அன்பின் ஜெ,
உலக வரலாறு குறித்து புத்தகங்கள் வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். அதை முடித்து விட்டு, இந்திய, தமிழக வரலாற்றை வாசிக்கலாம் என இருக்கிறேன்.
பொதுவாக வரலாற்று நூல்களில், (அனைத்து அபுனைவு நூல்களிலும் கூட), தகவல்களை இணைத்து ஆசிரியர் அவரது மொழிபை முன்வைக்கிறார். அந்த மொழிபை அவர் ஏதேனும் தத்துவ நோக்கில் இருந்து முன்வைக்கிறாரா, இல்லையெனில் தர்க்கப்பூர்வமாக அடுக்குகிறாரா, இல்லையெனில் ஏதும் சித்தாந்தப்பின்னணியில் இருந்து திரிக்கிறாரா என்பதை கவனிப்பதும் முக்கியம் என நினைக்கிறேன்.
மூன்றாம் ரகத்தை வாசிப்பது குறை நோக்கையே கொடுக்கும். முதலிரண்டை வாசிப்பது ஒரு விரிவான ஆழமான சித்திரத்தை அளிக்கும்.ஆனால், அவற்றையும் தாண்டி நான் எப்படி வாசிக்கிறேன் என்பது முக்கியமல்லவா!
நான் என்பது பிறப்பால், சமூகத்தால், பண்பாட்டால், கல்வியால், பணியால் சமைக்கபட்ட ஒரு அனுபவத்தொகுப்பு. இந்த தொகுப்பை வைத்தே உலகநிகழ்வுகளை புரிந்து கொள்ள முயல்கிறோம். அத்தகைய புரிதல்கள், நம் கருத்து மற்றும் சிந்தனையாக மாறுகிறது. நம் அனுபவங்களில் இருந்து பெற்றது என்பதாலேயே அதில் அகங்காரமும் இணைந்து விடுகிறது.
சமூகவலைத்தளம் இந்த அகங்காரத்தை ஊதி ஊதி பெரிதாக்குகிறது. இதன் பின், இந்த அகங்காரசம்மட்டியை வைத்தே அனைத்து கருத்துக்களுடனும் மோதுகிறோம். பிறரை புண்படுத்துகிறோம், மூர்க்கர்களாக ஆகிறோம்.
எப்போதும் சம்மட்டியை வைத்திருப்பவனால் புதிய அறிதலை அடையமுடியாது, மெய்யின்பத்தை உணரமுடியாது. பலர் தம்மிடம் சம்மட்டி இருப்பதையே அறிவதில்லை. முழுமையாக சம்மட்டிகளாகவே ஆகிவிட்டார்கள்.
எனக்குள்ளும் சம்மட்டி இருக்கிறது. என் அடையாளம், பண்பாடு, மதம், சாதி, ஊர், மொழி, படிப்பு, வேலை, உடல் என பல மடிப்புகளால் ஆனது அது. இவை எனக்குள் ஒரு கருத்தியலை உருவாக்குகிறது. என் கருத்தியலுக்கு எதிரான கருத்தியலை ஒரு விமர்சனத்தன்மையுடனும், விலகலுடனும் தான் பார்க்கிறேன். அவற்றை அறிய என் மனம் முற்படுவதில்லை. ஏனெனில் என் அகம் புண்பட்டுவிடுமோ என ஒரு பயம். சில நேரம் அவற்றை புரிந்து கொண்டாலும், அதை என் வாழ்வாக்குவேனா என்பது சந்தேகமே! காந்தியையும், அரிஷ்டநேமியையும் இங்கே வணங்குகிறேன். அத்தகைய தைரியம் எனக்கு வர வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
என் சம்மட்டி என்னை முழுமையாக அறியவிடாமல் தடுக்கிறது. நான் வாசித்ததில் இருந்து ஏதேனும் மொழிபை/சிந்தனையை அடைவேன். ஆனால், அவை அந்த சம்மட்டியால் உடைக்கப்பட்டது போக மிச்சமிருப்பது மட்டுமே.
