தன்னை விலக்கி அறிய முடியுமா? பகுதி 1
அறிதலில் இயல்பாகவே இருக்கும் தன்னிலை என்பது அதன் இயல்பான ஓர் அம்சம். உண்மையில் அறிதலுக்காக நம்மைச் செலுத்துவதும் அறிதலை நிகழ்த்துவதும், அறிதலைச் சேமித்துக்கொள்வதும் அதுவே.
நாம் நம்முடைய சூழலை அறியத் தொடங்குகிறோம். இது நம் உயிர்வாழ்தலுக்காக இயல்பாக நிகழ்கிறது. பின்னர் நம் தன்னிலையை நிறுவிக்கொள்வதற்காக அறிய முயல்கிறோம். நம் அறிவே நாம் என உணர ஆரம்பிக்கிறோம். ஆகவே நாம் அறிவை எத்தனை அடைந்தாலும் நிறைவுறுவதில்லை. அறிவே நம் ஆளுமையென்பதனால் நம்மை தொடர்ந்து வளர்த்துக்கொள்ளவே முயல்கிறோம்.
ஓர் எல்லையில் நம் அறிவை நிலைநாட்டுவதே நம்மை நாம் நிலைநாட்டுவது என்றாகிறது. ஆகவே நம் அறிவை எங்கும் நிலைநிறுத்தவும், நமக்குப் பின்னரும் அது நீடிக்கவும் முயல்கிறோம். அதன்பொருட்டு பேசுகிறோம், வாதிடுகிறோம், எழுதுகிறோம். இந்நிலையில் நம் அறிவை நாம் சுமந்தலையவேண்டிய நிலைக்கு ஆளாகிவிடுகிறோம். அறிஞர்கள் எனப்படுவோரில் பெரும்பாலானவர்கள் தங்கள் அறிஞர் என்னும் நிலையை பேணும்பொருட்டு வாழ்பவர்கள். தங்கள் எடையை தாங்களே சுமப்பவர்கள்.அவர்கள் பேரறிஞர்கள் ஆகுந்தோறும் எடை மிக அதிகமாகிறது.
நாமறியும் அறிவு நம் அறிவாக திரண்டு நம்மை மேம்படுத்துகிறது. ஒருகட்டத்தில் நம்மைச் சிறையிடுகிறது. நம் உடல்போலத்தான் அறிவும். நம் உடலே நம்மை இவ்வுலகை அறியச் செய்கிறது. நம் உடலே நாம் என உணர்கிறோம். ஒரு கட்டத்தில் நம் உடல் பருத்து எடைகொண்டு நம் உடலை நாமே தூக்கிக்கொண்டு மூச்சிளைக்கிறோம். நோய்கொண்ட உடலை பராமரித்துக்கொண்டு அதற்கு அடிமையாக வாழ்கிறோம்.
இச்சிக்கலில் இருந்து வெளியேற முடியுமா? அதற்கான வழி நாம் அறிந்தவை நமக்கு உருவாக்கி அளிக்கும் சிறையில் இருந்து வெளியேறுவதுதான். அது தன்னை நிராகரித்து முன்னகர்தல். கற்றவற்றை கடந்து மேலும் கற்றல் Learn to unlearn , Unlearn to learn என நடராஜ குரு சொன்னார்
அதையே ’அறிந்தததில் இருந்து விடுதலை’ என்று ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் எல்லை ஒன்றுண்டு. அவர் குறிப்பாக மாணவர்களை உருவாக்கவில்லை. வகுப்புகளை நடத்தவில்லை. நவீன உரைகளையே ஆற்றினார். அவை நூல்களாயின. அவ்வுரைகள் எல்லாம் பொதுவான பார்வையாளர்களுக்காக உருவாக்கப்பட்டவை. அத்தகைய பொதுவான உரைகளை கேட்பவர்களும் வாசிப்பவர்களும் தங்களுக்கு உகந்த முறையில் அவற்றை விளக்கிக் கொண்டனர். அதன் இடர்கள் ஏராளமானவை
அறிந்தவற்றில் இருந்து விடுபடுதல் என்பது அறிந்தவை எல்லாம் பயனற்றவை என உணர்வது அல்ல. அறிந்தவற்றை மறக்கவோ மறுக்கவோ முயல்வது அல்ல. அது இயல்வதுமல்ல. ஒன்றை அறிந்தால் அக்கணமே அது உங்கள் உள்ளமாக, உங்கள் ஆளுமையாக, உங்கள் இயல்பாக ஆகிவிடுகிறது. அதை மறக்கவோ மறுக்கவோ முடியாது. அப்படிச் செய்வதாக எண்ணிக்கொள்வது வெறும் பாவனைதான். அறிதலின் பாதையில் முன்னகர்வதற்கு மட்டுமே இடமுள்ளது.
