பிறந்துகொண்டே இருத்தல்…

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும்கூட எனக்கு பிறந்தநாள் முக்கியம் அல்ல. நினைவிலேயே இருப்பதில்லை. நான் முகநூலில் இல்லை என்பதனால் பொதுவாக எவரும் வாழ்த்தும் சொல்வதில்லை. சிலசமயம் அருண்மொழி நினைவில் வைத்துக்கொண்டு மதியம் வாக்கில் “ஆமா, இன்னிக்கு உனக்கு பர்த்டே இல்ல?” என்ற வகையில் ஆச்சரியப்படுவாள். கொண்டாட்டங்கள், பூஜைவழிபாடுகள் எவையும் எப்போதும் வழக்கமில்லை. இன்றும் தன்னந்தனியாக வீட்டில் இருக்கிறேன். முழுநேர வேதாந்தக் கல்வி. அதுதான் இந்த நாள். அனேகமாக எவரிடமும் எதுவும் பேசப்போவதில்லை.

2022ல் எனக்கு அறுபது வயதாகியது. அதை நண்பர்கள் கொண்டாடித்தள்ளினர். அதன்பின் நானே கொஞ்சம் ஜரூர் ஆகிவிட்டேன். இப்போது முன்னரே என் பிறந்தநாள் நினைவுக்கு வருகிறது. நான் எவரிடமும் சொல்வதில்லை, இப்போதும் எந்தக் கொண்டாட்டமும் இல்லை. இப்போது சிலர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுப்புவதுண்டு. பெரும்பாலும் நான் பதில் அனுப்புவதில்லை. அது ஒரு பெரும் சுமை. நான் பிறந்ததனால் இந்த நாள் ஒன்றும் எனக்கு முக்கியத்துவம் அடைவதில்லை. உண்மையில் எனக்கு எவர் பிறந்தநாளையும் நினைவில் கொண்டு கொண்டாடும் வழக்கம் இல்லை. காந்தியோ, நித்யசைதன்ய யதியோ, சுந்தர ராமசாமியோ, ஆற்றூர் ரவிவர்மாவோ, ஜெயகாந்தனோகூட… அவ்வாறான நினைவுக்கட்டுரைகளை இங்கே வெளியிடுவதுமில்லை.

இப்போது எனக்கு என் பிறந்தநாள் ஏன் எனக்கு சற்று முக்கியமென்றால் அது ஓர் அறிவிப்பாக தெரிகிறது. சென்ற நாற்பதாண்டுகளாகவே வாழ்க்கை மிகக்குறுகியது, வீணடிக்கப் பொழுதில்லை என்னும் எண்ணத்துடன் ஒவ்வொரு நாளும் வாழ்பவன் நான். சற்றுநேரம் பொருளின்றிச் சென்றால்கூட குற்றவுணர்வு அடைவேன். என் மேலேயே எரிச்சலடைவதுமுண்டு. இப்போது அந்த எச்சரிக்கை மேலும் தீவிரமடைந்துள்ளது. பிறந்தநாள் அளிக்கப்பட்ட நேரம் முடிகிறது என்பதற்கான அறிவிப்பு மணியோசை. முதல் மணி. அடுத்த மணி. ஒவ்வொரு மணியோசையும் மேலும் கூர்மையானது…

பொழுதை பயனுள்ளதாக்குவது என்று சொல்லும்போது நான் குறிப்பது  அதை பணமாக்குவது அல்லது உலகியல் பயன்பாடு கொண்டதாக ஆக்குவது அல்ல. நான் பொழுதைச் செலவிடுவதை என் அண்ணா பொழுதை வீணடிப்பது என்றுதான் அவ்வப்போது சொல்லிக் காட்டுகிறார். குறிப்பாக என் பயணங்களை. எந்த காரணமும் இல்லாமல் ஓர் ஊருக்குப் போய்  சுற்றிவிட்டு திரும்பி வருவதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. பணம்,நேரம் இரண்டுமே விரயம் என்பார். பலரும் அவ்வாறு எண்ணக்கூடும். எனக்கு அவையெல்லாம் பொன்செய் பொழுதுகள். பயன் என நான் சொல்வது மகிழ்ச்சியைத்தான்.