அந்த சம்மட்டியை உடைப்பது எப்படி? வாசிப்பில், அறிதலில் வரும் தத்துவப்பிழைகளை, பாடபேதங்களை தவிர்ப்பது எப்படி?
அன்புடன்
சுந்தரபாண்டியன் தண்டபாணி.
அன்புள்ள சுந்தரபாண்டியன்,
உங்கள் வினா அனுபவ தளத்தில் இருந்து உருவாகிறது. அதை தத்துவார்த்தமான வினாவாக ஆக்கிக்கொள்கிறேன். ஏனென்றால் எளிமையான நடைமுறைக் கேள்வியாக இருந்தாலும் இது மிகச் சிக்கலான தத்துவக் கேள்வி. வேதாந்தமும், பௌத்தமும் விரிவாக இதை ஆராய்ந்துள்ளன.
அறிதலில் நான்கு நிலைகள் உள்ளன. அறிபவன், அறிபடுபொருள், அறிதல், அறிவு. இவற்றில் அறிபவன், அறிபடுபொருள் இரண்டும் இரண்டு எல்லைகள். இரண்டுக்கும் நடுவே நிகழ்வது அறிதல் எனும் செயல்பாடு. அதன்விளைவாக உருவாவது அறிவு என்னும் நிலை.
உங்கள் வினா இதுதான். அறிபவன் என்னும் தன்னிலையால் திரிபடையாமல் அறிபடுபொருளை அறிதல் எப்படி? அறிபவனுக்கு ஏற்ப மாற்றப்படாத அறிவு எப்படி கிடைக்கும்?
உண்மையில் அறிதலைப் பற்றிய வேதாந்தக் கருத்து இந்நான்கு நிலைகளும் பிரிக்கமுடியாதவை, ஏனென்றால் அவை நான்கும் ஒன்றே என்பதுதான்.
அறிதலென்பது அறிபவனுக்கும் அறிபடுபொருளுக்கும் நடுவே நிகழும் ஒரு தொடர்பாடல். இப்படி அதை எழுதலாம். ‘அறிபவன் -> அறிதல் -> அறிபடுபொருள்’ . அறிதல் நிகழ அறிபவனும் அறிபடுபொருளும் இருந்தேயாகவேண்டும். அறிபவன் என்னும் தன்னிலை இல்லாமல் அறிதல் எனும் செயலை ஒரு கருத்தாகக் கூட உருவகிக்க முடியாது.
அறிதலை நாம் வழக்கமாக அறிபவனின் தரப்பில் இருந்து அறிபடுபொருள் நோக்கிச் செய்யப்படும் ஒரு செயல்பாடாக உருவகிப்போம். ஆனால் அது ஒருவழிப்பாதை அல்ல. அறிபடுபொருள் தன்னை அறிபவனுக்கு அறியத்தருகிறது. அது அறிவாக மாறுகிறது. அதாவது அறிபடுபொருளின் தரப்பில் இருந்தும் அறிதல் என்னும் செயலுக்கு ஒரு பங்களிப்பு உள்ளது.
ஆகவே அறிவு என்பது அறிதலின் விளைவாக அறிபவனிடம் உருவாகும் ஒன்று அல்ல. அது அறிபடுபொருளில் உருவாகும் ஒரு நிலையும்கூட. பிரபஞ்சத்தை நாம் அறியும்போது நம்மிடம் பிரபஞ்சம் ஓர் அறிவாக வந்து அமைகிறது. மறு எல்லையில் பிரபஞ்சம் ஓர் அறிவாக நிலைகொள்கிறது.
இங்கே நாம் பிரபஞ்சம் என்று சொல்வது எதை? நம்மால் அறியப்பட்டு, அறிவு என்னும் வடிவில் கிடைக்கும் ஒன்றைத்தான். நம்மிடம் அறியப்பட்டதாக இருக்கும் பிரபஞ்சம் வெளியே அறிவதற்கான சாத்தியக்கூறாக நிலைகொள்கிறது.
