தங்கத் திருவோடு

இது 1995 ல் நடைபெற்றது. குரு நித்யா ஒரு வகுப்புக்காக வந்து அமர்ந்தார். அவர் கையில் ஓர்  இறகை கொண்டுவந்திருந்தார். வெண்ணிறமான பெரிய இறகு. முகத்தில் வழக்கமான கூர்மை. 

குரு ஒவ்வொரு முறை வகுப்புக்கு வருவதற்கு முன்னரும் சிறிதுநேரம் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்தபின் எழுந்து வருவார். எப்போதுமே மிகச்சரியான பொழுதில்தான் நுழைந்து தனக்கான இருக்கையில் அமர்வார். வந்து அமர்ந்தபின்னரும் சிலசமயம் அந்த தியானநிலை நீடிப்பதுண்டு. மிக அரிதாக மொத்த வகுப்பிலும் தியானநிலை நீடித்து அப்படியே எழுந்து போவதும் நடைபெற்றதுண்டு. அவர் முகம் அபாரமான உயிர்த்துடிப்புடன் கூடவே சிலைகளுக்குரிய ஒரு காலம்கடந்த தன்மையும் கொண்டிருக்கும் என்று தோன்றும்.

அவர் வருவதற்குள்ளாகவே அவை முழுமையாக அமைந்துவிட்டிருக்கும். அவர் நடந்து வரும் காலடியோசை, அவருடைய மூச்சின் ஓசை கேட்குமளவு அமைதியும் இருக்கும். அன்று அவர் வந்தபின்னரும் சிலர் வந்துகொண்டிருந்தனர். ஒருவர் இன்னொருவரை தன்னருகே வந்து அமரும்படி அழைத்தார். ஒருவர் வெளியே எழுந்து சென்று அங்கே பேசிக்கொண்டிருந்த எவரிடமோ பேசி அவரையும் அழைத்துக்கொண்டு வந்தார்

அவர்கள் வந்து அமர்வதற்காக நித்யா கையில் அந்த இறகுடன் காத்திருந்தார்ஒருவர் எழுந்துசென்று இன்னொரு இடத்தில் வைத்திருந்த தன் பையை எடுத்துக்கொண்டுவந்து தன்னருகே வைத்துக்கொண்டார். ஒருவர் அமர்வதற்கான சிறிய மெத்தைகளில் ஒன்றை அப்பாலிருந்து எடுத்து வந்து போட்டுக்கொண்டார். ஒருவர் இன்னொருவரிடம் ஒரு போர்வையை தரும்படி சைகை காட்டினார்

நித்யா புன்னகைத்தார். அந்த இறகை என்னிடம் நீட்டினார். நான் ஏன் என்று புரியாமல் அதை வாங்கிக்கொண்டேன். 

நித்யாதெய்வதசகம் பாடுவோம்என்றார்.

நாராயணகுரு எழுதிய எல்லாருக்கும் தெரிந்த அந்த பிரார்த்தனை பாடப்பட்டது.  குரு அதற்கு எளிமையான ஓர் உரையை அளித்தார். பிரார்த்தனைக் கூட்டம் முடிந்தது. குரு எழுந்து உள்ளே சென்றார்.

அந்த இறகை என்ன செய்வதென்று தெரியாமல் நான் கொண்டு சென்று அப்போது வாசித்துக்கொண்டிருந்த நடராஜகுருவின் Wisdom :The Absolute is Adorable  என்ற நூலில் பக்க அடையாளமாக வைத்துக் கொண்டேன்.

மீண்டும் நித்யாவை மதியம் 11 மணிக்கு மீண்டும் சந்தித்தேன். அப்போது அவர் பிருஹதாரண்யக உபநிடதத்திற்கான உரை எழுதிக்கொண்டிருந்தார். அதற்கான அமர்வு. நான்குபேர் அதை எழுத நித்யா சொல்லிக்கொண்டே செல்வார். அதுவும் ஒருவகையான வகுப்புதான். ஆனால் நான்கு பேர்தான் இருப்பார்கள். நித்யா தன் அறைக்குள் இருந்தார். வகுப்புக்காக வெளியே கண்ணாடி அறைப்பகுதியில் ராமகிருஷ்ணன் தயாராகிக் கொண்டிருந்தார். நான் உள்ளே சென்றேன்.

நித்யா என்னைக் கண்டதும் புன்னகைத்துஅந்த இறகு ஓர் அபூர்வமான பறவையினுடையதுவெள்ளை ஆந்தை. அது இரவில் இங்கே வந்து சென்றிருக்கிறதுஎன்றார்.

