ஆசிரியருக்கு வணக்கம்,
காடு நாவலை 5 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறை வாசித்து முடித்த போது என்னவென்று புரியாத ஒரு அச்சம் மட்டுமே மனதில் எஞ்சி இருந்தது…
தற்பொழுது முடித்த மறுவாசிப்பிலும் இம்மி அளவும் குறையாமல், சொல்லப்போனால் பலமடங்கு அதிகமாகவும் மறுபடியும் அதே காரணமற்ற, புரிதலற்ற ஒரு அச்சமே எஞ்சியுள்ளது.
எந்த நாவலை படிக்கும் போதும் அதன் ஒவ்வொரு கதாபாத்திரத்துடனும் என்னை பொருத்திப் பார்த்து, அந்த பாத்திரங்கள் செய்வதனைத்தும் சொல்வதனைத்தும் நான் செய்பவைகளாக, சொல்பவைகளாகவே உருவகித்து கொள்வேன். அதில் என்னுடன் அல்லது என் விருப்பத்துடன் மிக நெருங்கும் கதாபாத்திரங்கள் அந்நாவல் முடிந்தபின்பும் என் வாழ்க்கையில் கலந்திருக்கும். என் வாழ்க்கையின் ஒவ்வொரு முடிவெடுக்கும் தருணங்களின் போதும் அப்பாத்திரங்களாகவே மாறி எனது செயலையும் சொல்லையும் வகுத்துக் கொள்வேன்.
அந்த வகையில் காடு வாசிப்பிற்கு பிறகு அந்த காடும், நீலியும் முற்றிலும் உதிர்ந்து போக கிரிதரனும், அய்யரும், குட்டப்பனும் காட்டில் இருந்து இறங்கி என்னுள் நுழைந்தவர்கள். கிரிதரன் எனது தற்போதைய நானாகவும், குட்டப்பன் நான் அடைவதற்கு விரும்பும் ஒரு லட்சிய நானாகவும், அய்யர் இருவருக்கும் இடைப்பட்டு எங்கோ ஓரிடத்திலும் என்னுள் உள்ளனர்.
முதல் வாசிப்பிலும், மறு வாசிப்பிலும் அடைந்த எனது அந்த அச்சத்தை அகழ்ந்து அகழ்ந்து ஒருகட்டத்தில் அதுவாகவே நான் மாறியபோது உணர்ந்த அதன் காரணம் கிரிதரனின் வீழ்ச்சி. ஏதோ ஒரு வகையில் அது நான் அடையப் போகும் வீழ்ச்சியின் குறியீடாக என் மனம் கண்டுகொண்டதின் விளைவே அந்த அச்சம்.
இந்த காட்டில் இலக்கியத்தை அறிந்தவர்கள் அல்லது அதன் அறிமுகத்தை அடைந்தவர்கள் இருவர் மட்டுமே. கிரிதரன் மற்றும் அய்யர். ஆனால் இருவருமே தாங்கள் எண்ணாத அல்லது உவப்பானதில்லை என்று ஒரு கட்டத்தில் தாங்கள் எண்ணியதையே இறுதியில் தங்கள் முடிவாக அடைந்தனர்.மறுபக்கம் குட்டப்பன் இலக்கியத்தை அறியாதவன். என்றேனும் ஒரு நாள் இலக்கியத்தை பற்றி யாரேனும் சொல்ல கேட்டால், அவனுக்கே உரிய பாணியில் நிச்சயம் அதை எள்ளி நகையாடி இருப்பான். குட்டப்பன் வாழும் கலையின் ஒரு மாஸ்டராகவே என் கண்ணில் தெரிகிறான். அனைத்தையும் அறிந்தவன், அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வுகளை அறிந்தவன்.
