ஆயுர்வேதத்தின் தேவை என்ன?

அன்புள்ள ஜெ

ஆயுர்வேதப் பயிற்சி பற்றிய செய்தியை உங்கள் தளத்தில் கண்டேன். என்னுடைய சந்தேகத்தை கேட்கலாம் என நினைக்கிறேன். ஆயுர்வேதம் என்பது நீண்டகாலம் குருகுல முறைப்படி கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று. கல்லூரியிலேயே பல ஆண்டுகாலம் கற்பிக்கிறார்கள். அதை ஓரிரு நாட்களில் புரியவைக்க முடியுமா? அந்தக் கலையை அப்படி அறிந்துகொள்வதனால் என்ன நன்மை?

செந்தில் ராஜபதி

 

அன்புள்ள செந்தில்

இந்த முகாம் ஆயுர்வேத மருத்துவம் செய்யக் கற்பிக்கும் நோக்கம் கொண்டது அல்ல. ஆயுர்வேதத்தை பொதுமக்களாக, அதன் பயன்படுத்திக்கொள்பவராக நின்று அறிமுகம் செய்துகொள்ளவைக்கும் ஒரு முகாம் இது. எந்த மருத்துவத்தையும் எளிதில் கற்கமுடியாது.

இந்த முகாமின் நோக்கங்கள் இவை.

அ.  மருத்துவத்தின் இயல்பை, அடிப்படைகளை நோயாளிகள் அறிந்திருக்கவேண்டும். ஒரு மருத்துவ முறை எதற்கு நல்லது, அது என்ன செய்யும் அல்லது செய்யாது என்று தெரிந்து அதை அணுகவேண்டும். மருத்துவம் பற்றிய மிகையான நம்பிக்கையும் கூடாது, அவநம்பிக்கையும் கூடாது. இது அந்த அறிமுகத்தை அளிக்கும் பயிற்சி.

ஆ. நோய் ஏதும் இல்லாதவர்களும் மருத்துவ முறைகளை அறிமுகம் செய்துகொண்டிருக்கவேண்டும். மருத்துவத்தின் அடிப்படைகள் நலவாழ்வை, அடிப்படை நெறிகளை கற்பிப்பவை. அது அனைவருக்கும் உதவியானதே. நமக்கு மருத்துவச் செய்திகள் செவிவழியாக வந்துகொண்டே இருக்கின்றன. நம்மால் அவற்றை தவிர்க்கவே முடியாது. அவற்றை நாம் சரியாக கவனிப்பதில்லை. ஆகவே அரைகுறையாக நம் நினைவில் அவை நீடிக்கின்றன. விளைவாக நம்மிடம் பலவகையான பிழையான புரிதல்கள், பிரமைகள், அச்சங்கள் இருக்கின்றன. அவை நம் நலவாழ்க்கைக்கு ஊறு செய்கின்றன. மருத்துவத்தை அறிமுகம் செய்துகொள்வதென்பது சட்டென்று ஒரு தெளிவை அளிக்கும். நம் புரிதல்கள் பல எவ்வளவு அபத்தமானவை என திகைப்புடன் தெரிந்துகொள்வோம்

இ. நவீன மருத்துவம் உடற்கூறியல், நோய், சிகிழ்ச்சை ஆகியவற்றைப் பற்றி மிக அறிவியல்பூர்வமான புரிதலை அளிப்பது. ஆயுர்வேதம் இந்த மண்ணில் உருவாகி நெடுங்காலம் இங்கே இருப்பது. நம்முடைய பருவகாலம், நம்மைச்சுற்றியுள்ள சூழல், நம் தாவரங்கள், நம் உணவு ஆகியவற்றைப் பற்றி அதற்கு நவீன மருத்துவத்தை விட கூடுதலான சில புரிதல்கள் உண்டு. அத்துடன் நம்மை நம் உள்ளம், நம் உடல், நமது பாரம்பரியம் மூன்றையும் கருத்தில்கொண்டு அணுகுவது அது. ஆகவே அதன் வழிமுறை வேறுபட்டது. உடல்-மனம் சார்ந்த ஒரு சமநிலை அணுகுமுறையை அது முன்வைக்கிறது. அதை அறிவது நம் நலவாழ்க்கைக்கு அவசியமான ஒரு பார்வையை அளிக்கும்.ஆகவேதான் ஆயுர்வேத அறிமுக வகுப்புகள் நிகழ்கின்றன

ஜெ

மருத்துவர் சுனீல் கிருஷ்ணன் நடத்தும் ஆயுர்வேத வகுப்புகள்

வரும் மே 31 ஜூன் 1, 2 தேதிகளில் ஆயுர்வேத வகுப்புகள் நிகழும்

ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்.தொடர்புக்கு [email protected]

 

சிறில் அலெக்ஸ்  நடத்தும் பைபிள் வகுப்புகள் ஜூன்21 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நிகழும்

 

முந்தைய கட்டுரைஅழைப்பு – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகுருகு!