தத்துவ வகுப்புகள் நடத்துவது பற்றி…

அன்புள்ள ஜெ,

வணக்கம். பல நாட்களுக்குப் பின் எழுதுகிறேன். என்றாலும் ஒரு நாள் கூட, ஒரு பொழுது கூட உங்களிடம் பேசாமல், நீங்கள் எழுதியவற்றை நினைக்காமல், படிக்காமல், உங்களை பற்றி பேசாமல் கழிந்ததில்லை. கடந்த சில வருடங்களாக இதே நிலை தான்.

உங்களிடம் பேச வேண்டிய பல விஷயங்களை மனதில் பேசுவதுடன் நிறைவடைந்து விடுகிறேன். உண்மையில் ஒரு வாசகனுக்கு எழுத்தாளனை விட அவன் எழுத்தே முக்கியம் என்று தோன்றுவதால் உங்களை சந்தித்தால் பேச விஷயம் கூட இல்லாமலாகி விடுகிறது. உங்களை இதுவரை இரண்டு அல்லது மூன்று முறைகள் சந்தித்து உள்ளேன். நீங்கள் நடத்திய விரிதழலில் பங்கெடுத்துள்ளேன். (நான் படித்து தொகுத்து பேசிய புத்தகம் திருடன் மணியன் பிள்ளை). நித்தியவனத்தில் நடைபெற்ற நான்கு வகுப்புகளில் கலந்து கொண்டும் உங்களிடம் சேர்ந்து பத்து நிமிஷம் பேசியதில்லை.

எனினும் உங்களிடம் பேச எப்போதும் ஏதேனும் விஷயம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அது பெரும்பாலும் வியப்பு கலந்த பக்தி என்று கூட சொல்லலாம். நீங்கள் சொல்லும், எழுதும், செய்யும் விஷயங்கள் அப்படி. இருந்தும் கொஞ்சம் விலகியே இருக்கிறேன். உங்களிடம் சொல்லிக்கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் நான் இதுவரை செய்யவில்லை என்பதுதான் காரணம். என் செயல் தான் என்னை பற்றிய அறிமுகமாக உங்களிடம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அது ஒரு நாள் நடக்கும் என்று நம்புகிறேன், நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன்..

உங்களின் “இந்திய தத்துவ மரபை ஏன் கற்க வேண்டும்” என்ற காணொளியை சற்று முன் பார்த்தவுடன் இதை எழுதுகிறேன். உங்கள் தத்துவ வகுப்புகள் துவக்கப்பட்ட போது தவற விட்டவர்களில் நானும் ஒருத்தி, அடுத்த முதல் நிலை வகுப்புக்காக காத்திருப்பவர்களில் நானும் ஒருத்தி. அப்படி காத்திருப்பவர்கள் இன்னும் சிலரையும் எனக்கு தெரியும். உங்கள் காணொளியை பார்த்த பின் எங்களை போன்றோருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தருவீர்கள் என்ற நம்பிக்கை வந்து இந்த கடிதத்தை எழுதுகிறேன். தத்துவ வகுப்புகள் முதல் நிலை வேண்டும் என்று கேட்டு எழுதிய சில வாசகர்களுக்கு நீங்கள் எழுதிய பதிலை பார்த்து பயந்து போயிருந்தேன். கேட்க தைரியம் வரவில்லை. ஆனால் இந்த காணொளி நம்பிக்கை அளிக்கிறது.

வகுப்புகளுக்காக காத்திருக்கிறேன். காத்திருக்கிறோம்.

அன்புடன்,

மீனாட்சி ரவீந்திரன்

சென்னை

 

அன்புள்ள மீனாட்சி,

இன்னொரு தத்துவம் முதல்நிலை வகுப்பை தொடங்குவதென்பது ஒரு பெரிய பொறுப்பை ஏற்பது. அதை முழுமையாக நடத்தி முடிக்கவேண்டும். முதல்நிலை தத்துவ வகுப்பு என்பது ஒரு சிறு தொடக்கம். அதில் இந்திய சிந்தனைமுறையின் ஒரு சிறு வரைபடமே அளிக்கப்படுகிறது. அதன் ஒவ்வொரு புள்ளியையும் விரித்தெடுக்கவேண்டும். இது தத்துவத்தைச் சொல்லிக்கொடுத்தல் அல்ல. அது கல்லூரிகளிலேயே உண்டு. இது தத்துவசிந்தனையை பயிற்றுவித்தல். ஆகவே முதலில் தத்துவ அறிமுகம் அதன்பின் தத்துவப்படுத்தல் பயிற்சி என இந்த பயிற்சி முன்னகரும். ஒரு கட்டத்தில் பங்கேற்பாளர்கள் தத்துவ விவாதம் நடத்தவேண்டும். ஒரு வகுப்பை தொடங்குவதென்பது வரும் வகுப்புகளின் சுமையை ஏற்பது. நான் கொண்டுள்ள எதிர்காலப் பணிகள் நடுவே அப்பொறுப்பை ஏற்கமுடியுமா, நேரம் அமையுமா என்றெல்லாம் குழப்பம். ஆனாலும் இன்னொரு தொடக்கத்தை அனேகமாக ஜூலையில் செய்யலாமென நினைக்கிறேன்.

ஜெ

 


சைவசித்தாந்த வகுப்புகள், முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள்

நிகழ்வு ஜூன் 7, 8 மற்றும் 09 தேதிகளில் நிகழும் (வெள்ளி சனி ஞாயிறு)

தொடர்புக்கு [email protected]

 

முந்தைய கட்டுரைமருத்துவாழ்மலை,நாராயணகுரு
அடுத்த கட்டுரைகே.எம்.ஆதிமூலம்