திரு.வி.க – கடிதம்

திருவிக தமிழ் விக்கி

அன்புள்ள ஜெ,

நான் தமிழ் விக்கியில் திரு.வி.க பற்றிய பதிவை வாசித்தேன். உண்மையிலேயே வியந்துவிட்டேன். எவ்வளவு முழுமையான பதிவு. ஒரு முழுமையான வாழ்க்கை வரலாற்று நூலுக்குச் சமானமானது. அவ்வளவு செய்திகள். அவை அனைத்தும் வேறு நூல்களிலும் காணப்படும். ஆனால் அவற்றை தேடி எடுப்பது சாதாரணமான வேலை அல்ல. தமிழ் வாழ்க்கை வரலாற்று நூல்களில் உள்ள சம்பிரதாயமான பாராட்டுக்கள், நிகழ்வுகள், நினைவுகள் ஆகியவற்றை சலித்துச் சலித்து தகவல்களை எடுக்கவேண்டும். மேலும் இந்தப் பதிவில் தகவல்களை துணைத்தலைப்புகள், துணைத்தலைப்புக்குள் மேலும் துணைத்தலைப்புகள் என்று அமைத்திருக்கும் விதமும் அற்புதமானது. நினைவில் வைத்திருப்பதற்கும் ஏற்றது. இப்படி ஒரு பதிவை உருவாக்க எவ்வளவு அற்புதமான கூட்டு உழைப்பு தேவை என்ற எண்ணம் வியப்பை அளிக்கிறது. பல்கலைக்கழகங்களுக்குச் சமனாமான அறிவுப்பணி இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்ற எண்ணம் உருவாகிறது. நன்றி

க.ராஜரத்தினம்.

 

அன்புள்ள ஜெ

நான் ஆட்சிப்பணிக்கு படிப்பவன். தமிழ்விக்கி பதிவுகள் போல ஆட்சிப்பணிக் கல்விக்கு உதவும் இன்னொரு இணையதளமே இல்லை. எல்லா செய்திகளும் மிகச்சீராக தொகுத்து ஒரு வடிவத்திற்குள் அளிக்கப்பட்டுள்ளன. கீழே ஏராளமான சுட்டிகள் வழியாக மேலும் வாசிக்க வசதி உள்ளது. அதேசமயம் சுவாரசியமான தெளிந்த நடையில் முழுப்பதிவையும் படிக்கும்படி உள்ளது . திருவிக பற்றி நிறைய படித்துள்ளேன். ஆனால் இந்த பதிவில் அவருடைய எல்லா முகங்களும் உள்ளன. அவர் எந்தெந்த தளங்களிலெல்லாம் சாதனையாளராகத் திகழ்ந்தார் என்று பார்க்க முடிகிறது. அவருடைய தமிழ்ப்பணி இதழ்ப்பணி எல்லாமே ஒன்றுவிடாமல் உள்ளது. அவருடைய கல்வி பற்றிய பகுதியே தமிழ்க்கல்வி, சைவக்கல்வி, ஆங்கிலக்கல்வி என பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தொழிற்சங்க ஆர்வம் எப்படி வந்த்து என்று பார்க்கமுடிகிறது. அற்புதமான பதிவு. இதை எடுத்து யூடியூபில் பதிவுபோட்டு ஹிட் தேற்றிக்கொண்டிருக்கிறார்கள். நன்றி

ஆர்.சரவணக்குமார்

 

முந்தைய கட்டுரைதனிமையின் கண்கள்- எஸ்.ராமகிருஷ்ணன்
அடுத்த கட்டுரைகுகப்பிரியை