கேள்வி : தமிழ்ல முக்கியமான எழுத்தாளரா, நிறைய எழுதுற எழுத்தாளரா அறியப்பட்டுள்ளவர் நீங்க. ஆனா இப்ப ஒரு வருஷமா எழுதறத நிறுத்திட்டீங்க. ஏன்?
கடைசியா வந்த ‘கொற்றவை’ நாவலை மூணுவருஷமா எழுதிட்டிருந்தேன். அந்த நடையைப் பாத்தீங்கன்னா தெரியும். ரொம்ப கவித்துவமான உருவகநடை. தனித்தமிழ். அதாவது சிலப்பதிகாரத்தில இருக்கிற வடமொழி வார்த்தைகளைக்கூட தமிழாக்கம் செஞ்சு எழுதிய நாவல். அந்த நடை மண்டைக்குள்ள ஏறி எறங்க மறுத்தது. ஒரு இடைவெளி விட்டா சரியாகும்னு ஒரு நினைப்பு. எழுதித் தள்ளியாச்சு போதுமேன்னு ஒரு எண்ணம். ஒரு நுட்பமான நாவலை எழுதின உடனே இதை யார் கூர்ந்து படிப்பாங்கன்னு ஒரு அவநம்பிக்கை. இப்படி பல விஷயங்கள்.ஒரு பெரிய நாவலை எழுதினா உடனே ஒரு நிறைவும் சலிப்பும் வந்திடும். கொற்றவையை படிச்சா தெரியும் அது ஏன்னு.
அப்றம் பல தனிப்பட்ட காரணங்கள். முக்கியமா சுந்தர ராமசாமியோட மரணம். அவர் கூட ஏற்பட்ட முரண்பாடுகளை என் மனைவி ஏத்துக்கலை. அதனால இனிமே இலக்கிய விவாதமே வேண்டாமே அப்டீன்னு ஒரு நினைப்பு. பல காரணங்கள்.
நான் பல தடவை இப்டி எழுதாம இருந்திருக்கேன். இப்ப அதை சொல்ல வேண்டியிருந்தது. ஏன்னா பலரும் கூப்பிட்டுட்டே இருப்பாங்க. மறுத்தா தப்பா நினைப்பாங்க. அறிவிப்பு வெளியிட்டா பிரச்சினையே இல்லியே. எழுதாம இருந்தாலும் எழுத்தாளன் எழுத்தாளன்தானே. இண்டெர்நெட்ல பாத்தீங்கன்னா அதுக்கு ஆதாரம் இருக்கு. எதிரிகள் திட்டிக்கிட்டேதான் இருக்காங்க.
கேள்வி : எழுதாம இருக்கிறது எப்டி இருக்கு?
எழுதாம இருக்கிறதோட முதல் பயன் என்னான்னா செல்லத்தொப்பைய ரொம்ப குறைச்சு ஒல்லியா ஆயிட்டேன். நிறைய படிச்சேன்.
கேள்வி : எழுதுறத நிறுத்தினதுக்கு சினிமா காரணமா?
கஸ்தூரிமான் வேலை நடந்திட்டிருந்தபோதுதான் கொற்றவை எழுதினேன். நான் எழுதின நாவல்களில மட்டுமில்ல தமிழ் நாவல்களிலேயே செறிவான நாவல் அதுதான். அவ்வளவு உழைப்பும் கனவும் அதில இருக்கு. அதை ஒரு வாசகன் படிக்கவே மூணுமாசம் ஆகலாம். எனக்கு லோகித் தாஸ் கொடுத்த பணம்தான் நேரமா மாறி அந்த நாவலா ஆயிடிச்சு. இல்லைண்ணா அதை எழுத எனக்கு அஞ்சுவருஷம் ஆகியிருக்கும்.
சினிமால வேலையே இல்லைண்ணா நம்புவீங்களா? என்னைமாதிரி ஒருத்தனுக்கு ஒரு சினிமாவுக்கு எழுதறது ஒருவார வேலைதான். ‘நான் கடவுளு’க்கு என்னோட வேலைய போன ஜூலைமாசம் ஒரே ராத்திரியில முக்காப்பங்கு முடிச்சிட்டேன். அப்றம் கொஞ்சம் திருத்தங்கள். ‘நான் கடவுள்’ படத்தோட மொத்த ஸ்கிரிப்டும் போன ஜூலை முதலே முழுக்க ரெடியாயிட்டுது. அதோட ஒப்பிட்டுப்பாத்தா விகடன்ல முன்னாடி ஒரு கட்டுரைத்தொடர் எழுதினேனே, ‘சங்க சித்திரங்கள்’ அது பத்து சினிமாவுக்கு சமம்.
கேள்வி :. சினிமா இயக்குநர்கள் மீடியம். அதில் ஒரு எழுத்தாளராக விரும்பியதைச் செய்யமுடிகிறதா?
