அண்ணா ஹசாரே- ஊழலை மேலிருந்து ஒழிக்கமுடியுமா?

அன்புள்ள ஜெ,

முன்பே சிலர் கேட்ட கேள்விகளில் உள்ள ஒரு விஷயத்துக்கு நீங்கள் பதிலே சொல்லவில்லை என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதாவது ஊழலை ஒழிக்க மேல்மட்டத்தில் இருந்தா நடவடிக்கை எடுப்பது? கீழ்மட்டத்திலேதானே ஊழல் உள்ளது? கீழிருந்துதானே நடவடிக்கைகளை எடுக்க முடியும்? மக்கள் ஊழல் நிறைந்தவர்களாக இருக்கும்போது எப்படி மேல்மட்டத்திலே ஊழல் கண்காணிப்புக்காக ஓர் அமைப்பை உருவாக்கி ஊழலை ஒழிக்கமுடியும்? ஆகவே லோக்பாலால் என்ன பிரயோசனம்? நாம் ஒவ்வொருவரும் ஊழல் செய்யமாட்டோம் என்று நினைக்காமல் எப்படி ஊழலை ஒழிக்கமுடியும்?

சாமிநாதன், சென்னை

அன்புள்ள சாமிநாதன்,

இந்த கேள்வியை அண்ணாவின் போராட்டத்தை ஐயப்படுவதற்குப் பதிலாக ‘இதற்கு என்ன செய்வது?’ நீங்கள் கேட்டுக்கொண்டாலே போதும் எளிதாக முடிவுக்கு வந்துவிடலாம்.

கீழ்மட்டத்திலே ஊழல். சரி, அதற்கு என்ன செய்வது? கீழ்மட்டத்து ஊழல்களை எப்படி கண்டுபிடிப்பது? எப்படி தண்டிப்பது? யார் தண்டிப்பது? அதற்கு மேலே உள்ள ஒருவர்தானே? அதற்கும் மேல் அதற்கும் மேல் என்றுதானே அந்த கண்காணிப்பும் தண்டிப்பும் இருக்க முடியும்? ஆக, மேல்மட்டத்தில் இருந்து மட்டும்தானே ஊழல்களை கண்காணிக்கவும் தண்டிக்கவும் முடியும்? மேல்மட்டமே ஊழல்நிறைந்ததாக இருந்தால் கண்காணிப்பு குறையும். கண்காணிப்பு குறைகையில் ஊழல் பெருகும். இதுதானே உண்மை?

இந்தியசமூகம் மன்னராட்சியில் இருந்து ஜனநாயகத்திற்கு வந்து அரைநூற்றாண்டே ஆகிறது. நாம் ஊழலற்ற ஜனநாயகநாடுகளாக கருதும் பலநாடுகள் இருநூறு வருடங்களாக ஜனநாயகத்தில் ஊறியவை. மன்னராட்சியில் மன்னர் கேள்விக்கு அப்பாற்பட்ட அதிகாரம் கொண்டவர். அவர் எது செய்தாலும் சரி. அவருக்கு நெருக்கமானவர்கள் எல்லா அதிகாரமும் கொண்டவர்கள்.

மன்னராட்சியில் மன்னருக்கு காணிக்கை கொடுத்து காரியங்க ளை சாதிப்பது தர்மம்தான். அங்கே சமத்துவம் சமவாய்ப்பு என ஏதும் கிடையாது. ஒருவனுக்கு தகுதி உள்ளது இன்னொருவருக்கு மன்னர் அல்லது மன்னரின் உறவினர் அல்லது மன்னரின் வைப்பாட்டியின் ஆதரவு இருக்கிறதென்றால் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்? அந்தக் கேள்விக்கே அன்று இடமில்லை. அதுதான் அன்றைய நியாயம்.

நாம் அதற்குப் பழகியவர்கள். அந்த மனநிலையே பிரிட்டிஷார் ஆட்சியிலும் நம்மை இயக்கியது. துரைத்தனத்தார் எது செய்தாலும் சரி. அவர்களின் கருணையே வெற்றிக்கான வழி. அப்படியே நாம் ஜனநாயகத்துக்குள் வந்தோம். அந்த மனநிலையே இன்று நம்மை ஊழலை ஆதரிப்பவர்களாக ஆக்குகிறது.

அந்த மனநிலை கொண்ட இந்தியாவில் சுதந்திரம் கிடைத்த இருபதாண்டுக்காலத்தில் கிட்டத்தட்ட ஊழலற்ற ஆட்சி நிலவியதே எப்படி? மேல்மட்டத்தில் இலட்சியவாதிகளான ஆட்சியாளர்கள் இருந்தார்கள். அவ்வளவுதானே? மக்களின் மனநிலை அப்படித்தானே இருந்தது? மக்கள் எப்படி அன்று ஊழலுக்கு வெளியே இருந்தார்கள்? வெள்ளைய ஆட்சியில் ஒரு தாசில்தார் பத்துவருடத்தில் பத்துவீடு வாங்க முடியும். சுதந்திரம் கிடைத்த இருபதாண்டுக்காலத்தில் அப்படி நிகழவில்லையே. ஏன்? மேலிடத்தில் இருந்து கண்காணிப்பு இருந்தது. மேலிடத்தில் இருந்து கட்டுபாடு கீழே இறங்கி அடித்தளம் வரை வந்தது

ஏன் சமகாலத்தையே பார்ப்போம். லாலுவின் ஆட்சிக்காலத்தில் இருந்த அதே பிகாரி மக்கள்தானே இன்றும் இருக்கிறார்கள். அன்றிருந்த கட்டற்ற ஊழல் இன்று கீழ் மட்டம் வரை எப்படி குறைந்தது? மேலிடத்தில் நெர்மையாக இருக்க முயலும் நிதீஷ்குமார் என்ற முதல்வர் வந்துசேர்ந்தார் , அவ்வளவுதானே?

