காலன், அகாலன்

 விஷ்ணுபுரம் நாவல் வாங்க

விஷ்ணுபுரம் மின்னூல் வாங்க

விஷ்ணுபுரம் நாவல் என்னுள் நுழைந்தது 1980 ல். நான் முதல்முறையாக வீட்டை விட்டுக் கிளம்பும்போது. திருவட்டார் ஆலயத்தின் முகப்பிலிருந்த மண்டபம் அன்றெல்லாம் திறந்தே கிடக்கும். இரவில் தூங்கலாம். அப்படிப் படுத்திருந்தபோது இருட்டில் எவரோ ‘ஒரு யுகத்திற்கு ஒரு முறை விஷ்ணு புரண்டுபடுப்பார்’ என்று சொல்வதைக் கேட்டேன். அந்த மனநிலையில் அது ஒரு பெரும் கொந்தளிப்பை உருவாக்கி இரவெல்லாம் தூக்கமிழக்கச் செய்தது.

ஆனால் பலமுறை பல வடிவில் எழுதிப்பார்த்து, பலமுறை கைவிட்டு, மெல்லமெல்ல அதை விட்டு விலகினேன். ஆனால் எழுதும் கனவை வைத்துக்கொண்டே இருந்தேன். சொல்லிக்கொண்டும் இருந்தேன். 1992 எனக்கு திருமணமானபோது சட்டென்று எழுத ஆரம்பித்தேன். இன்றைக்கும் அது எப்படி தொடங்கியது என்பது ஓர் ஆச்சரியம்தான். ஒரு வடிவை எழுதினேன். பனிவெளியில், திசையின்மையில் அமர்ந்து, நான்கு கதைசொல்லிகள் சொல்லும் கதை என்னும் வடிவில். அது நன்றாக இருந்தது என அருண்மொழி சொன்னாள். ஆனால் நாவலுக்கு பொருந்திவரவில்லை.

அதன்பின் மீண்டும் பலவகை தத்தளிப்புகள். சட்டென்று எழுத ஆரம்பித்துவிட்டேன்.  விஷ்ணுபுரம் சீராக முதல்புள்ளியில் இருந்து எழுத ஆரம்பிக்கப்படவில்லை. அதன் முதல்பகுதியிலுள்ள முதல் அத்தியாயம் முதலில் எழுதப்பட்டது ‘ என் கால்களுக்குக் கீழே நான் உணர்ந்ததெல்லாம் மணல்தான்’ என்னும் வரியில் இருந்து நாவல் அதுவாகவே தொடங்கியது

எப்படி அந்த ஊக்கம் வந்தது என நானே பின்னர் யோசித்து ஒருவாறாக புரிந்துகொண்டேன். காலம் என்னும் நாய், காலபைரவன், என் உள்ளத்தில் எழுந்த முதல் படிமம். அது சுருண்டு கிடக்கும் ஒரு மையம். அதற்கு அடியில் பெருமாள் புதைந்து கிடக்கிறார். காலச்சுருளின் அடியில். அறியாத ஆழத்தில். அதை தோண்டி எடுப்பதே அந்நாவலின் தொடக்கம். அது என் உள்ளத்தில் இருந்து நானே அந்த பெரும் படிமத்தைத் தோண்டி எடுப்பதுதான்.

அந்நாவலை அவ்வாறு ஒவ்வொரு அத்தியாயமாக அகழ்ந்து எடுத்துக்கொண்டே இருந்தேன். எடுத்தபின்னர்தான் அது என்ன என்றே தெரியும். ஒரு பெரும் பரவசத்துடன், பதற்றத்துடன் அகழ்ந்துகொண்டே இருத்தல்தான் அதை எழுதிய அனுபவம். கனவிலும், சிந்தனையிலும் அதை கண்டடைந்தேன். எனக்குள் ஏற்கனவே என் மரபிலிருந்து கிடைத்திருந்தவை மட்டுமே அந்நாவலில் உள்ளன. அவற்றை முன்வைக்கத் தேவையான தரவுகளை எழுத எழுத கண்டடைந்து பயன்படுத்திக் கொண்டேன்.