அறிபவன் (அறிவு) – அறிதல்– அறிபடுபொருள் (அறிவு) என இதை வகுக்கலாம். அதை ‘அறிவு– அறிதல்– அறிவு’ என ஆக்கலாம். அறிவு அறிவை அறிதலே இங்கு நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
உங்களுடைய அறிவை Knowledge என்றும் பிரபஞ்சமெனும் அறிவை The Knowledge என்றும் வகுத்துக் கொள்ளலாம். முழுமையான அறிவில் இருந்து உருவான துளியறிவு நம்முடையது. ஆயினும் அது முழுமையறிவின் ஒரு பகுதியே.
நம் அறிவு முழுமையின் ஒரு துளியே என உணர்வதுதான் மெய்மை நோக்கிய நகர்வின் முதல்படி. நம்மை வந்தடைந்த துளியில் இருந்து முழுமையை ஊகித்தறிவதும், எல்லா அறிதல்களையும் ஒன்றுடனொன்று இணைத்து முழுமைநோக்கி நகர முயல்வதுமே அதன் பாதை.
பௌத்தம் துளியறிவை விக்ஞானம் என்கிறது. முழுமையறிவை ஆலயவிக்ஞானம் என்கிறது. இணையான கலைச்சொற்கள் வேதாந்தத்திலும் உள்ளன.
ஒருவன் எந்நிலையிலும் ‘தன்’ அறிவையே அடையமுடியும். அவன் அடைவன அனைத்தும் அவனுடைய அறிவுகள் மட்டுமே.தன்னைக் கடந்து அப்பாலுள்ள அறிவை அவன் எண்ணி, தியானித்து, சென்றடையவே முடியும். அதையே விபூதி என வேதாந்தம் சொல்கிறது.
இந்த தத்துவ விளக்கத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறேன். முதன்மையாக நம் அறிவு என்பது நம் புலன்களைச் சார்ந்தது. அங்கேயே அது தன்மையம் (subjective ) கொண்டதாக ஆகிவிடுகிறது. அது உண்மையா பொய்யா என நம்மால் அறியவே முடியாது
1984-ல் நான் தொலைதொடர்புத் துறையில் பணிக்குச் சேர்ந்தபோது நிறக்குருடு உண்டா என பரிசோதனை செய்தனர். இருவருக்கு நிறக்குருடு இருந்தது. ஒருவருக்கு இரண்டு வண்ணங்கள் அறவே தெரியாது என கண்டறியப்பட்டது. ஆனால் அந்தத் தகவல் அப்போதுதான் அவருக்குத் தெரிந்தது. அதிர்ச்சியடைந்து அழத் தொடங்கிவிட்டார்.
அவர் எதை அறியவில்லை என அவருக்கு தெரியாது. தெரிந்துகொள்ளவும் முடியாது. பிறரிடமுள்ள ஒன்று தன்னிடமில்லை என்று மட்டுமே அவருக்குத் தெரிந்தது. அந்தக் குறைபாடு அவருக்கு இருப்பதாக நாம் சொல்வது வெறும் சொற்கள்தான் அவருக்கு. ஏனென்றால் அவருடைய காட்சியுலகம் முழுமையானது . அவரை பொறுத்தவரை அங்கே எந்தக்குறையும் இல்லை.
அந்த ஒருநாள் அதிர்ச்சிக்குப் பின் அவர் இயல்பாக தன் உலகில் வாழ ஆரம்பித்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அவரை வங்கி ஊழியராகப் பார்த்தேன். தொலைத்தொடர்புத்துறையில் தன்னை ‘ஏதோ’ காரணம் சொல்லி தட்டிக்கழித்தார்கள், காரணம் தான் ஒரு கன்னடன் என்று அவர் சொன்னார். அன்றுதான் நான் மெய்யாகவே மாயை என்றால் என்ன என அறிந்தேன்.
