அனல் காற்று (குறுநாவல்) : 6

சுசி, காலையில் நான் எழுந்தபோது நீயும் அம்மாவும் கோயிலுக்குச் சென்றுவிட்டிருந்தீர்கள். அம்மா டேபிள் மீது குறிப்பு வைத்திருந்தாள். நான் ஸிட்-அவுட்டில் லுங்கியுடன் அமர்ந்து பிளாஸ்கில் இருந்த காபியை குடித்துக் கொண்டு ஹிண்டு வாசித்துக் கொண்டிருந்தபோது கார் வந்து உள்ளே நுழைந்தது. நீ ஓட்டிவர அம்மா அருகே இருந்தாள். இருவரும் இறங்கி என்னை நோக்கி வந்தீர்கள். நீ பட்டுப்புடவையுடன் இருந்தாய். நெற்றியில் விபூதி

அம்மா ”திவ்யமான தரிசனம்டா” என்றபடி என்னருகே வந்து என் நெற்றியில் விபூதி போட்டாள். நான் உன்னை நோக்கி புன்னகைசெய்தேன். சுசி, தன் அம்மாவையும் மனைவியையும் ஒரே சமயம் சேர்ந்து காணும்போது ஆண் ஒரு விசித்திரமான மனக்குழப்பத்தை அடைகிறான். அதை என்னால் உனக்கு விளக்க முடியாது…

”என்ன மாதிரி சாமி கும்பிடுறா தெரியுமா? அப்டியே எவ்ளவு நேரம் பிரார்த்தனை பண்ணினா…. லண்டன்லே வளந்த பொண்ணு மாதிரியா இருக்கா?” என்றபடி அம்மா சூரல் நாற்காலியில் அமர்ந்தாள்.

”ஆமா, செவத்தம்பட்டிக் கருப்பாயி மாதிரி இருக்கா” என்றேன். ஏனென்றால் அந்தக்கணம் நான் அதைத்தான் சொல்லவேண்டும் என அம்மா விரும்புகிறாள் என அத்தனை துல்லியமாக நான் அறிந்திருந்தேன்.

”அது யாரு?” என்று ஆவலாகக் கேட்டாய்

”என்னோட ஒரு மொறைப்பெண்… அவளை விட நீ பெட்டர்னு படுது” என்றேன்

நீ புரிந்துகொள்ளாமல் ”அருண்… கோயிலிலே பெண்கள்லாம் தாலிய தொட்டு கும்பிட்டு குங்குமம் எடுத்து தலையிலே வச்சுகிடறாங்க… எனக்கு அதைப்பாக்க ரொம்ப புடிச்சிருக்கு…”

நான் அம்மாவைப் பார்க்க அம்மா மெல்லிய புன்னகையுடன் மெல்ல உள்ளே சென்றாள்

”நானும் அதேமாதிரி வச்சுகிடணும்” என்றாய் அந்தரங்கமாக. உன் முகம் சுடர் போலிருந்தது.

”இதெல்லாம் இப்ப இப்டித்தான் இருக்கும்…. அப்றம் தெரியும்”

”என்ன தெரியும்? அருண் என்னைப் பொறுத்தவரை ஹேப்பி மேரீட் லை·ப் மட்டும்தான் எல்லாமே… வேற எதுவுமே முக்கியம் கெடையாது”

நான் புன்னகை செய்தேன். பின்பு ”இன்னிக்கு உன்னை ஒரு முக்கியமான எடத்துக்கு கூட்டிட்டுப்போகப்போறேன்” என்றேன்.

”எங்க?”

”வா சொல்றென்” என்றபின் ”அம்மா கிட்டே சும்மா என்கூட வர்ரதா மட்டும் சொல்லு”என்றேன்.

”ம்” என்றாய். ”காபி சாப்பிட்டீங்களா?”

‘ங்களா’ என்ற உன் அழைப்பை உணர்ந்து நான் உன் கண்களைச் சந்தித்து அங்கே வைரங்கள் போலச் சுடர்ந்த சிரிப்பை எடுத்துக் கொண்டேன் ”ம்ம்ம்” என்றேன்

”டிபன் இப்ப ரெடிபண்ணிடறேன்…” என்று உள்ளே சென்றாய்

காரில் சிந்தாரிப்பேட்டையின் சிறிய சந்துகள் வழியாக ஊடுருவிச் சென்றேன். நீ வெளியே பார்த்துவிட்டு ”ஏன் அருண் இவ்ளவு நேஸ்டியா இருக்கு?”என்றாள்.

”மெட்ராசிலே முக்காவாசி எடம் இதுமாதிரித்தான் இருக்கும்” என்றேன்.

”நாம இங்க யாரைப்பாக்கப்போறம்?”