சினிமா ஒரு கூட்டு ஊடகம். அதில எல்லாரோட பங்கும் இருக்கு. யாருக்கு எவ்வளவு பங்குன்னு தீர்மானிக்கிற கப்பல்தலைவன் இயக்குநர். ‘நான் கடவுள்’ கண்டிப்பா பாலாவோட படம். ஆனா அது என்னோட படமும்தான். ஆர்தர் வில்சனோட படமும்தான். கிருஷ்ணமூர்த்தியோட படமும்தான். அப்படி ஒரு இடத்தில எல்லாரும் சேரும்போதுதான் நல்லபடம் உருவாக முடியும்.
கண்டிப்பா சினிமா இலக்கியம் மாதிரி ஒரு ‘தனிநபர் கலை’ இல்ல. நாவலில நான் முழுசா என்னை வெளிப்படுத்தறேன். சினிமால ஒரு பங்களிப்பை மட்டும்தான் செய்ய முடியும். அப்டி ஒரு கூட்டான கலையா இருக்கிறதுதான் சினிமாவோட பலமே. அதில குறைஞ்சது அஞ்சு வேறுவேறு கலைகள் ஒண்ணா இணைஞ்சிருக்கு. இணைக்கிறவர்தான் இயக்குநர்.
கேள்வி : தீவிரத் தளத்தில இயங்கிய நீங்க கமர்சியல் சினிமாவுக்குள்ள ஏன் வந்தீங்க?
எதுக்காக சினிமாவுக்குள்ள வந்தேன்? சும்மாதான். நடிகைகள் சொல்றாப்ல ‘நான் சினிவாவுக்கு வந்ததே ஒரு விபத்துதான்’னு சொல்லலாம் . லோகித தாஸ் என்னோட நண்பர். அவர் மனைவி என் நல்ல வாசகி. தமிழில ஒரு படம் எடுக்கணும்னார். ஆரம்பத்தில யோசிச்ச படம் வேற. கடைசீல கஸ்தூரிமான். அதுக்கு வசனம் எழுதினேன். நல்ல படம், மழையில அடிச்சிட்டு போச்சு. அது வெளியான நாலாம் நாள் தமிழக வரலாற்றிலேயே நாப்பது வருஷமா இல்லாத மழை கொட்ட ஆரம்பிச்சது. அதில மீரா ஜாஸ்மின் தூள் கிளப்பி நடிச்சிருந்தாங்க. அதில என்னோட பங்கு ஒண்ணும் பெரிசா இல்லை. அது முழுக்க முழுக்க லோகித தாஸ் படம்.
ஆனா அந்த உலகம் ரொம்ப பிடிச்சிருந்தது. உற்சாகமான ஒரு பிக்னிக் மாதிரி. பலவகையான மனுஷங்க. பலவகையான அனுபவங்கள். ஏகப்பட்ட பயணம். எனக்கு பயணம் போறது ரொம்ப பிடிக்கும். சொல்லப்போனா நான் இருபதுவருஷமா ஒரே வேலையை தினமும் செஞ்சு சலிச்சு அலுத்துப் போயிருந்தேன். எப்படிடா தப்பிப்போம்னு ஏங்கிட்டிருந்தேன். இது பரவாயில்லியேன்னு பட்டுது.
எனக்கு ஒண்ணுமே தெரியாத ஒரு உலகத்தில இப்ப இருக்கேன். எல்லார்ட்டயும் ஏன் எதுக்குன்னு கேட்டுட்டு. ‘இண்ணைக்கு மட்டும் நாநூத்திப் பன்னிரண்டுவாட்டி ஏன் ஏன்னு கேட்டுட்டார். பிரதர், நாமெல்லாம் கூடி இவரோட மனைவிக்கு ஒரு விழா எடுக்கணும்’னு நண்பர் சுரேஷ்கண்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் கிட்ட ·போனில சொல்றதைக் கேட்டேன். ராமகிருஷ்ணன் மறுமுனையில பயங்கரமா சிரிக்கிறார்.
கேள்வி : சினிமாவுக்கு வந்ததை ஒரு காம்ப்ரமைஸ்னு சொல்லலாமா?
ஒரு நல்ல எழுத்தாளன் எழுத்தை நம்பி வாழணும். காலையில் எழுந்தா எழுதப்போறது மட்டும்தான் அவன் கண்முன்னால இருக்கணும். அப்படிப்பட்ட வாழ்க்கை தமிழ் எழுத்தாளனுக்கு அமையறதில்லை. வேற வேலை செய்யவேண்டியிருக்கு. ஏதாவது ஆஃபீஸ்ல உக்காந்து வருஷம் முழுக்க ஒரே ஃபைலை பாக்கவேண்டியிருக்கு. கவுண்டர்ல உக்காந்து கை ஒடிய பணம் எண்ண வேண்டியிருக்கு. அங்க நடக்கிற எவ்வளவோ விஷயங்களோட ஒத்துப்போக வேண்டியிருக்கு, போராட வேண்டியிருக்கு. அதெல்லாமே அவனோட படைப்பு சக்திய உறிஞ்சி அழிக்கிற விஷயம்தான். அதுதான் அவன் பண்ற மிகப்பெரிய சமரசம். அதைச்செய்யாம இங்க யாருமே வாழ முடியாது.