ஆனால் குட்டப்பன் அறிந்தவை அனைத்தும் அவன் வாழ்க்கையில் இருந்து அடைந்தவையே.. மாறாக கிரிதரனும், அய்யரும் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் இலக்கியத்தின் கண்ணாடி வழியாகவே பார்க்கின்றனர். என்னுடைய பார்வையில் குட்டப்பன், கிரிதரனை விட, அய்யரை விட அந்த காட்டை, அந்த வாழ்க்கையை தெளிவாக காண்கிறான்.வேழத்தின் காலடியில் நசுங்க விரும்பி, அதையே அடையும் அவனின் தேர்வு எந்த ஒரு ஞானியின் தெளிவுக்கும், எந்த ஒரு இலக்கியவாதியின் அறிவுக்கும் குறைவானதில்லை.
எனது சந்தேகமெல்லாம், கிரிதரனும், அய்யரும் இறுதியில் அடைந்தவற்றிற்கு எவ்வகையிலேனும் அவர்களது இலக்கிய அறிவு காரணமா?..
குட்டப்பனின் தெளிவு, இலக்கியமறியாத அன்றாடத்தின் ஆழ்ந்த அறிவிலிருந்து வருகிறதா?..ஏதேனும் ஒரு வகையில் கிரிதரனும், அய்யரும் இலக்கிய அறிமுகமற்று இருந்திருந்தால் வேறுவகையான முடிவுகளை எட்டி இருப்பார்களா?..
ஒருவேளை இதற்கான பதில் ஏற்கனவே அந்த காட்டில் இருக்கக்கூடும். எனது அடுத்தடுத்த வாசிப்புகளில் அதை நான் கண்டடையவும் கூடும்.
எனது கடந்த இரு வாசிப்புகளிலும் நான் அடைந்தவற்றை தொகுத்து, எனக்கே புரியவைத்து, அதை ஆசிரியர் முன் சமர்பிப்பிக்கும் சிறு முயற்சியே இந்த கடிதம்.
நன்றி.
சரவணன் கிருஷ்ணமூர்த்தி
அன்புள்ள சரவணன்,
ஒரு நாவலை வாசிக்கையில் உருவாகும் கேள்விகளை அந்த நாவலைக்கொண்டு, வாசிப்பவரின் வாழ்வனுபவங்களைக்கொண்டு அவரே எதிர்கொள்வதே நல்லது. அது வாசிப்பின் ஒரு பகுதி. வாசித்தபின் வரும் எண்ணங்களின் மீட்டல், விவாதங்கள் எல்லாம் சேர்ந்ததே வாசிப்பென்பது. அந்த விவாதத்தில் ஒரு தரப்பாகவே பிறருடைய கருத்துக்கள் அமையும். அதை எழுதிய ஆசிரியன் சொல்லுவதும் அப்படித்தான்.
பெரும்பாலான நல்ல நாவல்கள் உருவாக்குவது இரண்டு உணர்வுகளை. ஒன்று awe என ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஓர் உணர்வு. அதை அச்சம் என உணர்கிறோம். அது அச்சம் அல்ல, ஒருவகை திகைப்பும் அதன் விளைவான பதற்றமும்தான். அச்சம் என்பது எதிர்மறையானது. இந்த உணர்வு முற்றிலும் நேர்நிலையானது. இன்னொரு உணர்வு, நிறைவின் வெறுமை. அதை பலபேர் சோர்வு என சொல்வார்கள். சோர்வில் சிந்தனைகள் செத்துக்கிடக்கும். இந்நிலையில் ஆழ்ந்த சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்கும். நாம் வாழும் அக உலகை ஒரு நாவல் குலைத்துவிட்டதென்றால்தான் அந்த சோர்வு உருவாகிறது. நாம் உடனே அதை மீண்டும் நம்முள் கட்ட ஆரம்பிப்பதனால்தான் அச்சிந்தனைகள் எழுகின்றன. மீண்டும் நாம் கட்டும் நம் அகம் அந்த நாவலாலும் உருவாக்கப்பட்டதாக இருக்கும்.