”சொல்றேன்”

காரை நிறுத்தி பூட்டிவிட்டு அவளிடம் ”வா” என்று சொல்லிவிட்டு நடந்து சென்றேன். அவள் என் பின்னால் சாக்கடைகளில் கால்படாமல் தாவித்தாவி வந்தாள். மனிதர்கள் தோள்கள் முட்டும் நெரிசலில் ஒருவரை ஒஉவர் தாண்டிக்கொண்டிருந்தார்கள்.

பராமரிப்பில்லாத மாடிவீட்டின் பக்கவாட்டில் மேலேசென்ற சிறிய படிகளில் ஏறியபோது நீ என் பின்னால் வந்தாய்.

”அருண் இங்க நாம யாரை பாக்கப்போறம்?”

”உன் மாமனாரை…” என்றேன்.

”என்னது?” என்றாய். நான் உன்னிடம் இன்னும் அதிர்ச்சியை எதிர்பார்த்திருந்தேன்.

”என் அப்பாவை” என்ற படி நான் உன்னை கூர்ந்து பார்த்தேன்.

”மாமா உயிரோடவா இருக்கார்?” என்றாய் குழப்பத்தில் கண்கள் சுருங்க.

”ஆமா” என்றேன் ”அதனாலதானே அம்மா பூவோட பொட்டோட இருக்கா”

”இங்க ஏன் இருக்கார்?”

”அம்மாவை அவர் பிரிஞ்சிட்டார்… சொல்லப்போனா அம்மா அவரை பிரிஞ்சிட்டா…”

”ஏன்?”

”காலேஜ்ல இருந்து மத்தியான்னம் வீட்டுக்கு வந்திருக்காங்க… வேலைக்காரிகூட அப்பா படுத்திருக்கிறதைப் பாத்துட்டாங்க. அந்த நிமிஷமே வெளியே போகச் சொல்லிட்டாங்க. அதுக்கப்றம் அப்பா மொகத்திலேயே முழிக்கலை. யார் யாரோ என்னென்னவோ சமாதானம்லாம் சொல்லிப் பாத்தாங்க. அம்மா மசியலை. அப்ப எனக்கு நாலு வயசு… அதிலேருந்து அம்மா தன்னந்தனி தான். தனியாத்தான் வேலைபாத்து சம்பாதிச்சு என்னை வளத்தாங்க”

”சொந்தக்காரங்க?”

”அம்மா அப்பா ரெண்டுபேரும் லவ் மேரேஜ். அப்பா வேற ஜாதி”

நீ பெருமூச்சுவிட்டாய். ” அருண், நாம திரும்பிப் போயிடலாமே”

”ஏன்?”

”எனக்கு இப்ப இவரைப் பாக்க புடிக்கல்லை… ப்ளீஸ்…”

”இல்ல, வந்தாச்சு பாத்திட்டு போயிடலாம்”

”நோ…” என்று சீறினாய். உன் முகம் தீயைப் பிரதிபலித்தது.. ”நோ அருண்.. நான் இவரைப்பாக்க விரும்பல்லை…. தன்னை நம்பி வந்த ஒருத்திக்கு துரோகம் செய்றதுன்னா… மனுஷனா இவரு? நான் வரமாட்டேன்”

”நீ வர்ரே…” என்றேன் திடமாக. ”நான் சொன்னா கேக்கிறதுதான் எனக்குப் பிடிக்கும்…”

நீ கண்களைத் தாழ்த்தி ”சரி” என்றாய். என் பின்னால் மெல்லிய காலடிகளுடன் கடுத்த முகத்துடன் வந்தாய்.

கட்டிடத்தின் மூன்றாம் மாடியில் உள்ளே சென்ற வராந்தாவின் முடிவில் அப்பாவின் வீடு இருந்தது. நான் சென்று கதவை மெல்ல தட்டினேன்

பழைய புடவை மீது அவசரத்துக்கு எடுத்துப்போட்ட டர்க்கிடவலுடன் சித்திவந்து கதவை திறந்தாள். ஒரு கணம் உன்னைப்பார்த்துவிட்டு ”வாப்பா” என்றாள்.

நான் உள்ளே நுழைந்தேன். நீ சுவரைப்பற்றி ஒற்றைக்காலில் நின்று குதிகாலுயரச் செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே வந்தாய். உன் வளையல்கள் குலுங்கும் ஒலி மட்டும் மௌனத்தில் ஒலித்தது. சித்தியின் கண்கள் உன் மீது பதிந்திருந்தன.

கீழ்நடுத்தரவர்க்கத்துச் சிறிய அறை. சென்னையில் அப்படிப்பட்ட அறைகளுக்கு என்றே ஒரு தோற்றம் உண்டு. பலவகையான பொருட்கள் கிடைத்த இடத்தில் எல்லாம் அடைந்திருக்கும். அங்கு வாழ்பவர்கள் அவற்றினூடாக உள்ள இடத்தை மட்டுமே காண பழகியிருப்பார்கள். வருபவர்களின் மனம் அங்கே உள்ள பொருட்களில் முட்டிக்கொண்டு தடுமாறும்….

அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளை எடுத்துப்போட்டு அமரச்சொன்னாள் சித்தி. டிவி மீது ஒரு பொம்மை நாய் இருந்தது. பூவேலை செய்யப்பட்ட படுதா தொங்கிய உள் அறைக்குள் இருந்து சுபாவும் ராணியும் வந்தார்கள். பழைய சுடிதார் அணிந்த மெலிந்த தோள்கள் கொண்ட சாதாரணமான பெண்கள் அவர்கள். சுசி, அவர்கள் உன்னைக் கண்டதும் அடைந்த தாழ்வுணர்ச்சியையும் கூச்சத்தையும் உணர்ந்தேன்.

அவர்கள் வெட்கி சுவரோடு சேர்ந்து நின்றார்கள். நீ உள்ளே வந்து அவர்களை விரிந்த கண்களுடன் பார்த்து நின்றாய். ”இது சுபா, சின்னவ ராணி” என்றேன். ”மூத்தவ பிளஸ்டூ படிக்கிறா. சின்னவ எட்டாம்கிளாஸ்”

”இதான் சுசீலாவா அண்ணா?”என்றாள் ராணி

”ஆமா” என்று சொல்லியபடி நீ அருகே சென்று அவர்களை அணைத்துக்கொண்டாய். ”இன்னைக்கு ஸ்கூல் இல்லியா?”. நான் உன்னிடம் அந்த பெருந்தன்மையை எதிர்பார்த்திருந்தேன். நீ அப்படித்தான் நடந்துகொள்வாய் சுசி

”ஸ்கூல் லீவு” என்று சொன்ன ராணி ”நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அண்ணி” என்றாள்

சுசி சிரித்தபடி அவள் கன்னத்தைக் கிள்ளி ”நீ கூடத்தான் அழகா இருக்கே” என்றாள். ”ஸாரிடீ இங்க வர்ரதா சொல்லவே இல்லை. அதான் நான் ஒண்ணுமே வாங்கிட்டு வரல்லை”

”பரவால்லை அண்ணி” என்றாள் சுபா

உள்ளிருந்து சித்தி வந்தாள். இரு டம்ளர்களில் டீயுடன். ”இப்பதான் முழிச்சாரு தம்பி…. டீ சாப்பிடு… சாப்பிடு பாப்பா” பாப்பா என்று நம் சாதியில் சொல்வதில்லை. அந்த அழைப்பு உனக்குப் பிடித்திருந்ததை கவனித்தேன். சுசி, சொந்தமாக யார் என்ன அழைத்தாலும் உனக்கு அது பிடித்திருக்கிறது.

நீ டீயை எடுத்துக்கொண்டாய். ”…. ஸ்கூல் பக்கம்தானா?” என்று சுபாவிடம் கேட்டாள்

”கொஞ்ச தூரம்.. பஸ்ல போவோம்” என்றாள் சுபா. அவள் கண்களின் வெட்கமும் குழப்பமும் என்னை சுவரை நோக்கி புன்னகை புரியச் செய்தன.

சுபாவின் காதில் கிடந்த தொங்கட்டானைப் பிடித்துப் பார்த்து ”நைஸ்.. ரொம்ப நல்லா இருக்கு” என்றாய்

”அண்ணா வாங்கித் தந்தது”என்றாள் சுபா ”வளையல் செயின் எல்லாம்கூட இருக்கு”

”அப்டியா?” என்ற பின் ”நான் உனக்கு இன்னும் நல்ல தொங்கட்டான் வாங்கித்தறேன்” என்று ராணியிடம் சொன்னாய். அவள் வெட்கமும் மகிழ்ச்சியுமாக வளைந்து ஓரக்கண்ணால் என்னைப் பார்த்தாள்.

உள்ளே இருமல் ஒலி கேட்டது. அப்பா சித்தியின் தோள்பற்றி மெல்ல மெல்ல வந்தார். முகமும் கால்களும் வீங்கியிருந்தன. முகத்தில் இரண்டுவார வெள்ளைத்தாடி.

இருமியபடி மெல்ல நாற்காலியைப் பிடித்து அதில் அமர்ந்து கொண்டார். மெல்லிய முனகல்களுடன் சரிந்து அமர்ந்து பழுத்த கண்களால் என்னைப் பார்த்தார். வெளிறி உலர்ந்த உதடுகள் அசைந்தன ”எப்ப வந்தே?”

”இப்பதான்… அப்பா இவதான் –”

சுசி, நீ அப்போது நடந்துகொண்ட முறைக்காக உன்னை நான் பல்லாயிரம் தடவை என் நெஞ்சுக்குள் முத்தமிட்டேன். நீ சென்று குனிந்து அப்பாவின் கால்களை தொட்டு வணங்கினாய். அப்பா மெல்ல நடுங்கும் கரத்தை உன் தலை மேல் வைத்து ஆசீர்வாதம் செய்தார்.