அதையே வாழ்க்கைச்சூழல், மொழி, நிலம், பண்பாடு அனைத்துக்கும் பொருத்திக் கொள்ளலாம். நம் இயல்புக்கு ஏற்ற உண்மைகளையே நாம் அறிகிறோம். நம் தேவைக்கேற்ற உண்மைகளையே அறிகிறோம். அதற்கு வெளியே உள்ள உண்மைகள் நமக்கு இல்லாதவைதான்.
எக்ஸ்ரே கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு மானுடரைப் பொறுத்தவரை முன் அப்படி ஒன்று இல்லை. எக்ஸ்ரே அறியப்பட்டதும் அது நம் உலகில் இருக்கிறது. அதைப்போல பல்லாயிரம்கோடி கதிர்கள் இப்புடவியில் இருக்கலாம். நமக்கு அவை இல்லாதவைதான். நாம் வாழும் உலகம் நாம அறிந்தவற்றைக்கொண்டு நாம் உருவாக்கிக் கொள்வது மட்டுமே.
ஆகவே நம்மிடமிருக்கும் நம் அறிவு என்பது நம்மால் ‘திரிபடைந்தது’ அல்ல, அந்த எண்ணமே பிழையானது என்று சொல்லவே இத்தனை விளக்கினேன். அது ஒன்றே நம்மால் இயல்வது. எல்லா அறிவும் அப்படிப்பட்டதே. அறிவின் இயல்பான நிலையே அதுதான். வேறெவ்வகையிலும் அறிவு இங்கே திகழமுடியாது.
ஆகவே ‘நான்’ அறவே இல்லாத தூய அறிவு ஒன்றை அடையமுடியும் என்பது நடைமுறைத் தளத்தில் இயலாதது. ஒரு வெறும் உருவகக் கருத்து அது. ஆனால் சிந்தித்ததுமே அது நம்மால் உருவகிக்கக்கூட முடியாதபடி அருவமானது என்று உங்களுக்கே தெரியும்.
எனில் நீங்கள் சொல்லும் ‘சம்மட்டி’ எங்கே வருகிறது? அது அறிவு அல்ல, அறியாமை. அறிதலின் வழியில் அப்படி ஒரு நிலை இல்லை. அறியாமலிருக்கும் நிலை அல்லது அறியமறுக்கும் நிலை அது. அறியாமைநிலை என்பது அறிதலின் ஒரு படிநிலை அல்ல. அறியாமை என்பது அறிதலுக்கு நேர் எதிரான நிலை. அறிதல் என்பது தொடர்பயணம். அறியாமை என்பது நிலைத்த தன்மை
அறிதலே மனிதனின் இயல்பு நிலை. குழந்தையாக மண்ணுக்கு வந்த மறுகணமே அது தொடங்கிவிடுகிறது. எல்லா கணத்திலும் அறிதல் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அறிதல் துயிலும்போதும் நிகழ்கிறது. மயக்கத்தின்போதும் நிகழ்கிறது. ஏனென்றால் அறிதல் வழியாகவே நாம் நம் உலகை உருவாக்கி அதில் வாழ்கிறோம். அறிதல் அழியும் கணம் நம் இருப்பும் இல்லாமலாகிறது.
அறிதலின் இன்பமே உயிர் அறியும் இன்பங்களில் முக்கியமானது. எந்த இன்பத்திலும் உள்ளடங்கியிருப்பது அறிதலின் இன்பமே. எளிய புலனின்பங்களில்கூட உள்ளுறையாக உள்ளது அறிதலே. எல்லா உள்ளங்களும் அறிதலில்தான் திளைத்துக்கொண்டிருக்கின்றன, எப்போதும். சிறிய அன்றாட வம்புகள்கூட அறிதல்களே.
