பின்தொடர்பவன் எங்கேனும் தீங்கினை உண்டு செய்வான்.
வேள்விமுகத்திற்கு பின் பித்து நிலையிலேயே முதற்கனலை முடித்தேன். பீஷ்மர் முதல் படகோட்டி நிருதன் வரை ஒவ்வொருவரும் நினைவில் நீங்காமல் இருக்கிறார்கள். பீஷ்மருக்கும் சால்வ மன்னனுக்கும் நடக்கும் போரில் சால்வமன்னின் வீரம் கண்டு வியந்தேன் பீஷ்மரை போலவே, பின் அம்பையை புறக்கனித்த சால்வமன்னன் புழுவாக பட்டார், இல்லை அவர் தரப்பில் ஏதேனும் அறியப்படாத நியாயங்கள் எஞ்சியிருக்கும் என நினைத்தேன் இருப்பினும் சூதர்களின் பாடல்களுக்காக வாழும் அற்பன் என்றே தோன்றியது. அதற்கினங்க அவன் வீழ்ச்சியும் இருந்ததை கண்கூட கண்டு நான் ஏன் மகிழ்ந்தேன் என தெரியவில்லை ‘அம்பை’ க்காக இருக்கலாம். ‘அம்பை’ நினைக்கும் போதே என் அகம் சோர்வடைகிறது. வாழ்ந்திட ஓரிடம் தேடி அலைந்தவளுக்கு கிடைத்தது வெறும் அநீதி தவிர வேறில்லை என்றாலும் அவளின் மூன்று தேவிகளும் அவளுடன் உரையாடி ஒவ்வொருவராக சென்றபின் எனக்குள் ஒரு உத்வேகம் ஆம் ஆம் பீஷ்மர் தான் என அகம் கொந்தளித்தது அதன்படி அம்பை கிளம்பியபோது ஒரு நம்பிக்கை அது வளரும் முன்னரே கருகியது. அம்பைக்காக கண் கலங்கினேன். பின் விசித்திரவீரியன்.
விசித்திரவீரியன். ஆரம்பகட்டம் முதலே அவரை பொருட்படுத்தாமலிருந்தேன். பீஷ்மரே அனைத்துமென்றேன். இவருக்காக இவர் ஏன் தீங்கு செய்து தீச்சொல் பெற வேண்டுமென்றெல்லாம் நினைத்தேன். ஓரு தருணம் அம்பைக்கு நடந்த அநீதிக்காக பீஷ்மர் முன் வாளுடன் நின்ற விசித்திரவீரியன் எனை சிறுமை செய்து விட்டார். வீரம் கட்டற்ற வீரம் என்றால் இதுவன்றி வேறென்ன? என்று தோன்றியது. பின் அம்பைக்காக கலங்கிய கண் வீசித்திரவீரியனுக்காக காது மடல்களை நனைத்தது. பத்து நிமிடம் அவரை நினைத்தால் எவருக்காயினும் கண் பொங்காமல் இருக்குமா?
பின் நிறைய குழப்பங்கள் இவர் யார்? எதற்கு இத்தனை கதாபாத்திரங்கள்? சிறு கதாபாத்திரங்களுக்கு கூட ஏன் இவ்வளவு விவரனைகள்? என தோன்றியபோது ஒன்றை அறிந்தேன் அவ்வாறு இல்லையென்றால் இதில் நிறைவு இருக்காதென.
நான் முன்பு அறிந்திருந்த நிறைய தத்துவங்கள் நிரம்பிருந்தன. புதியதாகவும் சில இடங்களை கண்டடைந்தேன். தீர்க்கசியாமர் கூறுகிறார் “வல்லமைகொண்ட நெஞ்சுடையவரே, பெரிய பாறைகளே பெரிய பாறைகளை அசைக்கமுடியும் என்றறிவீராக. மாபெரும் அறத்திலிருந்தே மாபெரும் தீமை பிறக்கமுடியும். எல்லையற்ற கனிவே எல்லையற்ற குரூரத்தின் காரணமாகக்கூடும். பெரும்புண்ணியங்கள் பெரும் பழிகளைக் கொண்டு வரலாகும். விதியால் அல்ல, செய்கைகளாலும் அல்ல, எண்ணங்களினாலேயே மாமனிதர்கள் உருவாகிறார்கள். வேழங்கள் மரங்களை விலக்கி, பாறைகளைப் புரட்டி, காடுகளைத் தாண்டிச்சென்று வேழங்களையே போரிடத் தேர்ந்தெடுக்கின்றன.” இதை நான் உணர்ந்திருக்கிறேன் ஆனாலும் சரியாக பிடிபடாமலேயே இருந்தது. அறம் அன்பு என்பார்கள் மறுமுனையில் அவர்களின் வன்முறை கட்டற்றதாக இருக்கும். சொல்லப்போனால் என் கடந்தகாலத்தில் நானும் அப்படி இருந்திருக்கிறேன்.
