வாசித்தலின் வழித்துணைகள், கடிதம்

மரியாதைக்குரிய ஜெ அவர்களுக்கு 

தங்களின் சில கதைகளை முன்னமே நான் வாசித்திருந்தாலும் தற்சமயம் நான் எனது பணி நிமித்தம் மார்த்தாண்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக இருப்பதினால் தற்போது தங்களின் பல்வேறு கதைகளங்களையும் குறிப்பாக தங்களின் வார்த்தைகளையும் (அவை பழந்தமிழ் வார்த்தைகள் என்பதே இப்போது தான் எனக்கு புரிகிறது) என்னால் நேரடியாக புரிந்து கொள்ள முடிகிறது.நூறு நாற்காலி, சோற்று கணக்கு, வணங்கான், ஓலை சிலுவை etc.

அதிலும் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் பற்றி எழுதிய தங்களின் கதைகளை நான் அந்த காலத்தில் நேராக காண்பது போன்றே எனக்கு தோன்றுகிறது. ( தங்களது ஓர் கதையில் தாங்கள் குறிப்பிட்டதை போல ஏன் இத்தனை புராதானமான  வைணவ கோவிலில் ஒருவர் கூட நாமம் தரிக்க வில்லை என வியக்கிறேன்–  திருவட்டார் மட்டும் இல்லை திருவனந்தபுரம், கன்னியாகுமரி மாவட்டத்தில் எங்குமே காண இயலவில்லைஅதற்கு ஏதேனும் வரலாற்று ரீதியான காரணம் உண்டா என தங்களை தவிர வேறு எவரும் கூற இயலாது ).

வாசிப்பின் வழிகள் வாங்க

தற்போது தான் தங்களின் மன்மதன் சிறுகதையை வாசிக்க வாய்த்தது. அக்கதையில் வரும் கோவில் பெயர் என்ன? எங்கே உள்ளது என  தெரிந்தால் நானும் சென்று தரிசிக்க இயலும்….

மேலும் எனது நீண்ட நாள் மனக்குறை ஒன்று உண்டுவிஷ்ணுபுரம் ஏன் ஆரம்ப நிலை வாசகர்களுக்கானதாக இருக்கவில்லை அல்லது இந்து சமயம் சார்ந்த அறிவு இல்லாதவர்களுக்கு அது ஏன் புரிந்துகொள்ள இவ்வளவு கடினமாக உள்ளது.

அல்லது, விஷ்ணுபுரம் படிப்பதற்கு முன் இந்த புத்தகங்களை படித்தால் விஷ்ணுபுரம் நாவல் எளிதாக விளங்கும் என ஏதேனும் தாங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள் ??

(விஷ்ணுபுரம் நாவலை இதுவரை 4 முறை 400-500 பக்கங்கள் வரை படித்து அதற்கு மேல் அதன் உட்பொருள் புரியாமல் படிக்க அறிவு இடம் கொடாததால் முழுவதும் படிக்காமல் வைத்திருக்கிறேன்.)

தங்களின் பதிலை எதிர்நோக்கி

நன்றியுடன்

பாரதி கிருஷ்ணன்

 

இந்து மெய்மை வாங்க

அன்புள்ள பாரதி கிருஷ்ணன்,

நாமம் அணிபவர்கள் ராமானுஜர் உருவாக்கிய ஶ்ரீவைஷ்ணவம் எனப்படும் (ஶ்ரீமார்க்கம்) குறிப்பிட்ட வைணவநெறியைச் சேர்ந்தவர்கள். விசிஷ்டாத்வைதம் அவர்களின் மரபு. கேரளத்தில் அந்த மரபு இல்லை. தென்தமிழ்நாட்டில் திருக்கணங்குடிதான் ஶ்ரீவைஷ்ணவத்தின் எல்லை. அதற்கப்பால் கேரள வைணவம். அது முற்றிலும் வேறொன்று. தொன்மையான சங்ககாலம் முதல் தொடர்ந்து வளர்ந்து வருபவை அதன் வழிபாடும், முறைமைகளும்.

