தமிழகத்தில் இரும்பு
அன்புள்ள ஜெ
‘தமிழகத்தில் இரும்பு’ பற்றி கடலூர் சீனுவும் நீங்களும் எழுதிய குறிப்புகள் முதன்மையாக ‘தமிழகத்தில் இரும்பு காலகட்டம் எது, தமிழகத்தின் இடம் என்ன’ என்று நிறுவும் விவாதம் பற்றியது.
இதைப் பற்றி அரசியல்வாதிகளை விட துறைசார் வரலாற்றாய்வாளர்களே முன்னணியில் பேசவேண்டும் என்ற உங்கள் கருத்தையும் முழுதாக ஏற்கிறேன்.
இத்துறையில் ஆர்வம் கொண்ட வாசகனாக ஓரிரு கூடுதல் குறிப்புகள்:
1) சொல்லிலிருந்தே தொடங்கவேண்டும். Steelக்கு தென்னிந்தியாவில் பயன்படுத்தப்பட்ட சொற்களில் ‘உருக்கு’ என்ற தமிழ்ச்சொல் நேரடியான manufacturing பொருள் கொண்டது.
மற்ற இரும்புத் தொழில் மையங்களான மகிஷபுரி (மைசூர்) போன்ற இடங்களில் வழங்கப்பட்ட ‘உக்கு’ என்ற சொல் இதன் மருவிய வடிவமே
பழங்காலத்தில் உக்கு என்பது அராபியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதியாகி Wootz steel என்று அறியப்பட்டதும், அதுவே உலகில் முதல் தரம் என்று கருதப்பட்டதும் புகழ்பெற்ற வரலாறு
2) ஆய்வாளர் சாரதா ஸ்ரீனிவாசன், 1500க்கு பின் ஐரோப்பிய metallurgy துறை (& பொதுவாக materials science துறையுமே) நிகழ்த்திய பெரும்பாய்ச்சல்களுக்கு அவர்கள் இந்திய Wootz steel பற்றி மேலும் மேலும் அறிய முற்பட்டதே காரணம் என்கிறார். சிறில் ஸ்டேன்லி ஸ்மித் போன்ற metallography ஆய்வாளர்கள் இதை நிறுவியதை சுட்டிக்காட்டுகிறார்.
ஆனால் பொதுப்புரிதலில், கொடுமணல் உருக்கு, அலெக்ஸாந்தர் 3 டன் இந்திய ஸ்டீலை கொண்டு சென்றது, இந்திய உருக்கு வணிகம், அதை வைத்து டமாஸ்கஸில் கத்திகள் செய்யப்பட்டது என்பதெல்லாம் கூட ஓரளவுக்கு ஆர்வமுள்ளவர்களுக்கே தெரிகிறது
பாகுபலி படத்தில் மாகிஷ்மதி நாட்டில் அராபியன் வந்து பாக்தாத் சுரங்கத்தில் எடுக்கப்பட்டது என்று சொல்லி கத்தி விற்கிறான். ‘திருநெல்வேலிக்கு அல்வா’ அளவு சொதப்பல், ராஜமௌலி போன்றவர்களுக்கே தெரியவில்லை என்பது தான் உண்மை.
பழங்காலம் முதல் நவீன தொழில்நுட்பம் வரை, தமிழகத்தின் தென்னிந்தியாவின் தாக்கம் உள்ளதை நாம் பரவலாக அறியவில்லை. இது ஒரு முக்கியமான இடைவெளி என்று தோன்றுகிறது.
3) வெற்றுப் பழம்பெருமை பற்றி நீங்கள் சொல்வதும் உண்மை.
ஆனால் ‘உலகளாவிய தொழில்நுட்ப வளர்ச்சியில் நமது பங்கு உள்ளது’ என்ற பிரக்ஞை மேலும் ஈடுபாட்டையும் அறிவுக்கிளர்ச்சியையுமே வளர்க்கும் என்று கருதுகிறேன்
அமெரிக்கத் தொலைக்காட்சியில் ஆர்வக்கலையாக வீட்டிலேயே சிறியளவில் எஃகு வடித்து கருமார் பட்டறையில் கத்தி வாட்கள் செய்யும் போட்டி நிகழ்ச்சிகள் பிரபலம்.
அவர்களுக்கு அந்தத் தொழில்நுட்பம் இன்றும் வார இறுதியில் வேட்டைக்கு பயன்படும் கத்தியாக, போரிலும் தற்காப்பிலும் பயன்படும் கருவிகளாக நெருக்கமாக உள்ளது.
அவர்களது நவீன தொழில்நுட்ப பாய்ச்சல் வரலாற்றுப் பாடமாக பிரக்ஞையில் நிலைநிறுத்தப் படுகிறது
நமது சமூகத்திலோ கத்திகளும் வாட்களும் பண்பாட்டு & பயன்பாட்டு ரீதியாக அகன்றுகொண்டே இருக்கின்றன.
‘வரலாற்றில் நாம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தில் உலகில் சிறந்தவர்களாக இருந்தோம் ‘என்ற அறிவு இருந்தால், அது ஒரு பத்து சதவீதமாவது மீளும் என்பது என் நம்பிக்கை
நன்றி
மதுசூதனன் சம்பத்