இமைக்காடும் கொன்றைநாளும்

ஆசிரியருக்கு வணக்கம்,

சுக்கிரி குழுமம் வாரம் தோறும் சனிக்கிழமை ஜூமில் கூடி சிறுகதை ஒன்றை விவாதம் செய்து வருகிறோம்.உலகெங்கிலிமிருந்து வாசகர்கள் கலந்துகொள்கிறார்கள். நான்காண்டுகள் நிறைவடைந்து ஐந்தாவது ஆண்டில் அடிவைக்கிறது சுக்கிரி உலகவாசிப்பு குழுமம்.

சித்திரை முதல் நாளான இன்று வெண்முரசின் ஒரு அத்தியாயத்தை அனைவரும் கூடி வாசிக்கலாம் எனும் திட்டமிடாத யோசனையை விஜயபாரதியும்ராஜேசும்  முன் வைக்க மெல்போர்னிலிருந்து கலா அவர்கள் ஆஸ்திரேலிய நேரப்படி நள்ளிரவில் உற்சாகமாக அதை முன் மொழிய வெண்முரசின் ஒரு அத்தியாத்தை தேர்வு செய்ய கலாவிடமே சொன்னார் லண்டன் ராஜேஷ்.

பதினைந்து நிமிட இடைவெளியில்  இமைக்கணம் ஒன்பதாவது அத்தியாயத்தை கூடி வாசிக்க அமெரிக்காவிலிருந்து அதிகாலை வேளையில் விசு, கணி கண்டபின் பழனி ஜோதிமகேஸ்வரி தம்பதியர் துவக்கி வைத்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பத்தி என வாசித்தோம்

அமெரிக்காவிலிருந்து சின்ன வள்ளுவர் செந்தில்,மதுனீகா லண்டன் ராஜேஷ்,மெல்போர்ன்கலா,துபாய்வள்ளியப்பன்,சுவிட்சர்லாந்து கணேஷ் மற்றும் தீபப்ரியா,மலேசியாபர்மித்தா இந்தியாவிலிருந்து விஜயபாரதி,முத்து கிருஷ்ணன்,ஷீலா,செல்ல பிரியதர்ஷினி, சக்திவேல்,மதுசூதனன் சம்பத்  கப்பல் சிங்கப்பூர் அருகே பயணித்துகொண்டிருந்த போது இணையம் இருந்ததால் நானும் இணைந்தேன் புத்தாண்டு தின வாசிப்பு துவக்கத்தில்.

  • விளைவினால் அல்ல வெறுப்பினால் அல்ல, செயலாற்றும் பொருட்டு இங்கு வந்திருக்கிறீர்கள்   என்பதனால் செயலாற்றுக. தசைகளில் உள்ளது தோளின் செயல்,கால்களில் உள்ளது நடத்தல்,பிறிதொன்ற்றுக்காக  அவை இங்கு எழவில்லை அவற்றிற்குரிய விசையை அளிப்பதே நம் உள்ளத்தின் அறம்.
  • இங்குள்ள ஒவ்வொரு பொருளும் தனக்கென ஒரு செயல்வழியும் இலக்கும் கொண்டுள்ளது. அதுவே அதன் தன்னறம் அதிலேயே அதன் முழுவிசையும் வெளிபடுகிறது.அதன் ஒவ்வொரு  அணுவும்  அப்போது மட்டுமே செயல்படுகிறது. அதை இயற்றுகையிலேயே நிறைவடைகிறது. நிறைவுக்கு மறுபெயர் மகிழ்வு 

மேலேயுள்ள இரு பத்திகளும் தனேக்கே சொல்வதுபோல் இருந்ததாக    முழு அத்தியாயத்தையும் வாசித்தபின் அனைவரும் கூறி மிக பொருத்தமான அத்தியாயத்தை இயல்பாக தேர்வு செய்த கலாவிற்கு நன்றி கூறினோம்.

சித்திரை முதல் நாளில் எங்களின் செயல் வெண்முரசின் இமைக்கணம் வாசிப்பு மூலம் துவங்கியது. அதை இயற்றி அனைவரும் நிறைவடைந்து மகிழ்ந்தோம்.

ஷாகுல் ஹமீது.

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு

கப்பல்காரன்

இமைக்கணம் நிகழ்ந்த இமைக்காட்டுக்குப் பதில் நான் எனக்குப் பிரியமான அழியாக் காட்டில் தவளைப்பெருங்கூச்சல் நடுவே இருந்தேன். பெருமழை ஒன்று வான் உடைபடும் ஒலியுடன் பொழிந்து புத்தாண்டை அழகுறச் செய்தது.

எங்கோ வெண்முரசு வாசிப்பவர்கள் அனைவருடனும் இன்னொரு வாசகனாக, அதே திகைப்புடனும் வியப்புடனும் நானும் அமர்ந்திருக்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைஇந்து மதம் அழிந்தால்தான் என்ன?
அடுத்த கட்டுரைநவீன மருத்துவம், கடிதம்