விஷ்ணுபுரத்தின் அஜிதன்

விஷ்ணுபுரம் நாவல் வாங்க

விஷ்ணுபுரம் மின்னூல் வாங்க


காலன் அகாலன்

வணக்கம் ஐயா.

விஷ்ணுபுரம் வாசித்து கொண்டிருக்கிறேன்.அதிலுள்ள எல்லா நுணுக்கங்களும் தத்துவங்களும் விளங்காமல் இருந்தாலும், இது நெடு நாள் ஏங்கிய கனவு. பல தடவை ஆரம்பித்து, முதல் ஐந்தாறு பக்கத்திலேய விட வேண்டி வந்தது.

இம்முறை பாதிக்கு மேல் வந்து விட்டேன். முழுதும் முடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கு. உங்களுடைய பல ரக வாசகன் என்றாலும் விஷ்ணுபுரம் வாசிக்கவில்லையென்றால் சாம்பாரில் பருப்பு இல்லாத மாதிரி இருக்கு. இதை படித்து முடித்தால் ஒரு நிறைவு பெறுவேன்.

ஒரு சின்ன கேள்வி. புத்தகத்தில் வரும் அஜிதனை நினைத்து தான் உங்கள் மகனுக்கு அதே பெயர் இட்டீர்களா?

நன்றி.

டொரோண்டோ ராஜாமணி.

அன்புள்ள ராஜமணி,

விஷ்ணுபுரம் நாவலில் பௌத்தம் எங்கிருந்து எப்படி வந்தது என்று என்னால் சொல்ல முடிந்ததில்லை. எப்படியோ உள்ளே வந்தது என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தேன். பின்னர் அஜந்தாவுக்குச் சென்றபோது அங்கே சுவர்ப்புடைப்புச் சிலையாக மாபெரும் சயனபுத்தர் சிலையை பார்த்தபோது உணர்ந்துகொண்டேன், அங்கிருந்துதான் வந்திருக்கிறது. தன்னியல்பாக.

என் பாட்டியின் இல்லம் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் ஆலயத்தை ஒட்டியது. நான் இளமைமுதல் பார்த்த பேருருவம், என் ஆழ்கனவுகளில் உறைவது. நாங்கள் பெருமாளின் பணி புரிந்த மரபினர். 1981ல் நான் முதல்முறையாக அஜந்தா எல்லோராவுக்குச் சென்றிருக்கிறேன். 1982ல் குஷிநகருக்கும் சென்றிருக்கிறேன். அப்போது பார்த்த படுத்திருக்கும் புத்தர் என்னுள் விஷ்ணுவாக உருமாறியிருக்கிறார்.

அதன்பின் 1989ல் கேரளத்தில் ஓர் இடத்தில் ஒரு மலைத்தெய்வத்தை மண்ணில் படுத்தவடிவில் வடித்து வணங்கியதைக் கண்டேன். அன்று நான் அங்கே பிரசாதமாக அளிக்கப்பட்ட எதையோ சாப்பிட்டமையால் எங்கே எப்போது என்பதே நினைவில் இல்லை. அதன்பின் கடலூர் அருகே துரியோதனன் படுகளம் கண்டேன். அந்த உருவங்களெல்ல்லாம் என்னுள் ஒன்று கலங்கி கனவுகளாகி விஷ்ணுபுரம் நாவலில் வெளிப்பட்டது.

1981 முதல் இந்திய சிந்தனை மரபில் உள்ள நாத்திக சிந்தனைகள் மேல் ஆர்வம் கொண்டிருந்தேன். எம்.என்.ராயை எனக்கு எம்.கோவிந்தன், ஆற்றூர் ரவிவர்மா ஆகியோர் அறிமுகம் செய்தார். சுந்தர ராமசாமிக்கு ராய் மேல் ஒரு புதிய ஆர்வம் அவர்கள் வழியாக உருவானது.

ராய் எழுதிய Materialism அவ்வகையில் நான் ஆழ்ந்து பயின்ற ஒரு நூல். அதன் பின் தேவிப்பிரசாத் சட்டோபாத்யாய மற்றும் கே.தாமோதரன். அவர்களை அன்று எம்.கோவிந்தன் மரபினர் மிக முக்கியமானவர்களாக முன்வைத்துக் கொண்டிருந்தனர். பி.கே.பாலகிருஷ்ணன் கூடுதலாக டி.டி.கோசாம்பியை முன்வைத்தார்.