ஆனால் அந்த அறிதலென்னும் ஒளிரும் பெருவெளிக்குள் மனிதர்கள் அறியாமையின் சிறிய பொந்துகளை தோண்டிக்கொண்டு அந்த இருட்டுக்குள் ஒடுங்கிக்கொள்கிறார்கள். அறியாமையை விரும்பி ஏற்று ஆடையாக, ஆபரணமாக, கவசமாக அணிந்துகொள்கிறார்கள். ஒவ்வொரு கணமும் தன்னை வந்து மோதும் அறிவை அறியாமையைக்கொண்டு தடுக்கிறார்கள். அது ஏன் என்பதை தனியாகவே யோசிக்கவேண்டும்.
அறிவின் நடுவே அறியாமையை மனிதன் தேர்ந்தெடுப்பதற்குப் பல காரணங்கள். முதன்மையாக நான்கு வகையான அறியாமைகளைச் சொல்லலாம்.
அ. பற்று. தன்னியல்பாக உயிர்களுக்கு தன்னைச்சார்ந்தவை மேல் ஒரு பற்று உண்டு. தன் நிலம், தன் உறவு, தன் உடைமைகள் என அப்பற்று பெருகிக்கொண்டிருக்கிறது. அந்தப் பற்றைப் பேணிக்கொள்ளும்பொருட்டு அவை உறுதியாக இருக்கின்றன. ஆகவே அந்தப் பற்றுக்கு எதிரானவற்றை அறிய மறுக்கின்றன. அந்தப் பற்றை நீட்டிப்பவற்றை மட்டுமே அறிகின்றன
ஆ. திரள். வேட்டையாடவும், வேளாண்மை செய்யவும், தங்களை பாதுகாத்துக்கொள்ளவும் மனிதன் காலப்போக்கில் தன்னை திரளாக உருவாக்கிக்கொண்டான். திரளாக இருப்பதற்குரிய மனநிலைகள் உருவாகி நிலைகொண்டன. திரளாக நீடிக்கத் தேவையானவற்றை ஏற்றுக்கொண்டு பிறவற்றை மறுக்கும் அறியாமையை அவன் உருவாக்கிக்கொண்டான்
இ. அடையாளம். பரிணாமத்தின் ஒரு கட்டத்தில் மனிதன் தீவிரமான இருத்தலியல் சிக்கலை அடைந்தான். தன்னை அவன் வரையறுத்து, அடையாளப்படுத்தியாக வேண்டியிருந்தது. ‘நான் இன்னார்’ என அவன் சொல்லியாகவேண்டும். அவ்வாறாக இனம், மதம், மொழி, நாடு, சாதி என பலவகையான அடையாளங்களை உருவாக்கிக் கொண்டான். அந்த அடையாளங்களை பேணவும் வளர்க்கவும் தேவையானவற்றை ஏற்று மற்றவற்றை நிராகரிக்கும் அறியாமையை அவன் வளர்த்துக்கொண்டான்
ஈ. தன்முனைப்பு. அறிவு வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் மனிதர்கள் ஒவ்வொருவரும் தனக்கான தன்முனைப்பை (Ego) உருவாக்கிக் கொண்டார்கள். நவீன நாகரீகம் என்று நாம் சொல்வது தன்முனைப்பு நிலைகொண்டபின் உள்ள காலகட்டத்தைத்தான். தன்முனைப்பை மேலும் மேலும் வளர்ப்பதே நவீனநாகரீகத்தின் வளர்ச்சிப்போக்காகவும் உள்ளது. தன்முனைப்பின் விளைவாக தன் அறிதலே உண்மை என்று எண்ணி எஞ்சியவற்றை மறுக்கும் அறியாமை உருவாகிறது
இவை ஒவ்வொன்றும் மானுடப்பரிணாமத்தின் ஒவ்வொரு காலகட்டம் சார்ந்தவை. முதல் அறியாமை மனிதனின் கற்காலத்தைச் சேர்ந்தது. இரண்டாவது அறியாமை பழங்குடிவாழ்வு சார்ந்தது. மூன்றாவது சமூகம் உருவானபின் வலுப்பெற்ற அறியாமை. நான்காவது நவீன காலகட்டத்திற்குரிய அறியாமை.