மகிழ்ச்சி இருவகையில். ஆற்றலை ஈட்டிக்கொள்வது, ஆற்றலைச் செலவழிப்பது. உடல் ஆற்றல், அறிவாற்றல், ஆன்மிக ஆற்றல் மூன்றும் ஈட்டப்படுகையில் மகிழ்வானவை. உண்ணுதல், கற்றல், ஊழ்கத்திலமைதல் மூன்றுமே இனியவை. அந்த ஆற்றல்களைச் செலவிடுவது மேலும் மகிழ்வானது. ஒரு மலை ஏறுகையில், விளையாடுகையில் உடல் ஆற்றலை வெளிப்படுத்தி தன்னை கொண்டாடுகிறது. ஒரு நூலை எழுதுகையில், உரையாற்றுகையில், அறிவியக்கத்தில் எவ்வண்ணமேனும் ஈடுபடுகையில் அகம் நிறைவுகொள்கிறது. இங்கு இவ்வண்ணமென திகழ்கையில் முழுமையை அறிகிறது நாம் ஊழ்கம் வழியாகத் திரட்டிய அகம்.

நான் அம்மூன்றிலும் ஒவ்வொரு நாளும் செலவிடப்படவேண்டும் என நினைப்பவன். பயணம் என்பது கற்றலும் சாகசமும் இணைகலந்தது. எல்லா வாசிப்பும், விவாதமும் கற்றலே. என் ஊழ்கம் எழுத்திலும் இயற்கையிலும் நிகழ்கிறது. அவை நிகழாநாட்கள் வாழாப்பொழுதுகளே. அத்தகைய நாட்கள் மிகமிக அரிதாகவே அமைகின்றன. ஆயினும் இன்று குறையுணர்வு கொள்கிறேன். இன்னும் தீவிரப்படுத்திக் கொள்ள வேண்டும். இன்னும் விசைகொள்ள வேண்டும்.  ஒரு துளியும் வீணாக்கிவிடலாகாது. இனி கணக்கு ஆண்டுகளில் அல்ல, நாட்களில்தான். எச்சரிக்கின்றன பிறந்தநாட்கள்.

பெரும்பாலான அறுபது கடந்தவர்களிடம் இருக்கும் ‘எண்ணியவற்றை இயற்றவில்லை’ என்னும் உளக்குறை எனக்கில்லை. அதன் விளைவான சோர்வையும் எரிச்சலையும் அரசியல் சார்ந்தோ அல்லது வேறேதும் நிலைபாடுகளைச் சார்ந்தோ பிறரிடம் கொட்டிக்கொண்டே இருப்பதுதான் இங்கே பெரும்பாலானவர்களின் நடுவயதுக்குப்பின்பான வாழ்க்கை. நான் என்னிடமே பெருமிதத்துடன் ‘ஆம், நான் வாழ்ந்தேன். எண்ணியவை இயற்றி வெற்றி மட்டுமே கண்ட வாழ்க்கை என்னுடையது’ என்று சொல்லிக்கொள்பவன். அந்த நிமிர்வு நம் சூழலில் ஆணவமென்றே தோன்றும். ஆனால் எங்கும் கழிவிரக்கமும், சலிப்பும் ,அவற்றின் விளைவான எதிர்மறை உணர்வுகளும் ஓங்கிய இச்சூழலில் ஒரு சில தலைகளேனும் அவ்வண்ணம் நிமிர்ந்து நின்றாகவேண்டும். அவை அடுத்த தலைமுறையின் கண்ணுக்குப் பட்டாகவேண்டும்

நான் இந்த நாற்பதாண்டுகளில் முழுப்படைப்புவிசையுடன் திகழ ஒவ்வொரு நாளும் முயன்றுகொண்டே இருந்திருக்கிறேன். அந்த வாசலில் அறைந்து அறைந்து அழைத்துக் கொண்டே இருந்திருக்கிறேன். எழுத முயலாத ஒருநாள் கூட இல்லை. மிக அரிதாகவே எழுத முடியாமலாகியிருக்கிறது. ஒவ்வொருநாளும் வாசித்துக்கொண்டும், தீவிரமாகக் கற்றுக்கொண்டும் இருந்திருக்கிறேன். மூளை சலித்து அமைய அனுமதித்ததே இல்லை. இந்த அறுபத்து மூன்றாவது அகவையில்கூட ஒரு நாளில் ஏழு மணிநேரம் வேதாந்த நூல்களை குறிப்புகள் எடுத்துக்கொண்டு, சொல்லெண்ணிப் படிக்கிறேன். படித்தவற்றைக் கற்பிக்கிறேன். இடைவிடாத பயணத்தில் இருக்கிறேன்.  

