பொலிக! – கடிதம்

 

தங்கத் திருவோடு

அன்பின் ஜெ,

‘தங்கத் திருவோடு’ பதிவிற்கு நன்றி. 12 மணிக்கு பதிவு வந்ததும் வாசித்து விட்டேன்.

“மெய்ஞானத்தைக் கற்பிப்பது எப்படி?  ஓர்  உவமை சொல்கிறேன். அது தங்கத் திருவோட்டில் பிச்சை போடப்படும் தங்கக்காசு”

இந்த வரிகள் உளவெழுச்சி கொள்ளச் செய்து, உறக்கமிழக்கச் செய்தன, இரவு முழுதும் உறங்க இயலவில்லை. வாசித்தவுடன் நினைவில் எழுந்த இன்னொரு உவமை ‘கிருஷ்ணமதுரம் வெள்ளித்தட்டிலேதானே இருக்கணும்?’. புறப்பாடு தொடரில் வரும் இவ்வரி லௌகீகத்திற்கும் ஆன்மீகத்திற்குமான உறவைச் சுட்ட கையாளப்பட்டிருந்தாலும், என் அகம் அதை தங்கத் திருவோடு உவமையின் பொருளிலேயே எடுத்துக் கொண்டிருந்தது. புறப்பாடு வெளிவந்த பின்னான  இந்த பத்து வருடங்களில், பலமுறை இவ்வரி என்னை ஆற்றுப்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணமதுரத்தைத் தொடர்ந்து,  ‘சிவம்’ கதை நினைவிலெழுந்தது.  தங்கத் திருவோடு உவமையின் புனைவு வெளிப்பாடாக ‘சிவம்’ சிறுகதையை நோக்கலாம். நித்யாவின் தங்கத் திருவோடு உருவாகும் பயணமல்லவா அது? அவர் அதை அடைந்ததற்கான அங்கீகாரமல்லவா இறுதியில் அந்த சாமியார்  நித்யாவிற்கு அளிக்கும் ஒரு துண்டு சப்பாத்தி? நித்யாவின் தங்கத் திருவோட்டில் விழுந்த முதற்பொன்!

தேடலின் பாதையில், ஆசிரியரைக் கண்டடைந்து, அருகமர்ந்து, கற்றலுக்கு எவ்வளவு அர்ப்பணிப்பும், உழைப்பும் உளத்திட்பமும் தேவைப்படுகிறதோ, அதே அளவு அல்லது சற்று கூடுதலாகவே அதுவரை வந்து சேர்வதற்கான பயணமும் கோருகிறது. தேடலின் பாதையில் ஒருவன், தன்னை சூழலிலிருந்து காத்துக் கொண்டு, பல நேரங்களில் தன் சுயத்தித்திலிருந்து எழுந்து வரும் எதிர்மறை அம்சங்களிலிருந்து கூட காத்துக் கொண்டு, இடைவிடாது பயணிக்க வேண்டி இருக்கிறது. ஆசிரியரை அடைந்தபின் நிகழும் அறிதலைக்கிணையாகவே வந்தடையும் பயணத்தின் அறிதல்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவற்றுக்கெல்லாம் தன்னை ஒப்புக் கொடுத்து, பாதையிலிருந்து விலகாது, எதிர்ப்படும் அத்தனை பலிபீடங்களிலும் தன் தலையை வைக்க சித்தமாயிருப்பவனே, தனக்கென ஒரு தங்கத் திருவோட்டை உருவாக்கிக் கொள்கிறான். பின்பு ஆசிரியரிடமிருந்து ஆசிரியரென, ஒவ்வொரு தங்கக் காசாக அத்திருவோட்டில் விழுகிறது. திருவோடு நிறைய நிறைய, அதிலிருந்து தங்கக் காசுகளை அள்ளி, புதிய தங்கத் திருவோட்டுடன் வருபவர்களுக்கு அருளிச் செல்கிறான். திருவோடு நிறைவதும் வெறுமையாவதுமான ஒரு சுழற்சியில் வாழ்நாள் முழுவதும் தேடலின் கற்றலின் பாதையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறான்.  என்றோ ஒர் நாள் தன் தங்கத் திருவோட்டையும் துறந்து, அவன் அமையலாம்.

