வெய்யோனொளியில்

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

சமீபத்தில் வெண்முரசின் ஒன்பதாம் நாவலான வெய்யோனை படித்து முடித்தேன். அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நாவலின் தொடக்க அத்தியாயங்கள் துயர் மிகுந்ததாய் இருந்தது. கர்ணன் தன் மனைவியராலும் நாட்டு மக்களாலும் இகழ்ச்சிக்கும் புறக்கணிப்புக்கும் ஆளாகும் போது அந்த வலியை நானும் உணர்ந்தேன். பிறரின் நலம் பொருட்டே எண்ணும் அவனை தங்கள் கணக்குகளுக்கு ஏற்ப பிறர் பயன் படுத்திக்கொள்கின்றனர். தன் தாயிடமும் தோற்று உடனே அவள் துயரை போக்க நகையாடும் அவன் உள்ளம் வியப்பூட்டும் வகையில் அன்பு நிறைந்ததாக இருந்தது. அங்க நாட்டில் அவனுக்கு துணையாக அமைச்சர் ஹரிதரும் அணுக்கர் சிவதரும் மட்டுமே உள்ளனர்.

கலிங்க அரசியை கவர கர்ணனும் துரியோதனனும் செல்லும் பயணம் நல்ல உற்சாகமூட்டும் சாகச அனுபவமாக இருந்தது. சுப்ரியை மற்றும் அவளது சேடியால் செய்யப்படும் தொடர் அவமதிப்பை கர்ணனால் தாங்க முடிந்தாலும் என்னால் முடியவில்லை. இறுதியில் கெளரவன் சுஜாதன் அந்த சேடியை நொறுக்கும் விதமாக கூறும் வஞ்சினம் கண்ணீரை வரவழைத்தது. கர்ணன்  மீது கெளரவர்களுக்கும் கர்ணனுக்கு அவர்கள் மீதும் எவ்வளவு அன்பு உள்ளது என்பதை கர்ணன் மீண்டும் அஸ்தினபுரி செல்லும் போது உணர முடிந்தது. தன்  தாயின் அன்பை விட மேலான ஒன்றை அவன் பானுமதியிடமிருந்து பெறுகிறான்.

இளைய கெளரவர்கள் தோன்றும் அத்தியாயம் பெரும் உவகையை அளிக்கும் மங்கல அத்தியாயமாய் இருந்தது. அதை மட்டும் நான் பலருக்கு அனுப்பி படிக்கவைத்தேன். வெண்முரசின் ஒரு இனிய துளியை அவர்களும் சுவைத்தனர்.

நாவலில் குந்தி நேரடியாக தோன்றாவிட்டாலும் கர்ணனுக்காக அவள் விடுக்கும்  அழைப்புகளும் அளிக்கும் சிறப்புகளும் அவள் இருப்பை உணர்த்தியது. தன் மைந்தர் அனைவரும் இந்திரப்பிரஸ்த விழாவில் சிறப்பு கொள்ள வேண்டும் என அவள் விழைகிறாள். ஆனால் அவளது அரசியல் ஆசையால் கர்ணனை அவளால் முழுதாக, வெளிப்படையாக ஏற்க முடியாத நிலையில் கெளரவர்களின் பூரண அன்பில் இருக்கும் கர்ணன் அவளது அழைப்பை நிராகரித்ததில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

துச்சளையை மணந்த ஜயத்ரதனின் பின்ணணிக்கதையும் சுவாரஸ்யமாக இருந்தது. அக்கதையை கேட்ட பின் அவன் கர்ணனுக்கும் எனக்கும் அணுக்கமானவனாக ஆகிவிட்டான். எதிர்பாராத விதத்தில் தோன்றும் ஜராசந்தன் தன் சாமர்த்தியமான சிறு செயல்களால் பாண்டவர்களையும் கெளரவர்களையும் சேரவிடாமல் தடுக்கிறான். துரியோதனனுக்கும் ஜராசந்தனுக்குமான மல்யுத்த போரின் இறுதியில் அவ்விரு மாமல்லர்களையும் இரு கையால் கர்ணன் தூக்கி வீசும் கணம் இந்த நாவலின் “Iconic Moments” களில் ஒன்று. என் மனதில் இருந்த கர்ணனின் உடல் பற்றிய சித்திரத்தையே அது மாற்றிவிட்டது.

பேரன்புடனும் பெருந்தன்மையுடனும் அணுகிய துரியோதனனின் அன்பை நிராகரித்த பீமன் மற்றும் அர்ஜுனன் மீது நாவில் முடிவில் சிறு விலக்கமும் வெறுப்புமே ஏற்பட்டது.

காண்டவக்காடு எரிக்கப்பட்டதன் கதை வெவ்வேறு வகையில் நாவலில் கூறப்படுகிறது. அத்துடன் நாகர்களின் மொத்த புராண வரலாறும் வருகிறது. அனலோனின் வஞ்சம் துர்வாச குலத்திற்கு சென்று அங்கிருந்து திரௌபதியிடம் சென்று இறுதியாக கண்ணன் மற்றும் பார்த்தனால் நிறைவடைவது வஞ்சங்களின் பேராற்றலை உணர்த்தியது. இந்திரனால் காக்கப்படும் தட்ச நாகர்கள் இறுதியில் இந்திரன் மைந்தன் பார்த்தனாலேயே கொல்லப்படுவது ஊழின் விளையாட்டாக தோன்றியது. துரியோதனன் பலராமரிடம் பேசிமுடிக்கும் முன் நீர் மாளிகை ஒளிகொள்வதும், பார்த்தன் இறுதி நாக இளவரசனான அஸ்வசேனனை கொல்லாமல் விடும் தருணமும்  ஊழ் விளையாடும் பிற கணங்ளாக தோன்றியது.

கர்ணனை  என்றும் பின்தொடரும் நாகபாசன் மொத்த குருகுலத்தில் தலைமையையும் அவன் வாழ்வின் அனைத்து தளைகளிலிருந்து விடுதலையையும் அளித்தும்  அதை உதறி நாக  இளவரசன் அஸ்வசேனனை தன மைந்தனாக ஏற்று அந்த மக்களுக்காக வஞ்சத்தை கர்ணன் ஏற்கும் தருணம் கண்ணீரை வரவழைத்து கர்ணனை பேரறத்தானாக மனதில் நிலை நிறுத்தியது.

அன்புடன்

கார்த்திக்

கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில்

பி.கு: இந்திரப்பிரஸ்தத்தின் விழாவில் ஜயத்ரதன் மிரண்டு போகும் அளவிற்கு ஜராசந்தன் அப்படி என்ன சொன்னான் என்று என்றாவது நீங்கள் கூறுவீர்கள் என்று நம்புகிறேன் !!

முந்தைய கட்டுரைஅஞ்சலி: மருத்துவர் மகாதேவன்
அடுத்த கட்டுரைபனிமனிதன், ஒரு வாசகன்