நம்மிடம் இந்த நான்கு அறியாமைகளும் ஒரேசமயம் இருந்துகொண்டிருக்கின்றன. நவீன காலகட்டத்தில் நாம் முந்தைய மூன்று அறியாமையையும் தன்முனைப்பு என்னும் நான்காவது அறியாமையால் வளர்த்துக்கொள்கிறோம். நம்மிடமிருப்பது வெறும் திரள்மனப்பான்மையாக இருக்கும். அடையாளச்சார்பாக இருக்கும். ஆனால் அதை நம் தனிப்பட்ட தன்முனைப்பால் ஆழமாக நிலைநிறுத்திக்கொள்கிறோம்.
நவீன காலகட்டத்தில் உருவான தன்முனைப்புக்கு நீண்ட வரலாற்றுப் பின்னணி உண்டு. பதினேழாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பாவில் தனிமனிதன் என்னும் கருத்துருவம் தத்துவார்த்தமாக வலுவாக நிலைநாட்டப்படலாயிற்று. தனிமனிதனின் வாழ்க்கைச் சுதந்திரம், தனிமனிதனின் சிந்தனைச் சுதந்திரம், தனிமனிதனின் ஆன்மிகத்தேர்வு ஆகியவை முன்வைக்கப்பட்டன. சமூகம் என்பதே தனிமனிதர்களின் கூட்டு என வரையறை செய்யப்பட்டது. அந்த சமூகத்தின் போக்கை தீர்மானிப்பதில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டது. அதுவே ஜனநாயகம்.
அந்த தனிமனிதன் என்னும் உருவகம் மெல்ல தன்முனைப்பாக உருமாறியது. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை ஒரு கருத்துநிலையாக உருவகித்துக் கொள்ளலானான். ஆனால் உண்மையில் அவனுக்கென தனிக்கருத்துக்களோ சுதந்திர நிலைபாடோ இல்லை. அவன் கருத்துக்களையும் நிலைபாடுகளையும் வெளியே இருந்தே பெற்றுக்கொள்கிறான். வெவ்வேறு அதிகார சக்திகள், வணிக சக்திகள் அவனுடிஅய கருத்துக்களையும் நிலைபாட்டையும் வடிவமைக்கின்றன. ஆனால் அவன் அதை அறிவதில்லை. ஏனென்றால் அவன் தன்முனைப்பால் தன் அறியாமையை தேர்வுசெய்திருக்கிறான். அறியும் வழிகளை மூடிவிட்டிருக்கிறான்.
நவீன காலகட்டத்தில் தனிமனிதர்களின் சுதந்திரம் என்பது தன்முனைப்பாக உருமாறியிருப்பதனால் உறவுச்சிக்கல்கள் உருவாகின்றன . எவரும் எவருடனும் ஒத்துப்போக முடிவதில்லை. ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான நிலைபாடுகளும் பிடிவாதங்களும் உள்ளன. அப்படி இருப்பதே தனித்தன்மை, சுதந்திரம், தன்னடையாளம் என்னும் மனநிலை உள்ளது. விளைவாக மனிதர்கள் மேலும் மேலும் தனித்தவர்களாக ஆகிக்கொண்டே இருக்கிறார்கள்.
அந்தத் தனிமை உருவாக்கும் சிக்கல்கள் இன்றைய சமூகத்தில் பலவகையில் வெளியாகின்றன. உழைப்புக்கு அடிமையாதலே அதன் முதல் வெளிப்பாடு. தனிப்பட்ட நேரமே இல்லாமல் பணிபுரிதல். இரண்டாவதாக, நுகர்வுக்கு அடிமையாதல். இரண்டும் ஒன்றுடனொன்று தொடர்புடையவை. நுகர்வில் பெரிய பெரிய திட்டங்களை போட்டுக்கொள்ளுதல், அதற்கேற்ப உழைத்தல் என அவ்விரு விசைகளும் ஒன்றையொன்று வளர்க்கின்றன.
