தியானத்தின் தேவையைப் பற்றி..கடிதம்

அன்புள்ள ஜெ

உங்கள் காணொளியை நான் பல நண்பர்களுக்குப் பரிந்துரைத்தேன். நான் ஐரோப்பாவில் பணியாற்றும்போது இதேவகையான கவனக்குவிப்புப் பயிற்சிகளை அங்கே பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்களில் அளிப்பதைக் கண்டிருக்கிறேன். ஜப்பானிய முறை, சீனமுறை, இந்திய முறை என கீழைநாட்டு முறைகள் உண்டு. ஐரோப்பிய முறைகளும் உண்டு. ஆனால் இந்திய, ஜப்பானிய முறைக்குத்தான் மவுசு அதிகம்.

இன்று நான் தங்கியிருக்கும் விடுதியில் (பிராக்) வெளியே புல்வெளியில் ஐம்பதுபேர் யோகா செய்துகொண்டிருக்கிறார்கள். இந்தியர்களிடம் என்னது, நீங்கள் யோகா செய்வதில்லையா என்று திகைப்புடன் ஐரோப்பியர் கேட்பார்கள்.

ஆனால் இந்தியாவில் பலர் அதைச் செய்வதில்லை. ஏனென்றால் அது தேவை என அவர்கள் நினைப்பதில்லை. தங்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருப்பதாகவே எண்ணுவதில்லை. அதோடு இந்தவகையான பயிற்சிகள் மதத்துடன் தொடர்புடையவை, வழிபாடுகள் என்று நினைக்கிறார்கள். ஏதாவது அமைப்புக்கு அடிமையாக்கிவிடும் என்ற எண்ணமும் இருக்கிறது.

நான் இப்பயிற்சிகளை 1999 முதல் செய்து வருகிறேன். ஒரு நாள் முழுக்க என் உடலை நான் stiff ஆக வைத்துக்கொண்டிருக்கிறேன் என்று என் யோகா ஆசிரியர் சொன்னபிறகே தெரிந்தது. குறிப்பாக தோள்களையும் கழுத்தையும் கடினமாக வைத்திருக்கிறேன். கம்ப்யூட்டரில் அமர்ந்திருப்பது அப்படி செய்யவைக்கிறது. பரபரப்பாகவும் கவனமாகவும் வேலைசெய்தாலும் அப்படி இறுக்கமாகிறது. அதை திட்டமிட்டு தளர்த்திக்கொள்ளவேண்டும். அதை செய்ய ஆரம்பித்ததுமே என் உடல் flexible ஆகிவிட்டது.

அதைப்போல மனமும். நம் மனம் சிதறிக்கொண்டே இருக்கிறது. ஒருமை கூடுவதில்லை. அதைச் சிதறடிக்க ஆயிரம் வழிகள். அதைத்தான் நாம் குவிக்கவேண்டியிருக்கிறது. இப்பயிற்சிகளை இவ்வளவு எளியமுறையில், அழகான முறையில் அங்கே வழங்குகிறீர்கள். இங்கே இதெல்லாம் மிகச்செலவேறியவை.

வாழ்த்துக்கள்

என்.ஜெகந்நாதன்

அன்புள்ள ஜெகந்நாதன்,

இரண்டு விஷயங்களில் இங்கே குறிப்பாக இருக்கிறோம். மதவழிபாடு, தனிநபர் வழிபாடு கிடையாது. இது அறிவார்ந்தவர்களுக்கான பயிற்சி மட்டுமே. இரண்டு, எப்படி இது ஆயிரமாண்டுகளாகச் சொல்லிக்கொடுக்கப்படுகிறதோ அதே குருகுல முறைப்படிச் சொல்லிக்கொடுக்கப்படும். பயில்பவரின் வசதிகளுக்காக சமரசம் செய்யப்படாது. இது வணிகம் அல்ல

ஜெ

 


சைவசித்தாந்த வகுப்புகள், முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள்

நிகழ்வு ஜூன் 7, 8 மற்றும் 09 தேதிகளில் நிகழும் (வெள்ளி சனி ஞாயிறு)

தொடர்புக்கு [email protected]

பௌத்தம், விபாசனா பயிற்சி

வி.அமலன் ஸ்டேன்லி

ஜூலை 5,6 மற்றும் 7 (வெள்ளி, சனி ,ஞாயிறு) 

முந்தைய கட்டுரைஇசைரசனையை பயிலவேண்டுமா?
அடுத்த கட்டுரைமாரிராஜ், கடிதம்