அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக படைப்பாளிகளுடன் இணைய நிகழ்வுகள் நடத்தத் தொடங்கிய காலகட்டத்தில், zoom-ல் மாதிரி நிகழ்வுகளும் நடத்துவோம். முதல் நிகழ்வில் கலந்துகொண்ட எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களில் ஆரம்பித்து, பிறகு கலந்துகொண்ட எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், அ.கா. பெருமாள் , தியடோர் பாஸ்கரன் , கி.ராஜ நாராயணன், இயக்குனர் மணி ரத்னம் என ஒவ்வொருவரிடமும், 10 அல்லது 15 நிமிடங்கள் நடந்த சோதனை ஓட்டத்தில் நமது நண்பர்கள் தக்க முன்னேற்பாடுடன் வந்து கலந்துகொள்வார்கள்..
கி.ரா அவர்களுடனான மாதிரி நிகழ்வை நண்பர் பழனி ஜோதி பாடி ஆரம்பித்து வைத்தார். பழனி ஜோதி பாடி முடித்ததும், கி.ரா. அவர்கள் “சுருதிப் பெட்டி இல்லாமல் பாடியிருக்கலாம். அப்பொழுதுதான் உங்கள் குரல் முழுமையாக ரசிகனை வந்தடையும்” என்றார். வாய்ப்பாட்டு ஆகட்டும், வாத்தியங்கள் ஆகட்டும் அதுஅதன் இசை கலப்படம் இல்லாமல் தன் காதுகளை வந்தடைய வேண்டும் என்று எப்பொழுதுமே கி.ரா. சொல்லிவந்திருக்கிறார். கி. ராஜ நாராயணன் இசை சம்பந்தமாக எழுதி பத்திரிகைகளில் வந்த கட்டுரைகளையும், அவர் கொடுத்த / செய்த நேர்முகங்களையும், கழனியூரான் தொகுத்து ‘சங்கீத நினைவலைகள்’ என்ற பெயரில் அன்னம் பதிப்பகத்தின் உதவியோடு 2016-ல் வெளியிட்டுள்ளார். குமுதம் நடத்திய நேர்முகத்தில் ஒரு கேள்விக்கான பதிலில் இப்படிக் கூறுகிறார். நாயனத்தை தூரத்திலிருந்து (மைக் இல்லாமல்) கேட்பதே ஒரு இன்பம் ( நம்மவன் குயிலுக்குக்கூட மைக் வேணும் என்பான்).
சங்கீதம் என்று வந்துவிட்டால் நான் பாமரன். சாஸ்திரிய, ஹிந்துஸ்தானி சங்கீதத்தை சினிமாப்பாடல்கள் அளவு ரசித்துக் கேட்பதில்லை. இதை என் குறையாக உங்களுடனான தனிப்பேச்சில் குறிப்பிடும்பொழுது, தொடர்ந்து கேட்பதே ஒரே வழி என்று கூறினீர்கள். கர்நாடக இசையை ரசித்துக் கேட்பதற்கு, கி.ரா. இந்த நூலில் மிகவும் ரசமான பதிலைக் கூறுகிறார். சுத்த சுயம்பான கர்நாடக இசை எப்போதும் நமது வீட்டில் – வீடுகளில் மெல்லிய ஓசையில் – ஊதுவத்தியிலிருந்து நறுமணப்புகை கசிந்துகொண்டு இருப்பதுபோல – வீடு நிறைந்துகொண்டே இருக்கவேண்டும். கேட்பதுதான் முதல். செவிச்செல்வமே பெரிது. கற்றலைவிட கேட்பதே நன்று. உயர்ந்த இசையைக் கேட்டுக் கொண்டே இருந்தாலே போதும். இசை ஞானம் வந்துவிடும்.
