பிரியம்வதா இன்று அனுப்பியிருந்த ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு. ஓர் அமெரிக்க வாசகி எழுதியது. ஆல்டா விருது வழியாக பிரியம்வதாவை அறிந்து படித்திருக்கிறார். அதன்பின் The Abyss படித்திருக்கிறார். ஆனால் எவரிடமும் தொடர்புகொள்ளவில்லை. தற்செயலாக காணக்கிடைத்த இந்த பதிவு வழியாகவே இவர் இருப்பதே தெரியவந்தது.
இத்தனைக்கும் இந்நூல்கள் இப்போது அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கிடைக்காது – மின்னூலாக வாங்கினால்தான் உண்டு. இங்குள்ள பதிப்பகங்களின் ஒப்பந்தத்தின் விதிகளில் அதுவும் ஒன்று. இவை அமெரிக்க பதிப்பகம் வழியாக இனிமேல்தான் அங்கே வரவிருக்கின்றன.
சம்பிரதாயமான மதிப்புரைகளை விட இந்த வகையான தன்னிச்சையான வாசகர் பதிவுகள் மிக முக்கியமானவை. என் நூல்கள் மொழிபெயர்ப்புகளுக்கு வழக்கமாக அமையாத சிறந்த விற்பனையை அடைந்துகொண்டிருப்பது இந்த வாசக மதிப்புரைகள் வழியாகவே. இவை பரவலாக வாசிக்கப்படுகின்றன என்பதற்கான சான்றும் இவையே.
ஆசிரியனாக என்னுடைய நிறைவு ஒன்றுண்டு. இதை எழுதிய வெண்டிக்கு தமிழ்ப்பண்பாடு, இந்தியச் சூழல் எதுவுமே தெரியாது. ஆனால் இலக்கியம் மொழி, பண்பாட்டு எல்லையை கடந்து சென்று தன்னை தொடர்புறுத்திக் கொள்ள முடியும். அந்த சாத்தியக்கூறுதான் எழுத்தாளனின் நம்பிக்கை. அதை உறுதிசெய்கிறது இக்குறிப்பு