சென்ற ஆண்டு ஒரு நினைவு, கடிதம்

குமரித்துறைவி வாங்க

அன்பு ஜெ ,
தங்களின் கடந்த வருட பிறந்தநாள் விழா இனிய நினைவாக நினைக்குந்தோறும் இனிமை ஊட்டுவதாக  அமைந்தது நல் ஊழே!

எங்களது மகளின் திருமண ஏற்பாடு நடந்துக்கொண்டிருக்கும் போது , ஏதோ ஒரு  நினைவென தங்களின் புத்தகத்தை ஒரு அன்பளிப்பென அளிக்க தோன்றிய போது , தங்களின் பெரிதும் உணர்வெழிச்சி மிக்க,  மங்கலம் நல்கும் படைப்பான ” குமரித்துறைவி” என முடிவெடுத்தது பெரும் வியப்பல்ல !!

இதனைத் தங்களுக்கு குறுஞ்செய்தியாகவும் , எனது சகோதரரிடம்,( புதுவை வெண்முரசு விவாதக்குழுவைத் திறம்பட நடத்தி வரும் ) தெரிவிக்க  அவரும் மகிழ்வுடன் , மீனாம்பிகை அவர்களை    தொடர்புக்கொண்டு விசாரிக்கிறேன் என்றார்.

குறைந்தது நூறாவது வேண்டும் என நான் கேட்டதால் , எந்த அளவுக்கு இந்நாவலை ஆர்வமுடன் கொண்டுச் செல்வார்கள் என ஜயம் இருந்ததாலும் , ஒரு கவுண்டர் வைத்து,  விருப்பமுள்ளவர்கள் எடுத்து செல்லும்படியாக ஏற்பாடு செய்யலாம் என முடிவெடுத்தோம் !!

ஆனால் என் சகோதரனே மறுநாள் தொடர்புக்கொண்டு, தங்களது பிறந்தநாளாகவே 22 ஏப்ரல் அமைந்திருப்பதால், குமரித்துறவி நாவல் வெளியிட்டு விழாவாக ,  திரு. கடலூர் சீனு அவர்களைக் கொண்டு, புதுவை வெண்முரசு குழு நடத்தினால் , சிறப்பானதாக இருக்கும் என கூறினார்.

சின்ன ஆசையென தோன்றிய நிகழ்வு அதற்கென ஒரு வேகமெடுத்து , மேடை விழாவாக , எங்களின் இல்லத்திருமண வரவேற்பு விழாவுடன் இணைந்து பெரு விழாவாக பிரவகித்து  , திருமணத் தம்பதிகள் முதல் நூலைப்பெற , திரு.நாகராஜன் கடலூர் சீனு  சிற்றுரையுடன் , இனிதே நிறைவேறியது.

நினைவுக்கு மாறாக கவுண்டரில் வைத்த நூல்கள் சில மணி நேரத்திலேயே காலியாகி விட்டது. இவ்வளவு வாசிப்பாளர்கள் உள்ளதைப் பார்த்து பெரும் மகிழ்ச்சி உண்டானதென்பதே உண்மை !!

பலரும் என்னிடம் வந்து பாராட்டி பேசினது பெருமிதமாக இருந்தது. தேவையானவர்கள்  தங்களின் முகவரி எழுதி வைத்துச் செல்ல , அவர்களுக்கென  மேலும் நூல்களை வரவழைத்து தபால் மூலம் அனுப்பட்டது.

பெரும் மகிழ்ச்சியையும் ,மன நிறைவும் தந்த அந்த இனிய நாள், என் வாழ்வில் மறக்க முடியாத நாளாக ஆக்கியது , பெண்மகவின் பெரும் மங்கள விழாவான திருமணம், மகிழ்வும் , பிரிவு ஆற்றாமையும் , பெரும் பொறுப்பை செவ்வனே !! ஆற்றி விட்டோம் !!  என நிறைவுக்கொள்ளும் பெற்றோர்களின் மனநிலையும்,  அதிலும் தந்தையின் மனநிலை , அதி அற்புதமாக தங்களின் நாவலில் இடம் பெற்றுள்ளதைப் படித்த , அனைவரும் ஒத்தக்கொண்டதே ஆகும்.

இப்பெரும் பாக்யத்தைத் தந்த தங்களுக்கு நன்றி. தங்கள் மீது , நான் கொண்ட பெருமதிப்பை அறிந்த என் கணவரும், மகனும் மிகுந்த ஆர்வமுடன் குறைந்த நாளிலே , பேனர் போன்ற ஏற்பாடுடன்  , தங்களின் புதுவை வாசகர்கள் பலரும் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்த்து, உணவுபசரிப்பு , போன்றவற்றை அதிகப்படுத்தி , இந்நாள் என்றும் இனிய நாளாக அமைய வழி வகுத்தனர்.

குமரித்துறைவி எங்களின் உணர்வெழிச்சிக்கான சாட்சியாக அமைந்த பெருமை தங்களையே சாரும்,
அன்புடன்,
செல்வி அழகானந்தன்.
கடலூர்.

பிறவித்தேன்

முந்தைய கட்டுரைஓவியம் ஏன் அறிவியக்கத்தின் அடிப்படைகளில் ஒன்றாகிறது?
அடுத்த கட்டுரைவாசுகி?