இந்து மதம் என்றாலே பழையஆசாரங்கள் மட்டும் தானா?

தமிழ் விக்கி என்ற பெயரில் நான் பிரம்மாண்டமான இணையக் கலைக்களஞ்சியம் ஒன்றை தொகுத்துக் கொண்டிருக்கிறேன். அதில் தகவல்கள் சேர்ப்பதற்காக கேள்விகளை அனுப்பி பதில்கள் வாங்குவதுண்டு. ஒரு கேள்வி ’மத நம்பிக்கை உண்டா?’ என்பது. அதற்கு ஓர் இளைஞர் ”ஆசாரங்களிலும் மூடநம்பிக்கைகளிலும் ஈடுபாடு இல்லை” என எழுதியிருந்தார். அவர் ஓர் இந்து என்றும் சொன்னார்.

ஆசாரமும் மூடநம்பிக்கையும் மட்டும்தான் இந்து மதமா? அப்படித்தான் பலர் எண்ணுகிறார்கள். ஒரு பக்கம் இந்து எதிர்ப்பாளர்கள் அப்படிச் சொல்லிச் சொல்லி பரப்புகிறார்கள். இன்னொரு பக்கம் இங்குள்ள மதப்பிரச்சாரகளும் ஆசாரமும் நம்பிக்கையும்தான் இந்துமதம் என்கிறார்கள். இந்து மெய்ஞானம், தத்துவம் ஆகியவற்றை எவரும் பேசுவதில்லை.

உலகத்திலுள்ள எந்த மதத்திலும் பண்டைய ஆசாரங்களும், மூடநம்பிக்கைகளும் இருக்கும். தன் மதத்தில் மூடநம்பிக்கைகளே இல்லை என்று கண்மூடித்தனமான மதவெறியர் மட்டுமே சொல்ல முடியும். ஏனென்றால் எல்லா மதங்களும் ஆயிரமாண்டுக்குமேல் பூமியில் இருப்பவை. அந்தந்த காலகட்டத்தின் நம்பிக்கைகள் அவற்றில் ஊடுருவும். காரணம், பழங்காலத்தில் எதையாவது ஒன்றை உறுதியாக நிறுவவேண்டும் என்றால் தெய்வத்தின் பெயரையே சொல்வார்கள். அந்த கருத்து மதத்தின் பகுதியாக ஆகிவிடும். அந்தக்கருத்தை ஒட்டி ஆசாரங்களும் நம்பிக்கைகளும் உருவாகியிருக்கும்..

உதாரணமாக மனு ஸ்மிருதி வலியுறுத்தும் ஆசாரங்களையும் நம்பிக்கைகளையும் சொல்லலாம். மனு ஸ்மிருதி போன்ற நூல்களை எப்படி எடுத்து கொள்வது? அதற்கு அந்நூலை முழுமையாக வாசிக்கவேண்டும். அந்நூல் உருவான சூழலை புரிந்துகொண்டு வரலாற்றில் வைத்து பார்க்கவேண்டும். எந்த நூலையும் அப்படித்தான் பார்க்கவேண்டும்.

மனு ஸ்ம்ருதி அன்றைக்கு இருந்த சமூக அமைப்பை உறுதிப்படுத்தும் நெறிகளைத் தான் சொல்கிறது. எந்த நீதி நூலும் புதிய சட்டத்தைச் சொல்லிவிட முடியாது. ஏற்கனவே இருக்கும் நம்பிக்கைகளையும் நெறிமுறைகளையும் தொகுத்துத்தான் சொல்ல முடியும். அப்படி தொகுப்பது அப்போதிருக்கும் ஆட்சிக்கு தேவையான ஒரு செயல்பாடு. சமூகம் உறுதியாக இருந்தால்தான் அரசு உறுதியாக இருக்கும்.

தெய்வங்கள் முளைக்கும் நிலம் வாங்க

எந்த நெறிநூலும் சமூகத்தில் கட்டுப்பாடுகளை கொண்டுவரத்தான் முயற்சி செய்யும். மனு ஸ்மிருதியும் அதைத்தான் செய்கிறது. கொலை, திருட்டு போன்றவற்றை தடுக்கும் வழிமுறைகளைச் சொல்கிறது. பொதுவாக மனிதர்கள் கடைப்பிடிக்கவேண்டிய அறங்களைப் பற்றிச் சொல்கிறது. மனு ஸ்மிருதியில் இருக்கும் நீதிகளில் 90 சதவீதம் அப்படியே திருக்குறளிலும் உள்ளது என்பதை படிக்கும் எவரும் புரிந்துகொள்ளலாம். அவை இந்தியாவின் எல்லா நீதிநூல்களிலும் பொதுவாக உள்ள கருத்துக்கள்தான்.

