இலக்கியத்தை இழந்த சினிமா

பி.என்.மேனன்

அன்புள்ள ஜெ.,

சில நாட்களுக்குமுன் காரணமே இல்லாமல் மனதில் ஒலித்த பாடல் ‘பூஞ்சிட்டுக்கன்னங்கள்….’ (படம்: துலாபாரம்,இசை: தேவராஜன்) அதிலும் சுசீலா பாடும் ‘கண்ணுறங்கு..கண்ணுறங்கு..பொன்னுலகம் கண்ணில் காணும்வரை..’ என்ற வரிகள் விடாமல் தொந்தரவு செய்தன. அப்போது திடீரென்று மனதில் தோன்றிய பாடல் ‘வெள்ளிரதங்கள் அழகுமேகம்….’ (படம்:பருவகாலம், இசை: தேவராஜன்) எப்போதோ வானொலியில் கேட்டது, இப்போதுதான் பார்க்கிறேன். மலையாளப்பாடலின் டப்பிங்காக இருக்கலாம். வாயசைவு பொருந்தவில்லை. ரோஜாரமணி அழகாக இருக்கிறார். ஆனால் இயற்கையை வியந்து உலக அமைதிக்காகப் பாடுவதுபோல் உள்ள இந்தப்பாடல் ஒரு மன்றாட்டுப்போல ஒலிக்கிறது. விடாமல்  மனதில்  ரீங்கரித்து நம்மையும் மன்றாடச் செய்கிறது. பாடியவர் பி.மாதுரி.

‘வெள்ளிரதங்கள் அழகுமேகம்….’ படம்:பருவகாலம், இசை: தேவராஜன்

இந்தப்பாடலின் இசைமெட்டு நம்மை இயல்பாக ‘வானமெனும் வீதியிலே…’ (படம்:அன்னைவேளாங்கண்ணி, இசை: தேவராஜன்) பாடலுக்கு இட்டுச் செல்கிறது. இந்தப்பாடலையும் பி.மாதுரி ஜேசுதாஸோடு பாடியிருக்கிறார் (பாடலில் தன் உறவுக்கு யார் தலைவி என்று மாதாவைக் கேட்டு முடிவு செய்யும் பரமபக்தனாக  ஜெமினிகணேசன். பக்தியை மெச்சிய மாதாவும் தலைவிகளை அள்ளி வழங்கியது வரலாறு) இந்த இரண்டு படங்களிலும் கமல் உதவி நடனஇயக்குநராகப் பணியாற்றியுள்ளார். சிறிய வேடங்களிலும் (அன்னைவேளாங்கண்ணியில் ‘தேவமைந்தன் போகின்றான்’ பாடலில் ஏசு கிறிஸ்து) நடித்திருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=ow8KsR9VaGg

‘வானமெனும் வீதியிலே…’ படம்:அன்னைவேளாங்கண்ணி, இசை: தேவராஜன்

பி.மாதுரி (இப்போது வயது எண்பத்துஒன்று) மலையாளத்தில்தான் நிறையப் பாடியிருக்கிறார். அவர் குறித்த காணொளிகளும் மலையாளத்தில்தான் கிடைக்கின்றன.  நான் ஏதோ ஜென்சி போல தமிழில் குறைவாகப்பாடிய மலையாளப்பாடகி என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆச்சரியம் இவர் திருச்சியைச் சேர்ந்தவர். இயற்பெயர் சிவஞானம். மலையாளக்கரையோரம் தமிழ்பாடிய குருவி. நீங்கள் அவர் பாடிய மலையாளப்பாடல்களைக் கேட்டிருக்கிறீர்களா?

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

மலயாற்றூர் ராமகிருஷ்ணன்

அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்

மாதுரி தேவராஜன் மாஸ்டரின் ஆஸ்தான பாடகி. எம்.எஸ்.வி போலவே தேவராஜனும் உச்சஸ்தாயிகளில் செல்லும் பாடுமுறையை அடிக்கடி முன்வைத்தவர். ஆகவே அதிகமும் சுசீலாவையும் மாதுரியையும்தான் பயன்படுத்தினார். சுசீலா நன்றாகப்பாடினாலும் தமிழ் உச்சரிப்பு கொஞ்சம் எட்டிப்பார்க்கும். ஆகவே நிறைய பாடல்கள் மாதுரிதான். மாதுரி தமிழர். ஆனால் ஒரு கேரளக்குரல், கேரள உச்சரிப்பாகவே அறியப்பட்டார். மலையாள நெடி இன்றி இப்பாடலை பாடியிருப்பதுதான் ஆச்சரியம்.