எழுத்துக்கு எதிரி எதுன்னா சலிப்புதர்ற மத்தியவர்க்க வாழ்க்கைதான். அதை ஜெயிக்கத்தான் நான் வருஷம்பூரா லீவில ஊர் ஊரா அலைஞ்சிட்டிருந்தேன். அதுக்கும் ஒரு எல்லை இருக்கு. பணம் வேணுமே.
என்னைப்பொறுத்தவரை நான் பண்ற வேலையோட சலிப்புக்கு இந்த சினிமாவேலை பலமடங்கு மேல். கொஞ்சம் உழைப்பு. அதிக நேரம் சுதந்திரமா எழுதலாம். சினிமா என் எழுத்துக்கு பதிலா ஆகிறதில்லை. என் ஆபீஸ் வேலைக்குப் பதிலா ஆகிறது அவ்வளவுதான்.
நான் எழுத்தாளன். என் எழுத்துக்கு எது தேவைன்னு எனக்கு தெரியும். அதை வேற யாரும் எனக்குச் சொல்ல முடியாது. என் கனவும் என் லட்சியங்களும் ரொம்ப ரொம்ப பெரிசு, அதை தொடர்ந்து வாரதுக்குக்கூட இங்க யாரும் இல்லை. நான் நிகழ்த்துகிறபோது ஆன்னு வாய்பிளக்கமட்டும்தான் இவங்களால முடியும்.
ஒண்ணு சொல்றேனே , என் செயல்களுக்கோ என் எழுத்துக்கோ நான் யாருக்கும் எந்த உத்தரவாதமும் தர முடியாது. என் எழுத்தைப்பாத்தா தெரியும். ‘விஷ்ணுபுரம்’ எழுதின சூடோட சம்பந்தமே இல்லாம ‘பின் தொடரும் நிழலின் குரல்’ எழுதினேன். அதிலேருந்து ‘ஏழாம் உலகம்’ ரொம்ப தூரம். திடீர்னு பேய்க்கதைகளா எழுதினேன். ‘ நிழல் வெளி கதைகள்’னு தொகுப்பா வந்தது.நாளைக்கே நான் ஒரு செக்ஸ் நாவல் எழுத மாட்டேன்னு சொல்ல முடியாது. சரீன்னு துப்பறியும் நாவல் எழுதலாம். டிக்ஷ்னரி ஒண்ணு ரெடி பண்ணலாம். தத்துவ நூல் எழுதலாம். என் போக்கு அப்டி.
கேள்வி : பாரதிதாசன், ஜெயகாந்தன், புதுமைப்பித்தன்… சினிமாவுக்கு வந்த இலக்கியவாதிகள் எல்லாருமே கசப்பான அனுபவங்களோடத்தான் திரும்பியிருக்கிறாங்க. இப்ப சினிமாவிலே இலக்கியவாதிகளை அனுகிற தன்மை மாறியிருக்கா?
மூணு வருஷம் முன்னாடி என்னோட ஏழு நூல்கள் வெளியீட்டு விழாவுக்கு ஒன்பது சினிமா இயக்குநர்கள் வந்து கூட்டத்தில உக்காந்திருக்கிறதை பாத்தேன். இருபது வருஷம் முன்னாடி இது நடக்குமா? இப்ப உள்ள இயக்குநர்களில பல பேர் தீவிரமா படிக்கிறவங்க. பலரை நான் வாசகர்களா முன்னாடியே தெரிஞ்சிருக்கேன்.
கண்டிப்பா இலக்கியவாதி போகவே கூடாத எடங்கள் சினிமாவில இருக்கு. எதிர்பார்த்து போனா அவமானம் கண்டிப்பா உண்டு. ஏன்னா சினிமா ஒரு தொழில். கேளிக்கைத்தொழில். அதுக்குள்ள பலவகையான ஓட்டங்கள் இருக்கு. எல்லாத்திலயும் நாம இறங்க முடியாது. நமக்கு ஒத்துவரகூடிய ஆட்கள் முக்கியம். எனக்கு இப்ப ரெண்டே அனுபவம்தானே.
கேள்வி :சினிமாவில் சக்ஸஸாக இருக்கிற சக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனைப்பத்தி என்ன சொல்றீங்க?