கூடவே, மனு ஸ்மிருதி வர்ணங்களை உறுதி செய்கிறதா என்று கேட்டால் ஆமாம் என்றுதான் பதில். பெண்களை கீழாக நிறுத்துகிறதா என்றால் ஆமாம் என்றுதான் பதில். மனுநீதி அன்றைய சமூகத்தில் இருந்த மேல்கீழ் அடுக்குமுறையை அப்படியே சட்டமாக ஆக்குகிறது.

அன்றைய சமூகத்தை நிலவுடைமை சமூகம் (feudal society) என்கிறார்கள் இன்றைய அறிஞர்கள். உலகம் எங்கும் அத்தகைய சமூகங்களின் இயல்பு என்பது மக்களில் முக்கால்வாசிப்பேரை உழைப்பாளிகளாக நிறுத்துவதுதான். அவர்களின் உழைப்பில் உருவாகும் செல்வத்தை வணிகர்களும் அரசகுடிகளும் மதகுருக்களும் எடுத்துக்கொண்டார்கள்.  இந்த முறைக்கு தேவையான ஒரு சட்டமுறையையை மனு ஸ்மிருதி உருவாக்கி அளித்தது.

பெண்ணை மனு ஸ்மிருதி சமூகத்தின் உடைமையாகவே நினைத்தது. அன்று உலகில் இருந்த எல்லா சமூகங்களும் அவ்வாறே நினைத்தன. பெண்களை  திருடிக்கொண்டு போவது அன்று ஒரு வாழ்க்கை முறையாகவே இருந்தது. நிறையப் பெண்கள் இருந்தால் அந்த சமூகத்தில் நிறைய பிள்ளை பிறக்கும் அந்த சமூகம் வளர்ந்து ஆற்றல் பெறும். சிம்பன்ஸிக்களிடமேகூட இந்த வழக்கம் உள்ளது.

பெண்களை அந்தக்காலச் சமூகம் கட்டுப்படுத்தி வைப்பது அவர்கள் சமூகத்திற்குச் செல்வம் என்று அது கருதியமையால்தான். மனு ஸ்மிருதியின் பார்வையும் அதுதான். பெண்களை பாதுகாக்கவேண்டிய செல்வம் என அது பலமுறை சொல்கிறது. இன்று நம் கல்யாணங்குகளில் பெண்ணை திருடிக்கொண்டு போவதுபோல சில சூசகமான சடங்குகள் உள்ளன. பெண்ணை பணம் கொடுத்து வாங்குவது (பரிசம்போடுவது) என்னும் வழக்கமும் சடங்காக உண்டு.

மனு ஸ்மிருதி அந்தக் காலத்தில் எழுதப்பட்டது. அந்தக் காலத்திற்காக எழுதப்பட்டது. அதில் பெண்களுக்கு சுதந்திரம் அனுமதிக்கப்படவில்லை. சரி ஆணுக்கு மட்டும் சுதந்திரம் இருந்ததா? இல்லை. ஆண் பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் குலத்தலைவருக்கும் அரசருக்கும் கட்டுப்பட்டவன். ஆசாரங்களுக்கும் நெறிகளுக்கும் கட்டுப்பட்டவன்.

அதுதான் நிலவுடைமைக்கால வாழ்க்கைமுறை. அன்று எல்லாருமே கட்டுப்படுத்தப்பட்டார்கள். எல்லாருமே சமூகம் என்ற ஒற்றை அமைப்பின் உறுப்பினர்கள். சமூகம்தான் இருந்தது, தனிமனிதன் என்ற எண்ணமே இல்லை. தனிமனிதன், அவனுடைய உரிமை என்பதெல்லாமே சென்ற இருநூறாண்டுகளில் உருவாகி வந்த சிந்தனைகள்

இன்றைக்கு நாம் பல நவீன ஜனநாயக சிந்தனைகளை அடைந்துவிட்டோம். ஐரோப்பாவில் உருவான கருத்துக்கள் அவை. ஐரோப்பாவில் பதினேழாம் நூற்றாண்டு முதல் உருவான தத்துவஞானிகள்தான் அந்தச் சிந்தனைகளை உருவாக்கினர். உலகமே அவர்களுக்குக் கடன்பட்டிருக்கிறது.

