இன்றுவரும் மலையாளப்படங்கள் இலக்கிய அறிமுகமே இல்லாமல் கேரளத்தில் உருவாகி வந்துவிட்டிருக்கும் ஒரு புதிய தலைமுறைக்காக உருவாக்கப்படுபவை. பெரும்பாலும் கொரிய சினிமாக்கள், தொடர்களின் கேரள வடிவங்கள் அவை. கூட மது, கஞ்சா, வன்முறை என கேரளத்தின் சமகால உலகம். அக்காரணத்தால்தான் தமிழிலும் அவை கொண்டாடப்படுகின்றன என்று எனக்கு ஓர் எண்ணம். இன்று எம்.டி.வாசுதேவன் நாயர், பி.பத்மராஜன், ஏ.கே.லோகிததாஸ் கதைகளை கேரளத்திலேயே எடுக்க முடியாது என்று படுகிறது.
லோகியின் தோல்விப்படங்களில் ஒன்று மகாயானம். (மாபெரும் பயணம்). தோல்விக்கான காரணம் ஓர் ஆக்ஷன் இயக்குநரான ஜோஷியிடமிருந்து இத்தகைய படத்தை மக்கள் எதிர்பார்க்கவில்லை என்பது. ஆனால் இன்று பார்க்கையில் நிறைவாக இருக்கிறது. ஓர் இலக்கியச் சிறுகதைக்குரிய கட்டமைப்பும் கதாபாத்திர ஒருமையும் கொண்டது. ஒரு மிகச்சிறிய கிராமம். அதன் அடித்தள மக்களின் உலகம். ஒவ்வொரு கதாபாத்திரமும் தன்னளவில் ஆழமும் முழுமையும் திரைக்கதையில் வலுவான இடமும் கொண்டது.
(உதாரணம் மாள அரவிந்தன் நடித்துள்ள கதாபாத்திரம். ஓர் உதிரி. கதைநாயகியை அக்கா என்று சொல்லி நயந்து வாழும் அப்பாவி. ஆனால் மது அருந்தியதும் அவளுடன் படுப்பேன் என்கிறான். அடிவாங்குகிறான். மறுநாள் மதுப்போதை தெளிந்து ஆற்றில் பிடித்த மீனுடன் வந்து நீ என் அம்மாபோல என்கிறான். அவளுடைய நல்லியல்பு உடனே அவளை அம்மாவாக ஆக்கியும் விடுகிறது)
அடித்தள உலகில் ஆண் துணை இல்லாத பெண்ணின் பரிதாபமான வாழ்க்கையை லோகி பல படங்களில் அற்புதமாக எழுதியுள்ளார். ஏறத்தாழ அவருடைய சொந்த வாழ்வு அது. இதில் சீமா நடித்த கதாபாத்திரம் அதன் தீவிரம், ஆழம் காரணமாக ஒரு சினிமாக்கதாபாத்திரமாக அன்றி தெரிந்த ஒருவராக மாறிவிடுகிறது. மிக மெல்ல அப்படி கதாபாத்திரங்களை உருவாக்கி நம்முள் செலுத்துவதில் லோகி ஒரு மாஸ்டர்