நான்ஆம்என்றேன். 

அது நமக்கொரு செய்தியை விட்டுச்சென்றதுபோல…என்று சொல்லி நித்யா தனக்குத்தானே மகிழ்ந்து புன்னகை செய்தார். அவருடைய அந்தக் குழந்தைநிலை எனக்கு தெரிந்ததுதான். நான் அப்போது அவரைவிட மூத்தவனாக உணர்வேன். நானும் புன்னகைத்தேன்

அந்த இறகை என்ன செய்தாய்?”

நடராஜகுரு புத்தகத்தில் வைத்தேன்

எந்த இடம்?”

ஸம்யக் தர்சன் பற்றிய அத்தியாயம்

சரிதான்…” என்று மீண்டும் புன்னகைத்தார். 

ஆந்தையால் ஆறு திசையையும் தலைதிருப்பிப் பார்க்கமுடியும்ஆறு திசையையும் ஒன்றாக்கி ஒரே காட்சியாக ஆக்கமுடியும்

ஆந்தையின் முகத்தில் ஒரு நிரந்தரமான வியப்பு இருப்பதுபோல எனக்குப் படுவதுண்டு

வியப்புதான் முதல் பேருணர்வு….எல்லா வினாக்களும் அதில் இருந்துதான். கவிஞனும் ஞானியும் முடிவில்லாத வியப்பில் இருந்துகொண்டிருப்பவர்கள். இது என்ன, இது ஏன், இது எப்படி என்று அவர்கள் வியந்துகொண்டே இருக்கிறார்கள்….குழந்தையின் நிரந்தர உளநிலை வியப்புதான்….அதன் புருவம் மேலேறியே இருக்கிறது. வியப்பு இல்லாமலாகும்போது மனிதர்கள் சாமானியர்களாகி அன்றாடத்தில் அமைகிறார்கள். வியப்பு அணையாதவர்களே கவியும் ரிஷியும்…”

நித்யா பேசிக்கொண்டே சென்றார். “ஆப்ரிக்க பூசகர்கள் தங்கள் தலையில் இறகுகளை அணிந்துகொள்வதைக் கண்டிருக்கிறேன். தொன்மையான பூசகர்கள் இறகுகளை அணிந்துகொண்டிருக்கலாம். அதன்பின் அரசர்கள் இறகுகளை அணிந்துகொண்டனர். பின்னர் சாமானியர்களும் தொப்பியில் இறகணிந்தனர். A feather in the cap! அது ஒரு வெற்றி. எல்லா வெற்றிகளும் தன் உச்ச எல்லையொன்றை கடத்தல்தான்… “

ஏன் இறகு வெற்றிச்சின்னமாகியது? அதை முதலில் தலையில் சூடிக்கொண்டவன் என்ன நினைத்திருப்பான்? சிறுகுழந்தைகளிடம் ஓர் இறகைக்கொடு. உடனே தலைக்குமேல் நீட்டி அசைக்கும். தலையில் சூட்டிக்கொள்ளும். மனிதனிடம் இல்லாதது, பறவையிடம் இருப்பது இறகு. பறத்தல் என்றும் மனிதன் கண்ட கனவு. அவனுடைய என்றுமுள்ள ஏக்கம். பறக்கும் கனவு வராத மனிதனே இல்லை. பறக்க முயலாத குழந்தையே இல்லை….” நித்யா சொன்னார்.

நான் இரண்டு முறங்களுடன் பறக்க முயன்று விழுந்து என் மோவாய் பிளந்திருக்கிறது….நான்கு தையல்கள்இப்போதும் வடு உள்ளது

என் கை ஒடிந்திருக்கிறது!” என்றார் நித்யா சிரித்தபடி. “பெரும்பாலான எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கு அப்படி ஒரு அனுபவம் இருக்கும்…. பறவையின் இறகின்மேல் எத்தனை மோகம் மனிதனுக்கு. தெய்வங்களுக்கும் தேவதைகளுக்கும் சிறகுகள் இருக்குமென கற்பனைசெய்கிறது செமிட்டிக் மரபுஎல்லா கவிஞர்களும் பறவைகளை பற்றியே எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கவனி, பறவைகளைப் பற்றி அல்ல, சிறகுகளைப் பற்றி…”

நான் தேவதேவனின் கவிதைகளில் வரும் பறவைகளை எண்ணிக்கொண்டேன்.

