நவீன மருத்துவம், கடிதம்

இனிய ஜெ,

வணக்கம்.

“உடல் வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே” எனும் திருமூலரின் வாக்கிற்கேற்ப, ஆரோக்கியமான வாழ்விற்கான உடல் மற்றும் மனம் இடையே ஒருங்கிணைந்த நல்லிணக்கம் உருவாக கற்பிக்கப்படும் யோகம், தியானம், ஆயுர்வேத வகுப்புகளுக்குப்பிறகு, தங்களின் தளத்தில் நவீன மருத்துவம் பற்றிய அறிவிப்பிற்காக எதிர்பார்த்து காத்திருந்த பலரில் நானும் ஒருவன். டாக்டர் மாரிராஜ் அவர்களின் நவீன மருத்துவ வகுப்பு பற்றிய அறிவிப்பு வந்த உடனேயே விரைந்து பதிவு செய்ததன் மூலம் விளைந்த நற்பயனை தற்பொழுது முழுவதுமாக உணர்கிறேன்.

டாக்டர் மாரிராஜ் அவர்களின் முதல் வகுப்பு மருத்துவத்துறையின் வரலாற்றில் இருந்து ஆரம்பித்து பண்டைய கால கிரேக்க மருத்துவம், எகிப்திய மருத்துவம், ரோமப்பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் மேலெழுந்து வந்த அராபிய மருத்துவ முறைகள் பற்றியும் எளிதில் புரியும்படி விளக்கினார். மேலும் இந்திய பாரம்பரிய சித்தா, ஆயுர்வேத முறைகள், குறிப்பாக ஆன்மீக மற்றும் மத நம்பிக்கைகளை உள்ளடக்கிய நம்பிக்கை சிகிச்சை பற்றியும் விரிவான பார்வையை வழங்கினார்.

இன்றைய நவீன மருத்துவத்தின் பரவலான வெற்றிக்கான முக்கியக்காரணமாக சொல்லப்படுவது அதன் Inclusive தன்மை மற்றும் இதர அறிவியல் துறைகளான இயற்பியல், வேதியியல், இசை, சமூக அறிவியல் மற்றும் கிருமி நோய் மருத்துவம் போன்ற துறைகள் மருத்துவத்துறைக்கென ஆற்றிய பங்களிப்பும் ஆகும்.  நவீன மருத்துவம் அனைத்து நவீன அறிவியல் துறைகளையும் உள்வாங்கி அதன் வரையறைக்கு உட்பட்டதை தன்னில் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டதும், வரையறைக்கு உட்படாத அறிதல் வகை முறைகளையும், அறிவியலுக்கு எதிரான கருத்துக்களை (Pseudoscience) புறம் தள்ளும் விதமான Exclusive தன்மையும் கொண்டது என்று அற்புதமான நேர் வாழ்வின் உதாரணங்களுடன் மிக சிறப்பாக விளக்கினார்.

பண்டைய கிரேக்க மருத்துவத்தின் தந்தை என கருதப்படும் Hippocrates நோய்களுக்கான அறிவியல் காரணங்களை கண்டுபிடித்தார். அவரது மாணவர் Galen இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகங்கள் இயங்கும் முறைகளை உடற்கூறியல் மூலம் பகுப்பாய்வு செய்து அவை எவ்வாறு இயங்குகிறது என்றும் நிரூபித்தார். இவையே இன்றும் நவீன மருத்துவ முறையின் அடித்தளமாக உள்ளது.

பண்டைய கால மருத்துவத்தில் சிறந்து விளங்கிய அராபியர்கள் இசையின் ஆற்றலை நன்கு உணர்ந்திருந்தனர். நோயை குணப்படுத்தும் நோக்கங்களுக்காக இசை மற்றும் பாடல்கள் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருக்கிறார்கள். மருத்துவமனை நோயாளிகளில் தூக்கம் வராதவர்களுக்கு தூக்கம் வரவழைக்க கதை சொல்லிகள் இருந்திருக்கிறாகள்.

Sir Isaac Newton காலத்தில் இயற்பியல், கணித சமன்பாடுகள் துறையில் நடந்த அறிவியல் புரட்சியின் விளைவாக கண்டுபிடிக்கப்பட்ட Microscope மற்றும் அதன் மூலமாக நிகழ்ந்த கிருமி தொழில்நுட்பம், பாக்டீரியா, வைரஸ் பரவல், நோய் நிலைகளை துல்லியமாக இனம் காணவும், அதனை மிகச் சிறப்பாக தீர்க்கவும் மிகப் பெரும் உதவியாக இருந்து வருகின்றன.