ஆலயம் எவருடையது? வாங்க

இன்றைய சூழலில் எந்த பழைய சிந்தனைகள் காலாவதியாகிவிட்டனவோ அவற்றை உடனே களைந்தாகவேண்டும். அச்சிந்தனைகளுடன் இணைந்துள்ள சடங்குகள், ஆசாரங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றை துறந்தாக வேண்டும். அந்தச் சடங்குகளும் நம்பிக்கைகளும் இந்துமதத்தின் அடிப்படைகள் அல்ல. இந்து மதத்தின் அடிப்படைகள் என்பவை மெய்ஞானநூல்களும் அவற்றை முன்வைக்கும் ஞானிகளும்தான்.

மதங்களின் செயல்முறை உலகம் எங்கும் ஒன்றுதான். அவை சாராம்சமாக ஞானதரிசனங்களை கொண்டிருக்கும். அந்த தரிசனங்களை தர்க்கபூர்வமாக விளக்கும்போது அவை தத்துவம் ஆகிவிடும். கதைகளாக ஆக்கும்போது தொன்மங்களாக (myth) ஆகும். அப்புராணங்களை ஒட்டியே இலக்கியங்கள் உருவாகும்.

அந்த ஞானதரிசனங்கள் அன்றாட வாழ்க்கையாக ஆகவேண்டும் என்றால் அவை வழிபாடாக ஆகவேண்டும். ஒரு வழிபாட்டை எப்படிச் செய்யவேண்டும், எப்போது செய்யவேண்டும் என்று வரையறை செய்தால் அதுவே ஆசாரம் என்பது.

ஆகவே ஆசாரங்களும் நம்பிக்கைகளும் முழுக்க முழுக்க தேவையற்றவை அல்ல. அவை இல்லாவிட்டால் மதமே இல்லை. அவை இல்லாவிட்டால் நமக்கு பல்லாயிரம் ஆண்டுகால மெய்ஞானத்துக்கும் சம்பந்தமே இல்லாமலாகிவிடும். பண்பாட்டின் தொடர்ச்சியே அழிந்துபோய்விடும்.

 

இந்துஞானமரபில் ஆறு தரிசனங்கள் வாங்க

அப்படியென்றால் ஒரு ஆசாரமோ அல்லது நம்பிக்கையோ தேவையில்லை என எப்படி முடிவு செய்வது?.மூன்று அளவுகோல்கள் உண்டு.

ஒன்று, அந்த ஆசாரமும் நம்பிக்கையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ மெய்ஞானத்தை முன்வைப்பவை என்றால் அவை தேவைதான்.

இரண்டு, ஞானிகளும் அறிஞர்களும் கண்டிக்கும் நம்பிக்கைகளும் ஆசாரங்களும் தேவையற்றவை.

மூன்று, இன்றைய வாழ்க்கையின் அடிப்படையான கொள்கைகளான மானுட சமத்துவம், தனிமனித உரிமை ஆகியவற்றுக்கு எதிராக இருக்கும் ஆசாரங்களும் நம்பிக்கைகளும் துறக்கப்படவேண்டியவை.

சகமனிதனை இழிவுசெய்யக்கூடிய, மனிதர்களிடையே பாகுபாடு பார்க்கக்கூடிய எந்த ஆசாரமும் ஆன்மிகத்துக்கு எதிரானதே. அதேபோல உலகிலுள்ள எந்த மனிதர்கள், எந்த மதங்கள், எதன்மேலும் எதிர்மறையான மனநிலையை உருவாக்கும் எந்த நம்பிக்கையும், ஆசாரமும் ஆன்மிகத்துக்கு எதிரானதுதான். கசப்பும், வெறுப்பும் ஞானத்தை தடுக்கும் பெரும் சுவர்கள்.

வள்ளலாரும், ஐயா வைகுண்டரும், நாராயணகுருவும் சொன்னது அதையே. சித்பவானந்தர் முதலிய சமகால ஞானிகள் சொன்னதும் அதுவே


இந்து மெய்மை வாங்க

முந்தைய கட்டுரையோ. ஞான சந்திர ஜாண்சன்
அடுத்த கட்டுரைவேதங்களை எல்லாரும் கற்கமுடியுமா?