அந்நூல்களில் ஒன்றில்தான் அஜிதன் என்ற பெயரை கண்டடைந்தேன். அஜித கேசகம்பளன் என்னும் வேதகால முனிவர் இந்தியப் பொருள்முதல்வாதத்தின் (ஜடவாதம், சார்வாகம்) முன்னோடிகளில் ஒருவர். அவரைப் பற்றிய ஒரு குறிப்பு என் திசைகளின் நடுவே கதையில் வருகிறது. 1988ல் எழுதிய கதை அது. அந்தப்பெயர் என்னுள் கிடந்திருக்கிறது. பின்னர் விஷ்ணுபுரம் எழுதியபோது அஜிதன் என்ற சொல் இயல்பாக மனதிலெழுந்தது.

ஏனென்றால் நான் அப்படி அஜிதனை உருவகித்திருந்தேன். கொஞ்சம் மங்கோலியச் சாயல்கொண்டவன். கூரிய விரிகளும் புன்னகை மாறாத முகமும் உடையவன். அவனை எவருமே வெல்லவில்லை என்பதுதான் என் முதல் உருவகம். வெல்லப்படாதவன் என்ற பொருளில் அஜிதன் என பெயரிட்டேன். நாவல் வெளிவந்தபின்னர்தான் தன்மயா சுவாமி (டாக்டர் தம்பான்) என்னிடம் சொன்னார், அஜிதன் என்பது புத்தரின் பெயர்களில் ஒன்று என. இன்னொரு பெயர் அத்வைதன். இரண்டற்றவன். சரியாகவே அமைந்துவிட்டது என்னும் நிறைவு உருவானது. விஷ்ணுபுரத்தில் அப்படி மனம்போன போக்கில் எழுதப்பட்டு, பின்னர் மிகச்சரியானவை என உணரநேர்ந்த ஏராளமான பகுதிகள் உண்டு.

விஷ்ணுபுரம் நாவலின் ‘இணை ஆசிரியர்’ என்றே அருண்மொழியைச் சொல்லிவிடமுடியும், ஒவ்வொரு அத்தியாயமும் எழுதியதுமே அவள் வாசித்தாள். அந்நாவல் கட்டற்று பெருகி கையில் நிறைந்து வழிந்த ஒன்று. அதை வடிவத்திற்குள் கொண்டுவந்த முயற்சியில் பெரும்பங்களிப்பு அவளுக்குண்டு. விஷ்ணுபுரம் நாவலை “நாம எழுதின நாவல்” என்றே சொல்வாள்.

அதை எழுதும்போது அருண்மொழி கருவுற்றாள். “பையன் பிறந்தா அஜிதன்னுதான் பேரு…” என்று அவளே சொல்லிவிட்டாள். பையனாக இருக்கவேண்டும் என்றே காத்திருந்தோம். அந்தப்பெயர் போடுவதற்காக. பலமுறை இளமையும் அறிவும் ஒன்றிணைந்த அஜிதனின் முகம் அவள் கனவில் வந்தது.

அன்றெல்லாம் முன்னரே பார்க்க வசதி இல்லை. குழந்தை பிறந்ததும் அஜிதன் என பெயரிடவில்லை. இயல்பாக அஜிதன் என்றே பேசிக்கொண்டோம். அருண்மொழி ““அஜிக்குட்டி அழவே இல்ல. ஜாலியா இருக்கான்” என்று சொன்னதுதான் பிரசவத்திற்கு பிறகு பேசிய முதல் பேச்சு. பிறந்தகுழந்தைக்கு அஜிதன் என்று பெயரிடவில்லை, அஜிதனாகவே பிறந்தான்.

அஜிதன் வேறெவ்வகையில் வளர்ந்திருந்தாலும் ஏமாற்றம் அடைந்திருப்பேன். அவன் எழுத்தாளனோ தத்துவ ஆசிரியனோ ஆகவேண்டும் என்பதே என் கனவாக இருந்தது. இன்று அவனைப் பார்க்கையில் ’நீ உருவானது முதலில் என் கனவில்’ என்று சொல்லிக்கொள்கிறேன்

ஜெ

மைத்ரி மின்னூல் வாங்க

மைத்ரி வாங்க

அல் கிஸா வாங்க

அல்கிஸா மின்னூல் வாங்க

மருபூமி வாங்க

மருபூமி மின்னூல் வாங்க

முந்தைய கட்டுரைநிஷா மன்சூர்
அடுத்த கட்டுரைரசனை ஏன் இன்றியமையாதது?