அந்நாவல் எழுதும்போது இதெல்லாம் சரியான தரவுகள்தானா என்னும் ஐயம் இருந்தது. ஆகவே முதல் அத்தியாயத்தை ஓர் ஆய்வாளருக்கு அனுப்பினேன். அவர் வைணவ அறிஞரும்கூட. அவர் சொன்னார் ‘அடிப்படையே தவறு. காலபைரவன் சிவனுடைய பரிவார தேவதை. அதற்கும் வைணவத்திற்கும் சம்பந்தமில்லை’ நான் திகைத்தேன். எழுதிவிட்டேன், அதை மாற்ற முடியாது. அந்தப்புள்ளியில் இருந்து நாவல் பெருகிச்சென்றுகொண்டுமிருந்தது. காலபைரவன் இல்லாமல் விஷ்ணுபுரமே இல்லை.

ஆற்றூர் ரவிவர்மாவிடம் அதைப்பற்றி கேட்டேன். “அறிஞர்களால் கலையை புரிந்துகொள்ள முடியாது. ஏற்கனவே இருப்பதை நீ எழுதினால் அதற்கென்ன கலை மதிப்பு? உன்னுள் இருந்து புதியதாக வருவனவற்றுக்கே கலையில் ஏதேனும் இடமிருக்க முடியும். உன் அகம் மரபுடன் இணைந்துள்ளது, மரபிலிருந்து விலகியும் செல்கிறது. இரண்டுமே தன்னிச்சையானவை. எந்தக் கனவிலும் எந்த இடமும் அப்படியே வருவதில்லை. ஏதோ ஒருவகையில் உருமாறியே வரும். அந்த மாற்றம்தான் கலையின் சாராம்சம். எது வருகிறதோ அதை எழுது”

என் ஐயங்கள் பெருகிக் கொண்டே இருந்தன. சுந்தர ராமசாமியிடம் பேசினேன். “தொன்மங்களுக்கெல்லாம் நவீன இலக்கியத்தில் இடமே இல்லை” என்று சொல்லிவிட்டார்.

கடைசியாக குரு நித்யாவிடம் அதைப்பற்றிக் கேட்டேன். “உன்னுடைய அதே கனவிலிருந்துதான் இந்தியச் சிற்பிகளும் சிற்பக்கலையை உருவாக்குகிறார்கள். சிற்பசாஸ்திரம் அதற்குப் பின்னால் செல்கிறது. நீ எப்படி அத்துமீறி யோசித்தாலும் அது ஏற்கனவே சிற்பவியலில் எங்கோ ஏற்கனவே செய்யப்பட்டிருக்கும். ஏனென்றால் இதற்கு ஆயிரமாண்டு வரலாறுண்டு. கட்டற்றுப் பெருகிய படைப்பு சக்தியின் வரலாறு அது. மத அறிஞர்களுக்கு அந்த பெருங்கொந்தளிப்பு பிடிகிடைக்காது. அறிஞர்களை நம்பாதே…அவர்கள் நெடுஞ்சாலையில் நடைபழகியவர்கள்…”

ஆகவே நான் துணிந்து எழுதலானேன். நாவல் வெளிவந்ததுமே இரண்டு விமர்சனங்கள் வந்தன. ஒன்று, வைணவக்கோயிலில் ஏது காலபைரவன்? இரண்டு, காலபைரவனின் வாகனம்தான் நாய், காலபைரவனே நாயாக சித்தரிக்கப்படுவதில்லை. ஆனால் எம்.எஸ்.சிவசுப்ரமணியம் உடனே சொன்னார். “இங்கே திருக்கணங்குடியிலேயே பெருமாள்கோயிலிலே பரிவாரதேவதை காலபைரவன்தான்” நான் சென்று பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. நாய் வடிவில் காலபைரவன் எழுந்தருளிய ஏராளமான ஆலயங்கள் தமிழகத்தில் இருப்பதை அப்போதுதான் அறிந்துகொண்டேன்.

காலபைரவன், உஜ்ஜயினி

விஷ்ணுபுரம் நாவலை இன்று பார்க்கையில் அது என் பிந்தைய படைப்புகளில் இருந்து பெரிதும் வேறிட்டிருப்பதைக் காண்கிறேன். அது என் நடை அல்ல. சிறிய சொற்றொடர்களில் ஒரு ஜ்வரவேகத்தில் செல்லும் நடை கொண்டிருக்கிறது. அவ்வப்போது நேரடியாகப் பித்துக்குச் சென்று மீண்டு வருகிறது. சிற்பங்கள் வழியாக ஒரு கனவை உருவாக்கிக்கொண்டு அக்கனவு வழியாக மேலும் செல்கிறது. அதன் கட்டின்மையை காவியவடிவம் வழியாக ஒடித்து மடித்து நாவலாக ஆக்கியிருக்கிறேன்.