சிறகு விண்ணுக்குரியது. ஒளிபெருகும் முடிவிலியில் துழாவித் திளைப்பது. அது மண்ணுக்கு வரலாம். ஆனால் மண்ணுக்குரியது அல்ல.” என்றார் நித்யாஒரு சிறகை தலையில் சூட்டிக்கொள்பவன் உணர்வதும் உணர்த்துவதும் இதுதான். நான் மனிதன், ஆனால் மனிதன் மட்டுமல்ல. என் ஒரு சிறுபகுதி பறவை. ஒரு பறவையின் அம்சத்தை இதோ என் தலையில் கொண்டிருக்கிறேன். என் உடல் பறக்காமலிருக்கலாம், என் அகம் பறக்கக்கூடும்…”

நான் பறவை என்னும் அறிவிப்பு அது!” என்று நித்யா சொன்னார். “என்னில் விண் உள்ளது என்னும் பிரகடனம் அது. பூசகர்கள், அரசர்கள் அவ்வாறு அறிவித்துக் கொண்டார்கள்…. ஓர் இறகை என் தலையிலும் வைத்துக்கொள்ளவேண்டும் என்று விரும்பினேன்

டாக்டர் தம்பான் (பின்னர் சுவாமி தன்மயா) வந்து நின்றார். நித்யா எழுந்துகொண்டார்

இதை நீங்கள் காலையில் பேச வந்தீர்களா?” என்றேன்

இல்லை, இது இப்போது தோன்றி நான் பேசுவது. நான் பேசவந்தது அந்த இறகில் இருந்து தொடங்கித்தான்…”

பேசியிருக்கலாம்

அனைவரிடமும் பேசவேண்டும். பேசியாகவேண்டும். ஆனால் பேச்சில் இரண்டு வகை உண்டு. இந்த உலகில் இப்போது பொருள்படும் பேச்சுக்கள் உண்டு. பயன்படும் பேச்சுக்கள் உண்டு. அவற்றையே சாமானியர்களிடம் பேசவேண்டும். அதற்கப்பால் உள்ளவற்றை அதற்கப்பால் செல்லும் தன்மை உடையவர்களிடமே பேசவேண்டும். அப்பால் செல்லத்தக்கவர்களின் இலக்கணம் ஒன்றே. அவர்கள் எப்போதும் கவனம் கொண்டிருப்பார்கள். ஜாக்ரத என்று அதைத்தான் உபநிடதம் சொல்கிறது. உத்திஷ்டத ஜாக்ரத. உத்திஷ்டத என்றால் விழித்தெழுதல். ஏதோ ஒரு புள்ளியில் அகம் விழித்துக்கொண்டு அந்த திகைப்பை அடைந்து விடுகிறது. அதன்பின் அந்த நிரந்தமான விழிப்புணர்வுதான். எந்நிலையிலும், எச்சூழலிலும் சட்டென்று முழுக்கவனம் கொள்ள அவர்களால் முடியும். பூனைக்காது என அதை சொல்கிறார்கள். தூங்கும்போதும் பூனையின் காது எச்சரிக்கையுடன் அசைந்துகொண்டே இருக்கிறது… அந்த ஜாக்ரதைதான் கல்வியின் அடிப்படைத்தேவை. அந்த விழிப்பு கொண்டவர்களிடமே நுண்ணியவற்றைச் சொல்ல வேண்டும். ஏனென்றால் நுண்மையானவை சொல்லத்தக்கவை அல்ல. உணர்த்தத்தக்கவை. சொல்பவன் ஒரு குறிப்பையே அளிக்கமுடியும். கேட்பவனே அவற்றை உருவாக்கிக் கொள்கிறான். அதற்கு அவன் அகம் முழுமையாக மலர்ந்திருக்கவேண்டும்…

எழுதும் அறைக்கு தம்பானின் தோள் பற்றி நடந்து செல்லும்போது நித்யா திரும்பி நான் இன்றும் பெருந்திகைப்புடன் நினைத்துக்கொள்ளும் வரியைச் சொன்னார். “மெய்ஞானத்தைக் கற்பிப்பது எப்படி?  ஓர்  உவமை சொல்கிறேன். அது தங்கத் திருவோட்டில் பிச்சை போடப்படும் தங்கக்காசு

  

முந்தைய கட்டுரைஅ.சுப்பிரமணிய பாரதி
அடுத்த கட்டுரைமுழுமையறிவு, குரு நித்யா வகுப்புகள்