மருபூமி வாங்க
மருபூமி மின்னூல் வாங்க
அன்புள்ள அஜிதன் அவர்களுக்கு,
வணக்கம்.
நான் தங்களது மருபூமி தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதில் குறிப்பாக ‘நிலைவிழி’ மற்றும் ‘ஒரு குழந்தையிறப்பு பாடல்’ எனும் இரு சிறுகதைகள் என்னை கடந்து செல்லவிடாமல், அசைவிழக்கச் செய்தன. மீண்டும் மீண்டும் என மும்முறை படித்தாயிற்று. ஒவ்வொரு முறையும் யாரும் கவனிக்காதபடி கண்களை இமையால் அடித்து அடக்கிக் கொள்கிறேன்.
நிலைவிழி, மரணம் உறுதி செய்யப்பட்ட ஓர் அன்னை, மரணம் எனும் பேரன்னையை அடையாளம் கண்டுகொள்வதை நோக்கி பயணிக்கும் கதை. தன்னை என்னேரமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் ‘வனமிருகத்தின் கருணையற்ற பார்வை’ மிக இயல்பாக பரிணமித்து தாய்ப்பிடியில் உறங்கும் புலிக்குருளையென தன்னை உணர்வதன் வழி முழுமையடைகிறது.
ஏனோ புதுமைப் பித்தனின் ‘செல்லம்மாள்’ நினைவுக்கு வந்து சென்றது. செல்லம்மாள் வாசிக்கையில் இறுதியில் வெறுமையின், விடுபடலின் ஓர் அமைதி எஞ்சும். ஆனால் நிலைவிழி ஒவ்வோர் முறையும் நிறைவையே உணரச்செய்தது.
ஒரு குழந்தையிறப்பு பாடல், பேரிருளை வெட்டித்திறக்கும் மின்னலைப் பற்றியது. இருளைப்பிளந்து அனைத்தையும் வண்ணம் கொள்ளச் செய்தாலும், கண நேரத்தில் முடியும் மின்னல், இருளை இன்னும் பலமடங்கு செறிவுடன் விட்டுச்செல்கிறது. அதன் வதை தாங்க முடியாததாகிறது.
தாயும் தந்தையும் இறைபணியாளர்கள் எனினும், மொழியில் ஈடுபடும் தந்தைக்கு அவர் மனைவி போல் இறைவாக்குடன் சமாதானமடைய இயலவில்லை. அவருக்கு ஓர் கவிஞனின் வார்த்தை தேவையாகிறது. அது அவரை நேற்று இரவு அறையில் உருகி அணைந்த மெழுகு வர்த்தியின் நினைவை காலையில் துலங்கும் பேரோளியில் முக்கி எடுத்து ஆசுவாசம் கொள்ளச்செய்கிறது.
இரு சிறந்த சிறுகதை அனுபவங்களுக்காக என் நன்றிகள். மற்றும்,
ஓர் வேண்டுகோள் – இந்த கதையை எழுத உங்களை உந்திய அந்த இசைக் கோர்ப்பை கேட்க முயன்றேன். உங்கள் இசை அனுபவத்தை நாங்களும் பெற, உங்கள் மேற்கத்திய இசை வகுப்பை மீண்டும் நடத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அன்புடன்,
லக்ஷ்மிகாந்த் பாஸ்கரன்
சென்னை