மேடையில் நிகழும் உள்ளம்

அன்பு ஜெ.,

ஒரு பத்திரிக்கையாளனாக எனக்கு அறிமுகமுள்ள மூன்று மொழிகளிலும் பல்வேறு மேடையுரைகளை கேட்டு இருக்கிறேன். அரசியல், இலக்கியம், சினிமா, அறிவியல் என்று பல துறைகள். அது எவ்வளவு நீண்ட உரை என்றாலும் அவர்கள் சொல்ல வரும் அசல் அல்லது புதிய விஷயத்தை வெறும் பத்து நிமிடத்துக்குள் சுருக்கி விடலாம். மற்றதெல்லாம் தவிடாகத்தான் போகும். அரசியில் உரைகள் இன்னும் மோசம். கேட்பவர்களின் மேல் ஒரு மரியாதையும் இருக்காது. ஏதேதோ உளறி கொட்டுவார்கள். அதில் இருந்துலீடுபிடிப்பது பெரும்பாடு. ஆனால், உங்கள் உரை ஒரு அற்புதமான பயணம் போல் இருந்தது. ஒரே சமயத்தில் கடலின் ஆழங்களுக்கும், விண்ணின் உச்சங்களுக்கும் உங்களால் எங்களை கொண்டு சேர்க்க முடிந்தது.

உரையில் ஒரு சொற்றோடர், ஒரு வாக்கியம்எதிலுமே சக்கையென்று சொல்ல தக்கது எதுவும் இல்லை. ஆரம்பம் முதல் கடைசி வரி வரை உங்களுடன் கைகோர்த்து பல அற்புதங்களை கண்ட அனுபவம். தொட்டு சென்ற ஒவ்வொரு விஷயமும் மனதில் நட்டிய விதைதான். மனதில் அவை எப்படி முளைத்து வருமென்று பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

இலக்கிய, அறிவியல் கருத்தரங்குகள் போல் அல்ல உங்களின் இந்த கட்டண உரை. அவைகள்பல முன்னோட்டங்களுக்கு பிறகு மிகவும் நேர்த்தியாக வடிவமைக்க பட்டவை.  அரங்கில் இருப்பவர்களுக்கு முன்னதாகவே கொடுக்கும் உரை குறிப்புக்கு அப்பால் முன் செல்ல மாட்டார்கள். அதிகபட்சம்ஓரிரரண்டு வாக்கியங்களை சொல்வார்கள்.  உங்கள் உரைதலைப்பை தவிர வேறு எதுவும் முன்கூட்டியே நிர்ணயித்தது அல்ல. வெறும் ஒரு வரைபடத்தை வைத்துக்கொண்டு ஒரு மாடமாளிகையை நீங்கள் கட்டி எழுப்புவதைதான் நான் பார்த்தேன்.  அதில் எதிர்ப்படும் மிக சிறு தடுமாற்றங்கள், பிசிறுகள் உரைக்கு மேலும் ஜீவத்தை தருகின்றன. நிகழ்வை அசலான கலையாக மாற்றுகின்றன. கர்நாடக இசையின் பெரும் பாடகர்கள் நிகழ்த்தும் காத்திரமான கச்சேரி போன்றது இது. தான் என்ன செய்வேன் என்று அந்த கலைஞனுக்கும் தெரியாது. ஆனால், கலை நிகழும். அந்த தைரியமும், எதிர்பாராதது நிகழும் கலைத்தன்மையை இந்த உரையில் கண்டேன் நான். உங்களின் புனைவுகள் தரும் அதே உச்சத்தை இதில் அடைந்தேன்.

கட்டண உரைகள் தொண்டங்கி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதா? முதல் உரையின் போது – ‘யூ ட்யூப்ல் வரும் பார்த்துக்கலாம் என்று நினைத்தேன். சிலவற்றை பார்த்தேன். பிறகுஜெ. ஏன் இந்த கட்டண உரைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட கூடாதுஎன்றும் எதிர்பார்த்தேன். இதெல்லாம் எவ்வளவு பெரிய தவறு என்று தெளிந்தேன். இந்த நேரடி அனுபவத்துக்கு எதுவும் ஈடு ஆகிவிடாது.