அவர் உலக சினிமாவை விரிவா அறிஞ்சவர். ரொம்ப ஜாலியான நண்பர். எழுத்தில படிக்கிற ராமகிருஷ்ணன் ரொம்ப சீரியஸான ஆள். நேரில சிரிக்கச் சிரிக்க பேசறவர். மிக உற்சாகமானவர். சிரிக்கிறப்ப அவர் ஒட்டுமொத்தமா குலுங்கிறதை நினைச்சாலே எனக்கெல்லாம் மனம் மலர்ந்திரும். அவரோட திறமைய இன்னும் இங்க சரியா பயன்படுத்தலை. ஒண்ணுரெண்டு வெற்றிகள் கிடைச்சபின்னாடி அவரோட தனி முத்திரை வெளிப்படற மாதிரி வாய்ப்புகள் வரும்னு நினைக்கிறேன்.
கேள்வி : சினிமால உங்க ரசனை என்ன? என்ன மாதிரியான படம் பிடிக்கும்?
சினிமாவையெல்லாம் நான் எப்பவுமே பெரிசா எடுத்துக்கிட்டது இல்லை. அதுக்கான மனநிலை எனக்கு இருக்கிறதில்லை. என்னோட முக்கிய ஈடுபாடுன்னு பாத்தா இலக்கியம் அப்புறம் தத்துவம் வரலாறு அவ்வளவுதான். எப்பவுமே ஏதாவது ஒரு குதிரைய விடாம விரட்டறது. முத்தாத வயசில ஒரு பெண்ணையே பின்தொடர்ந்து போவமே அதுமாதிரி. நடுவில வேற பொண்ணு போனா அது கண்ணில படாதுல்ல.
கலை ஆர்வம்னா கொஞ்சம் கர்நாடக சங்கீதம் கேப்பேன். கொஞ்சம் ஓவியங்கள் பாப்பேன். எஸ்.ராமகிருஷ்ணன்லாம் உலக சினிமாவை தேடித்தேடி பாத்திருக்காங்க. சரசரன்னு பேசுவாங்க. பிரமிப்பா இருக்கும். எனக்கு பொதுவா நடுத்தரமான மலையாளப்படங்கள் பிடிக்கும். ஹாலிவுட் சாகசப் படங்கள் பிடிக்கும். குறிப்பா கௌ பாய் படங்கள். ஜாக்கி சான் படங்கள்.
இப்பகூட ரொம்ப விரும்பிப் பார்த்த படம்னா ‘பைரேட்ஸ் ஆ·ப் த கரீபியன்’ தான். கொஞ்சம் குழந்தைத்தனமான ரசனைன்னு நினைக்கிறீங்க. பரவாயில்லை. நான் படம் பாத்திட்டிருக்கிறப்ப என் மனைவி கூட கோபமா ‘வாய்க்குள்ள கட்டைவிரலை வைச்சு சூப்பிட்டு பாருங்க. பொருத்தமா இருக்கும். நீங்கள்லாம் ஒரு சீரியஸான ரைட்டரா? வெளியே தெரிஞ்சா கேவலம் ‘னு கோபமா சொல்வா. என் மனைவியும் ஒம்பதாம் கிளாஸ் படிக்கிற பையனும் எல்லாம் படு சீரியஸான படம் மட்டும்தான் பாப்பாங்க. வீட்டில டிவி கனெக்ஷன் இல்லை. பாக்க மாட்டாங்க. உலகப்புகழ் பெற்ற படங்களோட டிவிடி பாப்பாங்க. யாராவது அதில திருதிருன்னு முழிச்சிட்டு குழறலாப் பேசிட்டே இருப்பான். நானும் என் அஞ்சாம்கிளாஸ் படிக்கிற மகளும் சினிமா ரசனையில ஒரு கட்சி.
ஆனா காசர்கோடிலே ·பிலிம் சொசைட்டி மெம்பரா இருந்தப்ப கிளாசிக்குகள் கொஞ்சம் பாத்தேன். இங்க்மார் பர்க்மான் படங்கள் பிடிச்சிருந்தது. ‘செவந்த் சீல்’ என்னோட கனவுப்படம். இப்ப என் நண்பர்கள் நல்ல படங்களை வறுபுறுத்தி பார்க்க வைப்பாங்க. ‘1900 எ லெஜெண்ட்’ சமீபத்தில பிடிச்ச படம். ஆனாலும் பொதுவா என்னோட சினிமா ரசனை சராசரியானது. நாலுபேர்ட்ட சொல்லிக்கிறாப்ல இல்லை.
ரொம்பநாளா தமிழ் சினிமாவே பாக்கலை. அருண்மொழிக்காக படம்பாக்கப்போனாக்கூட வெளியே வந்து எதாவது படிச்சிட்டிருப்பேன். படம்பாக்கிறப்பவே நினைப்பு வேற ஓடிடும். அப்பப்ப உள்ளே வந்து சில சந்தேகங்கள் கேட்டா அடிக்க வருவாங்க. சினிமாவுக்குள்ள வந்த பிறகு பாக்க ஆரம்பிச்சேன். அழகி, காதல், தவமாய் தவமிருந்து எல்லாம் பிடிச்சிருந்தது. ஆனா படங்களை படமா அணுக என்னால முடியாது. நான் பேசறது அந்த கதையைப்பத்தி மட்டும்தான்.