ஊழலை மேலிருந்தே ஒழிக்கமுடியும். எந்தெந்த நாடுகளிலெல்லாம் ஊழல் கட்டுக்குள் வந்ததோ அங்கெல்லாம் அப்படித்தான் நிகழ்ந்தது. அமெரிக்காவையோ ஐரோப்பாவையோ எடுத்துப்பாருங்கள். ஊழலுக்கு எதிராகக் கிளர்ந்த ஒருசிலர் ஒரு மக்களியக்கமாக ஆகிறார்கள். அந்த இயக்கம் மக்கள் மனநிலையை மாற்றுகிறது. மக்கள் அதற்கேற்ற ஆட்சியாளர்களை உருவாக்குகிறார்கள். அந்த ஆட்சியாளர்கள் ஊழலை மேலிருந்து கட்டுப்பபடுத்துகிறார்கள்.

இந்தியாவிலேயே அந்த மாற்றம் வந்துகொண்டிருப்பதை நீங்களே பார்க்கலாம். சென்ற தலைமுறை அரசியல்வாதிகளான அந்துலே, கர்பூரிதாகூர், கருணாநிதி, குண்டுராவ் , நந்தினி சத்பதி, அளவுக்கு ஊழலில் புழுத்த ஆட்சியாளர்கள் பின்னகர்ந்துவிட்டார்கள் என்பதே உண்மை. பெருமளவு ஊழல்குற்றச்சாட்டுகள் இல்லாத நிதீஷ்குமார், நரேந்திரமோடி, உம்மன்சாண்டி போன்றவர்களே மக்கள் ஆதரவை பெறுகிறார்கள். எதியூரப்பா போன்றவர்கள் விரட்டப்படுகிறார்கள். விரைவிலேயே இந்த போக்கு இன்னும் வலுப்பெறும். அதற்கு அண்ணா ஹசாரே போன்றவர்கள் உருவாக்கும் மக்களியக்கம் மூலம் திரண்டுவரும் மக்கள் கருத்து காரணமாக அமையும். நம் அவநம்பிக்கை அறிவுஜீவிகளால் அந்த எண்ண அலை தோற்கடிக்கப்படாமலிருக்கவேண்டும்.

அன்றாட ஊழல் முழுமையாக அழியும் பொற்காலம் வருமென நான் நினைக்கவில்லை. அது மனித பலவீனங்களே இல்லாமல், காமகுரோதமோகங்கள் அழிந்த கிருதயுகம் பிறக்கும் என நம்பும் அறியாமை மட்டுமே. மேலைநாடுகளில் கூட கடுமையான மின்னணுக் கண்காணிப்பும் தண்டனைகளும்தான் அன்றாட ஊழலை கட்டுப்படுத்தி வைக்கின்றன. ஊழல் செய்தால் வாழ்க்கையே அழிந்துவிடக்கூடும் என்ற அபாயமே கட்டுப்படுத்தும் சக்தியாக இருக்கிறது அங்கே.

மேல்மட்டத்திலும் ஊழல் முற்றாக ஒழியும் ஒரு பொற்காலம் எங்கும் வராது. முதலாளித்துவம் ஊழலால் ஆனதென்றால் கம்யூனிசம் கட்டற்ற ஊழலால் ஆனது. அதிகாரம் ஊழலுடன் ஒருவகையில் பின்னிப்பிணைந்தது. ஆனால் மக்கள்நலத்திட்டங்களில், அடிப்படைக் கட்டுமானங்களில் பெரும் ஊழல் நிகழ்வதென்பது நாட்டின் வளர்ச்சியை தேக்கிவிடும். ஏற்றத்தாழ்வை வளர்க்கும். அங்கே ஊழலை கட்டுப்படுத்துவதே இன்றைய தேவை.

அதை நிகழ்த்தும் ஒரு மக்கள் சக்தி உருவாக இந்த வகையான போராட்டங்கள் வழிவகுக்கும். எல்லா மாற்றங்களும் இத்தகைய தொடர் போராட்டங்கள் மூலம் நிகழவன என்றே வரலாறு காட்டுகிறது

ஜெ

அண்ணா ஹசாரே கட்டுரைகளின் ஆங்கில மொழியாக்கம்

அண்ணா ஹசாரே ஜனநாயகக் கேள்விகள்

அண்ணா வெல்வாரா?

அண்ணா ஹசாரேவின் அரசியல்

அண்ணா ஹசாரே மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?

அண்ணா எதிர்வினைகள்

அண்ணா ஹசாரே,ஞாநி,சோ

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2

அண்ணா ஹசாரே கடிதங்கள்..

அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…

அண்ணா ஹசாரே,வசைகள்

அண்ணா ஹசாரே-2

அண்ணா ஹசாரே-1

முந்தைய கட்டுரைஅருந்ததியின் பொய்கள்
அடுத்த கட்டுரைஅண்ணா ஹசாரேவும் ஆர்.எஸ்.எஸ்ஸும்