அதனால், உங்களின் எந்த கட்டண உரையையும் இனி எங்கும் விட்டுவிடக்கூடாது என்று இருக்கிறேன். எனக்கு காலம்தான் அருள புரியவேண்டும்.

நிகழ்வுக்கு பின் உங்கள் கதைகளை தெலுங்கில் மொழிபெயர்க்கும் நண்பர் அவிநேநீ பாஸ்கர், அரங்கா அண்ணனுடன் சேர்ந்து தங்களை சந்தித்த அனுபவம் இப்பொழுதும் இனிக்கிறது. ‘ஸஜ்ஜன சாங்கித்யம்என்பார்களேஅது தரும் நேர் நிலை உணர்வு இது. குருவுடன் மட்டுமே அடையக்கூடியது. இதோ இந்த கணத்தில் உங்களை மானசீகமாக அனைத்துக்கொழ்கிறேன் ஜெ.

பேரன்புடன்,

ராஜு.

அன்புள்ள ராஜு

உரைகள் இரண்டு வகை. முதல்வகை உரைகள் ஒருவகை நிகழ்த்துகலைகள். குரல், நடிப்பு, உணர்ச்சிகரம், நகைச்சுவை, அவ்வப்போது இளைப்பாற்றும் இடைவெளிகள், குட்டிக்கதைகள் ஆகியவற்றுடன் ஆற்றப்படும் உரைகள் உலகமெங்கும் உள்ளன. அவை ஒரு பண்பாட்டுக்குத் தேவை. பொதுவான அரங்கினர் அலுப்படையாதபடி பல விஷயங்களை அந்த உரைகள் கொண்டுசென்று சேர்க்கின்றன. அரங்கின் கூட்டான மனநிலை, அவர்களின் அறிவுநிலை ஆகியவற்றை கணக்கில்கொண்டு ஆற்றப்படும் உரைகள் அவை. அரங்கினரை அவர்களின் எதிர்வினைகள் வழியாக தொடர்ச்சியாக மதிப்பிட்டு அந்த உரைகள் ஆற்றப்படவேண்டும்.

இன்னொரு வகை உரைகள் உண்டு. அவை தீவிரமான சிந்தனைகள் நிகழும் உரைகள். அந்த உரைகளில் அரங்கினர் எவ்வகையிலும் கருத்தில் கொள்ளப்பட மாட்டார்கள். அரங்கினரை மகிழ்விப்பதற்கான முயற்சி இருக்காதென்பது மட்டுமல்ல, அவர்களுக்குப் புரியவைப்பதற்கான முயற்சியும் உரையாற்றுபவரின் தரப்பில் இருந்து இருக்காது. உரையாற்றுபவர் தன்னுள் ஆழ்ந்து செல்லும் பயணம் இயல்பாக நிகழும் உரைகள் அவை. அரங்கினர் அந்த உரையுடன் தாங்களும் செல்லவேண்டும். அது உரையினூடாக நிகழும் கூட்டான சிந்தனை. அது நிகழ்த்துகலை போன்றது அல்ல. சிந்தனையுடன் கூடவே சிந்திக்கும் அனுபவம்.

நமக்குள் புதிய சிந்தனைகள் பல வகைகளில் நிகழும். நாம் தனியாக எண்ணும்போது. நாம் எழுதும்போது. நாம் பிறருடன் உரையாடும்போது. அதிலொன்று மேடையில் நிகழும் சிந்தனைகள். அரங்கினர் கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்தால், பேச்சாளருக்கு அரங்கினருடன் ஓர் அகத்தொடர்பு உருவாகிவிட்டதென்றால், அங்கே ஓர் அற்புதம்போல சிந்தனை உருவாகும். உலக இலக்கியத்தின் பல அசல் சிந்தனைகள் மேடைகளில் நிகழ்ந்தவை. எமர்ஸன், எலியட் போன்றவர்களின் புகழ்பெற்ற கட்டுரைகள் உண்மையில் உரைகள்தான்.