கேள்வி :உங்களோட உலகம் மலையாள சினிமான்னு சொன்னீங்க. லோகிதாஸோடு பணியாற்றிய அனுபவமும் உங்களுக்கு இருக்கு. மென்மையான, கதையம்சம் கூடிய மலையாள படங்களோட ஒப்பிட்டுப் பாக்கிறப்ப தமிழ் சினிமா உலகம் உங்களுக்கு பிடிச்சிருக்கா?
மலையாள சினிமாதான் என்னோட இடம். சந்தேகமே இல்லை. சினிமால என்னோட கனவுகள் மலையாளத்தில ஒரு நல்ல திரைக்கதை ஆசிரியரா ஆகணும்னுதான். எம்.டி.வாசுதேவன் நாயர், பி.பத்மராஜன், லோகித் தாஸ் தான் என்னோட ஆதர்சங்கள். லோகித் தாஸ் என்னோட குரு. திரைக்கதையில அவர் ஒரு மேதை
மலையாளத்தில பணம் கிடையாது. முப்பதுநாளில படத்த முடிக்கணும். அதனால திரைக்கதையை பக்காவா ரெடி பண்ணுவாங்க. உணர்ச்சிகரமான கதை,நடிப்பு ரெண்டையும் நம்பி படம் எடுப்பாங்க. தமிழில இப்ப தயாரிப்புச்செலவை குறைச்சே ஆகணும்கிற நிலைமை இருக்கு. அதுக்கு திரைக்கதை கச்சிதமா இருக்கிறது அவசியம். மலையாளத்தோட தேவை இப்ப இங்கயும் வர ஆரம்பிச்சிருக்கு.
ஆனா ஒண்ணு இருக்கு. நான் இப்ப தொடர்ந்து தியேட்டருக்குப் போய் படம் பார்க்கிறேன். தமிழ் நாட்டில படம் பாக்க வாரவங்களில முக்காவாசிப்பேர் எந்தவிதமான ரசனைப்பயிற்சியும் இல்லாதவங்க. பொறுமையா பாக்கிறதேயில்லை. அதனால கேளிக்கை அம்சங்களை கலந்துதான் நல்ல படத்தைக்கூட எடுக்கணும். இல்லாட்டி ரசனை உள்ளவங்க மட்டும் பாக்கிற மாதிரி ரொம்ப ரொம்ப கம்மியா செலவு பண்ணி படமெடுக்கணும்.
ஒருபடத்தில கேளிக்கைகளை ஒழுங்காச் சேக்கிறதுக்குக் கூட நல்ல கதை இருந்தாகணும். முழுக்க முழுக்க கேளிக்கையா வரக்கூடிய படங்கள் எப்பவுமே ஓடாமத்தான் போயிருக்கு. தமிழ்நாட்டில நல்ல கலைகளுக்கும் ஜனங்களுக்கும் இருக்கிற தொலைவை பாக்கிறப்ப பிரமிப்பாத்தான் இருக்கு. அந்த இடைவெளியை சினிமா நிரப்பணும். அதுக்கு நடுவாந்தரமான படங்கள் நிறைய வரணும்… அதில ஏதாவது பங்களிக்க முடிஞ்சா நல்லது.
கேள்வி: கவிஞர்கள் மாதிரி பல இலக்கியவாதிகள் இப்ப இலக்கியத்தை சினிமாவில் நுழையறதுக்கு ஒரு விசிட்டிங் கார்ட்டா பயன்படுத்துற நிலை இருக்கே…
பாவம். ரொம்ப தப்பான விசிட்டிங் கார்டு.
கேள்வி: சினிமாவுக்கு எழுத்தாளன் எதுக்கு?
சினிமால எழுத்தாளன் செய்யக்கூடிய காரியம் ரெண்டுதான். ஒண்ணு கதாபாத்திரங்களை உருவாக்கலாம். ரெண்டு நாடகீயமான சந்தர்ப்பங்களை உருவாக்கலாம். தமிழ் சினிமாவில இருக்கிற பிரச்சினையே இங்க எழுத்தாளர்கள் இல்லங்கிறதுதான். ஒளிப்பதிவுக்கும், கலைக்கும், நடனத்துக்கும், இசைக்கும் அதுக்கான நிபுணர்கள் இருக்காங்களே. அதேபோல சினிமாவுக்கு கதைக்கும் அதுக்கான நிபுணர் தேவை.
