அண்ணா ஹசாரே- ஜனநாயகக் கேள்விகள்

இவர்கள் சொல்கிற ஜன்லோக்பால் உண்மையிலேயே சக்தி வாய்ந்ததுதானா?அது பாராளுமன்றத்துக்கு வெளியே ஒரு கடுமதிகாரசக்தியாக உருவெடுக்கும் என சிலரின் ஐயத்தில் நானும் சேர்ந்துகொள்கிறேன்.குறுக்குவழியில் புதிய தலைவீங்கி தலைவர்கள், தலைவலிகளை உருவாக்கும் அமைப்பாக இது மாறிவிடாதா?

போகன்

அன்புள்ள போகன்

இதே கேள்வியை எத்தனையோ முறை எத்தனையோ விதங்களில் சந்தித்திருக்கிறேன். முக்கியமாக எண்பதுகளில் சுற்றுச்சூழல் சார்ந்த மக்களியக்கங்கள் உருவாகி வந்தபோது இந்தக் கேள்வி இப்படியே கேட்கப்பட்டது. ‘இந்த அமைப்புகளை நடத்தும் குழுக்கள் அரசு நிறுவனங்கள், அரசியல்வாதிகள் மேல் அதிகாரம்செலுத்தும் தனியார் குழுக்களாக வளர்ந்து நம் நாட்டு ஜனநாயகத்தையே அழித்துவிடும்’ என. அன்றைய ஊழல் மிக்க அரசியல்வாதியான நந்தினி சத்பதியும் நேர்மையான அரசியல்வாதியான ஈ.கே.நாயனாரும் இதே கேள்வியை எழுப்பினார்கள். மேலோட்டமான பார்வைக்கு உண்மைபோலவும் தோன்றும்.

ஆனால் இந்திய ஜனநாயக அமைப்பில் அவை ஒரு அதிகாரச்சமநிலையை மட்டுமே உருவாக்கமுடியும் என்றும், ஒருபோதும் ஒரு ஒற்றையதிகாரச் சக்தியாக ஆகமுடியாதென்றும் அன்று கொஞ்சம் மூளை தெளிந்தவர்கள் வாதிட்டார்கள் -குறிப்பாக மறைந்த டாக்டர் சிவராமகாரந்த். அதுவே இன்றுவரை உண்மையாக உள்ளது. இந்தியாவின் சூழியல் அழிவுகளைத் தடுப்பதில் முதன்மையான ஆக்க சக்தியாக இருப்பவை இந்த மக்கள் குழுக்களே. அவற்றில்செயல்படும் பொதுநல ஊழியர்களே. அவர்களில்லாவிட்டால் அரசும் அதிகாரிகளும் சேர்ந்துகொண்டு நாட்டை இதற்குள் பாலையாக்கியிருப்பார்கள்.

சூழியல்குழுக்கள் அரசு அதிகாரிகளையும் அரசு நிறுவனங்களையும் மிரட்டுகின்றன என்று எப்போதும் புகார் செய்யப்படுகிறது, பெரும்பாலும் சூழியலை அழிப்பவர்களால். சுத்திகரிக்கப்படாத நீரை திருட்டுத்தனமாக ஆற்றிவில் விடும் திருப்பூர் சாய ஆலை அதிபர்களும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சொல்வார்கள். ஆனால் அப்படி ஒரு இணையதிகார தரப்பு, அரசநிர்வாக தரப்புக்கு வெளியே உள்ள அதிகாரத்தரப்பு, இல்லாவிட்டால் இவர்களை மக்கள் எவ்வகையிலும் கட்டுப்படுத்த முடியாதென்பதே உண்மை.

மனித உரிமைகள், பெண்ணுரிமைகள் என எல்லாத் தளங்களிலும் இந்த மக்கள்பங்கேற்பு, பொதுநல ஊழியர் பங்கேற்பு வெற்றிகரமான விளைவுகளையே உருவாக்கியிருக்கிறது. ஆகவேதான் அது ஊழல் ஒழிப்பிலும் கோரப்படுகிறது.

என்ன பிரச்சினை என்றால் நம்மவர்களுக்கு இந்தத் தளங்களில் இதுவரை நடந்தவை, அடையப்பெற்றவை எவையுமே தெரியாது. அண்ணா ஹசாரே போராட்டமே அவர்கள் கவனத்துக்கு வந்த முதல் விஷயம். ஆகவே ஒரு புதிய ஆச்சரியத்துடன் புதிய குழப்பங்களுடன் ‘என்னது இது , ஜனநாயக விரோதம் இல்லியோ? அதான் அரசாங்கமும் எலெக்‌ஷனும் எல்லாம் இருக்கே’ என்கிறார்கள்

ஜெ

ஜெ,

அண்ணா ஹசாரேயின் கூட்டத்துக்கு வருபவர்கள் எல்லாரும் நடுத்தரவர்க்கத்து கும்பல், மக்களே அல்ல என்று சொல்லப்படுகிறதே. உங்கள் கருத்து என்ன?