”டாக்டர்ட்ட போனீங்களா?” என்றேன்

”என்னத்தைப் போறது? எல்லாம் கணக்குதான்… கடைசியா சாப்புட்ட மாத்திரைக்கு சைட் எ·பக்ட் வந்திருக்குன்னு சொல்றார்… என்னமோ போ” என்றார். அவரது தலை வெட்டுக்கிளியின் தலைபோல ஆடிக்கொண்டிருந்தது.

அவரிடம் எனக்கு பேச எதுவுமே இருப்பதில்லை சுசி. நான் அவரது சாவுக்காகக் காத்திருந்தேன். அவரது உபாதைகளின் முடிவு அதுமட்டுமே என்பதனால் மட்டுமல்ல அது. அவர் மீது நான் கொண்டிருந்த குற்றவுணர்வும் கடமையுணர்வும் கலந்த பொறுப்பு அப்போதுதான் முடியுமென்பதனாலும்தான். அந்த மட்கிக்கொண்டிருக்கும் மனிதனின் விந்துவே என்னை உருவாக்கியது என்பதனால் மட்டும் நான் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் என்னைப்போல் ஒரு ஆண் என்பதனாலும்தான் என்று இப்போது அறிகிறேன். காமத்தால் அலைக்கழிக்க விதிக்கப்பட்ட ஆணை அனைவருமே மன்னிக்கத்தான் வேண்டும் சுசி.

நான் அவர் முன்னால் என்ன செய்வதென அறியாமல் அமர்ந்திருந்தேன். ”அந்த கறுத்த பையன் என்ன செய்றான்?” என்றார். நான் ஜோவுடன் அங்கே வந்திருக்கிறேன். இப்போது ஏன் அவனை நினைவுகூர்கிறார்? பேச விரும்புகிறார்…

”அவன் இப்ப வேற வேலைக்குப் போய்ட்டான்…” என்றேன்

”ம்ம்ம்…” என்றார். மெல்லிய இருமலுக்குப் பின்னர் ” டிவியிலே ஒரு பையன் பாக்க அவனை மாதிரியே இருக்கான்… இவ கிட்ட சொல்லிட்டிருந்தேன்…”

”இப்பல்லாம் பெரும்பாலும் டிவிதான்….” என்றார்

அப்பா ”என்னத்த பண்றது? பொழுது போகணுமே…. சாவுற வரைக்கும்…” என்றார்

சித்தி சிரித்தபடி ”ஒரு சீரியல் விடுறதில்லை” என்றாள்.

நான் அப்பாவின் முகத்தை ஒருகணம் பார்த்தேன். சுசி, அப்பா என்ன பார்க்கிறார் என்று எனக்கு உடனே புரிந்தது. அதில் வரும் பெண்களைத்தான். பல வயதுகளைச் சேர்ந்த பல வகையான பெண்களை. அதை அத்தனை உறுதியாகப் புரிந்துகொண்டேன், ஏனென்றால் அவர்தான் நான்..

நான் உணர்ந்ததை அப்பாவும் புரிந்து கொண்டாரா என்ன? அவர் மெல்ல இருமி ”மாத்திரை சாப்புட்டு வாயெல்லாம் புண்ணு… எல்லா எடத்திலயும் புண்ணு” என்றார்

”டாக்டரிட்ட காட்டுவோம்…”

”ஒண்ணும் புரியல்லைண்ணா எழுதிக் குடுக்கிறதுக்குண்ணே நூறு மாத்திரை வச்சிருப்பான் போல” என்றார் அப்பா மெல்ல சிரித்தபடி. அப்போது அவர் ஒரு கண் மெல்ல விரிந்து முகத்தில் ஓளி பரவியது. அந்த தருணத்தில் அப்பா மீது எனக்கிருந்த கசப்பும் விலகலும் மறைந்தது. அவர் எனக்கு மிக நெரு்க்கமானவராக ஆனார்.

அப்பாவுக்குள் இப்போது அடிக்கடி வெளிப்படாத ஒரு ஆளுமை இருந்தது என்பதை நான் எப்போதுமே உணர்ந்துகொண்டுதான் இருந்தேன் சுசி. நகைச்சுவை உணர்ச்சி என்று அதை சொல்லலாம். ஆனால் நுட்பம், புத்திசாலித்தனம், புதுமைக்கான தேடல், மீறிச்செல்லும் துருதுருப்பு என்றெல்லாம் அதைச் சொல்லலாம். அவையெல்லாம் ஒன்றுதான்.