மலையாளத்தில மகத்தான இயக்குநர்களோட ஒரு லிஸ்டை போடுங்க. ராமு காரியட், ஏ.வின்செண்ட், சேதுமாதவன் முதல் ஜோஷி, பரதன்,சிபி மலையில், கமல் வரை . யாருமே அவங்க படங்களுக்கு கதை எழுதறதில்லை. அதுக்கு எழுத்தாளர்கள் இருக்காங்க. இவங்க அவங்க எழுதறதை கண்ணில காட்சியாகாகாட்டுவாங்க. ‘அவன் மனசு ஆகாசம் மாதிரி நிறைஞ்சிருந்தது’ அப்டீன்னு திரைக்கதை ஆசிரியர் எழுதினா இவங்க அதை எடுத்து திரையில காட்டுவாங்க. அதனாலதான் அவங்க பெரிய டைரக்டர்கள். தெலுங்கு ஹிந்தி எல்லா மொழியிலயும் இப்படித்தான்.
தமிழில இயக்குநர் ஆக நினைக்கிறவர் அவரே கதையை எழுதணும். எழுத முடியாட்டி இயக்குநர் ஆக முடியாது. அப்ப வேற வழியில்லாம டிவிடி பாத்து ஆரத்தழுவணும். பழைய கதைகளைதிட்லி உப்புமா பண்ணணும். இதான் நடக்குது. தமிழில கண்ணீர் விட்டு அழுது கதையைச் சொல்லத்தெரிஞ்சாப்போரும் டைரக்டர் ஆகலாம். ஒரு விஷயம் தெரியுமா, எம்.டி, பத்மராஜன், லோகித் தாஸ் மாதிரி மகத்தான திரைக்கதை ஆசிரியர்கள் எல்லாருமே டைரக்ட் பண்ணினப்ப தோத்துத்தான் போயிருக்காங்க. அதுவேற கலை. இது வேற கலை.
கேள்வி: சல்மா, ரவிக்குமார் எல்லாம் அரசியலுக்கு வந்துட்டாங்க. எஸ். ராமகிருஷ்ணனும் நீங்களும் சினிமாவுக்கு வந்துட்டீங்க. எதிர்காலத்தில ஒருத்தர் இலக்கியவாதியா மட்டும் இயங்குறது சாத்தியமில்லையா?
முன்னாடியே சொன்னேனே, எழுத்தாளனா மட்டும் எப்டி இருக்க முடியும்னுட்டு. ஆபீஸ்ல வேலை பாக்கலியா? துணிக்கடை நடத்தலியா? ரைஸ்மில் நடத்தலியா? அதுமாதிரித்தான் சினிமா. அரசியல்? அது வேற. அதைப்பத்தி எனக்கு பெரிசா ஒண்ணும் தெரியாது. ரவிக்குமார் ஒரு அரசியல்வாதியா மிகமிக வெற்றிகரமா செயல்படுறதா நண்பர்கள் சொன்னாங்க.
கேள்வி: நீங்கள் எழுதத் தொடங்கிய காலம் முதல் சர்ச்சைகள் எப்பவும் உங்களைச் சுத்தி இருக்கு. இந்த மோதல் போக்கு ஏன்?
நான் எழுத்தாளனா மட்டும் இல்ல. விமரிசகனாக்கூட இருக்கேன். விமரிசகன்னா யாரு? நல்ல படைப்புகளை அடையாளம் காட்டுகிறவன். நல்ல படைப்புகளை எப்படி அடையாளம் காட்டறது? மோசமான படைப்புகளை ஒதுக்கி நல்லதை முன்னிறுத்துறது வழியாத்தானே? ஒரு மொழியில ஒரு காலகட்டத்தில பலநூறுபேர் எழுதுவாங்க. எல்லாருக்கும் அவங்க எழுத்தைப்பத்தி நம்பிக்கை இருக்கும். அவங்களை நம்புகிறவர்களும் இருப்பாங்க. ஆனா ஒரு மொழியில ஒரு காலகட்டத்தில உண்மையான இலக்கியப்படைப்புகளை கொஞ்சம்பேர்தான் உருவாக்குவாங்க. அப்டித்தானே இருக்க முடியும்? நாம சிலரை நிராகரிக்கிறப்ப அவங்களும் சேந்தவங்களும் கோபம் கொள்றாங்க. எதிர்க்கிறாங்க.
இலக்கியம் சும்மா தொழிலோ வியாபாரமோ இல்லை. எழுதுறவனுக்கு அது உயிர்மூச்சு. அப்ப அவனுக்கு தன்னை நிராகரிக்கிறவன்மேல கொலைவெறி வாரது இயல்புதான். அவன் என்னை கடுமையா எதிர்க்கிறது நியாயம்தான். சிலசமயம் அத்துமீறிடும். நம்ம குரலும் அத்து மீறிடும்.
