விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது: வே.நி.சூர்யா
கவிஞன் தான் எதிர்கொண்ட அனுபவத்தின் திரட்சியை ,தமது உணர்வின் வாக்கு மூலத்தை மொழிவிதையாக மாற்றி நம் வாசிப்புநிலத்தின் மீது வீசுகிறான்.அது எப்போது ஸ்திரதன்மை அடையுமென்றால் அதில் கவிஞன் கண்டடைந்த ஒரு தரிசனத்தின் தெறிப்பு இருந்து விட்டால் போதும் அது வேர்விட தொடங்கிவிடும்.
தரிசனம் என்பது விசிறி சாமியாராக மாறுவதற்கு முன் கிடைத்த குருவியின் மரணமாகவோ ஐசக் நியுட்டன் பார்வைக்கு கிடைத்த தரையில் விழுந்த ஆப்பிள் எழுப்பிய தர்க்கமாவோ இருக்கவேண்டியதில்லை. அறைக்குள் வந்து விட்ட பழுப்பு நிறபட்டாம் பூச்சியை குறிவைக்கும் பல்லியாகவோ நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் ஏறி ஏறி சப்பையான நாயின் உடலாக கூட இருக்கலாம்.சுருக்கமாக சொன்னால் அன்றாடங்களின் தரிசனம் அதாவது புதிய வெளிச்சம்.அவ்வளவுதான்.
அந்தவகையில் சம கால கவிஞர்களில் வெ.நி.சூர்யா தனித்துவமானவர். முற்றிலும் தனிமையானவர்.கூட்டத்தில் இருந்தாலும் பல்லி வால் போல தன்னை துண்டித்துக் கொண்டு தன்னை எழுதிபார்ப்பவர். அவரின் தனிமையுடன் தான் ஆண்டவர் கவிதையின் பக்கங்களில் வாக்கிங் போகிறார்.நான் ஆண்டவர் என்று சொன்னது இயேசுவைதான்.
ஆகாயவதி என்ற தலைப்பில் ஒரு கவிதை.
வதி என்றால் தங்குமிடம் என்று பொருள். வதி குருகு உறங்கும் இன் நிழல் புன்னை என்று குறுந்தொகையில் வரும்– கொசுக்கள் கூட தங்கி உறங்குவதற்கான நிழலை தரும் புன்னை என்ற அர்த்தத்தில் அந்த வரி. வரும் .ஆகாய வதி என்றால் ஆகாயத்தை தங்குமிடமாக கொண்டவர் எனலாம் அங்கு யார் தங்குவது ? நம் ஆண்டவர் தான்
ஆகாய வதி என்ற கவிதையில் …யதேச்சையாக எனது அறையில் விவிலியத்தை திறந்தேன் என்று தொடங்குகிறார் அப்படி விவிலியத்தை திறந்ததும் அவர் கண்ணில் படுகிறது ஒரு பாடல் ..அது முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள் என்பதாகும். இது பரிசுத்த வேதாகமம் உன்னதப்பாட்டு 2;2 ல் வருவது.இதை அப்படியே கவிதையில் வைக்கிறார் .இதில் என்ன அப்படி விசேஷம் எனில் இதில் வரும் முள்ளுக்குள்ளே லீலி புஷ்பம் என்பது தான் கவிஞன் தன்னை கண்டடைந்த கணம். இந்த சமூகத்தின் கட்டமைப்பு முட்கள் போலவும் தனது மனம் லீலி புஷ்பமாகவும் அவதானிக்கிறான். முள்சூழல் எனில் துயரம் தானே அது தான் ஆண்டவர் மீது ஒரு குற்றச்சாட்டை சுமத்துகிறார். சிலுவையை சுமக்க முடிகிறவரால் இந்த கவிஞனின் குற்றச்சாட்டை சுமக்க முடியாதா என்ன? சரி என்னதான் குற்றச்சாட்டு ..வெ.நி.சூர்யா எழுதுகிறார்.
நீயோ ஆகாயவதி
உனது முகவரிகள் எண்ண முடியாதவையாக உள்ளன
இப்போது இவ்வறையில் கூட
எட்டாயிரம் திசைகளில் இருக்கிறாய்
சன்னலுக்கு அப்பாலான தொலைவையும்
விட்டு வைக்கவில்லை.
ஒரே ஒரு உருவமாக நான் நீடிப்பதை எண்ணி
என்னை கவலையுற செய்யும்
உன்னைப் போற்றி துதிப்பதை தவிர
இவ்வதிகாலையில்
வேறு என்னதான் செய்யமுடியும் —- என்று முடிக்கிறார்.
