ஆயுர்வேதம், ஒரு பதில்

அன்புள்ள ஜெ

ஆயுர்வேத அறிமுக வகுப்புக்கு வரவேண்டும் என்னும் எண்ணம் உள்ளது. என் உடல்நிலைச் சிக்கல்களால் யோசிக்கிறேன். பெரிய உடல்நிலைச் சிக்கல் ஏதுமில்லை. ஆனால் தொடர்ச்சியாக உடல்வலி, மூட்டுவலி, கழுத்துவலி, அஜீர்ணப்பிரச்சினைகள், தூக்கமின்மை என்று பல சிக்கல்கள். வாழ்க்கையின் உற்சாகம் என்பதே இல்லாமலாகிவிட்டது. இந்த வகுப்புகளில் மருத்துவ ஆலோசனை அளிக்கப்படுமா?

சுலோசனா மருதநாயகம்

அன்புள்ள சுலோசனா,

இது மருத்துவ முகாம் அல்ல. ஆயுர்வேத அறிமுகம்தான். ஆனால் தமிழகத்தின் சிறந்த ஆயுர்வேத மருத்துவர்களில் ஒருவருடன் தங்கும் வாய்ப்பும் வகுப்புகளுக்கு வெளியே அவருடன் உரையாடும் வாய்ப்பும் அமைகிறது.

இந்த வகுப்புகளை வைக்க முதன்மைக்காரணமே எனக்கு வந்துகொண்டிருக்கும் இதைப்போன்ற கடிதங்கள்தான். இரண்டு காரணங்களால் நாம் இன்று துன்பப்படுகிறோம். நோயும் இல்லை, நலமாகவும் இல்லை என்னும் நிலை. காரணம், வாழ்க்கைமுறை.

நீண்டநேரம் அமர்ந்திருப்பது, நீண்டநேரம் கணிப்பொறித்திரை அல்லது காகிதங்களை பார்த்துக்கொண்டிருப்பது இன்றைய வாழ்க்கையாகிவிட்டது. சமச்சீரற்ற உணவு அல்லது பொருத்தமற்ற உணவு இன்னொரு சிக்கல். துயில்நீப்பு இன்னொரு பிரச்சினை.

நீங்கள் சொல்லும் எல்லா சிக்கல்களும் ஒன்றுடனொன்று தொடர்புடையவை. கூடுதலாக மூலநோய், அவ்வப்போது வரும் உளச்சோர்வு ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். இதற்கு நம் வாழ்க்கைமுறையை திருத்திக்கொள்வதுதான் ஒரே வழி.

வாழ்க்கைமுறையை திருத்திக்கொள்ள நாம் நம் உடல் பற்றி, உடலின் சமநிலை மற்றும் சுழற்சி பற்றி கொஞ்சமேனும் அறிந்திருக்கவேண்டும். நவீன மருத்துவம் அதைப்பற்றி ஓர் விரிந்த புரிதலை அளிக்கிறது. ஆனால் ஆயுர்வேதம் இந்த மண்ணுக்கே உரிய மருத்துவம். அது பல மேலதிகப்புரிதல்களை அளிக்கிறது.

உதாரணமாக, கத்தரிக்காய் தோல்சம்பந்தமான அரிப்புகள் போன்றவற்றுக்கு தீங்கானது என ஆயுர்வேதம் சொல்லும். அப்படியெல்லாம் நவீன மருத்துவம் சொல்லாது. ஆனால் அது நடைமுறை உண்மை, இந்த மண்ணின் யதார்த்தம் என நாம் அறிவோம்.

எண்ணை தேய்த்துக்கொள்வது நீண்டகாலமாக இந்தியாவிலுள்ள வழக்கம். அது நவீன மருத்துவத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் என் அனுபவத்தில் அது நல்ல துயிலை, நல்ல ஓய்வை, உளத்தெளிவை அளிக்கும் ஒன்று. ஆயுர்வேத எண்ணைகள் மிகமிகமிக உதவியானவை. வெண்முரசு எழுதும் நாட்களின் என் கொந்தளிப்பையும் அலைக்கழிதலையும் ஆழ்ந்த தூக்கம் வழியாகவே கடந்தேன். மகாதேவன் அளித்த எண்ணைகளை சஞ்சீவி மருந்து என்றே கருதுகிறேன்.