நான் பாடல்களை அதன் வரிகளுக்காக கேட்பேன். சாஸ்திரிய சங்கீதத்தை ரசிக்க இசைக்கும் காதுகொடுக்கவேண்டும். பாடுபவர் ஒரே வரியை மீண்டும் மீண்டும் பாடும்பொழுது மாற்றுவதை கவனிக்கவேண்டும் என்பதை கி.ரா. அவர்கள், ‘தமிழ் இசையில் வர்ணமெட்டுக்கள்’ என்ற கட்டுரையில் விளக்கம் கொடுக்கிறார். “சினிமாப் பாடல் போன்ற மெட்டுக்களுக்கு ஆவர்த்தனங்கள் கிடையாது. ஆவர்த்தனங்கள் என்பது பாடல் வரியை மீண்டும் மீண்டும் பாடுவது. அப்படி மீண்டும் பாடப்படும்போது முதலில் பாடியது போலவே அது இருந்தால் கொஞ்ச நாளைக்கு மட்டுமே கேட்கலாம்.”
கி.ரா–விற்கு இசைவித்வானாக ஆகவேண்டும் என்பதுதான் முதன்மை ஆசையாக இருந்துள்ளது. பால்யகால நண்பன் சக்திவேலுவின் சித்தப்பாவான குருமலை பொன்னுச்சாமி பிள்ளை அவர்களை குடும்பத்துடன் வரவழைத்து, வாடகை வீட்டில் தங்க வைத்து, முறையாக இசை பயின்றுள்ளார். எங்களுக்குத் தெரிந்து நீங்களும் யுவனும் அவன் இவன் என்று ஒருமையில் பேசிக்கொள்கிறீர்கள். அப்படி கி.ரா ஒருமையில் பேசும் கு.அழகிரிசாமியும் இணைந்து இசை பயில்கிறார்கள். சக்திவேல் தாத்தா முத்தையாப் புலவரின் மூன்றாவது பெண்ணை மணந்துகொண்ட காருகுறிச்சி இடைச்செவலுக்கு வந்து போக இருக்கிறார். காருகுறிச்சியின் குரு ராஜரத்தினமும் வருகிறார். நண்பன் சக்திவேல் ராஜரத்தினம் அவர்கள் வீட்டில் வேலைக்குச் செல்கிறார். அவர் மூலம் கி.ரா. அறிந்துகொண்ட ராஜரத்தினம் நாதஸ்வரத்தின் சீவாளி தயாரிப்பதற்காக எடுத்துக்கொண்ட கவனத்தை, “அழிந்துபோன நந்தவனம்” என்ற கட்டுரையில் விரிவாக சொல்கிறார். ராஜரத்தினம் தோடி ராக ஆலாபனை இசைத்தட்டில் முதலில் வந்தபோது கர்நாடக இசை உலகமே வியந்ததாம்.
கி.ரா–வின் எழுத்தில் அந்தக்கால இசைக்கலைஞர்களை நம் கண்முன்னால் காணமுடிகிறது. காருகுறிச்சி பெண்களே ஆசைப்படும்படியான கூந்தல் தலைமுடி வைத்திருந்திருக்கிறார். அதைச் சிக்கல் எடுத்துக்கொண்டேதான் ராக ஆலாபனை செய்வாராம். பவுடர் பூசிக்கொள்வது, கடுக்கன், மோதிரங்கள், சங்கிலியை துடைத்துப்போட்டுக்கொள்வது என காருக்குறிச்சி அலங்கரித்துக்கொள்வதை கி.ரா–வும் நண்பர்களும் சலிக்காமல் பார்ப்பார்களாம். ஆகஸ்ட் 1973-ல் விளாத்திகுளம் சாமிகள் இறந்ததை ஒட்டி, சதங்கையில் எழுதிய “இசை மகா சமுத்திரம்” கட்டுரையில், சாமிகள் நல்ல கருப்பு நிறம், உயரமாக ஆஜானுபாகுவாக ஜம்மென்று இருப்பார் என்கிறார். தாடி கிடையாது. அடர்த்தியாக வெண்மீசை. கூர்மையான சிறிய கண்கள். விடைத்த மூக்கு. நீறுபூத்த நெற்றி, அகண்ட காதுகள், கனத்த உதடுகள் எடுப்பான நாடி. விரிந்த சுத்தமான மார்பு. ஒரு கௌபீனம். நாலரை முழம் வேட்டி. மேலே ஒரு பெரிய வடசேரி ஈரிளைத்துண்டு. மடியில் எப்பவும் சார்டின் துணியினால் தைக்கப்பட்ட சிறிய திருநீற்றுப்பை. கு. அழகிரிசாமி, விளாத்திகுளம் சாமிகளை முதல் முதலில் பார்த்துவிட்டு கம்பர் இப்படித்தான் இருந்திருப்பார் என்றாராம்.