அம்மாவிடம் எப்போதுமே நகைச்சுவை இருந்ததில்லை. கண்டிப்பு மட்டுமே உயர்ந்த குணம் என்று நம்பி வளர்ந்து வந்தவள். கணிப்பு என்பது என்ன? தன் எல்லைகளை தானே உறுதியாக உருவாக்கிக் கொண்டிருப்பதுதானே அது? அந்த எல்லைக்குள் தன்னை வைத்துக்கொள்ள ஒவ்வொரு கணமும் முயல்வது….

அப்பா சித்தியிடம் எதைக் கண்டார் என்று எண்ணிக்கொண்டேன். அவர் அறிந்த பெண்ணுக்கு முற்றிலும் மாறான ஒரு பெண்ணை. சாதியில், கல்வியில், சமூக இடத்தில், தோற்றத்தில், மனநிலையில்… இப்போது அவர் உள்ளூர மீண்டும் ஓர் உயர்சாதிப்பெண்ணை விரும்புகிறாரா? மிக நுட்பமாக அவரை வேவுபார்க்க விரும்பினேன். ”என்ன சீரியல் பாக்கிறார், அரசியா?” என்றேன்

சுசி, நான் அப்போது ஒன்றை உணர்ந்தேன். அப்பா நான் எண்ணுவதை புரிந்துகொண்டுவிட்டார். ஆம், அதை அத்தனை உறுதியாக உணர்ந்தேன். அப்பா திடீர் எரிச்சலுடன் ” கொஞ்சம் வெந்நி குடேன்… கேட்டுண்டே இருக்கேன்ல?” என்றார்

சித்தி அந்த திடீர் மாற்றத்தால் சற்றே புண்பட்டு ஒரு கணம் என்னைப் பார்த்து விட்டு உள்ளே சென்றாள். நான் உள்ளூர குதூகலம் கொண்டேன். அவரை சீண்டுவதற்கான ஒரு பொருள் கையில் கிடைத்திருக்கிறது ”…இப்பல்லாம் எல்லா சீரியலும் ஒரே மாதிரித்தான் இருக்கு”

அப்பா ”ம்ம்” என்றார் என்னைப் பார்க்காமல்.

”ஒரே அழுகை…எப்ப பார் ஞொய் ஞொய்னு…”

அப்பா பேசாமல் இருந்தார். நான் இன்னும் துணிவுகொண்டு அவரை மெல்ல அபாயகரமான இடத்துக்கு இழுத்தேன் . ”அங்க அம்மாவுக்கும் இதான் வேல… அந்தியானா தொடர்ச்சியா சீரியல்…”

அப்பா தன் பழுத்த கண்களால் என்னைப் பார்த்தார். கண்களாலேயே என் கால்களைப் பற்றிக்கொண்டார். நான் அவர் பார்வையைத் தவித்த்தேன். பரிதாபம் ஏற்பட்டது. கூடவே வன்முறைக்காக மனம் இன்னும் இன்னும் என்று தாவியது. இன்னும் ஒன்று சொல்ல வேண்டும். அம்மாவைப்பற்றி… எதையாவது. எதை…. அம்மா சொன்ன எதைச்சொன்னாலும் அங்கே அது முள்தடிபோல குரூரமான ஓர் ஆயுதம் தான். ஆனால்… இல்லை சொல்வேன்… இதோ–

சித்தி சுடுநீருடன் வந்த அசைவால் அந்தக்கணம் தப்பித்தது. மன இறுக்கம் உச்சத்துக்குச் செல்லும் கணங்களில் ஓர் அசைவு நம்மை மீட்டுவிடுகிறது. அந்த அசைவு நம்மிடம் என்ன சொல்கிறது? மண்மீதிருப்பது மனம் மட்டுமல்ல , உடம்பும் கூடத்தான் என்றா?

அப்பா வெந்நீரைக் குடித்தார். பின்பு ”சித்த படுத்துக்கறேன்… முதுகு வலிக்குது” என்றார்

சித்தி அப்பாவை மெல்ல தூக்கி உள்ளே கொண்டு சென்றாள். நான் அவர் தளர்ந்த நடையுடன் ஒருகையால் வேட்டியை பிடித்தபடி செல்வதை பார்த்தேன். என் மனதில் உணர்ச்சிகளே இல்லை. வெறுமைதான்.

சித்தி சாப்பிட்ட பின்புதான் போகவேண்டும் என்று சொல்லிவிட்டாள். நீ சுபாவுடனும் ராணியுடனும் உள்ளே போய் சிரித்து அரட்டையடிக்க நான் வார இதழ்களையும் தொலைக்காட்சியையும் ஓரக்கண்ணால் பார்த்தபடி எண்ணங்களை தொட்டுத் தொட்டு தொடர்ந்தபடி அமர்ந்திருதேன். பின்பு எழுந்து வெளியே சென்று சாலையைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

எளிமையான சாப்பாடு. ஒரு குழம்பு ரசம். சித்தி என்னிடம் ”சைவம்தானே அவ?” என்றாள் . நீ ”ஆமா அத்தை, சுத்த சைவம்… லண்டன்ல கூட நான் நான் வெஜ் சாப்பிறதில்லை” என்றாய். சித்தி புன்னகைசெய்தாள்