அதைப்போன்ற பலநூறு நுணுக்கமான அன்றாடப்புரிதல்களை ஆயுர்வேதம் அளிக்கமுடியும்.அந்த ‘சிஸ்டம்’ என்ன, அதன் கொள்கை என்ன என்று ஒரு பொதுப்புரிதல் வேண்டும். அது அமைந்தால் நல்ல ஆயுர்வேத மருத்துவரை நாம் கண்டடையமுடியும். நாமே நம் வாழ்க்கைச்சுழலை பல படிகளாக சீரமைத்துக்கொள்ள முடியும்

பதினைந்தாண்டுகளுக்கு முன்பு என் மனைவியின் மூட்டுவலி- குதிகால் வலி பிரச்சினையின்போது ஆயுர்வேதத்தை தெரிசனங்கோப்பு மகாதேவன் வைத்தியர் அவர்களிடமிருந்து அறிமுகம் செய்துகொண்டேன். அந்த அறிதல் வழியாக அவள் முழுமையாகவே மீண்டு வந்தாள். எனக்கிருந்த பலவகையான உடல் பிரச்சினைகளை முழுமையாகவே தீர்த்துக்கொண்டேன். என் அனுபவத்தைப்பற்றி பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். (உதா; கொட்டன்சுக்காதி) நலமறிதல் என்னும் நூல் தன்னறம் வெளியீடாக வந்துள்ளது.

என் அனுபவத்தாலேயே இந்த வகுப்புகளை ஒருங்கிணைக்கிறேன். இதன் தேவையை இங்குள்ள சாமானியர்களுக்கு  என்னால் போதுமான அளவுக்குப் புரியவைக்க முடியவில்லை. இக்கல்வியை பெறுவதற்கான இன்னொரு வாய்ப்பு தமிழகத்தில் ஒரு பொதுமனிதருக்கு இல்லை என்பதையே நம்மவர் புரிந்துகொள்ளவில்லை. இருந்தாலும் வலியுறுத்திக்கொண்டே இருக்கிறேன்.

ஒரு மருத்துவத்தைச் செய்துகொள்ளும் முன்பு அதன் வழிமுறைகள், கொள்கைகள் ஆகியவற்றை குறைந்த அளவிலேனும் அறிமுகம் செய்துகொள்ளவேண்டும். ஒரு மருத்துவமுறை எப்படி நோயை அடையாளம் கண்டுகொள்கிறது – எப்படி குணப்படுத்துகிறது என ஒரு பொதுச்சித்திரம் நமக்குத்தேவை.ஐரோப்பியரும் அமெரிக்கரும் அதை தவறவிடுவதெ இல்லை. நமக்கு எதையும் அறிந்துகொள்ளச் சோம்பல். நாமே எதையும் செய்யவும் சோம்பல். மருத்துவர் ஒரு மாயத்தால் நோயை ஓட்டிவிடவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

ஓர் உடல்நலக்குறைவால் மருத்துவரிடம் செல்கிறோம். இன்றைய மருத்துவர்கள் நோயைப்பற்றி விளக்க முற்படுகிறார்கள் – ஏனென்றால் இன்றைய மருத்துவ அறங்களில் ஒன்றாக அது உள்ளது. ஆனால் கொஞ்சமேனும் தன் உடல் இயங்கும் விதம் பற்றி, நோய்கள் பற்றி, மருத்துவம் பற்றி தெரியாதவர்களிடம் எதையுமே புரியவைக்க மருத்துவர்களால் இயல்வதில்லை.

நோயற்ற நிலையில் மருத்துவ ஞானம் எதற்கு என்பது இன்னொரு மூட எண்ணம். மருத்துவம் என்பது நோய்க்கு எதிரான ஒரு செயல்பாடு அல்ல. நலத்தைப் பேணும் ஒரு செயல்பாடு. உணவு, ஓய்வு, தூக்கம் என அன்றாடத்தை வகுத்துக்கொள்ள அது அவசியம். நம் உணவு, நம் சூழல் ஆகியவற்றை அறிய அது மிகப்பெரிய ஒரு சட்டகத்தை அளிக்கிறது.

ஆகவே இவ்வகுப்புகள். சற்றேனும் வாழ்வின் மேல் அக்கறைகொண்டவர்களுக்காக.

ஜெ

ஆயுர்வேத மருத்துவ முகாம் மே 31 ஜூன் 1, 2 தேதிகளில் நிகழும்

ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்.தொடர்புக்கு [email protected]

முந்தைய கட்டுரை‘Hindutva’
அடுத்த கட்டுரைஅத்வைதம்