லோக்பால் போதுமா?

ஜெ,

நேரடியாகக் கேள்விகளுக்கே வருகிறேன்:

அன்னா அவர்களின் தனிப்பட்ட நேர்மை பற்றி எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை. அன்னாவின் நோக்கத்தின் மீதும் எனக்கு எந்த ஒரு கேள்வியும் இல்லை. அவர் பின்பற்றும் அஹிம்சையையும் பரிபூரணமாக மதிக்கிறேன். எனக்கு இருக்கும் ஒரே கேள்வி, லோக்பால் மூலமாக என்ன சாதிக்கப் போகிறோம் என்பதுதான். ஏற்கனவே இருக்கும் சட்டங்கள் ஊழல் செய்பவர்களுக்கு வெண்சாமரமா வீச சொல்கிறது?. அவைகள் தோற்று போவதற்குக் காரணம் என்ன?. மேலும் அந்தக் குழுவில் இப்போதைக்கு அண்ணாவை தாராளமாக நம்பலாம். லோக்பால் குழுவை சர்வ வல்லமை கொண்ட குழுவாக மாற்றுவது என்பது கொஞ்சம் அபாயமாகவே எனக்குப் படுகிறது. அது மெல்ல நம்மை சர்வாதிகாரத்தை நோக்கி கொண்டு செல்ல கூடியது இல்லையா?..

யோசித்து பாருங்கள்..அன்னாவிற்குப் பிறகு அதில் வரும் உறுப்பினர்களை யார் தேர்ந்தெடுப்பது?. கண்டிப்பாக மக்கள் இல்லை. ஆக அங்கு ஜனநாயகம் இருக்கும் வாய்ப்பும் இல்லை..இல்லையா?. யோசித்துப் பாருங்கள் அண்ணாவிற்கு பிறகு அங்கேலாலு,மாதிரியோ, அல்லது வேறு பெரிய ஊழல்வாதி மாதிரியோ ஆட்கள் வந்தால்? அதை நம்மால் தடுக்க முடியுமா? இந்த ஒரு காரணத்திற்காகத்தானே மக்களாட்சி என்ற தத்துவத்தை முன் மொழிவதே?..

என்னுடைய கேள்வி மிக எளிது. இருக்கும் சட்டத்தை வைத்துக்கொண்டு ஏன் இன்னும் நம்மால் ஊழலை ஒழிக்க முடியவில்லை?இதில் புதிதாக சட்டம் வந்து என்ன செய்யப் போகிறது. குறைந்த பட்சம் முந்தைய சட்டங்கள் தோற்று போனதற்கான காரணம் இந்த சட்டத்தில் இல்லாமல் இருக்கிறதா?

ஜி.காளிராஜ்

அன்புள்ள காளிராஜ்,

மீண்டும் மீண்டும் நான் சொல்வது இதுதான், அண்ணா கொண்டுவரும் லோக்பால் சட்டம் குறைகள் கொண்டதாக இருக்கலாம். போதாமைகொண்டதாக இருக்கலாம். எந்த ஒரு சட்டமும் எந்த ஒரு அமைப்பும் அவ்வளவு எளிதாக முழுமையாகக் கொண்டுவரப்பட முடியாது . அது ஒரு கருத்து மட்டுமே. நடைமுறைப்படுத்தும்தோறும் அதில் உள்ள குறைகள் தெரியும். தெரியத்தெரிய அவற்றை சீர்ப்படுத்த முடியும்.

சொல்லப்போனால் இந்தச்சட்டத்தில் இன்னும் ஏராளமான குறைகள் இருப்பது அது நடைமுறைக்கு வந்து , உண்மையில் ஊழலுக்கு எதிராக அது செயல்பட ஆரம்பிக்கும்போதே தெரியவரும். ஒவ்வொரு ஊழலை எதிர்கொள்ளும்போதும் அதன் முக்கியமான போதாமை வந்து முகத்தில் அறையும். அப்படித்தான் அதை நடைமுறையில் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ள முடியும். அதற்கு தொடர் விவாதம் தேவை. அதைவிட தொடர் கண்காணிப்பு தேவை.

ஆனால் அந்த அமைப்பு உருவாகவே வேண்டாம் , அந்த அமைப்பு உருவானாலும் பயனில்லை, அந்த அமைப்புக்கான போராட்டமே வீண் என்றெல்லாம் சொல்வதற்கான காரணமாக இதையெல்லாம் சொல்வது எவ்வளவு பெரிய அறியாமை. அறியும்தோறும் அறியாமை கொள்ளும் இந்த போக்கு நம்மில் எப்போது முளைவிட்டது? நான் கேட்பது அதையே.