Dr Robert Koch என்பவர் முதன் முதலாக Tuberculosis நோய்க்கு காரணமான கிருமியை Microscope மூலம் கண்டறிகிறார். அதற்கான சிகிச்சை முறையையும் அவர் உலகுக்கு அறிவிக்கிறார். அவரின் சிகிச்சை தவறான அணுகுமுறை என்பதை ஆதாரபூர்வமாக தனது எழுத்தின் மூலம் நிரூபித்தவர் அவரது மிக நெருங்கிய நண்பரும், மருத்துவரும்,  பிரபல துப்பறியும் கதை எழுத்தாளருமான Sir Arthur Conan Doyle. இதற்காக அவர் எழுதிய துப்பறியும் புனைவு கதாபாத்திரமே Sherlock Holmes.

மருத்துவர் Auenbrugger தனது தந்தையின் ஒயின் தொழிற்சாலையில் ஒயின் பேரல்களை தட்டி ஒலியெழுப்பி அதில் வரும் ஒலியின் வித்தியாசத்தை வைத்து பேரலில் எந்த அளவு ஒயின் நிரம்பி உள்ளது என்பதை கண்டறியும் முறையை மருத்துவர் Laennec என்பவர் உள்வாங்கிக்கொண்டு இதேபோல இதயத்துடிப்பை கேட்கவும், நுரையீரல் சத்தங்களை கேட்கவும் உதவும் Stethoscope கருவியை கண்டுபிடிக்க பெரும் பங்காற்றியுள்ளார்.

இயற்பியல் கோட்பாடுகள், வேதியியல் சமன்பாடுகள், ஒலி, ஒளி, சவ்வூடு பரவுதல், இசை, இலக்கியம் (வெண்முரசு மேற்கோள்களும் உண்டு) மற்றும் பல அறிவியல் துறைகள், கண்டுபிடிப்புகள் மருத்துவத்துறையை செழுமைப்படுத்திய விதம் பற்றி டாக்டர் மாரிராஜ் விளக்கிய வகுப்புகள் ஒரு இனிய கற்றல் அனுபவத்தை வழங்கியது.

வகுப்பில் கலந்துகொண்ட அனைவரும் மிக ஆர்வத்துடன் டாக்டரிடம் கேள்விகள் கேட்டது, பலரும் டாக்டரின் கேள்விகளுக்கு உற்சாகத்துடன் பதில் கூறி அவரிடமிருந்து சாக்லேட் பரிசு பெற்றது (என்னாலும் இரண்டு சாக்லேட் வெல்ல முடிந்தது) மற்றும் நேரடி வாழ்வியல் நிகழ்வுகளை நகைச்சுவையுடன் பகடி செய்தது போன்ற சுவாரசியங்கள் வகுப்பை மேலும் சிறப்பாக்கின.

எங்களின் உடல் மற்றும் மன நலன் மேம்பட யோகம், தியானம், ஆயுர்வேதம், நவீன மருத்துவம் பற்றிய அறிதலை கற்றுக்கொள்ள தளம் அமைத்துத்தரும் தங்களுக்கும், இனிய கற்றல் அனுபவத்தை வழங்கும் எங்களின் குரு மற்றும் ஆசிரியர்களுக்கும், விருந்தோம்பல் ஆசிரியர் மணி அண்ணா அவர்களுக்கும் இதயப்பூர்வமான நன்றிகளும் வணக்கங்களும்.

நன்றி.

ஈரோடு அரசு.

புகைப்படம் : கிரேக்க மருத்துவத்தின் தந்தை Hippocrates (செடியின் மலர்கள் நிறைந்த பகுதி) மற்றும் அவரது மாணவர் Galen (செடியின் முட்கள் நிறைந்த பகுதி).

 

 

நவீன மருத்துவப் பயிற்சி, கடிதம்

மாரி ராஜ் கடிதம்

மருத்துவமுகாம், கடிதம்

சாக்லேட்டும் மருத்துவமும், கடிதம்

மருத்துவம், சாக்லேட்

நவீன மருத்துவம், கடிதம்

மருத்துவம், கடிதம்

நவீன மருத்துவம், கடிதம்

மருத்துவப்பயிற்சி, கடிதம்

மருத்துவ அறிமுகம் ஏன்?

முந்தைய கட்டுரைமுதல்வாசல்
அடுத்த கட்டுரைஷேக் சின்ன மௌலா