ஆனா இது வெறும் சண்டை இல்லை. கோபதாபங்கள் இருந்தாலும் இதில ரெண்டு தரப்பு முன்வைக்கப்படுது. வாசகன் ரெண்டையும் அறிஞ்சுகிட்டு மேலே சிந்திக்க முடியும். உலகம் முழுக்க இப்டித்தான் இலக்கிய விவாதம் நடக்குது. தமிழில ரெண்டாயிரம் வருசமா இப்படித்தா இலக்கியச் சண்டை நடந்திருக்கு. இலக்கியம் மேல பற்று இருக்கிறப்ப அதில உணர்ச்சிகள் கலக்காம இருக்க முடியாது.
எனக்கு மேலான இலக்கியம் பற்றி ஒரு பார்வை இருக்கு. அது நான் மிக விரிவா படிச்சு சிந்திச்சு உருவாக்கிக் கிட்டது. அதை நான் விரிவா தர்க்க பூர்வமா முன்வைக்கிறேன். அது என்னோட கடமை. திட்டறவங்களை நேரில பாத்தா ‘ஸாரி’ சொல்லி கடித்தழுவிக்கிறதில எந்த தடையும் இல்லை. நான் அப்டி தழுவினா திருப்பி தழுவாத இலக்கியவாதிகள் ரொம்ப ரொம்ப குறைவு.
கேள்வி: ‘நான் கடவுள்’ எப்படி வந்திருக்கிறது? உங்கள் மனதிலிருந்த கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் நடிகர் ஆர்யா எவ்வளவு பொறுத்தமாக இருக்கிறார்?
இப்ப வந்திருக்கிறது படத்தில இருபது நிமிஷம்தான். இதைவைச்சு பாத்தா ‘நான் கடவுள்’ பாலாவோட மிக முக்கியமான படம். கதைங்கிறது சோப்புநீர் மாதிரி. அதில டைரக்டர் கைவைக்கிறப்ப நுரைநுரையா கிளம்பி வர்ணஜாலம் காட்டும் பாருங்க அது ஒரு பிரமிப்பான அனுபவம். பாலா டைரக்ட் பணரப்ப அவர்ல வார ஒரு வெறி ரொம்ப ஆச்சரியமா இருக்கும்.
ஆரியாவோட கண்கள்தான் இந்தப்படத்தோட முக்கியமான செட். அராபியச் சாயல்கொண்ட தவிட்டுநிறமான அழகான கண்கள். சட்டுனு வெறியையும் காதலையும் சிரிப்பையும் காட்டுகிற கண்கள். ரெண்டு நாளைக்குள்ள நடிகன் கதாபாத்திரமா மாறுகிற அற்புதத்தை பாத்தேன். மிக இயல்பா உணர்ச்சிகளுக்குள்ள போறார். இந்தக் கதாபாத்திரத்துக்கு அவர்தான் முதல் பொருத்தம்.
12. உலகில பல நாடுகள்ல இலக்கியமும் சினிமாவும் நெருக்கமா இருக்கு. தமிழில் நேர்மாறு! உங்களைப் போன்றவர்கள் வந்த பிறகாவது இந்த நிலை மாறுமா?
மலையாளத்திலயும் இலக்கியமும் சினிமாவும் நெருக்கமாத்தான் இருக்கு. தமிழில சினிவா ஆகிறதுக்குரிய தரமான பல படைப்புகள் இருக்கு. ஆனா இலக்கியம் சொல்சித்திரம். சினிமா காட்சிச் சித்திரம். இலக்கியத்தை சினிமாவா ஆக்கிறதுக்கு திரைக்கதை ஆசிரியர்கள் வேணும். தமிழில அப்டி அதிகம்பேர் இல்லை. அதான் பிரச்சினை
இன்னொண்ணு தரமான கலைப்படம். ஒரு படம் எடுக்க எப்டிபாத்தாலும் ஒருகோடி ரூபாய் வேணும். அப்ப ஒரு பத்து லட்சம்பேராவது அதைப் பாத்தாகணும். தமிழில நல்ல கலைப் படம் பாக்க பத்துலட்சம்பேர் இருக்காங்களா என்ன? தரமான இலக்கியமே இப்பதான் ஆயிரம் காப்பி விக்க ஆரம்பிச்சிருக்கு. அதனால இப்போதைக்கு நடுவாந்தரமான வணிகப்படங்களில கொஞ்சம் இலக்கியச் சாயலை கொண்டுவரமுடியுமான்னு பக்கலாம், அவ்வளவுதான்.
ஆனா இப்ப தமிழில ஒரு மறுமலர்ச்சி மெல்ல நடந்திட்டிருக்கு. புத்தகவிழாக்கள் அதோட அடையாளம்தான். பத்துபதினைஞ்சு வருஷங்களில ஏதாவது நடக்கலாம். பாப்போம்.
கேள்வி: இயக்குநர் பாலா பற்றி, அவர் பணியாற்றும் ஸ்டைல், ஒரு படைப்பாளியாக அவரது தனமை பற்றி..