நல்ல பாடல், நன்றி. (நீங்கள் ஒரு பாடலில் இருந்து இன்னொன்றுக்கு எப்படி செல்கிறீர்கள், எப்படியெல்லாம் சம்பந்தப்படுத்திக்கொள்கிறீர்கள் என்பது ஒரு மாயயதார்த்தம் போலிருக்கிறது.)

பருவகாலம் என்ற இந்த படம் மூலத்தில் 1972ல் செம்பருத்தி என்ற பேரில் வெளியாகி பெருவெற்றிபெற்றது. மலையாளத்தில் இயக்கியவர் பி.என்.மேனன். இயக்குநர் பரதனின் தாய்மாமன். புகழ்பெற்ற கலை இயக்குநராக இருந்து பின்னர் இயக்குநரானார். பின்னரும் முதன்மை கலை இயக்குநராகச் செயல்பட்டார். முக்கியமான சில கலைப்படங்களை இயக்கினார்.

செம்பருத்தி பலவகையிலும் மலையாளத்தின் ஒரு கிளாஸிக் ஆக கருதப்படுகிறது. மலையாற்றூர் ராமகிருஷ்ணன் மலையாளநாடு வார இதழில் எழுதிய லாட்ஜ் என்னும் நீள்கதையின் திரைக்கதை வடிவை பி.என்.மேனன் எழுதினார். மலையாளநாடு தயாரித்த முதல் திரைப்படம் இது.

தேவராஜன்

ஜி.தேவராஜன் செம்பருத்தியின் இசையமைப்பாளர். செம்பருத்தியின் பாடல்கள் கேரள நாட்டுப்புற இசையின் மணம் கொண்டவை. சக்ரவர்த்தினீ என்னும் பாடல் செவ்வியலிசை. இப்பாடல்கள் இன்றும் புகழுடனுள்ளன.

இப்படத்தில்தான் ரோஜாரமணி கதாநாயகியாக அறிமுகமானார்.  படத்தின் பெருவெற்றிக்கு ரோஜாரமணி முக்கியமான காரணம். ’தேவதைப்பருவத்தில் இருக்கும் சின்னப்பெண்’ என்பது கதையிலுள்ளது. அப்படிப்பட்ட முகமாக ரோஜாரமணி இப்படத்தில் இருந்தார்.அதில் நடிக்கையில் அவருக்கு 15 வயது கடந்திருந்தது.

செம்பருத்தி தொழில்நுட்ப மேன்மை கொண்ட படம். அன்று திரைக்கல்லூரியில் இருந்து வெளிவந்த, பின்னாளில் பெரும்புகழ்பெற்ற அசோக்குமார் ஒளிப்பதிவு செய்தார். இன்றும் இப்படத்தின் காட்சியமைப்பும், கோணங்களும் விதந்தோதப்படுகின்றன. மிகக்குறுகிய இடத்திற்குள் அமைந்துள்ள கோணங்களும், அழகிய அண்மைக்காட்சிகளும் அன்றைய இந்திய சினிமாவில் மிக அரிதானவை. கலைப்பட இயக்கத்தில் இருந்து வணிக சினிமாவுக்கு வந்தவை. படத்தொகுப்பாளர் ரவிகிரண் கலைப்பட இயக்கத்தில் இருந்து வந்தவர்.

நீங்கள் குறிப்பிட்ட பாடலின் மலையாள மூலம் இந்தப்பாடல்தான். இது ஒரு கேரள நாட்டுப்புறச் சாயல்கொண்ட பாடல்.

செம்பருத்தி 1974ல் தமிழில் பருவகாலம் என்றபேரில் எடுக்கப்பட்டது. ஏ.எஸ்.பிரகாசம் மொத்தக்கதையையும் திரும்ப எழுதினார். ஜாஸ் ஏ. எஸ். பெர்னாண்டோ என்பவர் இயக்கம். கமலஹாசன் ஸ்ரீகாத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மஸ்தான் என்பவர் ஒளிப்பதிவு.

