[ஜெயமோகன் எழுதிய ‘ நவீனத்துவத்திற்கு பின் தமிழ் கவிதை: தேவதேவனை முன்வைத்த’ என்ற நூலில் இருந்து]
தேவதேவன் கவிதைகளின் மொழியே அனேகமாக தமிழின் மிக எளிமையான கவிமொழி. அதன் அப்பட்டத் தன்மையும் நேரடியான பாவனையும் நம்மை அயர வைக்கிறது. ஆனால் தமிழில் மிக, மிக குறைவாக உள்வாங்கப் பட்ட கவிஞர்களில் ஒருவர் அவர். காரணம் அவர் பேசும் எந்த விஷயமும் நம்மால் ஏற்கனவே தெளிவாக அடையாளம் காணப் பட்டதோ, பேசப் பட்டதோ அல்ல. அன்றாட வாழ்வுக்கும், அன்றாட சிந்தனைக்கும் அப்பாற்பட்ட ஒரு மன எழுச்சி அல்லது மனத் தெளிவு அவர் கவிதைகளின் சாரமாக உள்ளது. அது அனைவராலும் தொட்டுணரக் கூடிய ஒன்றல்ல. அபூர்வமாகவே சிலருக்கு அத்தகைய ஆழமான அமைதியின்மை உள்ளூர குடியேறி அலைக்கழிப்புக்கு உள்ளாக்குகிறது. அவர்களே தேவதேவனின் வாசகர்கள். அந்த அமைதியின்மை அங்கிருந்து அன்றாட வாழ்வின் அனைத்து தளங்களுக்கும் நகரவும் செய்கிறது.
முக்கியமான கவிஞர்களிடம் எப்போதுமே அடிப்படையான படிமங்கள் சில இருக்கும். அவற்றின் நீட்சியாகவே அவர்கள் தங்கள் உலகை கட்டியெழுப்பியிருக்கிறார்கள். ராபின் பறவை ஏன் எமிலி டிக்கன்ஸன் கவிதையில் மீண்டும், மீண்டும் வருகிறது என்ற கேள்விக்கு மிக, மிக விரிவாகவே பதில் சொல்ல முடியும். வேர்ட்ஸ் வர்த்தின் நைட்டிங்கேல் புகழ் பெற்றது. அதைப் போன்றதே தேவதேவனின் மூன்று முக்கியப் படிமங்கள். வீடு, மரம், பறவை.
வீடு எப்போதுமே அவருக்கு மண்ணுடன் தொடர்புள்ளது. மண் அளிக்கும் அடைக்கலத்தின் சின்னம் அது. அதேசமயம் அது ‘விட’ப்படவேண்டியதும் கூட. துறப்பது, ஒண்டிக் கொள்வது என இரு நிலைகளிலும் ஒரே சமயம் வீடு அவருக்கு பொருள் படுகிறது. வெளியுலகின் அலைக்கழிப்புகளுக்கு மாற்றாக இனிமையான உறவுகளின், தனிமையின் கதகதப்புடன் வீடு இருக்கிறது. ஆனால் அந்த வீட்டை எப்போதும் மரம் ஊடுருவுகிறது. விண்ணிலிருந்து வந்த பறவை உள்ளே புகுந்து சிறகடிக்கிறது. அவ்வழைப்பிலிருந்து முகம் திருப்பிக் கொள்ளவே முடிவதில்லை.
மண்ணில் முளைத்து விண் நோக்கி ஓயாது உன்னி எழும் உயிரின் ஆதி தீவிரத்தின் அடையாளமாக தேவதேவன் எப்போதுமே மரத்தைக் காண்கிறார். தோல்வியேயற்ற அதன் போராட்டம்; காற்றுடனும், ஒளியுடனும் அதன் உறவு. அதன் நிழல் கருணை……
வானத்தின் பிரதிநிதியாக மரணமற்ற ஒளிக்கடலில் நீந்துவது, அச்செய்தியுடன் மண்ணுக்கு வருவது அவரது பறவை.
இந்த மூன்று படிமங்களையும் மீண்டும், மீண்டும் வெவ்வேறு வகையில் மீட்டி தொடர்ந்து விரிவடையும் ஒரு வாழ்க்கைத் தரிசனத்தை தேவதேவன் உருவாக்கிக் காட்டுகிறார். தமிழ் புதுக்கவிதையில் அதற்கு இணையான கவித்துவ முழுமை வேறு சாத்தியமானதேயில்லை.