இந்திய அரசியல் சட்டம் ஊழலுக்கு எதிராக உருவாக்கியுள்ள அரண் போதாதது என்ற நடைமுறை யதார்த்தத்தில் இருந்தே லோக்பாலுக்கான கோரிக்கை எழுந்தது. அது புதிய கோரிக்கையும் அல்ல. உண்மையில் அப்படி ஒரு அமைப்புக்காக ராம் மனோகர் லோகியாவே பேசியிருக்கிறார். இன்று அது தேவையாக ஆகும் நிலை.

இருக்கும்சட்டத்தை வைத்துக்கொண்டு ஊழலை ஒழிக்கமுடியாது என்பதற்கான விளக்கம் எந்த வழக்கை எடுத்துப்பார்த்தாலும் கிடைக்கும். நம் அமைப்பில் அரசை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சேர்ந்து நடத்துகிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் கண்காணிக்கும்படி அரசியல்சட்டம் அமைந்துள்ளது. அதன்மூலம் ஊழல் இல்லாமலாகும் என்பது அதன் நம்பிக்கை. ஆனால் அவர்களிருவரும் சேர்ந்தே ஊழல் செய்தால் நம் அமைப்பு ஒன்றுமே செய்ய முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் ஒருவரை ஒருவர் கண்காணிக்கவேண்டும். அவர்கள் சேர்ந்து ஊழல் செய்கிறார்கள் என்றால் ஒன்றுமே செய்ய முடியாது.

ஆகவே மூன்றாம் தரப்பாக பொது நல ஊழியர்களை உள்ளே கொண்டுசெல்லும் ஒரு முயற்சியே லோக்பால். அது எவருக்கும் சர்வாதிகாரத்தை அளிக்கப்போவதில்லை. அது இன்னொரு கண்காணிப்பாளர் தரப்பை கொண்டுவருகிறது. இனி அரசு அதிகாரிகள் பொதுநல ஊழியர்கள் என்ற மூன்றுதள கண்காணிப்பு இருக்கும், அவ்வளவுதான். நாம் இன்று பேசும் பெரும்பாலான ஊழல்களை வெளிக்கொண்டுவந்தவர்கள் தன்னலமில்லாமல் அதற்காக போராடிய பொதுநல ஊழியர்களே. அவர்களுக்கு அமைப்புக்குள் ஓர் இடம் அளிக்கிறது இந்த சட்டம்.

லாலு மாதிரியானவர்கள் ஏற்கனவே அரசியல் கட்சிகளில் எல்லா வசதிகளுடனும் இருக்கிறார்கள். பொதுநல ஊழியர்கள் தங்கள் சேவை மூலம் மக்கள் கவனத்துக்கு வந்தவர்கள். இன்று இந்தியாவில் அவர்கள்தான் மிக முக்கியமான தார்மீக தரப்பாக இருக்கிறார்கள். அவர்களே நம்முடைய அரசையும் அமைப்பையும் நமக்காக கண்காணிக்கிறார்கள். நாளை அவர்கள் இல்லை என்றால் என்ன செய்வது , ஆகவே இந்த அமைப்பே வேண்டாம் என்பது என்ன வாதம்? அது நம் அரசமைப்பின் எல்லா அதிகாரமும் அரசியல்வாதிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது, அவர்கள் சர்வாதிகாரிகளாக ஆனால் என்ன செய்வது, ஆகவே அரசாங்கமே வேண்டாம் என்று சொல்வதுபோல.

ஜெ

காங்கிரஸும் அண்ணாவும்

அண்ணா ஹசாரே பற்றிய கட்டுரைகளின் ஆங்கில வடிவம்

அண்ணா ஹசாரே தமிழ் இணையதளம்

 அண்ணா ஹசாரே ஜனநாயகக் கேள்விகள்

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2

அண்ணா ஹசாரே கடிதங்கள்..

அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…

அண்ணா ஹசாரே,வசைகள்

அண்ணா ஹசாரே-2

அண்ணா ஹசாரே-1

முந்தைய கட்டுரைஅண்ணா, இன்றைய பேச்சுவார்த்தைகள்
அடுத்த கட்டுரைஅண்ணா ஹசாரே-கடிதங்கள்