ஒரு பழைய ஹீரோ

நினைவுகளில் சில இடங்கள் அரிதான ஒளி கொண்டிருக்கும். அப்படிப்பட்ட ஊர்களில் ஒன்று எனக்கு பத்மநாபபுரம். மிக இளமையில், அதாவது எனக்கு 4 வயது இருந்தபோது நான் அங்கே குடியிருந்திருக்கிறேன். மங்கலான சில நினைவுகள் உள்ளன. ஒன்று, நாங்கள் குடியிருந்த வீட்டைச்சுற்றி எங்களூரில் கைவேலி என்று சொல்லப்படும் மண்கூட்டிவைத்து போடப்பட்ட வேலி இருந்தது. என் தங்கைக்கு 1 வயது. எங்கள் வீட்டில் ஒரு நாய் இருந்தது, அல்லது பக்கத்துவீட்டு நாயாக இருக்கலாம். தங்கையை எவரேனும் தொடவந்தால் அந்த நாய் உறுமும். அப்படி அது உறுமும் ஒரு காட்சி.

இன்னொரு நினைவு அப்பாவின் கையயைப் பிடித்துக்கொண்டு நான் செல்கிறேன். மிகமிக உயரமான ஒரு சுவர், அதன்மேல் ஒரு தேன்கூடு. அப்பா நின்று அதைப் பார்க்கிறார். அது வானில் எங்கோ இருக்கிறது. ஆனால் பின்னர் அந்தக் கோட்டை இருபதடி உயரம்தான் என அறிந்துகொண்டேன். பத்மநாபபுரத்தில்தான் என்னை பாலவாடி வகுப்பில் சேர்த்திருக்கிறார்கள். ஆறே மாதத்தில் அங்கிருந்து கொட்டாரம் சென்றோம். அங்கேதான் ஒன்றாம் வகுப்பு.

அதன்பின் நான் பத்மநாபபுரத்திற்கு நாலைந்து முறை வந்ததுண்டு. என் சித்தப்பா அங்கே குடியிருந்தார். அரண்மனையை பலமுறை பார்த்திருக்கிறேன். அன்றெல்லாம் அரண்மனைக்கு கட்டணமேதும் இல்லை. பயணிகள் எவரும் வருவதில்லை. உள்ளே சென்று விளையாடலாம். காவலுக்கு இருக்கும் உள்ளூர்க்காரர் சொந்தத்தில் ஒரு மாமாதான். அரண்மனையின் இருண்ட அறைகளில் ஒளிந்துவிளையாடுவோம். பத்மநாபபுரத்தின் இரண்டு குளங்களில் ஒன்றில்தான் குளிக்க அனுமதி. இன்னொன்று மிகப்பெரிய குளம், அங்கே எவரும் செல்ல மாட்டார்கள். பேய்ப்பயம் உண்டு.

1997 ல் நான் தர்மபுரியில் இருந்து வேலை மாற்றிக்கொண்டு பத்மநாபபுரம் வந்தேன். நாகர்கோயிலில் வேலை. அருண்மொழிக்கு தக்கலையில். அவள் வசதிக்காக பத்மநாபபுரத்தில் வீடு பார்த்தோம். ஓய்வுபெற்ற காவலதிகாரி ஒருவரின் பூர்விக வீடு. பெரிய சுவர் கொண்ட வளாகத்திற்குள் ஓடுபோட்ட அகலமான வீடு. வீட்டை ஒட்டி கிணறு. தெற்குப்பக்கம் அவர்களின் குடும்ப கோயில் – பகவதிக்குரியது.

அங்கே வருவதற்குள் விஷ்ணுபுரம் எழுதி முடித்திருந்தேன். அந்த வீட்டில் வைத்துத்தான் பின் தொடரும் நிழலின் குரல் நாவலை எழுதினேன். வசந்தகுமார் அங்கே வந்து என்னுடன் தங்கி அந்நூலை மெய்ப்பு பார்த்தார். பல நண்பர்கள் வந்துள்ளனர்.

(அஜிதனின் ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்கள் என்னும் அழகிய கதை பத்மநாபபுரம் இல்லத்தில் அவர்களின் வாழ்வனுபவம் குறித்தது. மிக இனிய நினைவு எனத் தோன்றும் அக்கதை குழந்தையுள்ளம் சாவை எதிர்கொண்டு அதிலிருந்து சாவின்மை என ஒன்றை உள்ளுணரும் தருணத்தாலானது. மிருத்யோர்மா அமிர்தம் கமய என்னும் வரியை கதையாக்கியதுபோல)

அந்தக் காலகட்டத்தில் சினேகிதன்  எடுத்தவை இரண்டு படங்கள் என் சேமிப்பில் இருந்தன. நான் ஒரு ஹீரோ ஆக முயன்றிருக்கிறேன். புகைப்பட நிபுணரின் கோரிக்கையால்தான். இந்தியா டுடே இதழுக்காக என நினைவு.

முந்தைய கட்டுரைரிவோல்ட்
அடுத்த கட்டுரைகவிதைகள், வே.நி.சூரியா சிறப்பிதழ்