அத்தகைய பல நல்ல உரைகளை நான் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும்  கேட்டதுண்டு.எம்.என்.விஜயன், எம்.கே.சானு,சுகுமார் அழிக்கோடு, ஜி.குமாரபிள்ளை, யூ.ஆர்.அனந்தமூர்த்தி, கல்பற்றா நாராயணன் என… அந்த உரைகளில் எனக்கு மிக அபாரமான அகஅனுபவங்கள் நிகழ்ந்துள்ளன. நான் அத்தருணங்களில் அவர்களுக்கு இணையாகச் சிந்தித்தேன். எனக்கான சிந்தனைகளை அடைந்தேன். எந்த மகத்தான கலையனுபவமும் அந்த அனுபவத்துக்கு இணையானது அல்ல. சிந்திப்பவனுக்கு சிந்தனை அளவுக்கு களிப்பும் மெய்மறத்தலும் அளிக்கும் வேறொன்றில்லை.

அதைப்பற்றி வியப்பும் மகிழ்ச்சியுமாகப் பேசிக்கொண்டிருப்பேன். அத்தகைய உரைகள் இங்கும் தேவை என நண்பர்கள் சொல்வார்கள். நானே உரையாற்றலாம் என்றார்கள். எனக்கு அவ்வாறு என்னால் உரையாற்ற முடியுமா என ஐயம். இருந்தும் துணிந்து கோவையில் சில உரைகள் ஆற்றினேன். அங்கே கற்றுக்கொண்ட ஒன்று, ஏற்கனவே அமைந்துள்ள ஓர் அவையில் நான் அத்தகைய உரைகளை ஆற்றமுடியாது. எப்போ வருவாரோ என்னும் தலைப்பில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஒருங்கிணைத்த பக்தி உரைகளின் வரிசையில் சங்கரர் பற்றி உரையாற்றினேன். அந்த அரங்குக்கு மொத்த உரையும் தலைக்குமேல் சென்றுவிட்டது. ஆனால் எனக்கு அந்த உரையிலேயே அசலாகச் சிந்திக்கும் தருணங்கள் அமைந்தன.

அதன்பின் எனக்காக மட்டுமே வரும் அரங்கினரை முன்னிலையில் கூட்டி ஆற்றப்படும் உரைகள் பல நிகழ்ந்தன. அவை எனக்கு புதிய திறப்புகளை, புதிய பயணங்களை இயல்வதாக்கின. ஆகவே தொடர்ந்து அத்தகைய உரைகளை ஆற்றினேன். அப்போதுதான் கட்டண உரை என்னும் கருத்து உருவானது. கட்டணம் கட்டி வந்தமர்பவர்கள் அந்த உரையை மதிப்பவர்கள், அதற்கென்றே வருபவர்கள். அவர்களுடனான உரையாக அமைகையில் அந்நிகழ்வு மேலும் கூர்மையடையும் என்று தோன்றியது. அவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட எல்லா உரைகளுமே மிகச்சிறந்த அனுபவங்களாக அமைந்தன.

அந்த உரைகளை ஆவணப்படுத்த வேண்டும் என்பதனால் மட்டுமே இணையத்தில் ஏற்றுகிறோம். நேரில் அவற்றை கேட்கும் அனுபவம் இணையத்தில் கேட்பதற்கு எவ்வகையிலும் ஒப்பிடத்தக்கது அல்ல. நேரில் கேட்கையில் கூறப்படும் கருத்துக்களை விட அவை உருவாகி வரும் விதம்தான் முக்கியமானதாக இருக்கும். குறிப்பாக ஒரு கருத்தில் இருந்து இன்னொன்றுக்கு எப்படி பேச்சாளர் தாவிச்செல்கிறார் என்பது அங்கே முக்கியம். அந்த தாவுதல் அக்கணத்தில் கேட்டுக்கொண்டிருக்கும் அரங்கினரின் அகத்திலும் நிகழும். நடுவே அமையும் இடைவெளிகள், மௌனங்கள், தடுமாற்றங்கள் கூட முக்கியமானவை. நாம் நம் சிந்தனையால் நிரப்பிக்கொள்பவை.