தனிமையின் அடுத்த வெளிப்பாடு மிதமிஞ்சிய கேளிக்கை. மனிதகுல வரலாற்றில் மனிதனுக்கு இந்த அளவுக்கு கேளிக்கை கிடைத்ததே இல்லை. கேளிக்கை ஒரு உச்சகட்ட நுகர்வாக ஆகிறது. ஒரு கட்டத்தில் கேளிக்கை சலிப்பூட்டும், அது சூதாட்டம் நோக்கி ஈர்க்கும். முதல் உலக நாடுகளில் சூதாட்டம் மொத்த சமூகத்தையும் ஆட்படுத்தி வைத்துள்ளதன் மூலகாரணம் தன்முனைப்பின் விளைவான தனிமை.
சென்ற முப்பதாண்டுகளில் செய்தித்தொடர்பு பெரும் வளர்ச்சி பெற, அதுவே ஒரு கேளிக்கையாக உருமாறியது. அதன் விளைவே சமூக வலைத்தளங்களின் உலகம். அது செய்தித்தொடர்பு, கருத்துப் பரிமாற்றம் என்று தோன்றும். ஆனால் உண்மையில் அது கேளிக்கைதான். கேளிக்கையின் அடிப்படை இயல்பு என்பது அக்கணம் மட்டுமே உண்மை, நேற்றும் நாளையும் இல்லை என்பது. அதுவே சமூகவலைத்தளப் பகிர்வுகளிலும் உள்ளது.
சூதாட்டத்தின் மனநிலையை ஆய்வாளர்கள் விரிவாக ஆராய்ந்துள்ளனர். அதன் அடிப்படை தன்முனைப்பே. தன்னுடைய தனித்திறமையாலோ அல்லது தனக்கு மட்டுமே உள்ள ‘அதிர்ஷ்டத்தாலோ’ பிறருக்கு இல்லாத ஒரு நல்வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என ஒருவன் நம்புவதே அவனைச் சூதாட வைக்கிறது. லட்சம்பேர் தோற்கும் இடத்தில் வெல்பவன் என சூதாடி தன்னைப் பற்றி நம்புகிறான்.
அந்த மனநிலை சமூகவலைத்தளங்களிலும் உள்ளது. அங்கே ஒவ்வொருவரும் தங்கள் தன்முனைப்பையே முன்வைக்கிறார்கள். சொல்லும்படியான எந்த தனித்தன்மையும் இல்லாதவர்கள், எந்த தளத்திலும் எந்தப் பங்களிப்பும் இல்லாதவர்கள் கூட சமூக வலைத்தளங்களுக்கு வந்ததும் உலகையே மதிப்பிடுபவர்களாக, விமர்சிப்பவர்களாக, தீர்ப்பளிப்பவர்களாக தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். தங்கள் படங்களை வெளியிட்டு மகிழ்கிறார்கள்.
இந்த தன்முனைப்பின் அடுத்த கட்டமாக தங்களுக்கென தனித்தன்மையும், புகழும், சாதனைகளும் கொண்டவர்களை வெறுக்கவும் அவமதிக்கவும் வசைபாடவும் முயல்கிறார்கள். அதன்பொருட்டு தங்களைப்போன்றவர்களுடன் இணைந்து ஒரே திரளாக ஆகிறார்கள். அப்படி திரளாக ஆவதற்காகவே அவர்கள் ஏதேனும் அரசியல் கொள்கைகளையோ அமைப்புகளையோ சார்கிறார்கள். மதம் சாதி இனம் போன்ற அடையாளங்களை சூடிக்கொள்கிறார்கள். அல்லது பொதுவான அரசியல் சரிநிலைகளை பேசி ஒன்றாகத் திரள்கிறார்கள்.
இந்தத் தன்முனைப்பு உருவாக்கும் அறியாமையையே நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். ஒருவர் அறியாமைக்குள் நுழைந்து உள்ளே தாழிட்டுக்கொண்டார் என்றால் அறிவு வந்து கதவைத் தட்டத்தான் முடியும், உடைத்து உள்ளே செல்ல வழியே இல்லை.
(மேலும்)