விசித்திரவீரியன் அம்பிகையிடம் கூறுவார் “உண்மையில் மனிதர்களுக்கு பிறர் பேசும் அனைத்தும் பொருளற்றவையாகவே தெரிகின்றன” …“பிறர் பேச்சில் அவர்கள் தன்னை மட்டுமே காண்கிறார்கள். தான் இடம்பெறாத பேச்சைக்கேட்டால் ஒன்று விலகிக்கொள்வார்கள். இல்லையேல் அதற்குள் தன்னை செலுத்த முயல்வார்கள்.” இதை நான் வாழ்நாளில் சந்தித்த நூற்றில் தொன்னூற்றியொன்பது மனிதர்கள் செய்திருக்கிறார்கள். நானுமே. இதை ஒருவர் தெரிந்துகொண்டால் அவர் மனிதர்களை அணுகும் விதம் மாறுபடும்.
“உள்ளூர நிறைவின்மையை அறிபவர்கள் பொய்யாக அகந்தையை காட்டுவார்கள்” இந்த இடங்களில் ஒரு வினாவின் பதில் என அமைந்தது, மாதங்கள் முன்னதாக ஒரு கடிதம் எழுதினேன் எனக்குள் எஞ்சியிருக்கும் வன்முறை என் குடும்பத்தாரின் வன்முறை இவற்றை எப்படி கையாள்வது என பெரிய கடிதம் உணர்ச்சிக் கொந்தளிப்பில் எழுதினேன், அனுப்பவில்லை இப்போது அதற்கான பதில் கிடைத்து மேலும் முன்நகர்கிறேன்.
முதற்கனல் ஒரு தொடக்கம் எனும் உணர்வே என்னிடமில்லை தனியொரு நாவலை வாசித்த அனுபவமே எஞ்சியுள்ளது எனினும் இதன் தொடர்ச்சி குறித்து ஆவலாக உள்ளேன் இது வரையியிலும் வாசித்தவற்றைக்கும் இப்போது நான் வாசிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அனைத்தும் இலவசமாக இருப்பதற்கு நன்றி.இணையத்தில் வாசித்தேன். புத்தக வடிவில் மீண்டும் ஒரு முறை வாசித்தே ஆக வேண்டுமென முடிவுடன் இருக்கிறேன். மறுவாசிப்பிற்கு பின் கடிதம் எழுதுவது குறிப்பு எடுப்பதை போல் ஆகிவிடும் என இப்போதிருக்கும் உணர்விலேயே எழுத வேண்டுமென எழுதுகிறேன். “நான் எழுதியது வெறும் கடலின் ஒரு துளி” அவ்வளவு இருக்கிறது முதற்கனலில் என்னால் சரிவர தொகுத்து எழுதமுடியவில்லை என நினைக்கிறேன். சிகண்டியும் பீஷ்மரும் சந்தித்துக்கொள்ளும் இடமொன்று……ஒருவித சலிப்பை உணர்ந்து பின் தெளிந்து “ஆம் அவ்வாறே ஆகுக” என முனகி புன்னகைத்தேன்.
மற்றும் வெண்முரசு துவங்கிய நாளிலிருந்து நான் என்னை வேறாக பார்க்கிறேன். நிறைய மாற்றங்கள் குறிப்பாக நிறைய முன்நகர்வுகள். நன்மைகளை உணர்கிறேன். அறம் வாசித்த கிளர்ச்சியில் உங்கள் முன் வந்து நின்றதைப்போல் இப்போது முதற்கனல் முடித்து உங்கள் முன் வந்து நிற்பதை கற்பனை செய்து கொள்கிறேன்.
அன்புள்ள ஆசிரியருக்கு நன்றி!
அன்புடன், பொன்சக்திவேல்.