அன்புள்ள ஜெ.,
மீண்டும் மீண்டும் இங்கே ‘எல்லாருமே லஞ்சம் கொடுக்கிறோம்…ஊழலை எதிர்க்க நமக்கென்ன தகுதி இருக்கிறது’ என்று கேள்வி எழுவதைப் பார்த்து ஆச்சரியமாக உள்ளது.
பொது வாழ்வில் லஞ்சம் இல்லாத தேசங்களில் சிலபல வருடங்கள் வாழ்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்… நாளை என் சந்ததி அது போன்ற சமூகத்திலேயே வாழ வேண்டும் என்று. ஆனால், இந்தியாவில் இருக்கும் வரை நான் லஞ்சம் கொடுத்துக்கொண்டுதான் இருப்பேன். இதில் எந்த முரணும் இல்லை.
அமெரிக்காவில் ஆட்டோ-கியர் வண்டிக்கு மூன்று முறை ஃபெயிலாகி நாலாவது முறையில் ஓட்டுனர் உரிமம் பெற்ற பல இந்தியர்களை நான் அறிவேன். ஆனால் நம் ஊரில் அதே நபர் லஞ்சம் கொடுத்து ஒரே நாளில் உரிமம் எடுத்து விடுவார். காரணம், அவர் ஊழல்வாதி என்பதல்ல. சரியான ஒரு நபர், லஞ்சம் கொடுக்காவிட்டால் எந்த அலைக்கழிப்பும் இன்றி உரிமம் எடுத்துவிடலாம் என்ற நிலை இங்கு இல்லை. லஞ்சம் மட்டுமே தகுதியாக உள்ள ஒரு இடத்தில், சாமானிய மக்கள் செய்யக்கூடியது அண்ணா ஹசாரே போன்ற ஒருவரை எதிர்பார்த்துக் காத்திருப்பதுதான். அந்த ஒற்றை வாசலையும் மூடிவிட்டு இங்கே வேறென்ன சாதிக்கப் போகிறோம். கடவுள் ஷங்கர் படங்களைப் பார்ப்பதில்லை என்பது எப்போது நமக்குத் தெரியபோகிறது.
நன்றி
ரத்தன்
ரத்தன்,
சந்தேகமானதாக இருக்கட்டும், போதாததாக இருக்கட்டும், சிக்கலானதாக இருக்கட்டும், எதையாவது செய்யுங்கள் . உங்கள் கையாலாகாத்தனத்தை மறைக்க பிறர் செய்வதை குறைசொல்லி அதை தோற்கடிக்காதீர்கள் – இதுவே நான் சொல்லிவருவதன் சாரம்
ஜெ
ஜன்லோக்பால் விவகாரத்தில் இவ்வளவு தேவை இல்லாத சந்தேகங்கள் :) ? இந்த ஜன்லோக்பால் நாளை ஒரு தவறானவர் கையில் சேர்ந்தால் கூட , பிற ஜனநாயக அமைப்புகளால் அது தடுக்க படும் ,என்பதே என் எண்ணம் .
அசோக் சாம்ராட்
அன்புள்ள அசோக்
மிக எளிமையான காரணம். ’நான் பொதுமக்களில் ஒருவன் அல்ல, நான் அறிவுஜீவி’ என்று சொல்லிக்கொள்ள கொஞ்சம் வாசிப்பவர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால் ஒரு சிந்தனையை முன்வைக்குமளவுக்கு விரிவான வாசிப்போ சுயமான பார்வையோ பெரும்பாலானவர்களுக்கு இருப்பதில்லை.
இன்னொருசாரார் ஏதேனும் அரசியல்சார்புடையவர்கள். சிலசமயம் சாதிக்கணக்குடையவர்கள். இந்த விஷயம் அவர்களின் அரசியலை எப்படி பாதிக்கும் என்பதே அவர்களின் சந்தேகம்.
கடைசியாக அண்ணா ஹசாரே ஒருவகை தேசியப்புகழை அடைந்திருப்பது பிற சமூகசேவகர்களுக்கு மனம்பொறுக்காக புழுக்கத்தை அளிக்கிறது
எவருமே அண்ணா ஹசாரே பற்றி, போராட்டநியாயம் பற்றி ஏதும் சொல்லமுடியாத நிலையில் இருக்கிறார்கள். ஆகவே செய்யக்கூடுவது வெறுமே ஐயங்களை கிளப்புவது மட்டுமே
கொஞ்சம் வாசிக்கும் சாமானியனின் பாவனையை பாருங்கள் ‘எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருக்கிறது. லோக்பால் பில் சரியில்லை. அண்ணா சர்வாதிகாரியா என நினைக்கிறேன். ஜனநாயகம் என்னாவது என்று கவலை. இந்தமாதிரி சந்தேகம் மட்டும் இல்லாவிட்டால் பூந்து வெளையாடி விடுவேன்’ என்ற ஒரு தோரணையில் கருத்துச் சொல்கிறார்கள்
’டேய் நீ என்னடா இதுவரை கிழித்தாய்?’ என்று கூட இருப்பவன் கேட்கும்சூழல் இங்கே இல்லை. அதுவே ரகசியம்.
ஜனநாயகத்தில் எல்லா அமைப்பும் இன்னொரு அமைப்பால் தடுக்கப்படுகிறது. முழுமுற்றான அதிகார அமைப்புஎன ஏதுமில்லை. இந்த சர்வாதிகார என்ற கோஷத்தை சென்ற தேர்தலில் தேர்தல் கமிஷன் மேல் கருணாநிதி எழுப்பினார். நீதி மன்றம் மேல் அரசியல்வாதிகள் எழுப்புகிறார்கள்
இந்தியச்சூழலில் எதையாவது செய்பவர்கள் சிலரே. அவர்கள் பழிகளைப்பெற்றாகவேண்டும். இது நம் தேசிய மனநிலை. காந்திக்கும் அதுவே கிடைத்தது. அண்ணாவுக்கு கிடைத்துக்கொண்டிருக்கிறது
ஜெ
அண்ணா ஹசாரே-மீண்டும் ஒரு கடிதம்
அண்ணா கட்டுரைகள் ஆங்கில மொழியாக்கம்
அண்ணா ஹசாரே ஜனநாயகக் கேள்விகள்
அண்ணா ஹசாரே மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?
ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1
ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2