உங்களுக்குப் பிடித்த ராகம் “ஆபேரி” என்று ஊரில் பேச்சு இருக்கிறது. சங்கீத நினைவலைகள் தொகுப்பில் உள்ள நேர்முகத்தில் கி.ரா–விற்குப் பிடித்த ராகம் என்ன என்ற கேள்விக்கு, சிறிய வயதிலிருந்தே அவருக்கு பிரதிமத்திம ராகங்களே பிடிக்கும் என்றும், மோகனத்தில் மத்திமம் கிடையாது என்றாலும், அதுவும் பிடிக்கும் என்கிறார். விளாத்திகுளம் சாமிகளுக்குப் பிடித்தமான ராகம் கரஹரப்பிரியா என்றும், அவர் பாட கி.ரா–விற்கு கேட்க பிடித்தது ஹிந்தோளம் என்று பதிவு செய்துள்ளார். கி.ரா, வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டியிடம் அவருக்குப் பிடித்த ராகங்கள் என்ன என்ற கேட்க, அவர் சங்கராபரணம், மோஹனம், கரகரப்பிரியா, புன்னாகவராளி, குறிஞ்சி, சுருட்டி என்கிறார்.
7.12.1996-ல் தமிழ் இசையில் வர்ணமெட்டுக்கள் என்ற கட்டுரை எழுதியுள்ளார். எந்தப் பத்திரிகையில் வந்தது என்று குறிப்பில்லை. இசைக் கருவிகளில் வாசிப்பதற்கென்றே வார்த்தைகள் அற்ற வர்ணமெட்டுக் கீர்த்தனங்களைப் படைக்கவேண்டும் என மூன்று கட்டளைகளை வகைப்படுத்துகிறார்.
- இருக்கிற சிறந்த பாடல்களுக்கு வர்ணமெட்டுகள் அமைப்பது.
- புதிதாக மேலும் பல தமிழிசைக் கீர்த்தனைகளை சிறந்த வர்ண மெட்டுகளோடு உண்டாக்குவது
- வார்த்தைகளற்ற வர்ணமெட்டுக் கீர்த்தனங்கள் படைப்பது.
இந்த மூன்றையும் ஒருவரே செய்தாலும் சரி. ஒவ்வொருத்தர் ஒவ்வொன்றையும் செய்தாலும் சரி என்று சொல்லிவிட்டு ஒருவரை முன்மொழியவும் செய்கிறார். அவர் – இசை ஞானி இளையராஜா.
வில்லிசையா வில்லடியா எது சரி என்று பிச்சைக்குட்டியிடம் கி.ரா அவர்களே செய்த நேர்முகம் ஒன்று இந்த நூலில் உள்ளது. தொகுப்பாளர் கழனியூரன், கி.ரா தன் வாழ்க்கையில் எடுத்த ஒரே பேட்டி என்று குறிப்பிட்டுள்ளார். பாரதி படைப்புகளில், பாஞ்சாலி சபதத்தை வில்லிசை நிகழ்ச்சியாக நடத்தியுள்ள பிச்சைக்குட்டி, வாசகர்களுக்கு அவர் கூற விரும்புவது என்ன என்ற கேள்விக்கு, “வாழ்வுக்கு வளம் தரும் நல்ல இலக்கியங்கள், கலைகள் எவை? வாழ்வில் நஞ்சூட்டும் நச்சுக் கலைகள், இலக்கியங்கள் எவை? என்பதை வாசகர்கள் நன்கு புரிந்துகொண்டிருப்பார்கள் அவர்களுடைய அனுபவங்களையும், கருத்துக்களையும் தம்மோடு வைத்துக்கொள்ளாமல் மற்றவர்களிடமும் அவற்றை எடுத்துச் செல்லும் திருப்பணியில் வாசகர்கள் ஈடுபடவேண்டும் என்பது எனது ஆசை” என்கிறார். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வாசக நண்பர்கள் அதைச் செய்கிறோம் என்று உளமாறச் சொல்லிக்கொள்கிறேன்.
அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்.