எழுதியவை குறித்து எனக்கு முழுநிறைவுதான்  உள்ளது. ‘என்னோட பெஸ்டை நான் இன்னும் எழுதலை’ என நவீன எழுத்தாளர்கள் சொல்லும் வழக்கமான வரியை நான் சொல்ல மாட்டேன். உலக இலக்கியத்தின் இயல்பறிந்த வாசகன், விமர்சகன் என்னும் நிலையிலேயே ஒன்று என்னால் சொல்லமுடியும்- எனக்கிணையான கலைத்திறன் கொண்ட எழுத்தாளர்கள் உலக இலக்கியப்பரப்பிலேயே அரிதானவர்கள். அதை உலகம் உணரவில்லை எனில் என் பிரச்சினை அல்ல. நான் எழுதநேர்ந்த தமிழ்ச்சூழலின் பண்பாட்டு எல்லை, இங்குளோரின் நுண்ணுணர்வின் எல்லை அது. அதை நான் எவ்வகையிலும் கருதலாகாது என சொல்லிக்கொண்டு எழுதவந்தவன் நான். சாதனை என தருக்கவில்லை. சாதனை என உணர்கிறேன். ஆனால் எழுதியவற்றை முடித்ததுமே முற்றிலும் கடந்து செல்லவும் என்னால் இயன்றுள்ளது. விஷ்ணுபுரம் முதல் வெண்முரசு வரை.

மிக இளமையில், 1992ல் ,என்னை அறிந்து, எனக்கு என் ஆசிரியர் ஆணையிட்ட செயல்களை முழுத்தீவிரத்துடன் செய்யத் தொடங்கினேன். என்மேல் கொண்ட நம்பிக்கையுடன். அவர்மேல் கொண்ட நம்பிக்கையுடன். அன்று என்னிடம் பணம் இல்லை, புகழும் இல்லை, நட்பு சுற்றம் என ஏதுமில்லை. எனினும் என் தீவிரம் அதற்கான பயனை அளித்தது. 1999ல் சொல்புதிது இதழின் முதல் இலக்கம் குரு நித்யாவின் படத்துடன் என் கைக்கு வந்தபோது அடைந்த அகஎழுச்சியை நினைவுகூர்கிறேன். ஓரிரு நாளில் அந்த விசை அடங்கி உருவான நிறைவை எண்ணிக்கொள்கிறேன். ஆம், இயலும் என அன்று எனக்கே சொல்லிக்கொண்டேன். அதன் பின் ஓரு மாதம்கூட இன்றுவரை இலக்கியச் செயல்பாடு இல்லாமல் கடந்து சென்றதில்லை. நான் கொண்ட இலக்கை நோக்கி ஓர் அடியாவது எடுத்து வைக்காமல் ஒரு நாளைக் கூட கடத்தியதில்லை. நாம் செய்யக்கூடுவது அது மட்டுமே.

இருபத்தைந்து ஆண்டுகளில் இது ஒரு நீண்ட பயணம். அன்று கொண்ட கனவுகளை விட பல மடங்கு அடைந்து  முன்னால் வந்துவிட்டேன். அடைய அடைய இலக்குகளை விரிவாக்கி வைத்தேன். கனவுகளை பெருக்கிக் கொண்டேன். குருநித்யா இலக்கிய அரங்கு 1992 ல் தொடங்கியது முதல்; பின்னர்  1999ல் சொல்புதிது இதழ் தொடக்கம் , 2009ல் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் தொடக்கம், 2022 ல் தமிழ்விக்கி,  இன்று முழுமையறிவு குரு நித்யா வகுப்புகள் வழியாக இன்றுவரை என் வழிமுறை இணைநெஞ்சத்தவரை ஒருங்கிணைத்து அவர்களைக் கொண்டு அனைத்தையும் செய்விப்பதுதான். பிறரை முன்வைப்பதுதான். ஒவ்வொரு செயலும் எணணியவாறே வெற்றியுடன் முன்செல்கின்றன.

செயல்விசையின் இயல்புகளில் ஒன்று ஒரு வகை தன்முனைப்பு. அது இன்றி செயல் நிகழாது. முழு ஆற்றலையும் ஒரு செயலுக்கெனக் குவிப்பதன் விளைவு. ‘முளைக்கும் விதையின் தன்னலம்’ என்று அதைச் சொல்வேன். தனக்குத் தேவையான அனைத்தையும் எல்லா இடங்களிலும் தேடிச்சென்று அது எடுத்துக் கொள்கிறது. தடைகளை தாண்டுகிறது. பயன்படாதவற்றை அக்கணமே தவிர்த்துவிடுகிறது. அதில் ஒரு சமரசமின்மை அல்லது இரக்கமின்மை உண்டு. ஆனால் வேறுவழியில்லை, செயல் என்பது அவ்வண்ணமே நிகழமுடியும். எது நம் இலக்கோ அதுவல்லது அனைத்தும் வீணே, அதற்கு தடையாக அமையும் எதுவும் தவிர்க்கப்பட வேண்டியவையே.