சாப்பிட்டுவிட்டு உடனே கிளம்பலாம் என்றேன். என் மனம் அம்மாவை அஞ்சிக் கொண்டிருந்தது. அம்மா ஊகித்துவிடுவாள் என்று. ஒருவரை நம் மனம் நுட்பமாக பின் தொடர்ந்து கொண்டிருந்தது என்றால் அவர்கள் போகும் இடத்துக்கெல்லாம் நம்மால் மானசீகமாகவே கூடப்போக முடியும்

”கெளம்பறேன் சித்தி…”

”ஏன் கொஞ்ச நேரம் இருந்திட்டு போறது”

”இல்ல…ஆபீஸ்ல வேலை இருக்கு…”

”அண்ணா நீ ரொம்ப வேலை செய்யாதே…நஷ்டத்தில ஓடுற ஆபீஸ்ல ஜாஸ்தி வேலைசெஞ்சா நஷ்டமும் ஜாஸ்தியாயிடும்” என்றாள் ராணி. நீ அவர்களுடன் சேர்ந்துகொண்டு சிரித்தாய்

”போடி” என்றேன்.

”அடிக்கடி வா கண்ணு” என்றாள் சித்தி

அவர்கள் ஒவ்வொருவரிடமும் சொல்லிக்கொண்டு சுபாவை தழுவி ராணியை முத்தமிட்டு நீ கிளம்பும்போது நான் உன்னிடம் வேறு ஒன்றை எதிர்பார்த்தேன். ஆனால் நீ ஆழமான மௌனத்தில் நடந்துவந்தாய்.

சாலையில் நடக்கும்போது நான்வேறு எங்காவது பேச்சை தொடங்க எண்ணினேன். ஆனால் வாயே தன்னிச்சையாக பேசிவிட்டது. ”அப்பாவைப்பாத்த விஷயத்தை அம்மாகிட்டே சொல்ல வேண்டாம்” என்றேன்

”அத்தைக்கு தெரியாதா?”

”தெரியும்… ஆனா நான் வந்துபோற விஷயம் தெரியாது…” என்றேன் ”தெரிஞ்சா அவளாலே தாங்கமுடியாது. முப்பதுவருஷமா அவ மனசிலே அந்த வன்மம் அப்டியேதான் இருக்கு… அப்பான்னு சொல்றதே பிடிக்காது”

நீ ஒன்றும் சொல்லவில்லை. காரில் ஏறிக்கொண்டதும் ”ரொம்பப் பரிதாபமாத்தான் இருக்கார்… என்ன இருந்தாலும் உங்க அப்பா…ஆனா— ”

”ஆனான்னா?”

”அவரை என்னால ஏத்துக்கவே முடியல்லை. என் மனசு அத்தை பக்கம்தான் நிக்குது…. துரோகம் துரோகம்தான்…. என்னைக்கிருந்தாலும்.” அந்தக்கணம் நான் எதிர்பார்த்திருந்தது என்ன என்று அப்போதுதான் எனக்குப் புரிந்தது. நீ உன் உள்ளுணர்வால் என் அப்பாதான் நான் என்பதை உணர்ந்து கொண்டிருப்பாய். என்னை அவரது நீட்சியாக வைத்துப் பார்த்து உன் மனம் உள்ளே சிராய்ப்பு கொண்டு எரிந்து கொண்டிருக்கிறது.

”தப்பு எல்லாரும் பண்றதுதானே… அதுக்குண்டானதை அவர் அனுபவிச்சிட்டார்” என்றேன். நான் சொல்ல வேண்டிய சொற்கள் அவை அல்ல என்ற எண்ணம் உள்ளூர ஓடியது

”என்ன பேச்சு அது? தப்பு எல்லாரும் பண்றதா? நான்சென்ஸ்” என்றாய். சுசி நீ நான் அப்போது உன்னை தீவிரமாக ஆதரிக்க வேண்டுமென, உன் மீதான காதலை அறிக்கையிட்டு பிற பெண்ணே என் வாழ்க்கையில் இல்லை என்று சொல்லவேண்டுமென, நீ எதிர்பார்த்தாய் என்பதை நான் உணர்ந்தேன். சுசி உன் ஈரக்கண்களில் அந்த மன்றாடல் இருந்தது…

நான் என் மனத்தின் ஜாலங்களை எண்ணி வியந்தேன். சுசி, நீ என்னுடன் படி இறங்கும்போது நான் என்ன எண்ணிக்கொண்டு வந்தேன் தெரியுமா? என் அப்பா அல்ல நான் என்று உன்னிடம் நிறுவ வேண்டும் என்று. அதன்பொருட்டு என் அப்பாவை முற்றாக நிராகரித்து உன்னிடம் அவரைப்பற்றிய கசப்பைக் கொட்ட வேண்டும் என்று. அதற்காக உண்மையான உணர்ச்சிகளை அடையும்பொருட்டு நான் அவரை அந்தக் கணங்களில் வெறுத்தேன். வெறுப்பை திரட்டித்திரட்டிச் சொற்களை உருவாக்கிக் கொண்டேன்

