தும்பி இதழ் நிறுத்தப்பட்டதை அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன். ஆரம்பித்த காலம் முதல் பார்த்து வியந்த ஒரு இதழ், விடாமல் வந்து கொண்டிருந்த ஒரு அழைப்பு நின்று விட்டது என்பதை உள்வாங்க முடியவில்லை.
நண்பர்களை அழைத்து பேசினேன். உடலில் எந்த பிரச்சனை இருந்தாலும், ஒரு வேலையில் அப்படியே முடியவில்லை என்று அறிவிப்பதுபோன்று இருந்தது அவர்கள் கூறிய விஷயஙகள்.கண்டிப்பாக இது தமிழுக்கு ஒரு பெரும் பின்னடைவுதான்.
பெரும்பாலும் இந்த லட்சியவாத வேலைகளை பொருளாதாரம் முடக்கிப்போடும் மட்டும்தான் ஒரு வெறி வருகிறது. கண்டிப்பாக தமிழகத்தின் பள்ளிகளின் எண்ணிக்கையில் இது வெறும் வெற்றிலை பாக்கு செலவுதான் ஆனாலும் யாரும் முன்வரவில்லை என்பது ஆச்சர்யம்தான்.
நானும் சில மாதங்கள் அடுத்த சந்தாவிற்கு தள்ளிப்போட்டது பெரும் குற்றவுணர்வாக உள்ளது.
சரியாக திட்டமிட்டு யான் அறக்கட்டளைக்கும், விஷ்ணுபுரத்திற்கும் அனுப்பி விடுவேன். இந்த வருடம் சில தனிப்பட்ட காரணத்தால் பண முடை ஏற்பட்டது… அடுத்த மாதம் அனுப்பலாம் என்று நினைத்திருந்தேன்.
-திருமலை
அன்புள்ள திருமலை,
தமிழில் குழந்தைகள் இதழ்கள் பெரும்பாலும் நின்றுவிட்டன. பல ஆண்டுகளாக வந்துகொண்டிருந்த பெருநிறுவன வெளியீடுகளான அம்புலிமாமா, கோகுலம், சுட்டிவிகடன் எல்லாம் நிறுத்தப்பட்டுவிட்டன. இப்போது நாளிதழ்களுடன் வரும் இலவச இணைப்புகளே சிறுவர் இதழ்களாக உள்ளன. அவையும் தேய்ந்துபோய் ஓரிரு பக்கங்களே உள்ளன.
ஏனென்றால் தமிழகத்தில் குழந்தைகள் பெரும்பாலும் ஆங்கிலவழியில் படிக்கிறார்கள். தமிழ்வழிப் படிப்பு மிகச்சிறிய கிராமங்களில்தான். அவர்கள் எதையும் படிப்பதில்லை, ஏனென்றால் அந்தப் பள்ளிகளின் பொதுவான தரத்துக்கு பெரும்பாலான குழந்தைகளுக்கு அவர்கள் நடுநிலைப் பள்ளிக்கு வந்தபின்னரும் எழுத்துக்கூட்டி வாசிக்கத் தெரியாது – இதை அண்மையில் விரிவான கள ஆய்வு மூலம் அறிந்திருக்கிறோம். பொதுவாகவே இளைய தலைமுறையில் தமிழை சரளமாக வாசிக்க தெரிந்தவர்கள் குறைவு.
ஆங்கிலச் சிறுவரிலக்கியங்கள் இங்கே விற்கின்றனவா என்றால் அதுவுமில்லை. ஏனென்றால் ஆங்கிலவழி படிக்கும் குழந்தைகளில் உயர்குடி சார்ந்த ஒரு சிறுசாராருக்குத்தான் வாசிக்குமளவு ஆங்கிலம் தெரியும். மற்றதெல்லாம் மனப்பாடம் தான். என் இலக்கிய முகவர்கள் சொல்வதைப் பார்த்தால் கல்கத்தா, டெல்லி, மும்பை, பெங்களூர் போன்ற இந்தியப்பெருநகர்களில் ஆங்கிலக் குழந்தையிலக்கியம் மிகக்குறைவாக விற்கும் நகர் சென்னைதான். (ஆங்கில நூல்கள் மிகக்குறைவாக விற்கும் நகரமும் இதுவே) நம் கல்வி வாசிப்பு சார்ந்தது அல்ல. நம் குடும்பச்சூழல் வாசிப்பு சார்ந்தது அல்ல.
இச்சூழலில் தும்பி போன்ற ஓர் இதழ் நின்றுவிடுவதில் வியப்பில்லை. அது உயர்தர அச்சில், நேர்த்தியான படங்களுடன் வந்த இதழ். சிறுவர்களுக்கானச் சிற்றிதழ் எனலாம். அதை போற்றிப் புகழ்வார்கள் நம்மவர். ஆனால் ஆதரவளிக்க மாட்டார்கள்.தமிழக அரசின் நூலக ஆணை கிடைத்திருந்தால், நம் சமூக ஊடகங்களில் அறக்கொந்தளிப்புடன் அலைபவர்களில் ஒரு ஐநூறுபேர் வாங்கி ஏதாவது ஆரம்பப்பள்ளிகளுக்கு நன்கொடையாக அனுப்பியிருந்தால் தும்பி நீடித்திருக்கும். இங்கே எந்த நேர்நிலையான, ஆக்கபூர்வமான செயல்பாடுகளும் எவராலும் கவனிக்கப்படுவதில்லை. வசை ஒன்றையே பண்பாட்டுச்செயல்பாடு என நம்பிக்கொண்டிருக்கிறோம்
ஜெ