ஆகவே,அவநம்பிக்கையும் ஏளனமனநிலையும் கொண்டவர்கள், சோர்வுநிலை கொண்டவர்கள், எதிர்மனநிலையிலேயே இருப்பவர்கள், வம்பர்கள் என்னுடன் இருக்க நான் அனுமதிக்க இயலாது. அனுமதித்திருந்தால் இவற்றைச் செய்திருக்க முடியாது. அவர்கள் நோய்கொண்டவர்கள், அவர்களை அகற்றினால் மட்டுமே என் சூழலை நோயின்றிக் காக்க முடியும். செயலூக்கம் இல்லாதவர்கள், எல்லாவற்றிலும் சமாளிப்பவர்கள், மேலோட்டமான உளநிலைகளில் வாழ்பவர்கள் எனக்கு எரிச்சலூட்டுகிறார்கள்.

நான் செயலை, முழுச்செயலை, முழுமையடையும் செயலை மட்டுமே விழைகிறேன். அரசியல், சாதி, மதம், இனம் என தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு செயல்படுபவர்கள் எனக்கு பெருந்தடையாக ஆகக்கூடியவர்கள். அவர்களை விலக்கி விடுகிறேன். அந்த வழி செயற்களத்தில் நான் கற்றுக்கொண்டது. அந்தத் தன்முனைப்பு உருவாக்கும் வெற்றிகரமான விளைவால் அது நியாயப்படுத்தப் படுகிறது.

இந்த ஒவ்வொரு தொடக்கத்தின் போதும் எதிர்ப்புகளும், ஏளனங்களும், அவதூறுகளும் வந்து குவிந்துள்ளன. அவை இன்றைய இணைய வசதியால் இப்போதுகூட எவருக்கும் வாசிக்கவும் கிடைக்கின்றன. (ஆர்வமுள்ளவர்கள் தமிழ்விக்கி தொடக்கத்தின்போது வந்த வசைகளையும் எதிர்ப்புகளையும்  கவனிக்கலாம். எத்தனை விரைவாக அவை பொருளிழந்துவிட்டன என்று பார்க்கலாம். செயல் அடையும் வெற்றி ஒன்றே எந்த எதிர்மனநிலைக்கும் உரிய ஒரே பதில்) எச்செயலும் அந்த எதிர்விசையை சந்திக்கத்தான் வேண்டும் என எனக்குத் தெரியும். ஒரு செயலின் நேர்நிலை விசையை அதிகரிப்பதற்கான வாய்ப்பாகவே அதைக் கொள்ளவேண்டும். அவ்வாறே கொண்டிருக்கிறேன். இனியும் அவ்வாறே.

நான் பிறருக்குச் சொல்லிவரும் ஒரு சமநிலையை நான் எப்போதும் கடைப்பிடிக்க முயன்றுள்ளேன். என் உழைப்பை என் படைப்புகளுக்காகவும், என் செயல்திட்டங்களுக்காகவும் மட்டுமல்ல; என் தனிவாழ்க்கைக்காகவும் செலவிட்டிருக்கிறேன். என் குடும்பத்திற்காகச் செய்யவேண்டுவன அனைத்தையும் முழுமையுறச் செய்து வந்திருக்கிறேன். என் நண்பர்களின் எல்லா இடர்களிலும் உடனிருந்திருக்கிறேன். எழுத்தாளர்கள் என் சுற்றம் என்பதனால் இன்றுவரை என் அறிதலுக்கு வந்த எந்த ஒரு எழுத்தாளனின் துயரிலும் உடன்நிற்காமல் இருந்ததில்லை. தனிவாழ்க்கையில்  இன்னும் சில கடமைகளே எஞ்சியுள்ளன. கடமைகளைச் செய்வது என்பது அப்பொறுப்புகளில் இருந்து விடுபடுவதுதான்.

இந்த பிறந்தநாளில் இனிய கனவுகளாக எஞ்சியுள்ளன சில. அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டேன். குறிப்பாக சில உலகப் பயணங்கள். எழுத எஞ்சியிருக்கும் சில நூல்கள். சில மெய்யியல் பணிகள். கூடவே ஓர் இனிய இடம். இந்நாட்களில் இமையமலை அடிவாரத்தில், பனிமலைகளைப் பார்க்கும்படியாக ஒரு சிற்றூரில் ஓர் இடம் வேண்டும் என்னும் கனவு வளர்ந்துகொண்டிருக்கிறது. டார்ஜிலீங் அருகே ஓர் இடம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

மீண்டுமொரு பிறந்தெழல்.

முந்தைய கட்டுரைநாராயண குரு
அடுத்த கட்டுரைவேண்டுவன- ரவிச்சந்திரன் குமார்