ஆனால் அப்போது அவையெல்லாம் என்னை மீறி மறைந்தன. நான் முற்றிலும் மாறான உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டேன். காரை நிறுத்தினேன். ”வெளியே பாரு… இங்க போற ஆம்பிளைங்களிலே ஆயிரத்தில ஒருத்தன் கூட ஏகபத்தினிவிரதனா இருக்க மாட்டான். அதான் மனுஷ இயல்பு… ஆம்பிளையோட உடம்பையும் மனசையும் அப்டித்தான் படைச்சிருக்குது இயற்கை…” என்றேன் ஆவேசத்துடன். அந்த ஆவேசம் எனக்கே வினோதமாக இருந்தது

”பொறுக்கி அலையணும்ணா?” என்று நீ சீறினாய். நீ அந்த நேரடிப்பேச்சை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

”ஆமா… முடிஞ்சவரை அதிகமான வயிறுகளிலே வீரியத்தைக் கொண்டுபோய் சேருன்னு ஆண்கிட்ட சொல்லியிருக்கு இயற்கை. முடிஞ்சதில -பெஸ்டைமட்டும் ஏத்துக்கிட்டா போரும்னு பெண்கிட்ட சொல்லியிருக்கு… அந்த போராட்டம்தான் நாய் பூன ஆடு மாடு மனுஷன் எல்லா இனத்திலயும் நடந்திட்டிருக்கு… அது இயற்கையோட வெளையாட்டு”

”நான் மனுஷனைப் பத்திப்பேசறேன். மிருகத்தைப்பத்தி பேசல்லை” உன் மூச்சு இரைப்பதை, கழுத்தும் கன்னமும் வியர்த்திருப்பதைப் பார்த்தேன்.

”மனுஷனும் ஒருமிருகம்தான்… வெறும் மிருகம் கெடையாது. சிந்திக்கக்கூடிய, கண்ணீர்விட்டு அழக்கூடிய மிருகம்… ஆனாலும் மிருகம்தான்…”

”ரைட் …அத்தை வேற ஒருநல்ல ஆம்பிளைகூட போயிருந்தா ஏத்துக்கிட்டிரூப்பிங்களா?”

சுசி, உன் மனம் படும் வதையை நான் அப்போது உணர்ந்தேன். என்னுள் உவகை ஊறியது. உன்னை மேலும் வதைக்க விரும்பினேன். வதைபடும் மனம் கொண்டவன் ஆபத்தானவன் சுசி, அவன் உலகை வதைக்க விரும்புகிறான்.

”நான் இதை ஏத்துக்கிட்டேன்னு சொல்ல வரல்லை… ஆனா இந்தமாதிரி தப்புகளை மன்னிக்கிறதுதான் நாகரீகம்னு சொல்லவந்தேன்” நான் மிக மிக நிதானமடைந்தேன். குரூரமாகும்போது நமக்கு தர்க்கம் வேலை செய்வதைப்போல எப்போதும் இருப்பதில்லை. தர்க்கத்துக்கும் குரூரத்துக்கும் மிக நெருக்கமான உறவுண்டு. அவர்கள் இரட்டை சகோதரர்கள் ”காமத்தை பாவமா பாக்கிரது கிறிஸ்தவ மதம் உருவாக்கி வச்சிருக்கிற ஒரு மனநோய்… காமம் பலவீனமா இருக்கலாம் ஆனா கண்டிப்பா பாவம் கெடையாது…”

”நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லலை” என்றாய். என் குரூரத்தை உன் உள்ளார்ந்த குரூரத்தால் நீ எதிர்கொள்ள ஆரம்பித்தாய். உன் கண்களில் ரேசர் கூர்மை ”இப்ப உங்க வீட்டிலே ஒருத்தர் கறுப்பா தெனாவெட்டா உங்கம்மாவுக்கு புருஷனா உலவிட்டிருந்தா என்ன செஞ்சிருப்பீங்க?”

”அம்மா அப்டிப் போயிருந்தா நான் ஏத்துக்கிட்டிருக்கமாட்டேன். ஆனா மன்னிக்கமுடியாத குற்றமா அதை பாக்கமாட்டேன்…” என்றேன். சுசி, உனது அந்தக் குரூரம் எனக்கு வேண்டியிருந்தது. சிலசமயம் நம்மை எவராவது பளார் பளாரென்று அறைந்தால்கூட நமக்குப் பிடித்திருக்கிறது.