‘தங்கத் திருவோட்டில் பிச்சை போடப்படும் தங்கக்காசு’ – இங்கு இவ்விரு பொருட்களின் பௌதீக அளவு கூட எனக்கு முக்கியமாக படுகிறது. ஒருவன் தன் வாழ்வனுபவங்களின் வழி, கற்றலின் வழி, தேடலின் வழி திருவோடு அளவில் ஒன்றைக் கொண்டு வந்தால் தான், ஆசிரியரிடமிருந்து தங்கக் காசு அளவில் ஒன்றைப் பெற்றுக் கொண்டு,  தனதாக்கிக் கொள்ள முடியும். பின்பு வேறொரு ஆசிரியரிடமிருந்து இன்னொரு தங்கக் காசு என திருவோட்டை நிறைத்துக் கொள்ள முடியும்.

2012 ஏப்ரல் மாதம் சித்திரை பௌர்ணமியை ஒட்டி, மூன்று தினங்கள் ஊட்டி குருகுலத்தில் இருக்க எண்ணி தனியே கிளம்பிச் சென்றேன். சுவாமி வியாசபிரசாத் அவர்களுடனான உரையாடலிலும், நிலவொளி நடையிலும் நித்யாவின் நினைவிடத்திலுமென கழிந்த மூன்று நாட்கள். மறுநாள் மதியம் கிளம்பி பெங்களூருக்கு பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தேன். பஸ் முதுமலை வனப்பகுதியில் சென்று கொண்டிருந்தது, கொஞ்சம் உறக்கமும் விழிப்புமாக ஜன்னலிருக்கையில் அமர்ந்திருந்தேன். ஒரு திருப்பத்தில், சட்டென அக்காட்சி சிறு திடிக்கிடலுடன் என்னை விழித்தமர வைத்தது. மொத்த நிலப்பரப்பும் வறண்டு பழுப்பு நிறம் கொண்டிருந்தது. தேக்கு மரங்கள் இலையுதிர்த்து, காய்ந்த இலைச்சருகுகளுக்கு மத்தியில் நின்றிருந்தன. பசுமையின் சுவடே இல்லாமல், புற்கள்கூட காய்ந்து, பழுப்பு நிறத்தில் இருந்தன. அதன் நடுவே,  சரக்கொன்றை மரம் ஒன்று, முழுதாக பூத்து, வெயிலில் பொன்னென மின்னிக்கொண்டிருந்தது. மிகுந்த உணர்வெழுச்சிக்கு ஆட்பட்டு, கண்களில் நீர் வழிந்தது. அதன் பின் மற்றொரு மரம், மீண்டுமொரு மரமென அவ்வனப்பகுதி முழுவதும், காய்ந்த நிலைக்காட்சி நடுவே, பொன் பூத்த கொன்றை மரங்களென நின்றிருந்தது. பஸ் வனப்பகுதியை கடந்த பின்பே உணர்வு சமநிலை அடைந்தது.

பன்னிரு வருடங்கள் கழித்து கடந்த ஒரு மாதமாக அச்சாலையில் மீண்டும் பயணிக்கவும் அக்காட்சியை புகைப்படம் எடுக்கவும் மனம் விழைந்து கொண்டே இருந்தது. சென்ற வாரம் கிளம்பிச்சென்று அக்காட்சியை புகைப்படம் எடுத்துத் திரும்பினேன்.  முதன்முறை கண்ட அதே உணர்வெழுச்சியை மீண்டுமொருமுறை அடைந்தேன்.

வறண்ட நிலப்பரப்பிலிருந்தாலும் காய்ந்த தேக்கு மரங்களுக்கு நடுவே அமைந்தாலும், கொன்றை தான் மலர்வதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டு, வருடம் முழுதும் மலர்வதற்கான பயணத்தில் இருக்கிறது.  மலர்வு நிகழ்கையில், கதிரிலிருந்து பெற்றுக்கொண்ட ஒளியை கொஞ்சம் திருப்பி அனுப்பி பிரபஞ்ச ஒளியில் தன்னையும் இணைத்துக் கொள்கிறது.

இக்காட்சிப்  படிமத்தை, தங்கத் திருவோடு ஏந்தியவனின் மலர்வாகக் காண்கிறேன். மலர்ந்தமர்த்திருக்கும் ஆசிரியருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

பொலிக! பொலிவுறச் செய்க!

அன்புடன்,

கிருஷ்ணபிரபா 

முந்தைய கட்டுரைஎம்.பக்தவத்சலம், மனித உரிமை – கடிதம்
அடுத்த கட்டுரைகயிற்றரவு