சர்ச்சைகளில் ஈட்டிக்கொள்வது…

அன்புள்ள ஜெ,

அண்மையில் ஒரு விவாதம் நண்பர்கள் நடுவே. ஒருவர் சொன்னார், ‘ஜெயமோகன் சினிமா, அரசியல் போன்றவற்றில் சர்ச்சைகளை தூண்டிவிட்டு புகழ்பெற்றவர். பரபரப்பாக பேசப்படுவதற்காகவே அவர் சர்ச்சைகளை கிளப்புகிறார். அவருடைய இணையதளம் சர்ச்சைகளால்தான் ஓடுகிறது. ஜெயமோகன் ஒரு சர்ச்சை வணிகர். அதெல்லாம் எழுத்தாளனுக்கு உகந்தது அல்ல’. அவர் ஓர் அரசியல் சார்ந்த வாசகர்.

நாங்கள் அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது எங்கள் குழுவின் இளைய வாசகரான ராம்குமார் (உங்களுக்குத் தெரிந்தவர்)சொன்னார். “அப்படியே வைத்துக் கொள்வோம். அவர் வேண்டுமென்றே  சர்ச்சைகளை உருவாக்குகிறார். சர்ச்சைகளைத் தவிர எதையுமே கவனிக்காத நம் சூழலை தன் பக்கம் திருப்ப அவர் அப்படிச் செய்கிறார். அதனால்தான் அவருக்கு அவ்வளவு கவனம் கிடைக்கிறது. அந்த தளம் புகழுடன் இருக்கிறது. அப்படியே வைத்தால்கூட அவர் அந்த புகழை வைத்து என்ன செய்கிறார்? தன்னை மட்டுமா முன்னிறுத்துகிறார்? தமிழிலுள்ள குறிப்பிடத்தக்க எல்லா எழுத்தாளர்களையும் அறிமுகம் செய்கிறார். இங்கே இருக்கும் நாமெல்லாம் தமிழ் நவீன எழுத்தாளர்களின் பெயர்களையே அவர் தளம் வழியாகத்தான் அறிமுகம் செய்துகொள்கிறோம். திரும்பத் திரும்ப முன்னோடிகளை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறார். இலக்கியத்தின் அடிப்படைகளைக் கற்பிக்கிறார். இலக்கியத்தை ஓர் அறிவியக்கமாக முன்னெடுக்கிறார். அதற்காக விருதுகள் வழங்குகிறார். அதற்காக கூட்டங்கள் நடத்துகிறார். தமிழ்விக்கியில் உங்கள் பெயர் இருப்பதை இப்போதுதான் சொன்னீர்கள். அந்த தளம் வழியாகவே உங்களையும் எங்களுக்கு தெரியும். அவர் இலக்கியத்துடன் கலைகளையும் தத்துவத்தையுமெல்லாம் முன்வைக்கும் ஒரு பெரிய செயல்பாட்டை நடத்திக்கொண்டிருக்கிறார். இதெல்லாம் சர்ச்சையால்தான் என்றால் அந்தச் சர்ச்சையால் என்ன தப்பு? அவர் ஒரு அப்பா போல. வீட்டுக்கு வெளியே சென்று அவமானப்பட்டு, வெயிலில் அலைந்து, கடுமையாக உழைத்து, தன் பிள்ளைகளை வசதியாக ஆளாக்கி விடும் அப்பாக்களைப்போல அவரும் செய்கிறார். சர்ச்சைகளால் வசைகளும் அவமதிப்புகளும் வருகின்றன. அதை அவர் தாங்கிக்கொள்கிறார். அதன் விளைவான புகழை பங்கிட்டுக்கொள்கிறார். நீங்கள் அந்தப்புகழை பெற்றுக்கொண்டு அவரை நீங்களும் சேர்ந்து வசைபாடி உங்களை தூயவர்களாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். சென்ற ஓராண்டில் உங்கள் முகநூலை பார்த்தேன். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மிகமிகக் கடுமையான வசைகளையும் கருத்துக்களையும் சொல்லியிருக்கிறீர்கள். அவை விவாதம் ஆகவில்லை. ஏனென்றால் உங்களை எவரும் பொருட்டாக நினைக்கவில்லை. இவ்வளவு விவாதங்களையும் நீங்கள் உருவாக்குவது உங்கள் சொந்த ஈகோவுக்காகவும் அரசியலுக்காகவும் மட்டும்தான். ஒரு துளிகூட பொதுநலப்பார்வை இல்லை. உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை’

ஆவேசமான பேச்சு. குழு உரையாடல் அப்படியே கலைந்துவிட்டது. நாலைந்து நாட்கள் ஆகியது. இதை எழுதவேண்டும் என நினைத்தேன். அந்த சினிமாச்சர்ச்சை எல்லாம் கொஞ்சம் ஓய்ந்தபின் எழுதலாம் என்று நினைவிலிருந்து எழுதினேன்

எம்.

முந்தைய கட்டுரைதன்னை விலக்கி அறிய முடியுமா?
அடுத்த கட்டுரைமருத்துவ முகாம், கடிதம்