”சும்மா…இதெல்லாம் சும்மா பேசறது”

”தென் கோ டு ஹெல்” என்று நான் காரைக்கிளப்பினேன்

கார் நெரிசலான தெருக்களில் நீந்திச்சென்று கொண்டே இருந்தது.

”அந்தம்மாதான் வேலைக்காரியா இருந்ததா?” என்றாய் சற்று நேரம் கழிந்து.

”இல்லை… அதுவேற. அப்பா அதுக்கப்றம் குடிச்சு சீரழிஞ்சார். பல தொடர்புகள். வேலைபோச்சு. தாம்பரத்தில எங்கியோ குடிசையிலே இருந்திருக்கார்… அப்பதான் இந்தம்மாவை கட்டிகிட்டார். மூத்த பொண்ணு அவங்களுக்கு முதல் கணவனிலே பொறந்தவ. அவர் விட்டுட்டுப் போனபிறகு எங்கப்பா சேத்துக்கிட்டார்”

”சீ” என்றாய்.

நான் உன்னை திரும்பிப்பார்த்தேன்

”நான் இனிமே இந்த வீட்டுக்கே வரமாட்டேன்” என்றாய். உன் முகத்தின் அருவருப்பைக் கண்டபோது எனக்கு திருப்தியாக இருந்தது சுசி. ஆண்மனம் என்று சொல். நடுத்தரவர்க்க ஆணின் சுயநலம் மிக்க கீழ்மை என்று சொல். நீ ‘தரமான’ பெண்ணாக இருக்க வேண்டும் என்றும் காமத்தைச் சார்ந்த எல்லா மீறல்களையும் நீ அருவருத்து ஒதுக்க வேண்டும் என்றும் நான் ஆசைப்பட்டேன்.

”நான் வருவேன்… என்னால அவங்கள விடமுடியாது” என்றேன். ”நீ எல்லாத்தையும் தெரிஞ்சுகிடணும் அவ்வளவுதான் என்னோட பிளான்…”

”நான் உங்கிட்ட ஒண்ணு கேக்கணும் அருண்” கேள் கேள் என என் மனம் குதித்தது. நீ கேட்பதற்கான பதில் என்னிடம் உள்ளது. அங்கே உன்னைக் கொண்டு செல்கிறேன்

”ம்”

”நீ எப்டி? உனக்கு வேற பெண்தொடர்புகள் உண்டா?” நீ அதைக் கேட்கும்போது உன் கைவிரல்களே உன் மனமாக இருந்தன. அவை பின்னின, தயங்கின, இறுக்கிக் கொண்டன, தவித்தன….

”உண்டுண்ணு சொன்னா என்ன செய்வே?” நான் உன்னை அந்த இடம் நோக்கி தள்ளினேன்

நீ என்னையே பார்த்தாய். உன் கண்களில் நீர் தளும்புவதைக் கண்டேன். நான் அதை எதிர்பார்க்கவில்லை. நான் எதிர்பார்த்தது சந்தேகத்தின் குரோதபாவனையை

நீ உன் கண்ணீர் வழியாக அந்த தருணத்திற்கு சுற்றும் நான் எழுப்பிய சுவர்களை உடைத்து வெட்டவெளியை உருவாக்கினாய் சுசி… உன் கண்களில் கண்ணீர் கொட்டியது. நீ பலமாக விசும்பினாய்.

நான் ”இதோ பாரு” என்று நான் சொல்ல வருவதற்குள் நீ உடைந்து அழுதபடி முழங்கால்களில் முகம் புதைத்தாய். ”ஐ வில் கமிட் சூயிஸைட்… யெஸ்… அதுக்கப்றம் நான் உயிரோட இருக்கமாட்டேன்.. செத்திருவேன். சாமி சத்தியமா செத்திருவேன்”

நான் உன்னை இழுத்து என் தோள்மேல் சாய்த்து அணைத்துக்கொண்டேன். ”சுசி…சும்மா சொன்னேன்.. சத்தியமா இல்லை… சத்தியமா கெடையாது… போருமா.. உன் மேல சத்தியம்…”

நீ என்னை நிமிர்ந்து பார்த்து ”பிராமிஸ்?” என்றாய்

”பிராமிஸ்” என்றேன். உன்னை கழுத்திலும் கன்னங்களிலும் முத்தமிட்டேன்.

”ப்ளீஸ் அருண் என்னால தாங்கமுடியாது… ப்ளீஸ்” என்றபடி என் தோள்மேல் நீ சாய்ந்துகொண்டாய். என் கழுத்தை வளைத்து என்னை இறுக்கினாய்.

சுசி, நான் சொல்ல எண்ணிய சொற்களையெல்லாம் அந்த நிமிடமே உள்விழுங்கிக் கொண்டேன்.

[மேலும்]

முந்தைய கட்டுரைஇசைப்பாடல்கள்:கடிதம்
அடுத்த கட்டுரைஅனல் காற்று கடிதங்கள்