ஆக இவரின் பெரும் கவலை ஆண்டவர் போல தன் இருப்பு அமையாதது தான் இந்த ஒரே உருவம் நீடிப்பது தான் பெரும் கவலை. இது இறைத்தன்மையை அடைய முயலும் ஒரு அபிலாஷையா? நீயும் நானும் ஒன்றுதானே என்கிற அத்வைதத்தை எழுதிபார்க்கும் முயற்சியா? எதுவாகயிருப்பினும் ஆண்டவர் வெ.நி.சூர்யாவின் தனிமையின் துதியை கேட்டுக்கொண்டிருக்கிறார்
இன்னொரு கவிதையில்..
புலி உறுமும் நீலமலையில் தொலைந்து போன
ஆட்டுகுட்டி ஆகி விடுகிறேன்
உன்னுடன் பேசாதா பொழுதுகளில்
நீ மேய்ப்பனாக வந்தால் தப்பியிருப்பேன்
என்று ஆண்டவனுடன் உரையாடுகிறார்.நீ மேய்ப்பனாக வந்தால் நான் தப்பி இருப்பேன். வராததால் நான் உறுமும் புலிக்கு இறையாகி போனேன் என்றும் கொள்ளலாம்.ஏன் இந்த நிலை? அவர் ஆட்டுக்குட்டியானதால் தான்.ஏன் ஆட்டுக்குட்டியானார்? ஆண்டவருடன் பேசாத பொழுதில் அவர் ஆட்டுக்குட்டியாகிறார். ஆக ஒன்று அவர் ஆண்டவருடன் பேசியபடி இருக்கிறார் அல்லது தனிமையில் இருக்கிறார். தனிமையில் இருந்தால் அவர் பலியாகிறார். அவர் தனிமைக்கு ஒரே போக்கிடம் ஆண்டவர் தான்.
மற்றொரு கவிதை பிராத்தனை என்ற தலைப்பில்..
இந்த கவிதையை நீங்கள் வாசிக்கும் முன் கிறிஸ்துவ சபையில் ஜெபத்தை காது கொடுத்து கேட்டிருக்கவேண்டும்.அதன் தாளகதியில்தான் இந்த கவிதையை வாசிக்கவேண்டும் .கிறிஸ்துவ சபையில் அசலான ஜெபம் கீழ்கண்ட வரிகளால் நிரம்பி ததும்பும் ( நான் சபைக்கு போனவன். இந்திய வேதாகம சபையில் பைபிளை படித்து தேர்ச்சி பெற்றவன் அது தனிக்கதை)
என் பாவங்களை பொறுத்தருளும் ஆண்டவரே
எமக்காக உமது கருணையை ஆசீர்வதியும்
என்னை துக்கத்தில் தவிக்கவிட்டதேயும் கர்த்தாவே
என்னை உம் கரங்களில் வைத்துக்கொள்ளும் தேவனே
சாத்தானை எதிர்க்கும் பெலத்தை எமக்கு தாருமய்யா…. இதெல்லாம் ஜெபத்தில் வரும் பிரதான டெம்பிளேட்
வெ.நி.சூர்யா பிராத்தனை கவிதையை எப்படி கட்டமைத்து இருக்கிறார் பாருங்கள்..
உனதாழத்தினுள் இருத்திக்கொள்
நிலவறை மனிதனாக உணரவிடாதேயும்
ஒருபோதும் மறந்துவிடாதேயும்
எமக்கு தாரும் – உன்னை நம்புவதற்கான காரணங்களை.
இப்படியாகவே கவிதையின் ஒவ்வொரு படிமத்திற்கு பிறகும் முடிகிறது.
கடைசியில்…வெ.நி.சூர்யா இவ்விதமாக முடிக்கிறார்.
இமைப்பொழுதேனும் நினது பாதத்தில்
முள் என உரையும் பேற்றினை நல்கு
எமக்கு தாரும்-
உனது அருளேயின்றி மின்னும் ஒரேயொரு கணத்தை.
பிறகு உன்னை உன்னை…
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தாள் வாழ்க – என்ற திருவாசகத்தில் வரும் வரி போல இவரும் இமைப்பொழுதேனும் நினது பாதத்தில் ( தாள்) -என்று எழுதுகிறார்.அதாவது கடவுள் காலில் முள் குத்தினால் அதை எடுக்கும் வரை அவர் கவனம் முள்ளின் மேல் தான் இருக்கும் அப்படி என் மீது உன் கவனம் குவிய உன் பாதத்தில் நான் முள்ளாக உறையவேண்டும்.என் மீது உன் கவனத்தை குவி ஆண்டவரே என்கிறார்.
