அன்னா வெல்வாரா?

ஜெ,

உண்மையைச் சொல்லுங்கள் அண்ணா ஹசாரே போராட்டம் என்ன ஆகும்? அது வெற்றி பெறுமா?

சக்திவேல்

அன்புள்ள சக்திவேல்,

அது ஏற்கனவே வெற்றிபெற்றுவிட்டது. அதன் நோக்கம் இந்தியா முழுக்க ஊழலை மையப்பிரச்சினையாக ஆக்கி ஒரு பெரும் விழிப்புணர்வை உருவாக்குவது. அது நிகழ்ந்துவிட்டது. அத்தனை ஊழல் அரசியல்வாதிகளும் வாய்மூடி பம்மிக்கிடப்பதே சான்று. அதன் பயன்கள் நம் சமூக வாழ்வில், அரசியலில் மெல்ல மெல்லவே தெரியவரும்

நடைமுறையில் எந்த காந்தியப்போராட்டமும் சமரசமாகவே முடியும். அண்ணா ஒரு பகுதியை விட்டுக்கொடுப்பார். அரசு ஒரு பகுதியை விட்டுக்கொடுக்கும். லோக்பால் பில் இன்னும் கொஞ்சம் மேம்பட்ட நிலையில் பாராளுமன்றத்துக்கு வரலாம்

அல்லது இன்னும் அதை மேம்படுத்துவதற்காக அண்ணாவிடம் அரசு கால அவகாசம் கோர அதை அவர் அளிக்கலாம். எப்படியும் ஒரு சமரசப்புள்ளி மட்டுமே சாத்தியம். இருதரப்பும் இறங்கிவந்தாகவேண்டும்.

காந்தியப்போராட்டம் என்றால் அது மீண்டும் இன்னொரு வகையில் நீளும். அடுத்த கட்டம் நோக்கி நகரும். இறுதி இலக்கு அரசு மீதான மக்கள் கண்காணிப்பு என்பதனால் அதை அடையும்வரை அது தொடர்ந்து நடக்கும். பல வருடங்கள்.

காந்தியின் எல்லாப் போராட்டங்களும் அப்படித்தான் நடந்தன.முடிந்தன. வென்றன

ஜெ.

ஜெ,

அண்ணா ஹசாரே போராட்டம் வெற்றி நோக்கிச் செல்கிறதென நினைக்கிறீர்களா?

சிவராஜ்

சிவராஜ்,

ஆரம்பத்தில் கொஞ்சம் சாதாரணமாக எண்ணிய காங்கிரஸ் இப்போது வலுவாகத் திருப்பி அடிக்கிறது. அண்ணா ஆதரவாளர்கள் இணையத்தை பயன்படுத்தினர், தன்னிச்சையாக. இப்போது காங்கிரஸ் நிபுணர்களை அமர்த்தி இணையத்தை அவருக்கு எதிராகப் பயன்படுத்துகிறது. எனக்குக் கூட்டு மின்னஞ்சல்கள் குவிகின்றன. ஜனநாயகத்தைப்பற்றிய ஆழ்ந்த கவலையுடன். ஊழல் அல்ல ஜனநாயகமே பெரிய பிரச்சினை என்கின்றன.

ஊடகங்களுக்கு வேண்டியது கொடுக்கப்பட்டு இப்போது அவற்றின் திசை மாற்றப்பட்டுள்ளது. ‘அறிவுஜீவிகள்’ கொத்துக்கொத்தாகக் களமிறக்கப்பட்டுள்ளனர். மக்கள் கருத்தை இவர்கள் திசைமாற்றம்செய்கிறார்கள்

இந்த முயற்சிகளை வென்று அண்ணா இயக்கம் எந்த தொலைவுவரை செல்லும் என்பதை நடைமுறையில்தான் காணவேண்டும். எந்த அளவு சென்றாலும் அது தோல்வி அல்ல. அதன் இலக்கு ஊழலுக்கெதிரான மக்கள் மனநிலை மாற்றமே. அதை அது நிகழ்த்திவிட்டது. வெற்றியின் அளவு போராட்டம் நீடிக்கும் வேகத்தைப் பொறுத்தது

ஜெ

அண்ணா ஹசாரேவின் அரசியல்

அண்ணா ஹசாரே மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?

அண்ணா எதிர்வினைகள்

அண்ணா ஹசாரே,ஞாநி,சோ

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2

அண்ணா ஹசாரே கடிதங்கள்..

அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…

அண்ணா ஹசாரே,வசைகள்

அண்ணா ஹசாரே-2

அண்ணா ஹசாரே-1