நான் காடு நாவலை ஒரு வாசகனாக இப்படிப் பார்ப்பேன். கிரிதரனின் வீழ்ச்சிக்கு (அதை வீழ்ச்சி எனக் கொண்டால்) எவ்வகையிலும் இலக்கியம் காரணம் அல்ல. அவனுடைய குடும்பச் சூழல் போன்றவையே அவன் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. அல்லது விதி எனலாம். ஆனால் அவன் கடைசிவரை தன் அகஈரத்தை தக்கவைத்துக்கொள்ள, அந்தக் காட்டை கைவிடாமல் இருக்க உதவுவது இலக்கியம்தான். அவனுள் அந்த மிளா போட்ட அந்தக் கையெழுத்து அழியாமல் அப்படியே இருக்கிறது. அவன் அதை உணர்வது அவன் வாழ்வின் நிறைவு.
கிரிதரன் வாழ்வினூடாக காட்டை கண்டடைந்தான். எனில் ஐயர் இலக்கியம் வழியாக காட்டை கண்டடைகிறார். இலக்கியம் வழியாக அவர் சென்றடைந்த காட்டை ஆன்மிகமாக மேலும் அறிகிறார். ஒரு யோக ஒருமையாக அவர் காட்டை அறிகையில் இலக்கியத்தை கடந்து சென்று இன்னொருவராக அமர்ந்திருக்கிறார். ஐயர் மட்டுமே இந்நாவலில் முழுமையை நோக்கிச் செல்லும் ஒரு கதாபாத்திரம். அவர் இருப்பது ஓர் உயர்நிலை. ஒரு மெய்ஞானியாக ஆவதற்கு முந்தைய யோக நிலை. அதற்கான பாதை இலக்கியம். அதுதான் காட்டின் உள்ளுறையான ஒருமையை அவருக்குக் காட்டியது. அதை பிரகிருதியோகம் என்பார்கள். பிரபஞ்சயோகம் நோக்கி கொண்டுசெல்கிறது. இன்னொரு வழியில் அப்பாதை நோக்கி குருசு வந்துகொண்டிருந்தார். ஆனால் அவர் காட்டை விட்டு இறங்கி இன்னொருவராக ஆகி உலகியலில், அதாவது உலகியல் சார்ந்த மதத்தில், நிலைகொண்டுவிட்டார்.
குட்டப்பன் காட்டை அறிந்தவன் அல்ல, உணர்ந்தவனும் அல்ல. அவன் காட்டில் வாழும் ஒரு விலங்குபோல. புலி போல. மகத்தானது, ஆற்றல்மிக்கது. ஆனால் அந்த மகத்துவமும் ஆற்றலும் அவனுடையவை அல்ல, இயற்கையில் இருப்பவை. அவன் அதன் ஒரு பகுதி. அதுவே இயற்கை மனிதனுக்கு அளித்த வாழ்க்கை. ஆனால் இயற்கையில் இருந்து பிரிந்துவிட்ட மனிதப் பிரக்ஞைக்கு அதன்பின் அந்த வாழ்க்கை சாத்தியம் அல்ல. அது சிந்தனை சார்ந்த, அழகியல் சார்ந்த, ஆன்மிகம் சார்ந்த அகப்பயணம் வழியாகவே தன் விடுதலையை அடையமுடியும். அந்தப் பயணமே ஐயரில் நிகழ்கிறது. நாமனைவருக்கும் சாத்தியமாகக்கூடியது அது மட்டுமே. குட்டப்பனாக எவரும் திரும்பிச் சென்று அமைய முடியாது. பண்பாட்டில், அகப்பயணத்தில், முன்னோக்கி மட்டுமே செல்ல முடியும்.
இலக்கியம் காடு நாவலில் இரண்டு வகையில் உள்ளது. மெய்யான ஆன்மிக வினாக்கள் கொண்ட ஒருவரை விடுதலை நோக்கிக் கொண்டுசெல்கிறது. உலகியலில் சிக்கிக்கொண்ட ஒருவரை அதை தாங்கிக்கொள்ள உதவுகிறது. அதில் இருந்து அவன் மீள்வதற்கான ஓர் அழகிய வாசலாக மிக அருகே எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. கையில் ஒளிவிளக்குடன் வழிகாட்டி மெய்மை நோக்கி இட்டுச்செல்லும் தேவதையாகவே உள்ளது.
ஜெ