ஒவ்வொரு முறை விஷ்ணுபுரம் மறுபதிப்பு வரும்போதும் படித்துப் பார்ப்பேன். அதிகபட்சம் ஐம்பது பக்கங்கள். அதன் கட்டின்மை, வடிவின்மை என்னை பொறுமையிழக்கச் செய்யும். இன்றைய என் மொழித்தேர்ச்சியும் வடிவபோதமும் அதை திருத்தும்படி கையை உந்தும். அது பிசிறுகள் கொண்ட, சிதறிச்சிதறிப் பரவும் ஒரு படைப்பு என்னும் அமைதியின்மை உருவாகும். ஆசிரியனின் கையில் இருந்து தாவி அகன்றுவிட்ட நாவல் அது. சாதகமாகவும் பாதகமாகவும்.

ஆனால் திரும்பத் திரும்ப வாசித்தாலும் நானே  புதியதாகக் கண்டடையும் நுட்பங்கள், அறியாத ஆழங்கள் கொண்டது விஷ்ணுபுரம். ஒரு யோகி அல்லது பித்தனின் குறிப்புகள் போன்றது. கனவிற்கே உரிய எல்லா புறத்தர்க்கமின்மையும் அகக்கோப்பும் கொண்டது. இன்று நான் அதை முழுமையாக வாசித்தால் இதுவரை அறியாத ஒரு நாவலை கண்டடைவேன்.

குறிப்பாக அதில் தன்னிச்சையாக வந்தமைந்துள்ள எதிர்வுகளும் இணைவுகளும் ஆச்சரியமானவை. காலன் அகாலன் மேல் படுத்திருக்கும் புள்ளியில் தொடங்குகிறது அது. அகாலனைச் சொல்ல காலனை என் பிரக்ஞை தொட்டு எடுத்திருக்கிறது. காலம்தான் விஷ்ணுபுரத்தின் விளையாட்டே. முன்னும் பின்னும் சிக்கலாகச் சுழலும் காலநூல்கண்டின் நடுவில் அகாலனாக, கருக்குழந்தையாகச் சுருண்டிருக்கும் பேருருவன். விஷ்ணுபுரமே காலத்தின் கதைதான்.

ஆகவே இன்றும் விஷ்ணுபுரம் நாவலின் வாசகனே எனக்கு மிக அணுக்கமானவன். அவன் என்னை மேலும் நுட்பமாகக் கண்டடைந்தவன். என் தெளிவுகளுக்கு முந்தைய கனவுகளில் இருந்து தொடங்குபவன். விஷ்ணுபுரம் நாவலை ’நவீன இலக்கியவாதிகள்’ எளிதில் வாசிக்க முடியாது. அதை அவர்கள் செயற்கைச் சிக்கல் கொண்ட, சோதனை முயற்சிகளான நாவல்களுடன் குழப்பிக் கொள்ளக்கூடும். அதன் தாவல்களை ‘புனைவுப்புதிர்’களாக எண்ணிக்கொள்ளக்கூடும்.

ஆனால் சற்றேனும் தன் அகத்தை தானே கவனிக்கும் ஒருவர், யோக அறிமுகம் கொண்ட ஒருவர், அதை மிக அணுக்கமாக உள்வாங்க முடியும். ஏனென்றால் அவன் அகத்திற்குள்ளும் இதே ஆழ்படிமங்கள் செறிந்திருக்கும். இதே கொந்தளிப்பையும் நடுக்கத்தையும் பரவசத்தையும் அவன் அறிந்திருப்பான். ஆழ்படிமங்களை ஆராய்பவன் அறியமுடியாது, அவை தன்னுள் விரியக் காண்பவன் அவற்றினூடாகத் தன்னை அறிகிறான். இலக்கியவாசிப்பு அவ்வண்ணம் மட்டுமே நிகழமுடியும்.

அந்த தகிக்கும் காலபோதத்தை எப்படி உணர்ந்தேன்? காலம் ஒரு ஈட்டி எனில் நம்மை வந்து தொடும் அதன் கூர்முனை சாவுதான். நான் சாவினூடாகக் கண்டடைந்தது விஷ்ணுபுரத்தின் காலமும் அதைக் கடந்த அமுதமும்.  ‘சாவிலிருந்து அமுதத்திற்கு’ கற்பனையினூடாக, உள்ளுணர்வினூடாக ஒரு தாவல்.

முந்தைய கட்டுரைசுகதகுமாரி
அடுத்த கட்டுரைஒரு சிறுமியின் கடிதம்