நாம் அறிந்தவற்றை நாம் கடக்க ஒரே வழிதான் உள்ளது. மேலும் அறிதல். மேலும் அறிதலில் இரண்டு அம்சங்கள் உண்டு. ஒன்று அறிந்தவற்றின் விரிவாக்கத்தை அறிதல். இரண்டு, அறிந்தவற்றின் மறுபக்கத்தை அறிதல். உதாரணமாக, மெய்கண்டாரின் சைவசித்தாந்தத்தை அறிந்த ஒருவர் மேலும் விரிவாக மொத்த சைவமரபையும் அறியமுயலலாம். அத்துடன் அவர் சைவத்தை மறுக்கும் கிறிஸ்தவ சித்தாந்தத்தை அறிய முயலலாம்.
இவ்வாறு மேலும் அறிகையில் என்ன நிகழ்கிறது? நாம் ஒரு முழுமையறிவை நோக்கி நகர்கிறோம். நாம் ஒரு பாறையை முதலில் காண்கிறோம். மேலும் மேலும் பின்னகர்ந்தால் அப்பாறை ஒரு மலையின் பகுதி என காண்கிறோம். மேலும் பின்னகர்ந்து அந்த மலை ஒரு மலைத்தொடர் என அறிகிறோம். மேலும் பின்னகர்ந்தால் அந்த மலைத்தொடரே பூமியின் ஒரு மடிப்புதான் என அறிகிறோம். இந்நிலையில் நாம் பாறை பற்றிய நம் அறிதலை மறுக்கவில்லை, மறக்கவுமில்லை. அந்த அறிதலை முன்னெடுப்பதன் வழியாக அதை கடந்துவிடுகிறோம்.
அந்தப் பாறை பற்றிய அறிவே நம் அறிவு என்று கொள்வோம். ‘நம் அறிவு’ என்னும் நிலையில் இருந்து என்றுமுள்ள அறிவு என்னும் நிலைக்கு கொண்டுசெல்ல முயல்வதன் பெயரே முழுமையறிதல் என்பது. அறிவுகளை இணைத்து இணைத்து பேரறிவை நோக்கிச் செல்கிறோம். ஒவ்வொரு அறிவையும் அதனுடன் தொடர்புடையவற்றுடன் இணைக்கிறோம். அதற்கு நேர் எதிரானதும் அதனுடன் தொடர்புடையதே. அதை எதிர்மறைத் தொடர்பு எனலாம்.
நடராஜகுரு இதையே அமைப்புவாதம் என்கிறார். அமைப்புகளை உருவாக்கும் தன்மை மானுட உள்ளத்துக்கு உண்டு. ஒவ்வொரு அறிதலும் நமக்குள் ஒரு கட்டமைப்பாகவே ஆகின்றன. அதை இன்னொரு அமைப்புடன் இணைத்து இன்னும் பெரிய அமைப்பு ஆக மாற்றிக்கொண்டே இருக்கிறோம். ஒவ்வொரு அறிதலும் ஒரு building block என்று கொள்ளலாம். அவற்றைக்கொண்டு நாம் நம்முடைய அறிவு என்னும் பெரிய அமைப்பை உருவாக்கிக்கொண்டே இருக்கிறோம். அதுவே நாம் அறியும் உலகம்.
எந்த அளவுக்கு நம் அறிதல்கள் பெருகுகின்றனவோ அந்த அளவுக்கு நம் அறிதலின் முழுமை சாத்தியமாகிறது. நாம் நம் தேவைக்கேற்க பயில்கிறோம். பல்வேறு கட்டாயங்களுக்காக சிலவற்றை தெரிந்துகொள்கிறோம். அந்த அறிவு நமக்கு அதுவாக அமைவது. அது முழுமையை நோக்கி கொண்டுசெல்லாது. நாம் நம் அறிவை முழுமையாக்கிக் கொள்ள முயலவேண்டும். அறிந்தவற்றில் இருந்து ஒவ்வொரு கணமும் முன்னகர தொடர்ச்சியாக முயன்றபடியே இருக்கவேண்டும். அதுவே அறிந்தவற்றிலிருந்து விடுபடும் வழி.