எதற்காக இதை தமிழில் எடுத்தனர் என்பது ஆச்சரியம்தான். மலையாள மூலத்திலுள்ள தொழில்நுட்பத்திறன் அறவே இல்லை. இரு பாடல்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். தமிழில் இயக்குநரே இல்லை, நடனஅமைப்பாளரே பாடலை எடுத்திருக்கிறார். அக்கால வழக்கம் அது (இக்காலத்திலும் பெரும்பாலும்). வழக்கமான சுருளிராஜன் காமெடியெல்லாம் போட்டு முயன்று பார்த்திருக்கிறார்கள். ரோஜாரமணியால் படம் ஓடியது என நினைத்து அவரை மட்டும் மலையாளத்தில் இருந்து எடுத்திருக்கிறார்கள்.

மலையாள மூலக்கதை நுட்பமான சில தளங்கள் கொண்டது. மெல்லுணர்வுகள் கொண்ட கவிஞனாகிய ஒருவன். காமமும் தன்னலமும் மட்டுமே கொண்ட ஒரு முரடன். தேவதைபோன்ற அந்தச் சிறுபெண்ணை கவிஞன் ஆராதிக்கிறான், அந்த தூய்மையாலேயே அவளை அவனால் அணுக முடியவில்லை. காமுகன் அவளை வெறும் உடலாகவே பார்க்கிறான், மிக எளிதில் அடைகிறான். இது எப்போதுமே நிகழ்வது. ஏனென்றால் கவிஞன் எண்ணுவது கனவு, காமுகன் வாழ்வது உண்மையில்.

அவளுடைய வயதுதான் அவளை தேவதையாக்குகிறதே ஒழிய அவளுடைய அறிவோ ஆளுமையோ அல்ல. மிக எளிய பெண். முரடனால் கருவுற்றவள் வேறுவழியில்லாமல் கவிஞனை மணக்கவும் ஒத்துக்கொண்டு வருகிறாள். கொல்லப்படுகிறாள். இந்தப்படம் கன்னிப்பருவம் என்பதன் கவித்துவத்தை கலைத்துக்கொண்டே வந்து அதை ஓர் அபத்தற்பனையாக ஆக்கிவிடுகிறது. ஆகவே இன்றும் பேசப்படுகிறது

இந்த அப்பட்ட யதார்த்தம் ஓர் இலக்கிய தர்சனம். கேரள யதார்த்தவாத எழுத்தின் பெரும்படைப்பாளிகளில் ஒருவரும் தமிழருமான மலையாற்றூர் ராமகிருஷ்ணன் அவருடைய எல்லா கதைகளிலும் அவருக்கான வாழ்க்கைப்பார்வையை முன்வைத்தவர். அதைத்தான் இலக்கியத்தில் இருந்து சினிமா எடுத்துக்கொண்டிருக்கிறது. மலையாளத்தின் பெரும்படைப்புகள் இலக்கியத்தை நம்பி அதன் சாராம்சத்தை எடுத்துக்கொள்பவை – அப்படி இதுவரை ஒருமுறைகூட தமிழில் நிகழ்ந்ததில்லை.

அந்த இலக்கியப் பார்வை, அதன் வாழ்க்கை நுட்பங்கள் தமிழில் எடுபடாது என தயாரிப்பாளரும் பேரா.பிரகாசமும் முடிவுசெய்தது சரிதான். தமிழில் கதை சுபமுடிவு கொண்ட வழக்கமான முக்கோணச் சிடுக்கு. ஆனால் மலையாளக்கதையின் தனித்தன்மையே அந்தக் கருதான். அதை அகற்றிவிட்டால் எஞ்சுவது ரோஜாரமணி மட்டும்தான். அதை முயன்று பார்த்திருக்கிறார்கள். படம் சுபமுடிவு கொண்டதாயினும் பாக்ஸ் ஆபீசில் ஒரு டிஜாஜடியாக முடிந்தது. பரிதாபம்தான்

செம்பருத்தி மலையாளப்படம் யூடியூப்

 *

தேவதை தமிழ்ப்படம்- யூ டியூப்

கலீர் கலீர் என்றே காலம் – யூ டியூப்

மாந்தளிரே மயக்கமென்ன உன்னை… யூடியூப்

முந்தைய கட்டுரைஉமா ஷக்தி
அடுத்த கட்டுரைஉள்ளுணர்வைக் கூர்தீட்டிக்கொள்ள முடியுமா?