நலம், உங்கள் நலம் விழைகிறேன்.
கடந்த ஆண்டு விஷ்ணுபுரம் படித்தபின் எனக்குள் கோவில்களை காண்பதில் மாறுபாடு ஏற்பட்டிருப்பதை கவனித்திருக்கிறேன். நன்றாக நினைவிருக்கிறது விஷ்ணுபுரம் படித்தபின் முதன்முறை ஒரு பெருமாள் கோவிலுக்கு சென்றபோது அங்கிருக்கும் சிலைகள் எதையோ சொல்ல வருபவை போல பிரமை ஏற்பட்டது.
பின்னர் உங்களின் இந்தியப்பயணம் நூலில் தாரமங்கலம் கோவில் சிற்பங்களை பற்றி கூறியபோது கோவில்களை பற்றியும் சிற்பங்கள் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆர்வம் அதிகரித்தது. கடந்தமுறை தவறவிட்டிருந்த ஆலயக்கலை முகாமை இந்தமுறை முன்பே முன்பதிவு செய்திருந்தேன்.
கடந்த வியாழக்கிழமை இரவு நானும் நண்பர் பாலசுப்ரமணியும் பெங்களூரில் இருந்து பேருந்தில் கிளம்பினோம் வெள்ளிக்கிழமை காலை அந்தியூருக்கு வந்தோம்.
இருள் விலகாத காலையில் நித்யவனம் நோக்கி பயணமானோம், எனக்கு முதல்முறை என்பதால் பேருந்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தேன், வழிநெடுக தோட்டங்களும், சிறுதெய்வ கோவில்களுமாக அழகாகஇருந்தது. பேருந்து மலையேற தொடங்கியதும் சித்திரை நெருந்துவதை அறிவிப்பதாக பொன்னிற சரக்கொன்றை மலர்கள் பூத்திருந்தது.
தாமரைக் கரையில் பெயருக்கு ஏற்றார் போல இந்தக் கோடையிலும் வற்றாத அழகிய தாமரைக்குளம் இருந்தது. ஆலயக்கலை நிகழ்விற்கு வந்திருந்த சசிகுமார் அண்ணன் வாகனத்தில் ஏறிக்கொன்டேன்.
தாமரைகுளத்திலிருந்து செல்லும் வழியில் சேவல் போன்ற பறவை ( அறுபதாங்கோழியாக இருக்கலாம்)மயில், மேலும் சில பறவைகளை பார்த்தேன் தற்போது பறவை பார்க்கும் வகுப்பிற்க்கான அறிவிப்பு வந்திருப்பது மகிழ்வளிக்கிறது.
அந்தியூர் மணி எங்களை வரவேற்றார். சிறிது நேரத்தில் மரத்தடியில் வீற்றிருந்த புத்தரையும், வாக்தேவியையும் வணங்கிவிட்டு சுந்தரர் தேவாரப் பாடலுடன் வகுப்பை தொடங்கினார் ஜெயகுமார் சார். முதலில் கோவிலை அதன் அழகியலை மறுக்காமல் அணுகும் முறைகளைப்பற்றி விவரித்தார். தொடர்ந்து கோவிலின் அடிப்படை பகுதிகள், கோவிலின் வகைகளை பற்றி விரிவாக கூறினார்.
அன்றைய வகுப்பு முடிந்ததும் திருக்குறளரசி அக்காவின் மகள்கள் இளவேனியும் , இளம்பிறையும் எல்லோரிடமும் விடுகதைகள் கேட்டு திணறடித்தனர்.
இரண்டாம் நாள் காலை பஞ்சகட்சமும், திருநீறும் அணிந்து தேவாரம் பாடி வகுப்பை தொடங்கினார். அவரது இருப்பிலேயே அனைவரும் அவரை கவனிக்க தொடங்கி விடுவோம்.
இரண்டாம் நாள் சிற்பங்களை பற்றி பார்த்தோம். சிற்பங்களின் மொழியை கற்பித்தார் என்றே சொல்லவேண்டும்.
சிற்பங்களின் கண் திறக்கும் நிகழ்வின்போது வெளிப்படும் அதிர்வை தவிர்க்க சிலையின் பின்னால் இருந்து சிலையின் கண் திறப்பு நிகழ்வதை கேட்டபோது அந்த செய்தி மிகுந்த வியப்பளித்தது. ஐம்பொன் சிலைகள் செய்யப்படும் முறைகளையும் அவற்றி பற்றிய தன் அனுபவங்களையும் ஜெயக்குமார் சார் பகிர்ந்துக் கொண்டார்.
சிற்பங்கள் வெளிப்படுத்தும் எண்ணங்களை கிரகித்துக்கொள்ள அன்றைய வகுப்புகள் அவசியமாயிருந்தது.
இரவு ஜெயகுமார் சார் பாடிய “பாயும் ஒளி நீயனக்கு” என்ற பாரதியின் பாடல் இப்போதும் நினைவில் உள்ளது. அத்தனை அழகாக பாடினார்.
மூன்றாம் நாள் பல்லவ, சோழர்கால சிறந்த கோவில்களை பற்றி பார்த்தோம்.
இந்த வகுப்பு ஒரு சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்தியது என்றே நினைக்கிறேன். இந்த தகவல்களை புத்தகங்களில் படித்து தெரிந்துகொள்வதைக் காட்டிலும் நேரில் கள ஆய்வு செய்த ஒருவரிடம் கற்பது சிறந்தது இந்த வகுப்பில் இத்தனை நாட்கள் நம்பபட்டுவந்த சில தகவல்களை மறுத்துக் கூறினார் மேலும் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் திருப்பணி என்ற பெயரில் கோவில் நிர்வாகங்கள் செய்யும் பிழைகளை பற்றியும் அதனால் இழந்த வரலாற்றுச் சின்னங்களை பற்றியும் கூறினார்.
சில சிற்பங்களின் அழகைப் பற்றி ஜெயக்குமார் சார் மிகவும் சிலாகித்து பேசினார் குறிப்பாக தஞ்சைப் பெரியகோவில் துவார பாலகர் சிலைகள், கங்கைகொண்ட சோழபுரம் சண்டேஷ்வரர் , நடராஜர் சிற்பம், மாமல்லபுரம் பகீரதன் தவம் ( அல்லது அர்ஜுன தவம்). இவைகளை பற்றி அவர் கூறியதை கேட்டவுடன் உடனே அவற்றை பார்க்கவேண்டும் என்று தோன்றியது.
ஆலயங்களில் நுழைவதற்கு முன்பு நாம் இருபத்தோராம் நூற்றாண்டிலும் கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் பத்தாம் நூற்றாண்டிலோ, எட்டாம் நூற்றாண்டிலோ நுழைய முடியும் என்று ஜெயக்குமார் சார் கூறியது எத்தனை உண்மையென்று தோன்றியது.
இந்த ஆலயக்கலை வகுப்பின் முக்கியத்துவம் என்பது கோவிலை ஆய்வு மனப்பான்மையில் அணுகாமல் கோவிலின் அழகியல் உணர்ச்சிகளை மேம்படுத்துவது பற்றி சிந்திக்க வைத்ததுதான்.
இந்த வகுப்பில் நானும் பங்கேற்றதில் மிகுந்த மனநிறைவு அடைந்தேன் அதற்காக ஜெயக்குமார் சாருக்கும் உங்களுக்கும் நன்றி.
– தமிழ்குமரன் துரை