அறிந்தவற்றில் இருந்து விடுதலை என்பது தனியறிவுகளில் இருந்து விடுபடுதல்தான். தனியறிதல்கள் எந்த அளவுக்கு அறிவுகளோ அந்த அளவுக்கு அறியாமைகளும்தான். இருட்டில் விழும் ஒளிவட்டம் போன்றவை. சுற்றிலுமிருப்பது இருளே. வெளிச்சவட்டத்தில் தெரிவனவற்றை கொண்டு இருளில் இருப்பவற்றை ஊகிப்பதையே நாம் செய்கிறோம். நூறு ஆயிரம் பல்லாயிரம் ஒளிவட்டங்களின் தொகுப்பு முழுமையான காட்சியை நோக்கி நம்மைக் கொண்டுசெல்லும்.
எல்லா அறிவும் திரண்டுகொண்டே வரும் ஒற்றை அறிவின் பகுதியே என்பதே நாராயணகுரு சொன்னது. ஆகவே எல்லா அறிவும் பிரம்மஞானமே. மோட்டார்மெக்கானிசம் கூட. அறிந்துகொண்டே இருத்தல் என்பதே தனிஅறிவை கடந்து செல்வது. தனியறிவுடன் இணைந்திருக்கும் தன்னிலை இல்லாமலாவது அவ்வாறு மட்டுமே இயல்வது. தனியறிவு உருவாகும் தன்முனைப்பு மறைவதும் அவ்வாறே.
அவ்வாறு அறிதல் வழியாக அறிந்தவற்றை கடப்பதையே ஞானயோகம் என்கின்றன தொல்நூல்கள். ’கர்மமெல்லாம், முற்றிலும், ஞானத்தில் முடிவு பெறுகிறது’ என்று கீதை சொல்கிறது. கலையிலக்கியம் தத்துவம் ஆன்மிகம் என அனைத்தினூடாகவும் கற்று முழுமை நோக்கிச் செல்வதையே ‘விழுமியங்களின் சேர்ந்திசை’ என்று நித்ய சைதன்ய யதி சொல்கிறார்.
கற்றவற்றை இணைத்து கல்வியைக் கடந்து செல்லும் பயணத்தில் எங்கோ ஒரு புள்ளியில் ஒருவன் முழுமையை உணரமுடியும். ஒருமையுணர்வை அடையமுடியும். ஞானம் என்பது ஒருமையுணர்வாகக் கூர்கொண்டாக வேண்டும். அதுவே அதன் உச்சப்புள்ளி.
எந்தக் கூர்மைக்கும் அப்பால் உள்ளது வெறுமை. முடிவிலி. ஒருமையுணர்வை அடைந்தவன் அதை தன்னுள் உணரமுடியும். ’ஒன்றொன்றாய் தொட்டெண்ணி எண்ணும் பொருள் ஒடுங்கையில் நின்றிடும் பரம்’ என நாராயணகுரு சொன்ன ஒன்றை அறியமுடியும். அறிவு உதிர்ந்து பேரறிவு அங்கே திகழும் என்று நாராயணகுரு சொல்கிறார்.
அந்தப் பெருநிலை எங்கோ இருக்கலாம். ஆனால் நாம் இங்கே இப்போது அறியும் ஒவ்வொன்றும் அப்பயணத்தின் ஒரு காலடியே என நாம் உணர்ந்தால் போதும். ஒரு தத்துவம், ஒரு மதம், ஒரு பார்வை, ஒரு துறை என நம்மை குறுக்கிக் கொள்ளாமல் விரித்துக்கொண்டே இருந்தால்போதும். ‘அறிவின்னு அதிருண்டு எதிருண்டு. அறிவில்லாய்மைக்கு ரண்டுமில்ல’ என்றார் நாராயணகுரு. அறிவுக்கு எல்லையும் எதிர்த்தரப்பும் எப்போதும் உண்டு என்று நமக்குநாமே சொல்லிக்கொண்டால் போதும்