அடுத்து கேட்பது தான் பிரமாதம்.. உன் அருள் இல்லாமல் நான் மின்னும் ஒரேயொரு கணத்தை தா. பிறகு உன்னை….என்று அரைகுறையாக நிறுத்துகிறார். பிறகு உன்னை என்பது வாசகனுக்கான கோடிட்ட இடத்தை நிரப்பும் யுக்தி..
இன்னபிற ஒரு கவிதையில் ஒரு கதை தன்மை..
ஒருவன் கண்பார்வைக்கு போடும் கண்ணாடியை கழற்றி வைத்து விட்டு நகரத்தின் வீதியில் நடக்கிறான் .அவன் பார்வைக்கு எல்லாமே மங்கலாக தெரிகிறது பெயர் பலகை, சுவரொட்டி , பேருந்து எண் எல்லாமே மங்கலாய் தெரிகிறது. தெரிந்தவர்கள் முகம் கூட புதியவர்கள் போல தெரிகிறது. அறிமுகமான இடமே அறிமுகமற்ற இடமாகி போகிறது இப்போது நிகழ்காலம் ஒரு கனவை போல மாறியிருக்கிறது. நிகழ்காலத்தில் நடந்துக்கொண்டிருக்கும் கனவை நேரடியாக அனுபவிக்கும் தன்மையாக இந்த காலம் ,சூழல் மாற்றுகிறது…
அப்போது திடீரென தேவாலய சப்தம் கேட்கிறது அது மணியோசையாக அல்லது ஜெப ஓசையாக இருக்கலாம் அப்போது தான் அடடா இது கனவல்ல நினைவு தான் என்று என்று அவன் விழிப்படைகிறான்
இப்படியான கவிதையில் …
இந்த தேவாலய சப்தம் மட்டுமில்லையெனில்
இத்தருணம் ஒரு கனவேதான்
என்ற வரியின் மூலமாக பார்வை தெரியாத மங்கலான சூழலில் தனிமையோடு பயணித்தாலும் அங்கும் ஆண்டவர் தேவாலய சப்தமாக கூடவே வந்துவிடுகிறார்.
ஒரு கவிதையில்
தான் தனித்திருப்பதாக காலி அலமாரிக்குத் தோன்றுகிறது
.—என்றெல்லாம் எழுதும் வெ.நி.சூர்யா வின் கவிதை தனிமையுலகில் ஜீவிப்பதுதான். எழுத தெரிஞ்சவன், படிக்க தெரிஞ்சவனுக்கெல்லாம் தனிமையே தெரியாது என்பார் கி.ராஜநாராயணன் .அதன் பொருள் அவன் எழுத்தின் மூலம் வாசிப்பின் மூலம் தனிமையின் பாலையை கடந்து விடுவான் என்பதுதான்.
வெ.நி.சூர்யாவின் தனிமையும் தனியாக இல்லை அது ஆண்டவருடன் தான் வாக்கிங் போகிறது. ஆனால் சாதாரண பார்வைக்கு தனிமையில் இருப்பதாக தோன்றும். தனிமை தன்னை காலியாக்கிவிடும். தனிமை அழிவின் ஆரம்ப பாடம் .அது தன்னை அழித்து வேறொன்றாக மாற்றி விடும். அந்த அழிவை உணர்ந்த வெ.நி.சூர்யா என்ன எழுதுவார்
யோபுவைப் போல நானும் சொல்கிறேன்
அழிவைப் பார்த்து நீ எனக்குத் தகப்பன் என்று
—எழுதுவார்.
யோபு யார் தெரியுமா? எவ்வளவு துக்கம் துயர் வருத்தம் இன்னல் வந்தாலும் ஆண்டவன் மீதான நம்பிக்கையை இழக்காதவர் .விவிலியத்தில் வருபவர் யோபு. அதனால் தான் சொல்கிறேன் கவிதையின் பக்கங்களில் தனிமையோடு வாக்கிங் போகிறார் ஆண்டவர் என்று. அந்த தனிமை வெ.நி.சூர்யாவினுடையது.
வாழ்த்துக்கள் வெ.நி.சூர்யா
அமிர்தம் சூர்யா