சிவராஜ்

சிவராஜ்,

இதற்கு ஏறத்தாழ எல்லாருமே பதில் சொல்லிவிட்டார்கள். இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்கவே இன்றுவரை நடந்த எல்லாப் போராட்டங்களிலும் முதன்மையாக முன்னிற்பவர்கள் நடுத்தர வர்க்கத்தினரே. மார்க்ஸியக் கோட்பாடே அப்படித்தான் சொல்கிறது – வேறு சொற்களில்.

நடுத்தர வர்க்கத்துக்கு மட்டுமே அன்றாடப்பிரச்சினைகளுக்கு அப்பால் கவனம்செலவிட்டு சமகால அரசியலை அவதானிக்கவும் புரிந்துகொள்ளவும் முடியும். அவர்கள் மட்டுமே போதிய அளவுக்கு கல்வி கற்றவர்கள். அவர்களே போதிய அளவுக்கு ஊடகத்தொடர்பு கொண்டவர்கள்.

இந்தியாவில் இதுவரை நிகழ்ந்த எல்லா மக்களியக்கங்களும் நடுத்தர வர்க்கத்தவர்களால் நடத்தப்பட்டவை. காந்தியப் போராட்டங்களில் முன்னின்றவர்கள் அவர்களே. கம்யூனிஸ்டுப்போராட்டங்களை முன்னெடுத்தவர்களும் அவர்களே. அறுபதுகளின் இடதுசாரித் தீவிரவாதத்தை முன்னெடுத்தவர்களும் வங்காளத்து படித்த நடுத்தர வர்க்க இளைஞர்கள்தான். எண்பதுகளில் தலித் இயக்கமும் படித்த நடுத்தரவர்க்க தலித் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டதே.

அவ்வாறு நடுத்தர வர்க்கம் முன்னெடுக்கும் போராட்டங்களில் அவை வேகம் கொண்டபின்னரே அடித்தள மக்கள் கலந்துகொள்வார்கள். இதற்கும் அனேகமாக விதிவிலக்குகளே கிடையாது. அவ்வாறு அடித்தள மக்கள் கலந்துகொள்ளும்போது கூட பெரும்பாலும் கட்டுப்பாடு நடுத்தரவர்க்கம் கையிலேயே இருக்கும் என்பதையும் நாம் உலக வரலாற்றிலே காண்கிறோம். நடுத்தர வர்க்கமே அந்தப் போராட்டத்தை கட்டுப்படுத்தும் சக்தியாக இருப்பார்கள், அடித்தள வர்க்கம் கொந்தளிப்பானதாகவும் கட்டற்றதாகவும் இருக்கும்.

ஆனால் போராட்டம் கொஞ்சநாள் நீளும் என்றால் தாக்குப்பிடிப்பது அடித்தள வர்க்கமாகவே இருக்கும். நடுத்தர வர்க்கம் எளிதில் நம்பிக்கையிழக்கும். எளிதில் மனத்திரிபு அடையும். அதையும் நாம் காந்தியின் போராட்டங்களில் பல முறை பார்த்திருக்கிறோம்.

ஒரு சாதாரண தொழிற்சங்க போராட்டத்திலேயே வெள்ளைச்சட்டை ஊழியர்களே அதை முன்னெடுக்கமுடியும் என்பதையும் நீலச்சட்டை ஊழியர்கள் பின்னர்தான் கலந்துகொள்வார்கள் என்பதையும் ஆனால் கலந்துகொண்டபின் தாக்குப்பிடிப்பார்கள் என்பதையும் அடிப்படை விதியாகவே சொல்வார்கள்.

இடதுசாரிக்குழுக்கள் எப்போதுமே படித்த நடுத்தரவர்க்கத்தால் முழுக்க கட்டுப்படுத்தப்படுபவை. ஆனால் தங்கள் போராட்டங்களை அவர்கள் மக்கள் போராட்டம் என்பார்கள். பிறவற்றை நடுத்தர வர்க்கப் போராட்டம் என்பார்கள்.

இதற்கும் முன்னால் சொன்ன பதில்தான். இதையெல்லாம் பேசும் பலர் முதல்முறையாக ஒரு மக்கள் போராட்டத்தை, அல்லது ஒரு போராட்டத்தை, கவனிக்கிறார்கள். அதனால் எழும் அபத்தமான பேச்சுகள் இவை.

