விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது: வே.நி.சூர்யா
அன்புள்ள ஜெ
இளங்கவிஞர்களை நான் கவனித்துக்கொண்டே இருப்பவன். நான் ஒரு கவிஞனாக முயன்று தோற்றவன். பொதுவாக கவிதைவாசிப்பவர்கள் எல்லாருமே கவிஞர்களாக முடியாத கவிஞர்களும், கவிதை எழுதுபவர்களும்தான் என்பது என் அபிப்பிராயம். கவிஞர்களுக்கு ஒரு பரிணாமம் உண்டு. அவர்கள் ஏதோ ஒருவகை தனிமையில் இருந்துதான் எழுத ஆரம்பிக்கிறார்கள். தாளமுடியாத தனிமையில் ஆன்மிகமும் கலையும் இலக்கியமும் மட்டுமே துணையாக இருக்கின்றன.
கவிஞர்களின் தொடக்ககாலக் கவிதைகளிலுள்ள தனிமை பலவகையானது. நானெல்லாம் வாசிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் கவிஞர்கள் தங்கள் தனிமையை இருத்தலியல் சிக்கலாக முன்வைத்தார்கள். அல்லது காதல் சார்ந்த ஒன்றாக. பெரும்பாலான கவிதைகளில் காதலுக்கான ஏக்கம் இருக்கும். ஆனால் அது உண்மையில் தன் தனிமையை கலைத்துக்கொள்வதற்கான தவிப்புதான்.
நான் என்ன நினைக்கிறேன் என்றால் ஒரு கவிஞன் தன்னுடைய தனிமையை வேறெந்த புறக் கொள்கைகளின் உதவியில்லாமல் புரிந்துகொண்டான் என்றால் அவன் நல்ல கவிஞானாக ஆகமுடியும். அதை இருத்தலியல் அல்லது காதல் போன்ற டெம்ப்ளேட்டுகளுக்குள் கொண்டுசென்றால் அவன் புதியதாக பெரிதாக ஒன்றும் எழுதமுடியாது. அந்தத் தனிமையை அவன் எந்த வகையிலும் விளக்க முயலாமல் அப்படியே எழுதிக்கொண்டிருந்தால் மட்டும் போதுமானது. அதன் மேல் முட்டிக்கொண்டிருந்தாலே போதுமானது. அவன் தனக்கான படிமங்களைக் கண்டடைவான். கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கான கவிதை உருவாகி வரும்.
வே.நி.சூர்யாவின் கவிதைகளை இந்த ஆண்டு தமிழ்விக்கி வழியாகத்தான் நான் அடையாளம் கண்டுகொண்டேன். தொடர்ச்சியாக வாசித்தேன். நான் வெளிநாட்டிலிருப்பதனால் இணையத்தில் கிடைக்கும் கவிதைகளையே வாசிக்கிறேன். தன் தனிமையை மழுப்பிக்கொள்ளாமல் அந்தக் கூர்மையை நேருக்குநேராகச் சந்திக்கும் கலைஞர் என்ற மனப்பதிவை அடைந்தேன். அதனால் ஏராளமான புதிய வரிகளை வெ.நி.சூர்யா சென்றடைகிறார்.
என் வாசிப்பில் ஒரு முழுக்கவிதையும் முக்கியமல்ல. அது ஒரு தங்க நகைபோல. அதிலுள்ள ஒளிவிடும் கல்போல சில வரிகள் இருக்கும் அவைதான் எனக்கு முக்கியமானவை. அந்த வரிகளில்தான் கவிதை மெய்யாகவே துலங்கி வருகிறது.
புலி உறுமும் நீலமலையில் தொலைந்து போன
ஆட்டுக் குட்டி ஆகிவிடுகிறேன்
என்ற வரியில் இருந்து நான் நீண்டதூரம் சென்றுவிடுகிறேன். அங்கிருந்துகொண்டு அக்கவிதையை மீண்டும் வாசிக்கிறேன். அது கிளர்த்தும் உணர்வுகள் அபாரமானவை.
மீண்டும் மீண்டும் தனிமையில் தன்னை கண்டுகொள்ளும் ஓர் ஈதரிகலான அனுபவத்தை எழுத முயன்றுகொண்டிருக்கிறார். அவ்வரிசையில் மிகச்சிறந்த கவிதை
அந்திவானில் மகத்தான ரத்தத்துளி
அதன் ஒளிப்பரிவாரங்களோடு அஸ்தமனமாகிக் கொண்டிருக்கிறது
அனிச்சையாக நான் என்னை தொட்டுப்பார்க்கிறேன்
ஆ! காற்றைத் தொடுவதுபோல அல்லவா உள்ளது
தொடுகையுமில்லை தொடப்படுவதுமில்லை
வேறெதுவோ நான்…
அந்த வேறெதுவோ ஒன்றை நோக்கி நகர்வதுதான் கவிதை. கண்ணாடியில் நீர்த்துளிகள் வழிவதுபோல. தயங்கித் தயங்கி வழிந்து சட்டென்று ஒன்றையொன்று கண்டுகொண்டு ஒன்றாகி விரைந்து சொட்டிவிடுகின்றன
வாழ்த்துக்கள்
மா.கிருஷ்ணகுமார்