பள்ளியில்…கடிதம்

தல்ஸ்தோய் ஒரு பள்ளியில்

அன்பிற்கினிய ஜெ,

பள்ளி ஆசிரியர்கள் பற்றிய உங்கள் கருத்துக்களில் பெரும்பாலும் உடன்படுகிறேன். ஆனால் சில விதிவிலக்குகள் உண்டல்லவா.

என் மகள் சென்னையில் ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் The School – இல் படிக்கிறாள். அவள் பள்ளியில் ஜெயமோகன் என்னும் தலைப்பில் ஒரு அசெம்பிளி நடந்துள்ளது. உங்கள் வாசகர்களாக உள்ள  சில ஆசிரியர்கள் அதை நடத்தி இருக்கிறார்கள்.

கிரிஜா அக்கா அறம் தொகுப்பில் மூன்று கதைகளை மாணவர்களுக்குச் சொல்லியிருக்கிறார். வெண்முரசின் பிரம்மாண்டம் பற்றி விளக்கி இருக்கிறார்கள்.

என் மகளுக்கு எத்தனையோ முறை அறம் சிறுகதைகள், வெண்முரசு பற்றி சொல்லி இருக்கிறேன். ஒரு முறை கூட சிரத்தையாக கவனித்ததில்லை. பள்ளியில் ஆசிரியர் சொன்னபின் அவள் என்னிடமே வந்து “Do you know ? Writer Jeyamohan has written the world’s longest novel ” என்று சொன்னாள். சோற்றுக்கணக்கு கதையை சற்று சுருக்கமாக கூறினாள். மகிழ்ச்சியாக இருந்தது.

உங்களுடன் பகிர விரும்பியதால் இந்த கடிதம் .

மிக்க அன்புடன்

உதயசங்கர் 

அன்புள்ள உதயசங்கர்

முன்பு கர்நாடகத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அங்கே பள்ளிக்கு வெளியில் அவர்களின் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படங்களை வரைந்து வைத்திருப்பதைக் கண்டேன். (மாமங்கலையின் மலை )

அது ஒரு பெரிய விஷயம் என்று தோன்றியது. ஏனென்றால் பள்ளி என்பது குழந்தைகளின் மனதில்அதிகாரபூர்வமானஒன்று என்று தோன்றுகிறது. அங்கே சொல்லித்தரப்படுபவைவரலாறுஎன தோன்றுகிறது.

யானைடாக்டர் கதை பள்ளிப்பாடத்தில் வந்தபின் சிறு குழந்தைகள் என்னை வியப்புடன் பார்ப்பதை , என்னிடம் பேசமுற்படுவதை காண்கிறேன். அந்த அடையாளம் காணல் மெய்யாகவே மகிழ்ச்சி அளிப்பது.

இங்கே அரசியல்வாதிகளே மீளமீள முன்வைக்கப்படுகிறார்கள். எழுத்தாளர்கள், குறிப்பாக வாழும் எழுத்தாளர்கள் முன்வைக்கப்படுவது நல்லதுதான். குழந்தைகளின் மனம் அதை வியப்புடன் தொட்டறிகிறது. எதிர்காலத்தில் எப்படி ஆகவேண்டும் என்னும் கனவு குழந்தைகளின் உள்ளத்தில் கொந்தளித்தபடி உள்ளது. சிலருக்காவது அறிவியக்கம் என ஒன்று உண்டு, அதில் ஈடுபடவேண்டும் என்னும் ஊக்கம் உருவானால் நன்று

ஜெ

முந்தைய கட்டுரைதமிழ், ஆங்கிலம் – கடிதம்
அடுத்த கட்டுரைசக்திதாசன் சுப்ரமணியன்