தகவல்கள் பெருகியிருக்கும் இன்றைய சூழலில் சிந்தனைகள் முக்கியமானவை. அதைவிட சிந்திப்பது முக்கியமானது. தகவல்களை ஒருங்கிணைத்து, ஆராய்ந்து, பொது முடிவுகளுக்குச் செல்லும் சிந்தனைமுறை பொதுவாக தேவைப்படும் ஒன்று. அதைவிடவும் முக்கியமானது abstract thought எனப்படும் சிந்தனைத்தாவல். தர்க்கம் வழியாகச் சிந்தனைசெய்துகொண்டே சென்று சட்டென்று சில முடிவுகளை, சில திறப்புகளை அடைவது. அதைத்தான் இன்று கற்றுக்கொடுத்தாகவேண்டும். இனி அது மட்டுமே கல்வி என ஆகப்போகிறது.

எல்லாக் காலகட்டத்திலும் கல்வி என்பது சிந்திக்கக் கற்றுக்கொடுத்தல் என்ற அளவிலேயே இருந்து வந்தது. ஒரு சிந்திக்கும் மனிதருடன் அமர்ந்து அவர் சிந்திப்பதை கவனித்து தானும் சிந்திக்கக் கற்றுக்கொள்ளுதலே குருகுலக் கல்வி. நவீனக்கல்வியின் அடிப்படையும் அதுவே. ஆகவேதான் ஆசிரியர் என்னும் ஆளுமை உருவானது. ஆனால் நிறுவனமாக கல்வி மாறும்போது அந்த ஆசிரியர் ஓர் ஊழியராக மாறுவதைத் தடுக்க முடியாது. எல்லா கல்விக்கும் சிந்தனை அவசியமும் அல்ல. தெரிந்துகொள்ளுதல், பயிற்சிபெறுதல் ஆகியவையே இன்றைய தொழில்கல்வி- தொழில்நுட்பக் கல்வி இரண்டுக்கும் அவசியமானவை.

ஆனால் சிந்தனைக் கல்வி தேவையாகும் இடங்களில் ஒரு மனிதன் வந்து நின்றாகவேண்டும். அந்த மனிதனுடன் அந்த சந்தர்ப்பத்தில் நாம் உடன் சென்றாகவேண்டும். ஆகவேதான் இன்றும் நவீனக் கல்வியில் ஆசிரியர் என்னும் ஆளுமை அத்தனை முக்கியமானதாக உள்ளது. அறிஞர்கள் ஓய்வுபெற்ற பின்னரும் சிறப்பு ஆசிரியராகத் தொடர்கிறார்கள். பல்வேறு துறைகளில் சாதனையாற்றியவர்கள் வருகைதரு ஆசிரியர்களாக பயிற்றுவிக்கிறார்கள். அவை எல்லாமே உரைகள்தான். கல்விநிலையங்களில் உரைகள் தொடர்ச்சியாக நிகழ்கின்றன

இத்தனை ஊடகங்கள் வந்தபின்னரும்கூட உரைகள் மேலைநாடுகளில் அந்த அளவுக்கு முக்கியமாகக் கருதப்படுகின்றன. அமெரிக்கா சென்றபோது என்னிடம் ஒரு நண்பர் சொன்னார். அமெரிக்காவிலேயே மிகச் செலவேறிய அரங்கநுழைவு ஓப்பராவுக்குத்தான். ஆனால் சில உரைகள் அதைவிட மும்மடங்கு கட்டணம் கொண்டவை என. ஏனென்றால் அங்கே உங்கள் முன் ஒரு மனிதன் நின்றிருக்கிறான். அவன் தன் அகத்தை சொற்களாக உங்கள் முன் வைக்கிறான்.

ஜெ

முந்தைய கட்டுரைநா.வானமாமலை
அடுத்த கட்டுரைஅயல்நிலத்தில் இருந்து ஒரு வாசகி