ஜெ

ஜெ,

உங்கள் விவாதங்களை கவனித்து வருகிறேன். என்னுடைய ஒரே கேள்வி இது ஒருவகை ஜனநாயக விரோத நடவடிக்கை இல்லையா? எப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் மிரட்டமுடியும்? அரசியல் பிரச்சினைகளை தெருவுக்கு கொண்டுவரலாமா?

சக்திவேல்

அன்புள்ள சக்திவேல்,

இந்தக் கேள்வியை நான் முதல்முறையாகச் சந்தித்தது எண்பதுகளின் தொடக்கத்தில் கேரளத்தில் சைலண்ட்வேலியை அழிக்கக்கூடாதென சூழியல் இயக்கங்கள் போராடியபோது. அன்று ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒரே குரலில் பேசின. நாளிதழ்கள் ‘வளர்ச்சிக்காக’ பக்கங்களை ஒதுக்கின.

அதை எதிர்த்து சூழியல் இயக்கங்கள் தெருவுக்குத்தான் வந்தன. அவற்றைக் கலாச்சாரவாதிகள்தான் முன்னெடுத்தனர். அவர்கள் எவருமே தேர்தலில் ஜெயித்தவர்கள் அல்ல. உண்ணாவிரதம் சத்தியாக்கிரகம் மூலம் தான் சைலண்ட்வேலிக்காக போராட்டம் நிகழ்த்தப்பட்டது. நானும் அவற்றில் பல்லாயிரம் பேரில் ஒருவராக கலந்துகொண்டேன். அவற்றையும் காந்தியர்களே தலைமை தாங்கினர்.

அந்தப் போராட்டாங்களையும் இதே வார்த்தைகளில்தான் அவமதித்தனர் – ஜனநாயக விரோதம் என. அடுத்த தேர்தலில் இதைப் பேசலாமே, தேவையென்றால் இவர்களே தேர்தலில் நிற்கலாமே என. ஆனால் அந்தப்போர் மூலமே கேரள வனங்கள் காப்பாற்றப்பட்டன

இலக்கியவாதியும் சமூக ஆர்வலரும் காந்தியருமாகிய டாக்டர் சிவராம காரந்த் சூழியல் சம்பந்தமாக நூற்றுக்கும் மேலான வழக்குகளை கர்நாடக அரசுமேல் தொடுத்திருந்தார்.பல இடங்களில் தனிநபர் போராட்டங்களை நடத்தினார். அவரை குண்டுராவ், பங்காரப்பா போன்ற ஊழல் அரசியல்வாதிகள் அரசாங்கத்துக்கும் மேலான அரசாக செயல்படுகிறார் என வசைபாடினார்கள். ஆனால் காரந்தின் நோக்கம் சூழியல் காப்பு மட்டுமே. அவர் இல்லையேல் கர்நாடகம் அழிந்திருக்கும்.

அரசியலமைப்புச்சட்டத்தின் ஜனநாயகம்,மக்களுக்கு ஐந்துவருடங்களுக்கு ஒருமுறை ஓட்டு போடும் உரிமையை மட்டுமே அளிக்கிறது. அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை தன் கோரிக்கைகளுக்காக வலியுறுத்த மக்களுக்குக் காந்தியவழிகளே உண்மையான போராட்டமுறைகளாக உள்ளன.

நடைமுறையில் எல்லா தரப்புமே அப்படி அரசை தங்கள் கோரிக்கைகளுக்காக வலியுறுத்தியபடியே உள்ளன. தொழிற்சங்கங்கள், பல்வேறு கூட்டமைப்புகள். ஆனால் அதெல்லாம் நம் அறிவுஜீவிகளுக்கு ஜனநாயக விரோதமாகத் தெரியவில்லை. ஏன், இவர்களுக்கு சாதியப்போராட்டக்குழுக்கள் ரயிலை மறிப்பதுகூட ஆதரிக்கப்படும் ஜனநாயக நடவடிக்கைகளாக தெரிகிறது. அந்த சாதியக்குழுக்களின் சிலர் ‘மக்கள்’ ஆக தெரிகிறார்கள். ஊழலுக்கு எதிராக ஒரு சில லட்சம்பேர் உண்ணாவிரதம் இருந்தால் அது ஜனநாயகமறுப்பாகப் படுகிறது.

ஜெ

அண்ணா வெல்வாரா?

அண்ணா ஹசாரேவின் அரசியல்

அண்ணா ஹசாரே மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?

அண்ணா எதிர்வினைகள்

அண்ணா ஹசாரே,ஞாநி,சோ

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2

அண்ணா ஹசாரே கடிதங்கள்..

அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…

அண்ணா ஹசாரே,வசைகள்

அண்ணா ஹசாரே-2

அண்ணா ஹசாரே-1

முந்தைய கட்டுரைஅன்னா வெல்வாரா?
அடுத்த கட்டுரைஅண்ணா ஹசாரே- ஒரு கடிதம்