மன்மதன் கதையில் உள்ள ஆலயம் நேரடியாக, அப்படியே ஒரு கோயில் அல்ல. நாயக்கர் காலகட்ட தென்தமிழகக் கோயில்கள் அனைத்திற்குமே உரிய அமைப்புதான் அது. நான் அப்போது மனதில் வைத்திருந்த ஆலயம் திருநெல்வேலி ஶ்ரீவைகுண்டம்.

விஷ்ணுபுரம் நாவலின் அறிவுத்தளம் இந்திய மெய்ஞானத் தேடல் சார்ந்தது. வேதம், வேதாந்தம், பௌத்தம் ஆகியவை அதன் உலகம். இன்றைய நம் கல்விவாழ்க்கைச் சூழலில் நமக்கு தொடர்பே அற்றவையாக அவை உள்ளன. ஆனால் அவையே நம் மரபு. அந்த தொடர்பறுந்த நிலையால்தான் நம்மால் விஷ்ணுபுரத்தை வாசிக்க தடை உருவாகிறது

 

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் வாங்க

நான் எழுதிய இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள், இந்திய ஞானம் போன்ற நூல்கள் விஷ்ணுபுரம் நிகழும் அறிவுக்களத்தை அறிமுகம் செய்ய உதவுபவை.  

ஆனால் புனைவை வாசிக்க அவை முன்நிபந்தனை அல்ல. எவ்வளவு புரிகிறதோ அவ்வளவு போதும் என முழுமையாக முதலில் வாசித்து முடிப்பதே நல்ல வழி. முழுதாகப் படித்ததும் ஒரு சித்திரம் உருவாகும். பல கேள்விகளும் உருவாகும். அந்தக் கேள்விகளுக்குச் சில பதில்களை தேடி அறிந்தபடி அந்தச் சித்திரத்தை முழுமை செய்துகொள்ளலாம்

இன்றைய கூகிள் யுகத்தில் வாசிப்பு மேலும் எளிது. ஒரு தத்துவச் சொல், கலைச்சொல் புரியவில்லை என்றால் கூகிளில் பார்க்கலாம். விக்கிப்பீடியாவில் உள்ள எளிய அறிமுகக்குறிப்பே நாவலை மேலே வாசிக்க போதுமானது.

 விஷ்ணுபுரம் நாவல் வாங்க

விஷ்ணுபுரம் மின்னூல் வாங்க

அத்துடன் ஒன்றுண்டு. விஷ்ணுபுரம் மெய்யியல், வரலாறு, தத்துவம் ஆகியவற்றை வாழ்க்கையுடன் இணைத்துச் சொல்லும் காவியம் போன்ற ஆக்கம். அதை ஒரே மூச்சில் முழுமையாக வாசித்து முழுமையாகப் புரிந்துகொள்ளலாம் என எதிர்பார்க்கலாகாது.  அப்படிச் சொல்பவர்களுக்கும் ஒன்றும் தெரியாது. அதன் வழியாக நாம் இந்திய மெய்யியல் இந்திய வரலாறு மற்றும் இந்திய தத்துவ மரபையும் கற்றுக்கொள்கிறோம். இந்தியச் சிற்பவியல், காவிய அழகியல் ஆகியவற்றையும் கற்கிறோம். அது ஒரு தொடர் பயணம். ஒரு முழு கல்விமுறை அது. 

விஷ்ணுபுரத்தை முதலில் வாசிப்பது அந்த துறைகளுக்குள் செல்வதற்கான ஒரு தொடக்கம் மட்டுமே. அதன்பின் அந்தந்த அறிவுத்துறைகளை வாசிக்க வாசிக்க அந்நாவல் விரிந்துகொண்டே செல்லும். அவ்வாறு அறிய பல அறிவுத்துறைகள் அந்நாவலுக்கு வெளியே நம் பண்பாட்டில் உள்ளன. அவற்றைக் கற்பது வாழ்நாள் முழுக்க நீடிக்கும் ஒரு கல்வியாகவும் அமையும். அந்நாவலின் இடம் என்பது அந்த தொடக்கத்தை அளித்து கூடவே வந்துகொண்டிருக்கும் என்பதுதான்.

ஜெ 

காலன், அகாலன்

முந்தைய கட்டுரைமருபூமி, கடிதம்
அடுத்த கட்டுரைஇரும்பு, கடிதம்