போனவருஷம் கஸ்துரிமான் பட வேலையா கோவையில இருக்கிறப்ப ‘நான் கடவுள்’ படத்தோட அழைப்பு வந்தது. பாலாவோட நண்பர் சுரேஷ் கண்ணன் வந்து கூப்பிட்டார். பாலாவெல்லாம் ரொம்ப முரட்டு ஆளில்லியோன்னு எனக்கு பயம். ‘உங்க வாழ்க்கையில நீங்க சந்திச்சதிலேயே மரியாதையான ஆளை சந்திக்க போறீங்க’ன்னு சுரேஷ் சொன்னார். அது உண்மைதான். இது ரொம்ப உற்சாகமான அனுபவமா இருக்கு. ஒருவகையில இது நான் ஜெயகாந்தனை சந்திச்ச அனுபவம் மாதிரி. அவரைப்பத்தி நான் கேள்விப்பட்டதெல்லாம் படுபயங்கரமா இருந்தது. மேல விழுந்து குதறிடுவார்ங்கிற மாதிரி. நேர்ல பாத்த ஜெயகாந்தன் அன்பினால கனிஞ்சு நகைச்சுவையால ஒளிவிட்ட மனுஷனா இருந்தார்.
பாலா மாதிரி நகைச்சுவை உணர்ச்சி கொண்டவங்களை குறைவாத்தான் பாத்திருக்கேன். அவர் ஆபீஸ்ல எப்ப பாத்தாலும் ஒரு வேடிக்கை ஓடிட்டே இருக்கும். படு சிரியஸா நாள்கணக்கில ஒருத்தரை ஏமாத்தி நாடகம்போட்டு சிரிச்சு கும்மாளமிட்டிட்டிருப்பாங்க. நான் வாய்விட்டு சிரித்த பல நகைச்சுவைகள் இருக்கு. அப்றம் மெகாநாவலா எழுதறேன். பிதாமகன்ல வார சக்தி [சூரியா] கதாபாத்திரம் ஒருவகையில பாலாதான்.
ஒரு விஷயத்தை துளித்துளியான காட்சிகளா பார்க்கிறதுதான் நல்ல டைரக்டரோட இயல்புன்னு நினைக்கிறேன். பாலா இயல்பாகவே அப்டித்தான் பார்க்கிறார். காட்சிகளை அமைக்கிறப்ப சராசரன்னு அவர் அதை பிரிக்கிறது ரொம்ப ஆச்சரியமானதா இருக்கு எனக்கு.
ஒருமுறை இளைய ராஜா இசையமைக்கிறதை பக்கத்தில உக்காந்து பாத்தேன். ஒரு வயலின் கீச்சு. ஒரு டிரம். ஒரு வரிப்பாட்டு. துளிதுளியா சிதறிக்கிடக்கிறத அவர் பொறுக்கிப் பொறுக்கி சேர்த்துக்கிட்டே இருந்தார். ஆசாரி கண்ணிகண்ணியா வைச்சு ஊதி ஊதி நகை செய்றதுமாதிரி. மூணுமணிநேரம் ஆனபிறகும்கூட என்னதான் செய்றார்னு எனக்கு புரியலை. கடைசியில பாத்தா உயிரோட முழுஒருமையோட ஒரு பாட்டு வந்து நிக்குது. கலை இப்படி ஒரு தொழில்நுட்பமா மாறி கண்முன்னால நிக்கிறது பிரமிப்பாத்தான் இருக்கு. ஒரு நாவலை தனித்தனி சொற்றொடர்களா டைப் அடிச்ச பின்னாடி ஒண்ணொண்ணொண்ணா எடுத்து சேத்து நாவலா ஆக்கிற மாதிரி. இது சுத்தமா இன்னொரு உலகம். சும்மா பாத்து ஆச்சரியப்படற அளவுக்குத்தான் எனக்கு விஷயம் தெரியும்.
கேள்வி :தொடர்ந்து என்ன எழுதறதா இருக்கீங்க?
முக்கியமா ஒரு நாவல். ‘அசோகவனம்’. என் அம்மா பாட்டிகளைப்பத்தி. பெரிய நாவல். நாலு தடவை எழுதிப்பாத்தேன். வரவில்லை. வாரதுவரை கதவை தட்டிக்கிட்டே இருக்கவேண்டியதுதான். சமயத்தில சம்பந்தமே இல்லாம இன்னொரு நாவல் வந்திரும். ‘காடு’, ‘ஏழாம் உலகம்’ எல்லாம் அப்டி வந்ததுதான். அப்றம் வேதாந்த மரபு பத்தி விரிவா ஒரு தத்துவ நூலை எழுதற திட்டம் இருக்கு. ஆராய்ச்சி நடந்திட்டிருக்கு. இந்த வருஷம் வரும்னு நினைக்கிறேன்.
பேட்டி தளவாய் சுந்தரம்