முத்தம்மாள் பழனிசாமி என்கிற ஆளுமை

‘என் பேரப்பிள்ளைகளுக்கு என்னுடைய கதைகளைச் சொல்ல வேண்டும் என எழுத தொடங்கியதுதான் என் எழுத்தின் தொடக்கம்’ என்று நம் வீட்டில் மிகவும் யதார்த்தமாக வாழும் பாட்டியைப் போன்றுதான் அத்தனை நெருக்கமாக எங்களுடன் உரையாடினார். பெரும்பாலும் எவ்வித பெரிய நோக்கங்களும் இல்லாத சில பயணங்கள்தான் அசாத்தியமான கலை எழுச்சியாக மாறிவிடுகிறது. அத்தகையதொரு படைப்புதான் தமிழினி பதிப்பகம் வெளியிட்ட ‘நாடு விட்டு நாடு’.

முதன்முறை அவருடைய ‘நாடு விட்டு நாடு’ நூலை வாசிக்கும்போது ஒரு நாவலை வாசிக்கும் உணர்வுதான் இறுதிவரை மேலோங்கியிருந்தது. புனைவு சாத்தியங்களையும் உச்சங்களையும் அந்த நூல் கொண்டிருந்தது.

அவருடைய ‘நாட்டுப்புறப்பாடல்களில் என் பயணம்’ என்கிற நூல் குறித்து நான் முழுமையாக வாசித்து ஆய்வுச் செய்து அதனை உரையாகவும் வழங்கியிருந்தேன்.

ஏமக் கருங்கோழி
இந்திரரு பொன்கோழி
இறகு தட்டிக் கூவும்போது
ஏமன் சதிகள் செய்த
ஏந்திழையாள் பெண்டுகளா
என் மயிலிக்குத் தாலி வாங்க
எழுந்துமே வாரீங்களா?

சிறுவயதில் வறுமையின் காரணமாக எளிய மனிதர்களால் அரங்கேற்றப்படும் தெருக்கூத்து, அரவாணிகளில் பாடல்கள், நாடகம் எனப் பார்த்து வளர்ந்த முத்தம்மாள் பழனிசாமிக்கு இயல்பாகவே கலை தாகம் இருந்துள்ளது. அதுதான் பிற்காலத்தில் தீவிரமடைந்து இப்படியொரு ஆய்வை முன்னெடுக்கத் துணைப்புரிந்துள்ளது எனக் கருதுகிறேன்.

பிறப்பு முதல் இறப்புவரை பாடலோடு தன் வாழ்வை இணைப்பதன் மூலம் மனித சமூகம் ஒரு முக்கியமான அலைவரிசையை உருவாக்குகிறது. அது காலத்திற்கும் புதையுண்டு, மறைந்து, முதுகுடிகளுடன் கரைந்து, மீண்டும் யாரோ ஒருவரின் குரலின் வழி மீட்டெடுக்கப்படும் ஒரு வரலாறு என்றே கருதுகிறேன். அத்தகைய உணர்வைக் கொடுத்த இந்த நூல் இந்தக் காலக்கட்டத்திற்கு மிகவும் அவசியமானது.

ஒவ்வொரு தனி சமூகமும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் தம் துயரங்களையும் இடர்களையும் சுகத்துக்கங்களையும் பாடல்களின் வழியே வெளிப்படுத்திக் கடந்துள்ளார்கள் என்பதை இந்த நூலை வாசிக்கும்போது புரிந்துகொள்ள முடிந்தது. அதனை ஆவணப்படுத்திய முத்தம்மாள் பழனிசாமி நம் நாட்டின் வரலாற்றிற்கு ஆற்றிய முக்கியமான பணி எனலாம்.

மிகவும் எளிமையாகவும் அதே சமயம் துடிப்புடனும் இருந்தவர். இரண்டு முறை மட்டும்தான் சந்தித்துள்ளேன். பின்னர், அழைப்பேசியில் உரையாடியுள்ளேன். வல்லினம் இலக்கியக் குழுதான் அவருடைய இலக்கியப் பங்களிப்பைப் பற்றி விரிவான நேர்காணல் செய்து அதனை வெளியிட்டிருந்தார்கள். அதன் பின்னர், அவர் மலேசியாவில் கவனிக்கப்பட்டார். ஜெயமோகன் அவர்களும் முத்தம்மாள் பழனிசாமி பற்றி தன் அகப்பக்கத்தில் எழுதி அறிமுகப்படுத்தியுள்ளார். செம்பருத்தி இதழ் அவருடைய நேர்காணலை வெளியீடு செய்தது.

இன்னும் அவர் நிறைய எழுதியிருக்க வேண்டும் என்பதுதான் இப்பொழுதும் என் மனத்ல் தேங்கி நிற்கும் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. அவருக்கு என் கண்ணீர் அஞ்சலி.

அவருடைய நாட்டுப்புறப்பாடல்களில் என் பயணம் என்கிற நூல் மலேசிய வரலாற்றைப் பொறுத்தவரை கவனிக்கத்தக்க ஒரு முயற்சியாகும். அந்த நூலைப் பற்றி நான் எழுதிய கட்டுரையின் இணைப்பு:

https://www.vallinam.com.my/issue31/bookreview2.html

வருத்தங்களுடன்

கே.பாலமுருகன்

முந்தைய கட்டுரைமகாதேவன், கடிதங்கள்
அடுத்த கட்டுரைதாட்சாயணி