பனிமனிதன், ஒரு வாசகன்

பனிமனிதன் வாங்க

அன்புள்ள பனிமனிதன் ஆசிரியருக்கு,

வணக்கம். நான் கபிலன்,கோவையிலிருந்து எழுதுகிறேன். பத்தாம் வகுப்புத்தேர்வு எழுதியுள்ளேன். பனிமனிதன் என்ற புதினத்தை வாசிக்கும்போது மனதில் புத்துணர்ச்சி உண்டானது. அதை வாசிக்கும்போது பனிமனிதன் யார் ? என்றும் அவன் எந்தவகையான குரங்கு மனிதன் என்றும் ஐயம் தோன்றியது.

பாண்டியன் எழுப்பும் சில கேள்விகளுக்கு திவாகர் கூறிய விளக்கம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. பனிமனிதனை கண்டுபிடிக்கும் பயணத்தில்  வைரப்பாறையை கண்டதும்  சிறிதளவும் ஆசை கொள்ளாமல் கிம் பாண்டியனுக்கும் ,திவாகருக்கும் அறிவுரை கூறியது கிம் மீது எனக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டது

நல்வாய்ப்பாக,திவாகர் பாண்டியனின் பனிமனிதன் பற்றியதான அறிக்கையை தடுத்தார். பாண்டியன் தனது கடமையை செய்திருந்தால் பனி மனித இனம் பேராபத்தை சந்தித்திருக்கும்.

திவாகரன் கண்டுபிடிப்புகள் பனிமனிதனை தேடிப்போவதற்குபெரிதும் உதவியது. குறிப்பாககுளிரை தாங்கும் விஷேஷ உடைகள் இயங்கும் நுட்பத்தை அறிந்தால் வியப்பாக உள்ளது. இறுதியில் , கிம் தான் அடுத்த மகா லாமா என்ற செய்தி பாண்டியன் மற்றும் திவாகர் ஆகியோர் மட்டுமல்லாமல் வாசித்த எனக்கும் அதிர்ச்சியை தந்தது.மேலும்,புத்த மதத்தின் நம்பிக்கையின் படி புத்தர் மைத்திரேயர் ஆக மறுபிறவி எடுப்பார் என்றும் அவர் பனிமனித இனத்தில் இருந்து வருவார் என்பது எனக்கு ஒரு புதிய தகவலாக இருந்தது .பனிமனிதனுக்கு அடிமனம் இருப்பதால் தான் அவனுக்கு பேசுவதற்கு தேவை இல்லாமல் போயிற்று. பனிமனிதனுக்கு நான் என்ற உணர்வு இல்லாததுதான் இதற்கு சாத்தியமாக இருந்தது என்று நான் எண்ணுகிறேன்.

பனிமனிதன் வாழும் காட்டில் பரிணாம வளரச்சி அடையாத உயிரினங்களை தோற்றம் நகைப்புக்கு உரியதாக இருந்தது.இந்த புதினத்தை படித்து முடித்தவுடன் பயணங்கள் மூலம் நாம் தெரிந்துகொள்ளும் புதிய செய்திகளும்பார்க்கும் புதிய நண்பர்களும் இக்காலத்தில் உள்ள மன அழுத்தத்தில் இருந்து நம்மை விடுவிக்கும் மருந்தாக உள்ளது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

இக்கதையை என் நண்பர்கள் மூவருக்கு சொன்னேன் அவர்களும் இக்கதையை விரும்பிக்கேட்டனர். இதுபோன்று அருமையான கதைகளை நிறைய எழுதவும். இப்போது  தங்களின் யானை டாக்டர் நூலை ஆரம்பித்துள்ளேன்.

நன்றி வணக்கம்

கபிலன்

கோவை.

அன்புள்ள கபிலன்,

நீங்கள் பனிமனிதன் நாவலை வாசித்தமை மகிழ்ச்சி அளிக்கிறது.

இனி வரும் குழந்தையிலக்கியங்கள் அறிவியல்தன்மை கொண்டவையாக இருப்பதுடன் தத்துவத்தையும் தரிசனத்தையும் இணைத்துக்கொண்டு வெளிப்படவேண்டும் என 1998ல் எண்ணினேன். அன்று அத்தகைய சிறுவர் இலக்கியங்கள் இருக்கவில்லை. அப்போதைய தலைமுறையை விட இருபத்தைந்தாண்டுகள் கழித்து இன்று வரும் தலைமுறைக்கு பனிமனிதன் அணுக்கமாக இருப்பதைக் காண்கையில் என் கணிப்பு சரியானது என்று புரிந்துகொள்கிறேன். குறிப்பாக நீங்கள் பனிமனிதனின் தனித்த மனம் இல்லாத தன்மையைப் பற்றிச் சொல்லியிருக்கும் அவதானிப்பு எனக்கு மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது

ஜெ

முந்தைய கட்டுரைவெய்யோனொளியில்
அடுத்த கட்டுரைநின்றெரியும் சுடர்- சுதா ஶ்ரீநிவாஸன்